Flash News

Thursday, April 29, 2010

உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட் என்னை எதிரியாகப் பார்க்கிறார் ஏ.கே.விஸ்வநாதன்



உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், எனக்கு எதிரி. என் மீது பத்திரிக்கைகளில் தவறான செய்திகள் வருவதற்கு அவர்தான் காரணம் என்று ஐஜி ஏ.கே.விஸ்வநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2009ல், ஏ.கே.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் அழகிரியின் செயலராக நியமிக்கப் படுவதாக பேச்சு எழுந்தது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு விஸ்வநாதன் சிறப்பு ஆணையராக நியமிக்கப் பட்டார். மத்திய அமைச்சர்களின் அனைத்து செயலர்களின் நியமனங்களுக்கும் ஒப்புதல் தரும் பிரதமரிடம், விஸ்வநாதன் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வந்ததையடுத்து, விஸ்வநாதன் நியமனத்திற்கு தடை விதித்தார் பிரதமர். இதையடுத்து, டெல்லி உறைவிட ஆணையராகவே தொடர்ந்து வந்த விஸ்வநாதன், தற்போது ஒரு ஆண்டு விடுப்பில் சென்றுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த புகழேந்தி என்பவர், தலைமைச் செயலாளருக்கு திரு ஏ.கே.விஸ்வநாதன் காஞ்சிபுரம் ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் 2 கோடி மதிப்புள்ள 5.24 ஏக்கர் நிலம், பள்ளிக்கரணையில் 1.5 கிரவுண்ட் நிலம், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி கிராமத்தில் 522 ஏக்கர் நிலம் என 25 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்துள்ளார். இச்சொத்துக்கள், இவரது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் ஆகும். இதனால், வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை வாங்கியுள்ள காவல்துறை அதிகாரியான விஸ்வநாதன் மீது, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அனுப்பியிருந்தார்.

இப்புகார் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தன் மீது நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை ஒரு டிஎஸ்பி விசாரிக்கிறார். தான் ஒரு ஐஜி என்றும், வழக்கறிஞர் காவல்துறையினர் மோதலில், ராதாகிருஷ்ணன் தான் தடியடி நடத்த உத்தரவிட்டது என்று தான் அபிடவிட் தாக்கல் செய்தவுடன் தான் தன் மீது உள்நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்றும் தனது மனுவில் கூறியிருக்கிறார்.

மேலும் அவர், தன் மீதான விசாரணை குறித்து பத்திரிக்கைகளில் பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டேன் என்றும், விசாரணை தொடர்பான எந்த கடிதமும் தனக்கு வழங்கப் படவில்லை என்றும் 18.01.2010 அன்று பொதுப் பணித்துறையின் பொறியாளர்களால் தனது வீடு ஆய்வு செய்யப் படும் என்று கடிதம் வந்ததாகவும், அந்த பொதுப்பணித்துறையின் அறிக்கை தனக்கு வழங்கப் படவில்லை என்றும், லண்டனில் உள்ள தனது நண்பருக்கு இந்த வழக்கை விசாரித்து வரும் புலனாய்வு அதிகாரி வழக்கு தொடர்பாக கேள்விகள் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தன்னைப் போன்ற உயர் அதிகாரிகளின் மீது, சட்ட விரோதமான விசாரணைக்கு உத்தரவிட்டால், நிர்வாகமே ஸ்தம்பித்து விடும் என்றும் மற்ற உயர் அதிகாரிகள் விருப்பு வெறுப்பின்றி தங்களது பணியை செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பியும் எந்த அடிப்படையில் தன் மீது விசாரணை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த விசாரணையே மர்மமாக இருக்கிறது. என் மீது, காவல்துறையின் அதிகாரம் தவறான முறையில் உள்நோக்கத்தோடு பயன் படுத்தப் பட்டு வருகிறது. இந்த விசாரணை நடைபெறும் முறையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தற்பொழுது உளவுத் துறை ஐஜியாக இருக்கும் எம்.எஸ்.ஜாபர் சேட் எனக்கு எதிரியாய் உள்ளார். என்னைப் பற்றி தவறான செய்திகள் வரக் காரணமாக உள்ளார். தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், விஜிலென்ஸ் கமிஷனர் ஆகியோர் என் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக 30.08.2009 அன்று நாளேடுகளில் வந்த செய்தி எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை என்றும் தன் மனுவில் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு நீதிபதி பால் வசந்த குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விஸ்வநாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வராஜின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, அரசு வழக்கறிஞருக்கு, நாளை விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

சவுக்கு


2 comments:

vasan said...

வேலிக்க‌ள் காவ‌ல் காத்த‌து அன்று
பயிர்க‌ளை மேய்ந்த‌து நேற்று,
வ‌ர‌ப்புச் ச‌ண்டைக‌ள் இன்று,
வ‌ய‌ல்களே இருக்காது நாளை.

vasan said...

வேலிக்க‌ள் காவ‌ல் காத்த‌து அன்று
பயிர்க‌ளை மேய்ந்த‌து நேற்று,
வ‌ர‌ப்புச் ச‌ண்டைக‌ள் இன்று,
வ‌ய‌ல்களே இருக்காது நாளை.

Post a Comment