Flash News

Sunday, November 29, 2009

விசாரணை கமிஷன்களால் என்ன பயன் ?பாப்ரி மசூதியின் உட்புறத்தோற்றம்


தற்போது 1992ம் ஆண்டு, பாபர் மசூதி இடிக்கப் பட்ட விவகாரம் தொடர்பாக அமைக்கப் பட்ட லிபரான் கமிஷன் வெளியாகி, பாராளுமன்றத்தில் கடும் அமளியை கிளப்பி, அதனால் பாராளுமன்றம், இரண்டு நாட்கள் செயல்பட முடியாமல் போனது. இந்த அமளி, லிபரான் அறிக்கை “இந்தியன் எக்ஸ்பிரஸ்“ நாளேட்டில், வெளியான லிபரான் கமிஷன் அறிக்கையின் சில பகுதிகளால் உருவானது.

அரசு அலுவலகங்கள் எப்படி இயங்குகின்றன என்ற விபரங்களை அறிந்தவர்களுக்கு, இந்த அறிக்கை தானாக பத்திரிக்கையை சென்றடைய வாய்ப்பே இல்லை என்பது தெரியும். ஒரு விசாரணை கமிஷனின் அறிக்கை என்பது, பாராளுமன்றத்திலோ, சட்டசபையிலோ வைக்கப் படும் வரை, மிக ரகசியமாக பாதுகாக்கப் படும்.

அதனால், லிபரான் அறிக்கை பத்திரிக்கைளில் வெளியானது, கண்டிப்பாக மத்திய அரசின் உளவுத் துறையால் தான். மேலும், இந்த அறிக்கையில், நரசிம்மராவ் அரசுக்கு லிபரான் நற்சான்றிதழ் அளித்த காரணத்தினாலும், அறிக்கை பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

சிபிஎம் எம்.பி சீதாராம் எச்சூரி, அறிக்கை பத்திரிக்கையில் வெளியானது, அவையின் உரிமை மீறல் பிரச்சினை என்று கூறினார். செல்வி.ஜெயலலிதா தனது அறிக்கையில், அறிக்கை வெளியானதற்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கருணாநிதி, சிதம்பரம் ஏன் பதவி விலக வேண்டும் ? என்று பதிலறிக்கை வெளியிட்டார். ஜெயலலிதா சிதம்பரத்தை பதவி விலக வேண்டும் என்றால், கருணாநிதிக்கு ஏன் துடிக்கிறது ?

லிபரான் அறிக்கை வெளியாகி, எதிர்க்கட்சிகளின் கவனம் இதன் மேல் திரும்பியதால், ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பாராளுமன்றத்தில் வரவில்லை அல்லவா ? அதனால் கருணாநிதியும் பலனடைந்துள்ளார் அல்லவா ? அதனால்தான் தான் ஆடாவிட்டாலும், சதை ஆடுகிறது.

ஏன் இந்த அறிக்கை பத்திரிக்கைகளில் வெளியிடப் பட வேண்டும் ?
இந்த அறிக்கையின் பகுதிகள் பத்திரிக்கையில் வெளியாவதற்கு முன், பாராளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசுக்கு பல்வேறு வகையில் பெரும் தலைவலியை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. குறிப்பாக, கரும்பு கொள்முதல் விலை தொடர்பான பிரச்சினை, மது கோடா மீதான ஊழல் புகார் குறித்த பிரச்சினை, ஸ்பெக்ட்ரம் ராஜா தொடர்பான பிரச்சினை, சீனா சென்ற அமெரிக்க அதிபர், காஷ்மீர் பிரச்சினையில், மூன்றாவது நாட்டின் தலையீடு வேண்டும் என்று கூட்டு அறிக்கை வெளியிட்ட பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் விவகாரமாக்க திட்டமிட்டுருந்தன.

அதே போல, முதல் இரண்டு நாட்கள், கரும்பு பிரச்சினையால், இரு அவைகளும், நாள் முழுவதும் ஒத்தி வைக்கப் பட்டன. விவசாயிகளுக்கு எதிராக நிலை எடுத்திருப்பதால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், காங்கிரஸ் அரசு மேல் கடும் கோபம் கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவானது.

இந்த பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து, ராகுல் காந்தியே, கரும்பு விலை பற்றிய அவசர சட்டத்தை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசக் கூடிய நிலை உருவானது.மறுநாள் மீண்டும் இப்பிரச்சினையை அவையில் கிளப்பலாம் என்று எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்த நிலையில், லிபரான் கமிஷனின் சில பகுதிகள் செய்தித் தாள்களில் வெளியாயின.

இந்த வெளியீடு, காங்கிரஸ் அரசு எதிர்பார்த்தது போலவே, எதிர்க்கட்சிகளை பிளவு படுத்தின. கரும்பு பிரச்சினை மற்றும் இதர பிரச்சினைகளில் ஒன்று பட்டு குரல் கொடுத்த எதிர்க்கட்சிகள், லிபரான் கமிஷன் அறிக்கையில் பிளவு பட்டுப் போயின.பாராளுமன்றம் நடத்த ஒரு நிமிடத்திற்கு ஆகும் செலவு என்ன தெரியுமா ? ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 34,500/-. ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 20.7 லட்சம். ஒரு நாளைக்கு 1.55 கோடி. எப்படி நமது வரிப்பணம், விழழுக்கிறைத்த நீராக ஆகிறது கண்டீர்களா ?


சரி, விவாதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்க, இப்படி அவையை ஒத்தி வைக்கக் கூடிய அளவுக்கு லிபரான் கமிஷன் அறிக்கை அவ்வளவு முக்கியமா ?
டிசம்பர் 6 அன்று பாப்ரி மசூதி இடிக்கப் பட்டது.நீதிபதி லிபரான்


16 டிசம்பர் 1992ம் ஆண்டு, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட வேண்டும் என்ற கால அளவோடு தொடங்கப் பட்ட லிபரான் கமிஷன், 42 கால நீட்டிப்பும், 17 ஆண்டுகள் காலத்தையும், இந்திய மக்களின் வரிப் பணம் ரூபாய் 8 கோடியையும் விழுங்கி விட்டு இன்று 1029 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சராசரியாக லிபரான் அறிக்கையின் ஒரு பக்கம் ரூபாய்.77,745.38 ஆகிறது.22 டிசம்பர் 1949ல் சில இந்து விஷமிகள், இரவோடு இரவாக, மசூதிக்குள் புகுந்து ராமர் சிலைகளை நிறுவினர். இந்தத் தகவலை அறிந்த அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, உத்திரப்பிரதேச முதலமைச்சர் கோவிந்த வல்லப பந்தை அழைத்து, உடனடியாக அந்த சிலைகளை அகற்றுமாறு உத்தரவிட்டார்.


நேரு தனது பேரன் ராஜீவுடன்


முதல்வரும், உத்திரப்பிரதேச தலைமைச் செயலாளர் பகவான் சகாய் மற்றும் ஐஜி வி.என்.லாகிரி ஆகிய இருவருக்கும், பிரதமரின் உத்தரவை நிறைவேற்றுமாறு கூறினார். ஆனால், ஃபைசாபாத் மாவட்ட நீதிபதி கே.கே.நாயர், இந்துக்களின் எதிர்ப்பு பலமாக இருக்கும் என்ற காரணத்தைக் கூறி, நேருவின் உத்தரவை கே.கே.நாயர் நிறைவேற்றத் தவறினார்.
பாப்ரி மசூதி இடிக்கப் படும் முன்1950ல் இப்பிரச்சினை நீதிமன்றத்திற்கு சென்று, நீதிமன்றம், இந்து, முஸ்லீம், இரு பிரிவினரும் மசூதிக்குள் செல்லக் கூடாது என்று தீர்ப்பளித்தது. 35 ஆண்டுகள் அமைதியாக இருந்த இந்தப் பிரச்சினை, 1984ல் விசுவ இந்து பரிஷத் மூலமாக மீண்டும் விசுவரூபம் எடுத்தது.

விசுவ இந்து பரிஷத் அமைப்பு, பூட்டுக்கள் திறக்கப் படவேண்டும், ராமரை வழிபட வேண்டும் என்று இயக்கம் எடுத்தது. 1 பிப்ரவரி 1986 அன்று, ஃபைசாபாத் அமர்வு நீதிமன்றம் பூட்டுக்களை திறந்து இந்துக்கள் வழிபட அனுமதி அளித்தது. இதற்குப் பிறகும், இந்தப் பிரச்சினை பெரிய அளவில் வடிவம் பெறவில்லை.9 நவம்பர் 1989ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி சர்ச்சை இல்லாத இடத்தில் “பூமி பூஜை“ நடத்த அனுமதி அளித்த போதுதான், ஒரு பெரும் கலவரத்துக்கான விதை ஊன்றப்பட்டது.


சோனியாவுடன் ராஜீவ்


போபர்ஸ் ஊழலில் சிக்கி, தன் நம்பகத்தன்மையை இழந்த ராஜீவ் காந்தி, பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டை பெற வேண்டும் என்ற குறுகிய எண்ணத்துடன், கொடுத்த அனுமதி நாட்டை மத ரீதியில் பிளவு படுத்தவும், இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள், அந்நியமாக உணர்வதற்குமான ஆரம்பப் புள்ளியாக உருவானது.

25 செப்டம்பர் 1990ல் பிரதமர் ஆகும் கனவுடன் மீண்டும் ஒரு இந்துப் புரட்சியை உருவாக்குவேன் என்ற சபதத்துடன் தேர் போல அலங்கரிக்கப் பட்ட ஒரு “டொயோட்டா“ வாகனத்தில் தனது ரத யாத்திரையை தொடங்கினார் அத்வானி. அத்வானியின் ரத யாத்திரை பீகார் மாநிலம் சமஸ்தீப்பூர் மாவட்டத்திற்குள் நுழைகையில் தடை செய்யப் பட்டது.இந்த ரத யாத்திரையை தடை செய்தால் தனது பதவி பறிபோகும் என்று தெரிந்தும், பிஜேபி யின் ஆதரவில் ஆட்சியில் இருந்த வி.பி.சிங் என்ற மாமனிதர், அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தினார். எதிர்பார்த்தது போலவே, பிஜேபி தனது ஆதரவை வாபஸ் வாங்க, வி.பி.சிங்கின் ஆட்சி கவிழ்ந்தது.அதற்குப் பிறகு நடந்த ராஜீவ் மரணத்திற்குப் பின் ஏற்பட்ட அனுதாப அலையினால் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து, நரசிம்ம ராவ் பிரதமாரானார். அதற்கு பிறகு மதவாதத்தைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் செயல்பட்ட அத்வானி உள்ளிட்ட சங் பரிவார் குழுவினரால், கர சேவைக்கு நாள் குறிக்கப் பட்டது.

இந்தியா முழுவதும் இருந்து சங் பரிவார் அமைப்பினர் திரட்டப் பட்டனர். ரயில்களிலும், பஸ்களிலும் இந்து வெறியர்கள் அயோத்தியாவை நோக்கித் திரண்டு வந்த போதிலும், “மவுனச் சாமியார்“ நரசிம்ம ராவ், வேடிக்கை பார்த்தபடி, அமைதியாக இருந்தார். பிஜேபி ஆதரவில் அரசு நடத்திக் கொண்டு பதவி போனாலும் பரவாயில்லை, நாடு மதவாதிகளால் துண்டாடப் படுவதை அனுமதிக்க மாட்டேன் என்று விபி.சிங் முடிவெடுத்தது போலல்லாவிட்டாலும், பிஜேபி யின் தயவு தேவைப்படாத நிலையிலும், லஞ்சம் கொடுத்து பல எம்.பிக்களை விலைக்கு வாங்கி, தனி மெஜாரிட்டி பெற்று விட்ட நரசிம்ம ராவ், இஸ்லாமியர்களின் இதயத்தில் தீராத காயத்தை ஏற்படுத்திய பாப்ரி மசூதி இடிப்புக்கு அமைதியாக இருந்து தனது சம்மதத்தை தெரிவித்தார்.மார்க்சிஸ்ட் கட்சியின் “பீப்பிள்ஸ் டெமாக்ரசி“ வார இதழில் கட்டுரை எழுதிய மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசு, பிஜேபி யின் நடவடிக்கைகளை பார்த்தால், மசூதிக்கு ஆபத்து ஏற்படும் போல தோன்றுகிறது, ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள் என்று கேட்டதற்கு இணங்க 23 நவம்பர் 1992ல் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப் பட்டது என்றும், அக்கூட்டத்தில், மசூதியை காப்பாற்றுவதற்காக அரசியல் சட்டப் பிரிவு 356ஐ பயன்படுத்தி கல்யாண் சிங் அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள் என்ற கோரிக்கை உட்பட நரசிம்மராவிடம் எப்பாடு பட்டாவது மசூதியை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கை வைக்கப் பட்டது. ஆனால், நரசிம்ம ராவ், அமைதியாக சட்டத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப் படும் என்று உறுதி அளித்தார்.


மேலும், ஜோதி பாசு, அந்தக் கட்டுரையில் 1992 டிசம்பர் 4ம் தேதி, நரசிம்மராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கரசேவகர்கள், அயோத்தியாவை நோக்கித் திரண்டு கொண்டிருக்கிறார்கள், உடனே நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டதற்கு, காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி சூழ்நிலையை ஆராயும் என்று பதிலுறுத்ததாக தெரிவிக்கிறார்.
ஆனால் 1992 டிசம்பர் 6 அன்று “கரசேவை“ என்ற பெயரால், மசூதி இடித்துத் தள்ளப் பட்டது. உலக அரங்கில் இந்தியா தீராத அவப்பெயரை தேடிக் கொண்டது. இது என் வாழ்விலேயே மிகவும் வருத்தத்திற்குரிய நாள் என்று வாஜ்பாய் நீலிக் கண்ணீர் வடித்தார்.மசூதி இடிப்பிற்குப் பிறகு நரசிம்மராவ் “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்“ என்று, உத்திரப் பிரதேச அரசாங்கம் உள்ளிட்ட 4 மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தார்.கரசேவையை நடத்திய அத்வானி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்பினரை விட, அவர்களை சர்ச்சைக்குரிய இடத்தில் கரசேவை நடத்த அனுமதி அளித்து, மசூதி இடிக்கப் படும் வரை வேடிக்கைப் பார்த்த நரசிம்மராவ் பெருங்குற்றவாளி இல்லையா ? அமைதியாக இருந்த ஒரு பிரச்சியையை, “பூமி பூஜை“ நடத்த அனுமதி அளித்ததன் மூலம், மத வெறியை தூண்ட வழி கோலிய ராஜீவ் காந்தி பெருங்குற்றவாளி இல்லையா ? இந்த இருவரைப் பற்றி, லிபரான் கமிஷன் அறிக்கையில் எந்தக் குற்றச் சாட்டும் இல்லை என்பதுதான் விசித்திரத்திலும் விசித்திரம்.
“போலி மிதவாதிகள்“ என அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் வாஜ்பாயை குறிப்பிடும் லிபரான், ஒரு ஜனநாயகத்தில் இது போன்றதொரு துரோகமும் குற்றமும் மன்னிக்க முடியாதது அதனால், இந்தப் போலி மிதவாதிகளின் குற்றங்களுக்காக அவர்களை கண்டிப்பதில், இந்தக் கமிஷனுக்கு எந்த தயக்கமும் இல்லை“ என்று கூறுகிறார்.


வாஜ்பாய், அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போலி மிதவாதிகள் என்றால், இவர்களின் அக்கிரமங்களுக்கு அனுமதி கொடுத்து அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நரசிம்மராவ் தீவிரவாதி அன்றோ ? இது லிபரான் கண்ணுக்கு எப்படி தெரியாமல் போனது ?
மக்கள் வரிப்பணம் 8 கோடி ரூபாயை முழுங்கி ஏப்பம் விட்டு விட்டு, நீதிபதி லிபரான் கொடுத்திருக்கும் இந்த அறிக்கை வைக்கப் பட வேண்டிய இடம் பாராளுமன்றம் அல்ல.
இதுதான்


தமிழில் “கல்லைப் போடு இல்லைன்னா கமிஷனைப் போடு“ என்று ஒரு வழக்கு உண்டு. விசாரணை கமிஷன்கள் என்றாலே, விஷயத்தை ஆறப் போட்டு, மூடி மறைக்கக்தான் என்பதை பல விசாரணைக் கமிஷன்கள் தெளிவாக்கியுள்ளன.
தமிழகத்தில் சமீபத்தில் போடப்பட்டுள்ள கமிஷன்களைப் பார்த்தால், இவ்விஷயம் தெளிவாக விளங்கும்.

1999ம் ஆண்டு, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர் காவல்துறையால் படுகொலை செய்யப் பட்டதை விசாரிக்க போடப்பட்ட ராமன் கமிஷன், காவல்துறை மீது எந்த குறையும் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்தது. சம்பவத்தில் தொடர்புடைய ஒரு காவல்துறை அதிகாரி கூட தண்டிக்கப் படவில்லை. இது தொடர்பாக எடுக்கப் பட்ட “ஒரு நதியின் மரணம்“ என்ற ஆவணப் படம் கூட திரையிட அனுமதிக்கவில்லை கருணாநிதி. இந்த விசாரணை கமிஷனின் நீதிபதி, ராமன் மேலும் பல விசாரணைக் கமிஷன்களுக்கு தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

2001ல் சட்டக் கல்லூரி விடுதிக்குள் காவல்துறை புகுந்து தாக்கியதை விசாரிக்க பக்தவச்சலம் கமிஷன் அமைக்கப் பட்டது இந்தக் கமிஷனும், காவல்துறை அதிகாரிகள் மீது தவறில்லை என்று அறிக்கை அளித்தது.

அடுத்து, கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப் பட்டதை விசாரிக்க ராமன் கமிஷன் அமைக்கப் பட்டது. இதுவும் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

கருணாநிதியின் நள்ளிரவு கைதை கண்டித்து, ஆகஸ்ட் 2001ல் நடந்த பேரணியில் ஐந்து பேர் இறந்ததையும், வன்முறை சம்பவங்களையும் விசாரிக்க பக்தவச்சலம் கமிஷன் அமைக்கப் பட்டது. இந்த கமிஷனும், காவல்துறை மீது எந்தத் தவறும் இல்லையென்றே அறிக்கை அளித்தது.

அடுத்து 1,70,241 அரசு ஊழியர்கள் “டிஸ்மிஸ்“ செய்யப் பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவத்தை மூன்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளான கே.சம்பத், பி.தங்கவேல் மற்றும் மலை சுப்ரமணியன் ஆகியோர், விசாரித்தனர். இந்த மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகளும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை குளிர்விக்க வேண்டும் என்று, போட்டி போட்டுக் கொண்டு, ஆம்னி பஸ்களுக்கு ஆள் பிடிக்க பேருந்து நிலையங்களில் “சார் திருச்சியா ? மதுரையா ? “ என்று கூவிக்கொண்டு அலையும் ப்ரோக்கர்களை விட கேவலமாக, எப்படி தங்கள் பதவிக் காலத்தை நீட்டிக்க முடியும் என்று தங்களுக்குள் அடித்துக் கொண்ட கேவலமான சம்பவங்களும் நடந்தது.

கருணாநிதியின் ஆட்சியில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக அமைக்கப் பட்ட “சண்முகம்“ கமிஷன் எப்படி நடந்து கொண்டது என்று சவுக்கில் ஏற்கனவே எழுதப் பட்டுள்ளது.அடுத்த கமிஷன், மீண்டும் சண்முகம் தலைமையிலேயே, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக நடைபெற்றது. இந்தக் கமிஷன், உயர் அதிகாரிகளை குற்றம் சுமத்தாமல், கீழ்மட்ட அதிகாரிகளான டிஎஸ்பியையும், இன்ஸ்பெக்டரையும் குற்றம் சுமத்தி, அரசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டது.

இந்திய அளவில் எடுத்துக் கொண்டால், இன்னும் மோசம். 1984ம் ஆண்டு, சீக்கியர்கள் படுகொலையை பற்றி விசாரிக்க அமைக்கப் பட்ட 10 விசாரணை கமிஷன்களும் பாதிக்கப் பட்ட மக்களுக்கோ உருப்படியாக எதுவுமே செய்யவில்லை. இது பற்றியும் சவுக்கில் ஏற்கனவே எழுதப் பட்டுள்ளது.

1985 ம்ஆண்டு ஏர் இந்தியா விமானம் வெடித்தது பற்றிய சதித் திட்டத்தை விசாரிக்க அமைக்கப் பட்ட பி.என்.க்ரிபால் கமிஷன், உலகின் பல நாடுகளை சுற்றிப் பார்த்து விட்டு, ஒருவரையும் தண்டிக்க இயலாத ஒரு அறிக்கையை அளித்தது.

பீகாரில், ரண்வீர் சேனா மற்றும் அரசியல் வாதிகளைப் பற்றிய தொடர்புகளை விசாரிக்க அமைக்கப் பட்ட அமீர் தாஸ் கமிஷன், 8 ஆண்டுகள் விசாரணை நடத்திய பின்னும் அறிக்கை சமர்ப்பிக்கப் படாததால் மூடப்பட்டது.

1989 பகல்பூர் கலவரத்தை விசாரிக்க சின்ஹா மற்றும் சம்சூல் கமிஷன் அமைக்கப் பட்டது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு 1995ல் இக்கமிஷன் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. அடுத்து வந்த அரசு இதே விஷயத்தை மீண்டும் விசாரிக்க நீதிபதி என்.என்.சிங் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தது. இந்தக் கமிஷன் என்ன ஆனது என்பது ஒரு மர்மம்.2002 குஜராத் கலவரத்தை விசாரிக்க அமைக்கப் பட்ட “நானாவதி கமிஷன்“ குஜராத் அரசு மீது எந்தத் தவறும் இல்லை என்று நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியது.“டெகல்கா“ இதழ் அம்பலப் படுத்திய ஆயுத பேர ஊழலை விசாரிக்க அமைக்கப் பட்டது “பூகான் கமிஷன்“. இதன் நீதிபதி பூகான், ராணுவ தளவாடங்கள் வாங்கிய ஊழலைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டசும் குற்றச் சாட்டுக்கு ஆளாகி, இக்கமிஷனின் விசாரணை வரம்பில் வருபவர்தான். நீதிபதி பூகான், தனது குடும்பத்தினருடன் ஊரைச் சுற்றிப் பார்க்க தனக்கு தகுதியில்லாத வரம்பை மீறி ராணுவ விமானத்தில் ஊரைச் சுற்றிப் பார்த்தார்.

ராஜீவ் மரணத்தில் உள்ள சதித் திட்டத்தை விசாரிக்க அமைக்கப் பட்ட ஜெயின் கமிஷன், பல ஆண்டுகள் விசாரித்தபின், இன்னொரு ஏஜென்சியை நியமித்து இன்னும் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை அளித்தது.

அதன்படி, சிபிஐல் இன்னும் 19 ஆண்டுகள் கழித்து ஜெயின் கமிஷன் பரிந்துரையின் படி MDMA (Multi Disciplinary Monitoring Agency) என்ற அமைப்பை ஏற்படுத்தி இன்னும் “விசாரித்து ??????“ வருகிறார்கள். ராகுல் காந்தியின் மகன் இந்தியப் பிரதமராக பதவி ஏற்கையிலாவது இந்த MDMA விசாரணை முடியுமா என்பது தெரியவில்லை.
அனைவரும் அறிந்த சர்காரியா கமிஷனைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. “விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் கருணாநிதி“ என்று அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்ட பின்பும், கருணாநிதி இன்று முதல்வராகத்தானே உள்ளார்.


இப்போது அறிக்கை சமர்ப்பித்திருக்கும் லிபரான் கமிஷன் அறிக்கையின் லட்சணத்தைப் பற்றி விரிவாக விவாதித்து விட்டோம்.


விசாரணை கமிஷன்களின் அதிகாரம் மற்றும் உபயோகம் பற்றி 1987 ஃபேர்பேக்ஸ் நிறுவனம் பற்றி விசாரிக்க அமைக்கப் பட்ட ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நடராஜன்-தக்கர் தலைமையிலான கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. “விசாரணை கமிஷன் சட்டம் 1956 அதிகாரமில்லாத சட்டம், இதை வைத்து ஒருவரை சாட்சி சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்தக் கூட வழியில்லை“ என்று கூறியுள்ளனர்.


உண்மையை வெளிக் கொணர வேண்டும் என்று விசாரணை கமிஷன் அமைத்தால் தானே, கமிஷனுக்கு அதிகாரம் அளிப்பார்கள். உண்மையை புதைக்க வேண்டும் என்பதற்காகவே விசாரணை கமிஷன் அமைத்தால் கமிஷனுக்கு என்ன அதிகாரம் வழங்கப் படும் ?


நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பின், ஓய்வூதியத்தை வைத்து, நிம்மதியாக வாழ்க்கையை ஓட்ட மறுத்து, மீண்டும் அதிகார வெளி கொண்டு,

“திருவிழா அன்று கோயில் வாசலில் நிற்கும் பிச்சைக் காரர் கூட்டத்தை“

போல, ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருப்பதால் தான் அரசியல்வாதிகள், “விசாரணை கமிஷன்“ என்ற கல்லை கட்டி, உண்மையை கடலில் போடுகிறார்கள்.


1956ம் ஆண்டு விசாரணை கமிஷன் சட்டத்தை குழி தோண்டிப் புதைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இனியும் மக்கள் வரிப் பணத்தை ஓய்வு பெற்ற நீதிபதிகளின் பொழுது போக்குக்கு செலவு செய்யாமல், இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

சவுக்குFriday, November 27, 2009

மாவீரர் நாளில் சபதம் ஏற்போம் !மாவீரர் நாள் உரையாற்ற பிரபாகரன் வருவாரா, வரமாட்டாரா என்பது பற்றியெல்லாம் பல பதிவுகள் உலா வரும் நிலையில், “சவுக்கு“ அதற்குள் செல்ல விரும்பவில்லை.மாறாக, இம்மாவீரர் நாளில் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்பது பயன் தரும் என்று கருதுகிறேன். இன்று, ஈழப் போராட்டம் ஒரு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு பிரதான காரணம் என்னவென்று சிந்தித்தல் சரியாயிருக்கும்.

ராஜபக்ஷேவா ? பொன்சேகாவா ? சோனியாவா ? பிரணாப் முகர்ஜியா ? மன்மோகன் சிங்கா ? என்ற பட்டியல் பெரிதாய் நீளும். ஆனால், இப்பட்டியலில் பிரதானமாக நிற்பது “மஞ்சள் துண்டு மடாதிபதி“ கருணாநிதியே.


ஈழத் தமிழ் மக்கள் அனாதைகளாய் முள்வேளிக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள், இவர்களை காப்பாற்ற இன்று புலிகள் இல்லையே என உலகத் தமிழினமே, வேதனையில் இருக்கையில், “மாவீரன் மாத்தையா“ என்று உடன்பிறப்புக்கு கடிதம் எழுதும் கருணாநிதியின் தைரியம், புலிகள் அழிந்து விட்டார்கள் என்பது தானே ?2009 ஏப்ரல் 27ல் ஐந்து மணி நேரம் உண்ணா விரதம் இருந்த கருணாநிதி, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு ஆற்றிய உரை இந்நேரத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில், 1924ம் ஆண்டு ஜூன் 3ம் நாள் முத்துவேலர் என்ற இசைத் தமிழ் தந்தைக்கும் - அஞ்சுகம் என்ற அன்னைக்கும் பிறந்து, ‘குவா குவா’ என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பினேன்.

அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து பொருள்களைக் களவாடிய போது, அவர்களில் யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால், அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, தமிழ் என்ற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்காது.


தமிழை உச்சரிப்பதற்கு, உயர்த்துவதற்கு, உலக மொழிகளில், செம்மொழிகளில் ஒன்றாக ஆக்குவதற்கு, நான் உயிரோடு இருக்க வேண்டுமென்று தமிழன்னை கருதினாள் போலும். அதனால் தான் ஊர்ந்து, தவழ்ந்து, வளர்ந்து 13ம் வயதிலேயே தமிழ் எழுதவும், கட்டுரைகள் தீட்டவும், கதைகள் புனையவும், கற்கண்டு தமிழ் எனக்கு உதவிற்று. அந்நாளில் தான் 1938ம் ஆண்டில் ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை மற்றும் தமிழ்ப் புலவர் பெருமக்கள், தமிழ் காக்கும் போரில் குதித்த வரலாறு தோன்றிற்று. அந்த வரலாற்றில் ஒரு துளியாக நான் இருந்தேன்.


‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பார்களே, அப்படி இன்று கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நல் இதயங்களின் வாழ்த்துகளைப் பெறுகிற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். இந்த வளர்ச்சியும், வலிமையும் எதற்காக பயன்பட வேண்டும்? என் தமிழைக் காக்கவும், என் தமிழர் எங்கெல்லாம் அல்லல்படுகின்றனரோ அவர்களைக் காக்கவும், பயன்படாத இந்த உடல் இருந்து என்ன பயன், உயிர் இருந்து தான் என்ன பயன்?


‘உடலில் முதுகில் அறுவை சிகிச்சை ஆயிற்றே, இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்காக இப்படி ஓர் உண்ணா நோன்பு போராட்டம் என்றால் உடல் என்னவாகும், உயிர் என்னவாகும்? எங்களுக்கு நீங்கள் வேண்டும்’ என்றெல்லாம் என் தமிழர்கள், என் உடன்பிறப்புகள் முழக்கமிடுகின்றனர்.


ஆமாம், அவர்களுக்கு நான் வேண்டும்; எனக்கு அவர்கள் வேண்டும். என் தமிழ் வேண்டும். என் தமிழன் காலமெல்லாம் நலமாக வாழ வேண்டும். அவனை அல்லலோ, அவதியோ அண்டவும் கூடாது. அதனால் தான், இலங்கையிலே மடிந்து கொண்டிருக்கிற தமிழர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற சோகத்தோடு வாடினேன்.


நேற்றிரவெல்லாம் கண் விழித்து, இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டில்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் கூறினர். ‘நல்லதே நடக்கும்’ என்று தான் உறுதியளித்தனர்.


ஆனால், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது. அதிகாலை 5 மணியளவில் என் வீட்டாருக்கும் சொல்லாமல், ‘அறிவாலயம் செல்கிறேன்’ என்று கூறிவிட்டு, அண்ணாதுரை இருக்கும் இடம் எனக்கு அறிவாலயம் தானே என்று இந்த அறிவாலயத்திற்கு வந்து, உண்ணா நோன்பை துவங்கினேன்.


இதன் விளைவாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி, போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. இனி இலங்கை ராணுவம், இந்த போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் அளிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது”

2009 ஏப்ரல் 27 அன்று போர் நின்று விட்டதாம். இலங்கை ராணுவம் நிவாரணப் பணிகளின் ஈடுபடுத்தப் படும்மாம். அதற்குப் பிறகு முள்ளிவாய்க்காலில் எத்தனை தமிழ் உயிர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகின என்பது நினை விருக்கிறதா ?

இன்னும் குண்டுகள் வீசப் படுகிறது என்ற செய்தியாளர்கள் கேள்விக்குத் தான், மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்ற பதில்.


இப்படி போலியாக உண்ணாவிரதம் இருந்தார் என்பதற்காக மட்டும், கருணாநிதி ஈழப் போராட்டத்தின் முதல் எதிரி ஆகிவிடவில்லை. ஒவ்வொரு முறையும், தமிழகத்தில் போராட்டம் பெரும் எழுச்சியை பெரும்போதெல்லாம், அவ்வெழுச்சியை, நீர்த்துப் போகச் செய்வதில், மத்திய அரசின் உளவுத் துறையையும் விஞ்சி விட்டார் கருணாநிதி.


தமிழகத்தில் 2008 அக்டோபர் 2ம் தேதி, சிபிஐ கட்சி, சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய உண்ணாவிரதம், ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தின் எழுந்த பெரும் எழுச்சிக்கு முன்னோடியாக அமைந்தது. இந்த உண்ணாவிரதத்தை தொடர்ந்து, தமிழகத்தின் பல அமைப்புகள், மாநிலம் முழுவதும், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல், தொடர் முழக்க போராட்டம் என்று ஈழத்தில் போரை நிறுத்து என்று உரத்த குரலில் ஒலிக்கத் தொடங்கினர்.


அக்டோபர் 2க்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியைப் பார்த்தவுடன், கருணாநிதிக்கு ஈழத் தமிழர் மேல் “திடீர்“ அக்கறை வந்து அக்டோபர் 14 அன்று ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அறிவித்தார்.


அந்தக் கூட்டத்தில் இந்திய அரசு தலையிட்டு, போர் நிறுத்தத்தை வலியுறுத்தி - பேச்சு வார்த்தை மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண முயல வேண்டும்,


பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச செஞ் சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் மூலமாக உணவு - மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை செய்திட வேண்டும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப் பட வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டது.

இது தவிர, மத்திய அரசுக்கு இரண்டு வார காலம் கெடு விதிக்கப் பட்டது. இரண்டு வாரத்திற்குள், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்றால் தமிழகத்தின் அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டார் கருணாநிதி.

அக்டோபர் 23 அன்று மனிதச் சங்கிலி நடத்தப் பட்டது. கொட்டும் மழையில் நடந்த மனிதச் சங்கிலியில் பல்லாயிரக்கணக்கோனோர் கலந்து கொண்டனர்.

சோனியாவின் தூதராக சென்னை வந்து பிரணாப் முகர்ஜி கருணாநிதியை சந்தித்ததும், இலங்கையில் போர் நிறுத்தப் பட்டது போல, உடனடியாக எம்.பிக்கள் ராஜினாவை கைவிட்டார் கருணாநிதி.

ஆனால், ஈழத்தில் அப்பாவி தமிழ் மக்கள் மேல் குண்டு மழை பொழிவது துளியும் நிறுத்தப் படவில்லை. இதனால், நவம்பர் 25 அன்று மீண்டும் ஒரு சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார் கருணாநிதி. இந்தக் கூட்டத்தில் ஈழப் பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்தித்து நேரில் வலியுறுத்த,முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு டிசம்பர் 4-ம் தேதி தில்லி செல்ல உள்ளனர். அதற்கு முன், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்பிகள் நவம்பர் 28ம் தேதி பிரதமரைச் சந்திக்கச் செல்கின்றனர் என்றும் முடிவெடுக்கப் பட்டது.


இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கருணாநிதி தலைமையில் டெல்லி சென்று அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மனு அளித்தனர். கோரிக்கையை ஏற்று வெளிஉறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.


ஆனால் பிரணாப் இலங்கை போவதாய் இல்லை. அடுத்த கட்டமாக கருணாநிதி சட்டசபையில் “இறுதி வேண்டுகோள்“ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றினார்.
டிசம்பர் 4ம் தேதி பிரணாப் இலங்கை செல்வார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் 2009 ஜனவரி இறுதியில்தான் பிரணாப் இலங்கை சென்றார்.


ஜனவரி 29 அன்று முத்துக்குமாரின் மரணம், தமிழகத்தை புரட்டிப் போட்டது. தமிழகத்தின் அனைத்து பிரிவினரும் போராட்டத்தில் குதித்தனர்.


ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிப்ரவரி 4 அன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. ஆனால் கருணாநிதி முழு அடைப்பு சட்ட விரோதம் என்று அறிவித்தார்.


இந்நிலையில் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இப்போராட்டங்களை முடக்கும் வகையில், கருணாநிதி அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்தார். இதனால் மாணவர்களின் போராட்டம் ஒடுக்கப் பட்டது.


கருணாநிதி, காவல்துறையை வைத்து, தமிழகம் முழுவதும் அடக்குமுறையை ஏவி விட்டார். “மீனுக்கு தலையையும் பாம்புக்கு தலையையும்“ பாட்டும் நயவஞ்சக நாடகத்தில் கருணாநிதிக்கு இணை யார் ? தமிழகத்தில், சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப் பட்டனர்.


தமிழகத்தில் அனைத்துப் பிரிவினரையும் போராட்டம் நடத்த விடாமல் ஒடுக்கினாலும், கருணாநிதியால் வழக்கறிஞர்களை ஒடுக்க முடியவில்லை.


சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வாக்காளர் அடையாள அட்டை எரிப்பு, சாலை மறியல், ரயில் மறியல், நீதிமன்ற புறக்கணிப்பு, சோனியா-கருணாநிதி படம் எரிப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இத்தனை போராட்டங்களை நடத்திய வழக்கறிஞர்களை மட்டும் ஒடுக்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் கருணாநிதி பிப்ரவரி 19 அன்று காவல்துறையை விட்டு கொடூரமாக தாக்கினார்.

அதற்குப் பின், வழக்கறிஞர்களின் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டம், தமிழக காவல்துறைக்கு எதிரான போராட்டமாக திசை திரும்பியது.

சமுதாயத்தில் அனைத்து பிரிவினரின் போராட்டத்தையும் ஒடுக்கிய கருணாநிதி மகிழ்ச்சியாக காங்கிரஸ் தலைமையை திருப்தி படுத்திய சந்தோஷத்தில் இருந்தார்.
ஒரு வழியாக தேர்தல் முடிந்ததும், ஈழத்தில் போரும் முடிந்தது.


எம்.பி.கள் ராஜினாமா என்று அறிவித்த கருணாநிதி, தனது முடிவில் உறுதியாக இருந்திருப்பாரேயானால், மத்திய அரசு கவிழ்ந்திருக்கும், சிங்களனும், சோனியா இருக்கும் தைரியத்தில் இப்படி கொக்கரித்திருக்க மாட்டான்.

தமிழகத்தில் எழுச்சியோடு நடந்த அத்தனை போராட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்வதில் கருணாநிதி திட்டமிட்டு பெரும் பங்கு வகித்தார். போராட்டங்கள் தீவிரமடைந்தால், "தியாகத் திருவிளக்கு" சோனியா மனம் வருத்தமடையும், "எங்கள் தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே" என்று சோனியாவிடம் சொன்னால், அதற்குப் பொருள், ஈழத் தமிழர்கள் அழிந்தாலும் எனது ஆட்சியைக் காப்பாற்றுங்கள் என்பதுதான் என்பதை புரிந்து, எப்பாடு பட்டாவது எனது ஆட்சியைக் காப்பாற்றி, எனது குடும்பத்தையும், பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்களுக்கும் ஆபத்து வராமல் காப்பாற்றுவார், அதற்காக, ஈழத் தமிழர்களின் உயிரை, கொத்துக் குண்டுகளுக்கு இரையாக்கினால் பரவாயில்லை என்று திட்டமிட்டே செயல்பட்டார் கருணாநிதி.


இப்போது கூறுங்கள், ஈழத் தமிழரின் முழுமுதல் எதிரி யார் ?

திணைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.


பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதைப் பனையளவாகக் கருதி குற்றம் செய்யாமல் காத்துக் கொள்வர் என்கிறான் வள்ளுவன்.

கருணாநிதி பழி நாணுபவரா என்ன ?

பாரதியின் இந்தப் பாடல், கருணாநிதிக்காகவே எழுதப் பட்டது போலில்லை ?


நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.


மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!


தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!


அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!


ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ?


மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ?


நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!


சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!


பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!


ஆகையால் இந்த மாவீரர் நாளில், கருணாநிதியின் கோரப் பிடியிலிருந்து, தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்று சபதம் ஏற்போம். இதுவே நாம் அந்த மாவீரர்களுக்கு செலுத்தும் அஞ்சலி.

சவுக்கு

Thursday, November 26, 2009

இந்தியா ஏழை நாடா ?இந்தியா வளரும் நாடு, மூன்றாம் உலக நாடு, என்று அனைவரும் கூறுகிறார்கள். இது உண்மையா ? ஏன் இந்த நிலை ?

இந்தியா சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் 3 மாதங்கள் மற்றும் 9 நாட்கள் ஆகின்றன. இந்திய அரசின் கணக்குப் படி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான அளவுகோல், மாதத்துக்கு ரூபாய் 300க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கின்றனர். இவ்வாறு மாதத்துக்கு ரூபாய் 300க்கும் கீழே சம்பாதித்து, வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா ? 30 கோடி.


உலக வங்கி நிர்ணயித்துள்ள அளவுகோலின்படி, ஒரு சாதாரண வாழ்க்கை வாழ, மாதத்துக்கு ரூபாய் 1410/- சம்பாதிக்க வேண்டும். இந்திய அரசு நிர்ணயித்துள்ள கணக்குப் படி, (அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியத்தின்படி) மாதம் ஒரு நபர் ரூபாய் 1250/- சம்பாதிக்க வேண்டும்.


ஆனால், மாதம் ரூபாய் 300க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கையே 30 கோடியைத் தாண்டுகிறது. இந்நிலையில் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாகப் பெறுபவர்களின் எண்ணிக்கையை உத்தேசமாக கணக்கிட்டால் கூட, 50 சதவிகிதத்தைத் தாண்டுகிறது.


இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்ப்ஸ் என்ற பத்திரிக்கை, ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இவ்வாறு, இந்த ஆண்டு இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை இப்பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா ? 14,95,040 கோடி இந்திய ரூபாய்கள்.

இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர், பிறப்பில் இந்தியராக வெளிநாட்டில் வசிக்கும், லட்சுமி மிட்டல். இவரது சொத்து மதிப்பு 14,01,600 கோடி இந்திய ரூபாய்கள்.

மூன்றாவது இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானியின் இளைய சகோதரரும், அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவருமான அனில் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 8,17,600 கோடி இந்திய ரூபாய்கள்.


இப்பட்டியலில் 100வது இடத்தில் இருப்பவர் டெல்லியைச் சேர்ந்த ஹர்தீப் பேடி. ட்யூலிப் டெலிகாம் நிறுவனத்தின் தலைவரான இவரின் சொத்து மதிப்பு 19,388 கோடி இந்திய ரூபாய்கள்.


இப்பட்டியலில் உள்ள 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ? 1,28,79,022 கோடி இந்திய ரூபாய்கள். அதாவது ஒரு கோடியே, இருபத்தி எட்டு லட்சத்து, எழுபத்து ஒன்பதாயிரத்து இருபத்தி இரண்டு கோடி ரூபாய்கள்.


தலை சுற்றுகிறதா ? 100வது இடத்தில் இருப்பவரின் சொத்து மதிப்பே பத்தொன்பதாயிரத்து முன்னூற்று எண்பத்து எட்டு கோடி ரூபாய்கள் என்றால், ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் வைத்திருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் ?


இந்தத் தொகை அனைத்தும், கணக்கில் காட்டப்பட்ட வெள்ளைப் பணம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவில், கருப்புப் பணத்தை சேர்க்காத நிறுவனமே இல்லை என்பதையும் மறவாதீர்கள்.

இவர்கள் பணக்காரர்களாக இருப்பது தவறா என்ன என்று கேட்பீர்கள். தவறு இல்லைதான். ஆனால் கீழ்கண்ட புள்ளி விபரங்களை பாருங்கள்.


இந்திய அரசின் புள்ளி விபரங்களின் படியே, 1997ம் ஆண்டு முதல், 2007 வரை கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 1,82,936.

சராசரியாக இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 15,747 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன ?

தாள முடியாத கடன் தொல்லை மட்டுமே. இந்தியா பெரும்பான்மையாக விவசாய நாடாக இருப்பினும், விளையும் விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கவில்லை எனில், விவசாயி கடனை எப்படி திருப்பிக் கட்டுவான் ?

வங்கிகளில் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்யும். கந்து வட்டிக் காரனிடம் வாங்கிய கடன் ?


1991 முதல் 2001 வரையிலான காலத்தில் கட்டுப்படி ஆகவில்லை என்று விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழிலுக்கு போனவர்களின் எண்ணிக்கை 80 லட்சம்.


இந்தியாவில் விவசாயத்திற்கு மான்யம் கொடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கும் பன்னாட்டு ஆணையம் மற்றும் உலக வங்கி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விவசாயிகளுக்கு வழங்கப் படும் மான்யத்தை கண்ட கொள்ளாமல் போனதால்தான், இந்தியாவில் விவசாயிக்கு, அத்தொழில் கட்டுப்படியாகாமல் போகிறது.

பருத்தி விவசாயிகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சந்தைகளுக்கு போட்டியிட முடியாமல்தான் நொடித்துப் போய், பருத்திக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை நாடுகின்றனர்.
வணிக நிறுவனங்கள் நேரடியாக, விவசாயியின் நிலத்தை சொந்தம் கொண்டாடா விட்டாலும், இது தொடர்பான இதர அத்தனை இடங்களிலும், தங்களின் சூழ்ச்சி வலையை மிக நெருக்கமாக பின்னியுள்ளனர்.

கொள்முதல், விற்பனை மையங்கள், சந்தை, விளை பொருட்களின் விலை ஆகிய அத்தனையும், நிறுவனங்களின் பிடியில் இருக்கையில், நிலத்தை மட்டும் கையில் வைத்து என்ன செய்வான் விவசாயி ?

இது போக, விவசாயியிடம் மிச்சமிருக்கும், ஒரே சொத்தான நிலத்தையும் பிடுங்கி பன்நாட்டு நிறுவனங்களின் கைகளில் தாரை வார்க்கத்தான், Special Economic Zones என்று அழைக்கப் படும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப் பட்டு வருகின்றன.


தற்போது, பன்னாட்டு நிறுவனங்களின் சதி வலையால் இந்தியாவின் பல பகுதிகளில் மரபணு மாற்றப் பட்ட பருத்தி மற்றும் இதர பயிர்களை மட்டுமே விதைக்கும் அளவுக்கு விவசாயிகள் தள்ளப் படுகிறார்கள். இந்த மரபணு மாற்றப் பட்ட விதைகள், வழக்கத்தை விட, அதிக தண்ணீர் இழுப்பதால், விவசாயிகள், தண்ணீருக்கும் கஷ்டப்பட்டு, விவசாயத்தை பெரிய தலைவலியாக நினைக்கும் அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.


இதையும், இதற்கு முன் கூறிய இந்திய பணக்காரர்களின் பட்டியலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். மேலும் ஒரு புள்ளி விபரத்தை உங்களுக்காக வழங்குகிறேன்.

இந்தியாவில், அதிகம் ஊதியம் பெறும் நபர்களின் பட்டியலை “பிசினஸ் இந்தியா நாளேடு“ வெளியிட்டுள்ளது. முதல் பத்து நபர்களின் பட்டியலை மட்டும் கீழே தருகிறேன். (இந்தப் பட்டியலில் குறிப்பிடப்படும் ஊதியம் ஆண்டுதோறும் வரும் பங்குத்தொகை மற்றும் போனசையும் சேர்த்து )


அனில் அம்பானி


1) அனில் அம்பானி 104 கோடிகள்
(அனில் திருபாய் அம்பானி நிறுவனம்)


கலாநிதி மாறன்


2) கலாநிதி மாறன் 37 கோடிகள்
(சன் டிவி குழுமம்)


மல்லிகா கலாநிதி


3) மல்லிகா கலாநிதி 37 கோடிகள்
(சன் டிவி குழுமம்)


ராமசுப்ரமணிய ராஜா

4) பி.ஆர்.ராமசுப்ரமணிய ராசா 57 கோடிகள்
(இந்தியா சிமென்ட்ஸ் மேலாண்மை இயக்குநர்)


நவீன் ஜின்டால்

5) நவீன் ஜின்டால் 48 கோடிகள்
(இணை மேலாண் இயக்குநர், ஜின்டால் குழுமம்)


மல்வீந்தர் சிங்

6) மல்வீந்தர் சிங் 23 கோடிகள்
(ரான்பாக்சி மருந்து நிறுவன தலைவர் மற்றும்
மேலாண் இயக்குநர்)

சுனில் மிட்டல்


7) சுனில் பாரதி மிட்டல் 20 கோடிகள்
(ஏர் டெல் நிறுவன மேலாண் இயக்குநர்)


ஐநாக்ஸ் தியேட்டர்


8) விவேக் ஜெயின் 20 கோடிகள்
(ஐநாக்ஸ் குழும மேலாண் இயக்குநர்)


கவுதம் அடானி


9) கவுதம் அடானி 20 கோடிகள்
(அடானி குழும தலைவர்)

ப்ரிஜ் மோகன் லால் முன்ஜால்

10) பிரிஜ் மோகன் முன்ஜால் 19 கோடிகள்
(ஹீரோ ஹோண்டா நிறுவன தலைவர்)

இப்பட்டியலில் அதிகம் ஊதியம் பெறும் 3134 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் முதல் பத்தைத்தான் மேலே பார்த்தீர்கள். இப்பட்டியலில் கடைசியாக 3134வது இடத்தில் இருப்பவரின் ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா ?


ரூபாய் 50 லட்சம்.

3134வது இடத்தில் இருப்பவரே ஆண்டுக்கு 50 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள் என்றால் இவருக்கு மேலே இருப்பவர்கள் எவ்வளவு பெறுவார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

இந்தப் பட்டியலை பார்த்து விட்டீர்களா ?

இந்தப் பட்டியலில் இருப்பவர்கள்தான், இந்திய அரசையும், இந்திய சட்டங்களையும், இந்திய நீதிமன்றங்களையும், அனைத்து மாநில அரசுகளையும், மாநில சட்டங்களையும், இந்தியா மற்றும் மாநிலங்களின் கொள்கைகளையும், இந்தியா மற்றும் மாநிலங்களின் பட்ஜெட்களையும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பிரதமர்களையும், முதலமைச்சர்களையும், மத்திய மாநில அமைச்சர்களையும், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற உயர் அதிகாரிகளையும், உண்மையில் நிர்வகிப்பவர்கள்.

இவர்கள்தான் அனைத்துக்கும் சூத்திரதாரிகள்.

இவர்களின் கையில் இருக்கும் நூலிலேதான் பிரதமர் உட்பட, இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளும் பொம்மைகளாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள்தான் பரப்பிரம்மம்.

இவர்கள்தான் கடவுள்.

இவர்களன்றி, இந்தியாவில் ஓர் அணுவும் அசையாது.

இவர்கள் இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் ஒரு சதவிகிதத்திற்கும் வெகு கீழேதான் இருப்பார்கள்.

இந்திய மக்கட்தொகையில் பெரும்பான்மை மக்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா ?


கீழே உள்ள இந்தப் படங்களை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு ஆத்திரம் வருகிறதா ?

இதே ஆத்திரம் ஆந்திரா, சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு வந்ததால்தான் அவர்கள் நக்சலைட்டுகள் ஆனார்கள்.

அவர்கள் தீவிரவாதிகளா ? அவர்கள் தீவிரவாதிகாளானால், ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டும், இவ்வளவு பணம் மேலும் மேலும் சேர்வதற்கு காரணமாக இருந்து வழிவகை செய்து கொடுத்து, அவர்கள் ஆட்டுவித்தபடி ஆடிக்கொண்டிருக்கும், நம் அரசியல்வாதிகள் மஹாத்மாக்களா ?

சவுக்கு