தமிழக காவல்துறைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா ? இருக்கிறது. கோஷ்டிகளை வளர்த்து மோதிக்கொள்வதில், தமிழக காங்கிரஸ் கட்சியை விஞ்ச ஒருவரும் கிடையாது. தற்போது காங்கிரஸ் கட்சியையும் விஞ்சும் வகையில், தமிழக காவல்துறையில் கோஷ்டி மோதல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இந்த கோஷ்டி மோதலில் பலிகடா சட்டம் ஒழுங்குதான்.
தமிழக காவல்துறையில் கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த காவல்துறை வழக்கறிஞர்கள் மோதலைத் தொடர்ந்து, காவல்துறையில் ஒரு கட்டுக் கோப்பான ஒற்றுமை உணர்வு காணப்பட்டது.
ஆனால் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்று, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதும், இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் அரசு மற்றும் கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் சார்பாகவும், உச்ச நீதிமன்ற் வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜரானார். இவ்வழக்கிற்காக ராஜீவ் தவானுக்கு ஒரு நாள் விவாதத்திற்கு ரூ.ஐந்து லட்சம் கட்டணமாக அரசு செலவில் வழங்கப் பட்டது.
இவ்வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் அழகிரியின் சிறப்புச் செயலராக நியமிக்கப் படுவதற்காக டெல்லி உறைவிட ஆணையராக மாற்றப் பட்டார். இந்நியமனத்தை பிரதம மந்திரி தலைமையிலான குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஒப்புதல் அளிக்கும் முன்பு, பிரதமருக்கு, ஏ.கே.விஸ்வநாதன் மீதான ஊழல் புகார்கள் பற்றிய ஆவணங்களும் ஆதாரங்களும் பிரதமர் பார்வைக்கு வைக்கப் பட்டதைத் தொடர்ந்து பிரதமர், அழகிரியின் சிறப்புச் செயலராக ஏ.கே.விஸ்வநாதனை நியமிப்பதற்கு தடை விதித்தார். பிரதமர் பார்வைக்கு இந்த ஊழல் தொடர்பான ஆதாராங்கள் கிடைத்ததற்கு, கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணனும், உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டும் காரணம் என்று ஏ.கே.விஸ்வநாதன் கருதினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஏ.கே.விஸ்வநாதன் வழக்கறிஞர் காவல்துறையினர் மோதல் தொடர்பான வழக்கில் அபிடவிட் தாக்கல் செய்கையில் தடியடி நடத்த உத்தரவிட்டது ராதாகிருஷ்ணன்தான், அவர் அவ்வாறு உத்தரவிடவில்லையெனில், அன்று கலவரமே நடைபெற்றிருக்காது என்று அந்த அபிடவிட்டில் தெரிவித்தார்.
ஏ.கே.விஸ்வநாததின் இந்த அபிடவிட்டால், ஒற்றுமையாக இருந்த காவல்துறை கூடாரம் கலக்கமடைய ஆரம்பித்தது. இந்த அபிடவிட்டால், ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணனும், ஜாபர்சேட்டும், உள்துறை செயலாளர் மாலதிக்கு நெருக்கடி கொடுத்து, ஏ.கே.விஸ்வநாதன் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை அடுத்து, ஏ.கே.விஸ்வநாதன் ஒரு வருட விடுப்பில் சென்றார். இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு காவல்துறை அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் ஒரு அபிடவிட் தாக்கல் செய்த ஏ.கே.விஸ்வநாதன், அந்த அபிடவிட்டில் தன் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு காரணமே ராதாகிருஷ்ணன் தான் என்றும், ராதாகிருஷ்ணனை பாதுகாக்க பல செய்திகள் வேலை செய்கின்றன என்றும், ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அபிடவிட் தாக்கல் செய்தால், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை வரும் என்று அதிகாரிகளை மிரட்டுவதற்காகத்தான் தன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இது தவிர, லத்திக்கா சரணை காவல்துறை தலைமை இயக்குநராக தமிழக அரசு நியமித்துள்ளது, பல பேரின் புருவத்தை உயர்த்தியுள்ளது தவிரவும் பல பேரின் மன வருத்தத்துக்கு காரணமாகியுள்ளது. ஏனெனில், 1971ம் ஆண்டு ஐபிஎஸ் தொகுதியை சேர்ந்த கே.பி.ஜெயின் விடுப்பில் சென்றதற்கும் காரணம் சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக் கேட்பு தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிவேல் என்ற காவல் உதவி ஆய்வாளர், நடு சாலையில், அமைச்சர்கள் முன்னிலையில் துடி துடிக்க இறந்தது குறித்து, அமைச்சர்களின் செயலிழந்த நிலை குறித்து, தொலைபேசியில் கே.பி.ஜெயின் தனது வருத்தத்தை சிறிது கடுமையான வார்த்தைகளால் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த உரையாடல் டேப் செய்யப் பட்டு முதல்வருக்கு காண்பிக்கப் பட்டதாகவும், அதனாலேயே, முதல்வர் ஜெயினை விடுப்பில் செல்லச் சொன்னதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், சமீபத்தில் வெளியான தொலைபேசி ஒட்டுக் கேட்பு பட்டியலில் பல காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் இருந்ததனால் பல காவல்துறை அதிகாரிகள் உளவுத்துறையின் உயர் அதிகாரி மீது ஏக கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
லத்திக்கா சரணை விட பணியில் மூத்த என்.பாலச்சந்திரன், நட்ராஜ், கே.விஜயக்குமார் ஆகிய அதிகாரிகள் இருக்க, செப்டம்பர் 2009ல் டிஜிபி யாக பதவி உயர்வு பெற்ற லத்திக்கா சரணுக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கியது பல பேருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நியமனம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று இதை எதிர்த்து, டிஜிபி நட்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, நீதிபதிகள் டி.முருகேசன் மற்றும் சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு, லத்திக்கா சரணின் நியமனம் இந்த ரிட் பெட்டிஷனின் முடிவைப் பொருத்ததே என்று ஆணையிட்டுள்ளனர்.
மேலும், நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்த, உபாத்யாய் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சிக்கி, தன் மீதான துறை விசாரணையில் குற்றமற்றவர் என்று விசாரணை அதிகாரி அறிக்கை கொடுத்தும், அவரை விட பணியில் இளையவரான லத்திக்கா சரணுக்கு டிஜிபி பதவி உயர்வு அளித்து விட்டு, உபாத்யாய்க்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பது வேறு, நேர்மையான அதிகாரிகள் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் அதிகாரிகளுக்குள் இவ்வாறு பல்வேறு குழுக்களாக பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதால், கீழ் நிலையில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களை கட்டுப் படுத்த உயர் அதிகாரிகள் சரிவர கவனம் செலுத்தாதனால், கீழ் மட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கடுமையான தவறுகளை செய்வதாகவும் கூறுகிறார்கள். கடந்த வாரத்தில் மட்டும் பல்வேறு ஊழல் வழக்குகளில் மூன்று ஆய்வாளர்கள் பணி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.
பணியில் மூத்தவர்கள் இருக்க, லத்திக்கா சரண் போன்ற இளையவர்களுக்கு பதவி உயர்வு அளித்து, விதிகளை மீறியும் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாரபட்சம் பார்த்தும் பதவிகளை வழங்குவதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே தங்களுக்குள் அடித்துக் கொள்வதால், சமூகத்துக்கே கேடு. என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
சவுக்கு
3 comments:
அரசியல்வாதிகளின் லட்சணம் தானே, அரசு அதிகாரிகளாக இருப்பவர்களையும் தொற்றி கொள்ளும்.
சரியாகச் சொன்னீர்கள் தோழர் கருப்பு
அடுத்தவர் ஆட்சின்னா ஈரல் கெட்டுவிட்டது, கிட்னி அழுகி போச்சின்னு நீலி கண்ணீர் விடுவார், இதுக்கு என்ன சொல்ல போறார் தமிழர் தந்தை?
Post a Comment