தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள ஊழல்களைக் களையவும், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முறைகேடுகளை கண்டறியவும் ஏற்படுத்தப் பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே, நூதனமாக முறையில் ஊழல் நடைபெற்று வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊழல், அதிகார மட்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்தே நடக்கிறது என்பதும், ஒரு வகையில் சட்டபூர்வமான ஊழலாக இது நடைபெற்று வருகிறது என்ற தகவலும் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.
அரசு ஊழியர்கள் அலுவலக நிமித்தமாக பயணம் மேற்கொள்கையில் அவர்களுக்கு பயணப்படி வழங்கப் படுவது வழக்கம். ஆனால் எந்தவிதமான பயணமும் மேற்கொள்ளாமலேயே, ஆண்டுதோறும் 1.3 கோடிக்கும் மேல், லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்கு பயணப்படியாக, அதிகாரிகள் ஒத்துழைப்போடு வழங்கப் பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2007-2008 ஆண்டுக்கு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு 1,31,60,000 ரூபாய் பயணப்படி கணக்கில் வழங்கப் பட்டது. இந்தப் பயணப்படித் தொகை பெரும்பாலும், எவ்வித பயணமும் மேற்கொள்ளாமலேயே இத்துறை ஊழியர்களால் பெறப்படுகிறது என்று கூறப் படுகிறது. அலுவல் சார்ந்த பயணம் என்றால், எந்த வழக்கு குறித்து பயணம் மேற்கொள்கிறார்கள் என்ற விபரம் பயணம் மேற்கொள்ளும் முன் அனுமதி பெறுகையில் குறிப்பிட வேண்டும்.
ஆனால், அனைத்து பயணப்பட்டியல்களிலும், “ரகசிய அலுவல்” என்ற காரணத்தைக் எழுதி, பயணப் பட்டியல்கள் தயாரிக்கப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
உதாரணத்திற்கு, லஞ்ச ஒழிப்புத் துறை தலைமையகத்தில் நிர்வாக டிஎஸ்பியாக பணியாற்றும் கிருஷ்ணாராவ் என்பவருக்கு விசாரிப்பதற்காக எந்த வழக்குகளும் வழங்கப் படவில்லை.
இவருடைய பணி, தலைமையகத்தில் நிர்வாகப் பணிகளை பார்ப்பது மட்டுமே. ஆனால், இவர், வழக்கு விசாரணை தொடர்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, பயணம் மேற்கொண்டதாக மாதந்தோறும் பயணப் பட்டியல் தயாரித்து, பணம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரைப் போன்றே, தலைமையகத்தில் பணியாற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், நிர்வாக ஆய்வாளர், சுதாகர் போன்றோரும், இவ்வாறான போலிப் பயணப் பட்டியல் தயாரித்து மாதந்தோறும் பணம் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லஞ்ச ஒழிப்புத் துறையின் கட்டுப் பாட்டு அறையில், தொலைபேசி ஆப்பரேட்டர்களாக பணியாற்றும், காவலர்களும், டிஜிபி, ஐஜி, எஸ்.பிக்கள் ஆகியோருக்கு, “வெயிட்டிங் பிசி“ க்களாக பணியாற்றும் காவலர்களுக்கு சென்னையை விட்டு வேறு எங்கும் செல்ல வேண்டிய பணிகள் கிடையாது. ஆனால், இவர்களும், மாதந்தோறும் போலிப் பயணப் பட்டியல் தயாரித்து பணம் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு போலி பயணப் பட்டியல் தயாரித்து பணம் பெறுவது, அரசு உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் தெரிந்தே நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கு போன்ற காவல் துறையின் மற்ற பிரிவுகளில், ஏராளமான மேல் வருமானம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.
அதனால், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பணியாளர்களை விருப்பத்தோடு வர வைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான போலி பயணப்பட்டியல்கள் தயாரிப்பது சட்டபூர்வமாகவே நடைபெற்று வருவதாக, காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனாலும், மற்ற அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளைக் கண்டறியும் லஞ்ச ஒழிப்புத் துறை தன்னுடைய துறையிலேயே, இது போன்ற போலி பயணப்பட்டியல் தயாரிக்கும் முறைகேடுகளில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம் என்று லஞ்ச ஒழிப்புத் துறையால் பாதிக்கப் பட்ட அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இத்துறைக்கு காவல்துறையினர் விருப்பத்தோடு வர வேண்டும் என்பதற்காக, மக்களின் வரிப்பணம் 1.31 கோடி ரூபாயை, சட்டபூர்வமான லஞ்சமாக இத்துறை ஊழியர்களுக்கு வழங்குவது முறையா என்றும் கேள்வி எழுகிறது. மேலும், மற்ற துறை ஊழியர்களுக்கு இல்லாத சலுகையாக லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்கு, அடிப்படை ஊதியத்தில் 15% சிறப்பு ஊதியமாக வழங்கப் படும் நிலையில், இந்தப் பயணப்படி மோசடி எதற்கு என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.
போலிப் பயணப்பட்டியல் தயாரிப்பது ஒரு வகை மோசடி என்றால், அனைத்து காவல்துறை பிரிவுகளிலும் நடைபெறும், “ரகசிய நிதி“ தொடர்பான மோசடிக்கு லஞ்ச ஒழிப்புத் துறையும் விதிவிலக்கல்ல.
ஆண்டு தோறும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, ரகசிய நிதியாக ரூபாய் 45 லட்சம் வழங்கப் படுகிறது. காவல்துறையினருக்கு ரகசிய நிதியாக வழங்கப் படும் பணம், ஊழலைப் பற்றி ரகசியமாக தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானமாக வழங்கப் படுவதற்காக அரசால் கொடுக்கப் படும் நிதியாகும்.
ஆனால், இந்நிதியில் சல்லிக் காசு கூட, தகவல் அளிப்பவர்களுக்கு வழங்கப் படுவதில்லை என்றும், இந்நிதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் கீழ்மட்ட ஊழியரிலிருந்து இயக்குநர் வரை பங்கு பிரித்துக் கொள்ளப் படுகிறது என்பது அடுத்த அதிர்ச்சித் தகவல்.
தொடக்கத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும் காவல்துறையினருக்கு மட்டும் இத்தொகை பங்கிடப்பட்டு வழங்கப் பட்டு வந்தது. அமைச்சுப் பணியாளர்கள் இது தொடர்பாக தங்கள் புலம்பலை வெளியிடத் தொடங்கியதும், இவர்கள் வாயை மூட, கடந்த 8 ஆண்டுகளாக அவர்களுக்கும் பங்கு வழங்கப் பட்டு வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.
மாதந்தோறும் எஸ்.பி அந்தஸ்திலான அதிகாரிக்கு ரூபாய்.5000 வழங்கப் படுவதாகவும், டிஎஸ்பிக்கு 1500 ரூபாய் என்றும், இன்ஸ்பெக்டர்களுக்கு, 1000 ரூபாய் என்றும், காவலர்கள் தலைமைக் காவலர்களுக்கு 500 முதல் 750 ரூபாய் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 100 முதல் 500 வரை வழங்கப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி ஆண்டு இறுதியான மார்ச் மாதத்தில், இந்த ரகசிய நிதி மொத்தமாக எடுக்கப் பட்டு, இத்துறை பணியாளர்களுக்கு மொத்தமாக பகிர்ந்தளிக்கப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, மாதந்தோறும் வழங்கப் படும் தொகை, மார்ச் மாதத்தில் மட்டும் இரட்டிப்பாக வழங்கப் படுகிறது என்றும் தெரிகிறது.
அரசு அலுவலகங்களில் துறைத் தலைவருக்கு மட்டுமே தனது அறையில் குளிர்சாதன வசதி செய்து கொள்ளும் உரிமை உண்டு. ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரிகள் அனைவர் அறைகளிலும் ரகசிய நிதியிலிருந்து வாங்கப் பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் பொருத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, குளிர்சாதன வசதிக்கு தகுதியில்லாத, சட்ட ஆலோசகர், மேற்கு சரக எஸ்பி லலிதா லட்சுமி, மத்திய சரக எஸ்பி லட்சுமி, மேற்கு சரக எஸ்பி ஏ.டி.துரைக்குமார், சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்பி ஜோஷி நிர்மல், சிறப்பு அதிகாரி நல்லமா நாயுடு, இணை இயக்குநர் சுனில் குமார், ஐஜி துக்கையாண்டி, ஆகிய அனைவர் அறையிலும், “ரகசிய நிதி“ யிலிருந்து வாங்கப் பட்ட குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப் பட்டு அதற்காக மின் கட்டணம் அரசுக் கணக்கில் செலுத்தப் படுவதாகவும் தெரிகிறது.
இன்று சென்னை மாநகரில் சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக இருக்கும் வி.ஏ.ரவிக்குமார் 2002ம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பொழுது, அவரது அலுவலக அறையில் அவர் நண்பர் வாங்கிக் கொடுத்த ஏ.சி மெஷினை பொருத்தியிருந்தார். இது தொடர்பாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் (DE 126/2002/POL/HQ) அரசு அனுமதி பெறாமல் ஏ.சி மெஷின் பொருத்தி அரசு செலவில் மின் கட்டணம் செலுத்தியதால், கூடுதலாக ஏற்பட்ட மின் கட்டணத்தை ரவிக்குமாரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய பரிந்துரை செய்தது இதே லஞ்ச ஒழிப்புத் துறைதான். இதைத்தான் “மாமியர் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி“ என்கிறார்களோ ?
இவ்வாறான நூதன ஊழலில் ஈடுபடும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிவாளம் கட்டுவது யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஊசலாடுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையை நினைத்தால் லஞ்சம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட புதுக்கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
“வாங்கினேன். கைது செய்தார்கள்
கொடுத்தேன் விடுதலை செய்தார்கள். “
கொடுத்தேன் விடுதலை செய்தார்கள். “
நன்றி நம்தினமதி நாளேடு
சவுக்கு
3 comments:
அப்புறம் எப்படி லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சத்தை ஒழிக்கப்போகிறார்கள்?..
லஞ்சம் என்பது, உடம்பின் ஒரு பகுதியாகிவிட்டது சார்...
அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்க,
தல நீங்க ஓரு ACF ரமணா!!!!
samuthayathin meale enna veruppu
Post a Comment