Flash News

Saturday, May 1, 2010

தலைவா வா…. தலைமையேற்க வா… தமிழகம் காக்க வா…



என் அன்புத் தலைவா.

தமிழ்நாட்டை உய்விக்க உன்னை விட்டால் ஆளில்லை என்பதால்தான் உனக்கு இந்த அழைப்பு. இன்று தமிழ்நாடு இருக்கும் நிலையில் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத, யாருடைய கருத்தையும் வெளிப்படையாக கூற இயலாத, சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள், மியூசியத்தில் பாடம் செய்யப் பட்ட விலங்குகளாய் ஆன நிலையில், பத்திரிக்கைகள், அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டால், விளம்பரம் நிறுத்தப் பட்டோ, கைது செய்யப் பட்டோ, முடமாகிப் போன நிலையில், உன்னை விட்டால் இத்தமிழ்நாட்டை காப்பாற்ற யார் இருக்கிறார் ?


ஒரு காலத்தில், தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், எழுச்சி மிகுந்த பேச்சாளராகவும், தன் அரசியல் வாழ்வில் பளிச்சிட்டுக் கொண்டிருந்த வைகோ, இன்று இருக்கும் இடம் தெரியாமல், நான்கு பேரை வைத்து கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.



திமுகவை விட்டு வெளியேற்றப் பட்ட பின், திமுகவோடு என்று கூட்டணி வைத்தாரோ, அன்றே தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்தார்.


இடது சாரிகள் என்று ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை ஏற்படுத்திக் கொண்டிருந்தவர்கள், இன்று எந்த தாராளமயக் கொள்கையை எதிர்த்தார்களோ, அதே தாராளமயக் கொள்கையால், தங்கள் தரவுகளை இழந்து, திருமணம் ஆகாத முதிர்கன்னியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.




திராவிடக் கட்சிகளுக்கு பல்லக்கு தூக்கியே, தங்கள் பாதங்களை தேய விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பத்தாது என்று, தங்கள் கட்சியிலேயே இருக்கும் கொஞ்ச நஞ்ச நேர்மையானவர்களையெல்லாம், தற்கொலைக்குத் தூண்டி விட்டு, நேர்மையானவர்களுக்கு இந்தக் கட்சியில் இடம் இல்லை என்பதை பகிரங்கப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


பத்து ஆண்டுகளுக்கு முன், “அடங்க மறு, அத்து மீறு“ என்ற முழக்கதோடு கட்சியை தொடங்கி, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய தொல்.திருமாவளவன் இன்று, திமுகவின் தலித் பிரிவுத் தலைவராக மாறிப் போய் இருக்கிறார். பிரபாகரனின் அம்மாவை விமானத்தை விட்டு இறங்க விடாமலேயே திருப்பி அனுப்பியதன் சூத்திரதாரி யார் என்பது தெரிந்தும், அது மத்திய அரசுதான், கருணாநிதி நினைத்தால், இந்தியாவுக்குள் பார்வதி அம்மாளை கொண்டு வருவார் என்று கருணாநிதியிடமே மனு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.




அவர் கட்சி எம்எல்ஏ, திமுகவின் தலித் பிரிவு செயலாளராக மாறிப் போய், திமுகவினரை விட, கருணாநிதி புகழ் பாடுவதில், நான்தான் நம்பர் ஒன் என்று நிரூபிக்க கடும் போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.


பாட்டாளி மக்கள் கட்சி. வன்னிய மக்களின் உயிர்த் தியாகத்தில் உருவான கட்சி இது. இந்தக் கட்சி ஆரம்பத்தில் உருவாவதற்கு, தங்கள் உழைப்பை நல்கிய, பேராசிரியர் தீரன், பேராசிரியர் கல்யாணி, குணங்குடி அணீபா இன்னும் பலர் திட்டமிட்டு கட்சியை விட்டு விரட்டப் பட்டனர். வன்னிய மக்களின் நலனுக்காக துவங்கப் பட்ட கட்சி, ராமதாசின் குடும்ப நலனுக்கானது என்று மாற்றப் பட்டது.




கட்சியின் தலித் முகமாக அடையாளம் காணப்பட்டு மத்திய சுகாதரத் துறை அமைச்சராக பணியாற்றிக் கொண்டிருந்த தலித் எழில்மலை, திட்டமிட்டு ஓரங்கட்டப் பட்டார். மாறி மாறி, கூட்டணி சேர்ந்து, நாங்கள் கூட்டணியில் இல்லாத அணி வெற்றி பெறாது என்ற மாயையை உருவாக்கி, அந்த மாயையை ராமதாசே நம்பி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் மண்ணைக் கவ்வி, வருமானம் குறைந்து, மீண்டும் அறிவாலயம் பக்கம் திருவோட்டை ஏந்தி மறைந்து நின்று கொண்டிருக்கிறார். கட்சியில் மத்தவனுக்கு பதவி இல்லாமல் இருந்தால் பரவாயில்லை. ஆனால் சொந்த மகனுக்கு பதவி இல்லாவிட்டால் ?



அதனாலும், சமீபத்தில் மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்து சிபிஐ வலையில் சிக்கியுள்ள கேதன் தேசாய் வீட்டில் இருந்து கைப்பற்றப் பட்ட 1500 கிலோ தங்கமும்,



1800 கோடி ரூபாய் ரொக்கமும், இந்த கேதன் தேசாய் இவ்வளவு நாட்கள் இவ்வாறு சட்ட விரோதமாக சம்பாதித்ததில், அரசியல் தலைவர்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணிக்கும் இந்த ஊழலில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. மேலும், போலி மற்றும் காலாவதியான மருந்துகள் வழக்கில், சிபி.சிஐடி போலீசாரின் விசாரணையிலும் அன்புமணியின் தொடர்புகளை துருவத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





இதன் பொருட்டும், மருத்துவர் அய்யா, அடக்கி வாசித்து, பம்மி, அறிவாலயத்தின் பக்கம் சரணடைய முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இக்கட்சியினரின் சட்டசபை செயல்பாடுகளை கூர்ந்து கவனிப்பவர்கள், ஏறக்குறைய அறிவாலயத்தில் கால்களில் மருத்துவர் அய்யா சரணடைந்து விட்டார் என்றே கூறுகின்றனர்.

அடுத்து கேப்டன். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாற்று என்ற பரபரப்போடு கட்சியை துவக்கிய கேப்டனின் கப்பல், தேர்தல் செலவுகளுக்க பணமில்லாமல், தள்ளாடத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மின் வெட்டை தடுப்பதற்கான யோசனை தனக்குத் தெரியும், ஆனால் சொன்னால் கருணாநிதி காப்பியடித்து விடுவார், அதனால் சொல்ல மாட்டேன் என்பது போன்ற அரை வேக்காட்டுத் தனமான வார்த்தைகளால், அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழந்து கொண்டே வருகிறார்.




மேலும், முக்கியமான பிரச்சினைகளிலெல்லாம், குழம்பி குழம்பி, ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தவிப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவருடைய கட்சியும், இவரது மைத்துனர் மற்றும் மனைவியின் அசுரப் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இது போகவும், கட்சிப் பதவிகளுக்கே பணம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்று சூழல் நிலவுவதாக தெரிகிறது. அதனால், தமிழகத்தை விடுவிப்பது கேப்டனால் இயலாத காரியம்.

பிஜேபி எல்லாம், அவதார் படத்தில் வருவது போல, இன்னும் 1500 ஆண்டுகள் ஆனாலும், தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பது ஆகாத காரியம் அதனால், பிஜேபியைப் பற்றிப் பேசி வார்த்தையை வீணடிக்க வேண்டாம்.

அடுத்து காங்கிரஸ் கட்சி. அது ஒரு கருமம் பிடித்த கட்சி. அந்த கட்சியைப் பற்றி பேசுவது நேரம் வேஸ்ட்.


அடுத்தபடியாக இருக்கும் ஒரே கட்சி, அ.தி.மு.க. அதிமுக தானே பெரிய கட்சி. அந்தக் கட்சி மீது நம்பிக்கை வைத்தால் என்ன என்ற கேள்விக்கும், அவநம்பிக்கைதான் விடையாக வருகிறது. ஏனென்றால், ஆட்சியில் இல்லாத இந்த 4 ஆண்டுகளாக அதிமுகவின் செயல்பாடுகளைப் பாருங்கள்.



தமிழ்நாட்டில் போராடுவதற்கு பிரச்சினைகளா இல்லை ? ஆனால் இந்தக் கட்சியின் தலைவி, நாடே சுபிட்சமாக இருப்பது போல, கொடநாட்டில் வருடத்தில் ஆறு மாதங்கள் ஓய்வெடுப்பதும், அங்கிருந்து அறிக்கை வெளியிடுவதும், அக்கட்சியின் எம்எல்ஏக்களும், என்ன பேசினால் சரி, என்ன பேசினால் தவறு என்று புரியாததால் பேசாமல் இருப்பதே உத்தமம் என்று இருப்பதும், இக்கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் போதுமானதல்ல என்றே தோன்றுகிறது. மேலும், திமுகவின் திருமங்கலம் ஃபார்முலாவில், அதிமுக கதிகலங்கிப் போய் நிற்பதாகத்தான் தெரிகிறது.

நடுவில் நடந்த இடைத் தேர்தல்களில் போட்டியிடுவது இல்லை என்ற அதிமுகவின் முடிவு, இக்கட்சிக்கு ஒரு பெரிய சறுக்கல். மேலும், கூட்டணி கட்சிகளை அரவணைத்துப் போவது, கூட்டுப் போராட்டங்களை நடத்துவது என்ற எவ்விதமான அணுகு முறையும் இல்லாத காரணத்தால், இக்கட்சி பழம் நழுவி பாலிலும், பிறகு வாயிலும் விழும் என்ற கற்பனா வாதத்தில் அடங்கிப் போய் உள்ளதாகவே தெரிகிறது. இந்தக் கட்சி, போராட்டங்கள் நடத்தி, அரசியலில் தனக்கென ஒரு இருப்பிடத்தை பிடிப்பதைக் காட்டிலும், காளிகாம்பாள் கோயிலிலும், போயஸ் தோட்டத்திலும் யாகங்களும், பூஜைகளும் நடத்துவதன் மூலமே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற கனவில் இருக்கிறது.


அதனால், அதிமுக தமிழ்நாட்டை இருட்டிலிருந்து மீட்டு எடுக்கும் என்ற நம்பிக்கையும் வலுவிழந்து உள்ளது.
சரி. அப்போது யார்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்றுவது ? ஒருவருமே இல்லையா என்றால், இருக்கிறார். ஒரே ஒருவர் இருக்கிறார்.

அவர்தான், அஞ்சா நெஞ்சன் அழகிரி.
அவரை விட்டால் தமிழ்நாட்டை இருட்டிலிருந்து மீட்டு எடுக்க ஒருவருமே இல்லை. அழகிரியால் மட்டுமே, திமுக என்னும் தீய சக்தியை உடைக்க இயலும். தறி கெட்ட காட்டாறாக இன்று அலை பாய்ந்து கொண்டிருக்கும், திமுகவை கட்டுப் படுத்த அஞ்சா நெஞ்சனால் மட்டுமே இயலும்.


60 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருக்கும் பேராசிரியர் அன்பழகன் ஆகட்டும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மிகப் பெரிய செல்வாக்கோடு இருக்கும் துரை முருகனாகட்டும், வன்னிய மக்கள் மத்தியில் செல்வாக்கோடும், மேற்கு மண்டலத்தை தனது இரும்புக் கோட்டையாக வைத்திருக்கும் வீரபாண்டி ஆறுமுகமாகட்டும், நெருக்கடி நிலையில் சிறை சென்று, தனக்கென்று ஒரு ஆதரவாளர் கூட்டத்தை வளர்த்து வைத்திருந்தும், இன்று ஒன்றும் செய்ய முடியாமல், பிரசவ வேதனையில் தவிக்கும் பசு மாட்டைப் போல உட்கார்ந்திருக்கும் அவரது தம்பி ஸ்டாலினாகட்டும்.

அத்தனை பேரையும் அநாயசமாக சமாளித்து இன்று நான்தான் கட்சி என்று திமுகவின் அத்தனை மூத்த தலைகளையும் ஓரம் கட்டி, சிங்கம் போல சிலுப்பிக் கொண்டிருக்கும் அஞ்சா நெஞ்சனை விட்டால் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேறு யார் இருக்கிறார்கள்.




திமுகவின் ஒரு முக்கியத் தலைவரின் கொலைக்கு காரணம் என்று கொலை வழக்கை சந்தித்து அதிலிருந்து வெளியில் வந்த லாவகம் ஆகட்டும், அப்பாவி ஊழியர்கள் மூன்று பேரை தனது ஆதரவாளர்களை விட்டு, எரித்துக் கொன்றதாகட்டும், மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சம்பந்தப் பட்டவர்களை ஏழே ஆண்டுகளில் சிறையிலிருந்து வெளியில் கொண்டு வந்த திறமை ஆகட்டும், சன் டிவி என்ற பெரிய சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருந்த, மாறன் சகோதரர்களை மண்ணைக் கவ்வ வைத்து சரணடைய வைத்த திறமையாகட்டும், அஞ்சா நெஞ்சன் அஞ்சா நெஞ்சன் தான்.






அஞ்சா நெஞ்சனால் மட்டுமே, திமுகவை உடைத்து, திமுகவிற்கு இன்று இருக்கும் வாக்கு வங்கியை சிதற வைக்கும் திறமை இருக்கிறது. திமுக வாக்கு வங்கி சிதறினால், தானாக அதிமுகவோ, வேறு கட்சிகளோ ஆட்சியைப் பிடித்து விடும். அதனால், தமிழ்நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும்.

அதனால், அனைவரும், ஒன்று சேர்ந்து அஞ்சா நெஞ்சனின் கரத்தை வலுப்படுத்துவோம்.
தலைவா வா… தலைமையேற்க வா… தமிழகம் காக்க வா…..


சவுக்கு

3 comments:

பதி said...

//கேதன் தேசாய் வீட்டில் இருந்து கைப்பற்றப் பட்ட 1500 கிலோ தங்கமும்,//

அது 1500 கிலோ அல்ல 1500 டன் !!!!! குறைச்சு மதிப்பிடக் கூடாது !!!! :)

பதி said...

oh sorry..
கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப்பட்டுட்டேன், 1500 கிலோ தான்
http://thatstamil.oneindia.in/news/2010/04/25/ketan-desai-mci-bribe-cbi.html

Anonymous said...

foolish article, do u think jeya will help us (Tamils)?

Post a Comment