Flash News

Saturday, December 26, 2009

ஜனநாயகத்தைக் காக்க வாருங்கள் பதிவர்களே !



ஜனநாயகத்தைக் காப்பதற்கும் பதிவுலகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா ? இருக்கிறது.



தமிழ்நாட்டில் இன்று நான்காவது தூண் என்று அழைக்கப் படும் பத்திரிக்கை உலகம் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியுமா ?




சவுக்குக்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. 2006ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழக பத்திரிக்கை உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.



பத்திரிக்கைகளின் கருத்துக்களை மிகுந்த கவனத்தோடு பரிசீலித்தும், தன்னையே ஒரு பத்திரிக்கையாளர் என்று அழைத்துக் கொள்ளும் கருணாநிதி, ஏறக்குறைய அனைத்து பத்திரிக்கைகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




தமிழ் நாட்டில் வெளிரும் ஆங்கில பத்திரிக்கைகள் நான்கு. தி ஹிந்து, டெக்கான் க்ரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.


இந்த பத்திரிக்கைகளில் தி ஹிந்து, முரசொலியின் ஆங்கிலப் பதிப்பாக மாறி, பல ஆண்டுகள் ஆகின்றன.



இதற்கு குறிப்பான காரணம், 2003ம் ஆண்டில் ஹிந்து நாளிதழ் எழுதிய தலையங்கம், தமிழக சட்டசபையின் உரிமை மீறியதாக ஆணையிட்டு, அப்போதைய சபாநாயகர் காளிமுத்து, ஹிந்து நாளேட்டின் ஆசிரியர் மற்றும் உரிமையாளர் மற்றும், அந்த தலையங்கத்தை மொழி பெயர்த்து வெளியிட்ட முரசொலியின் நிர்வாகிகளையும் கைது செய்ய உத்தரவிட்டார்.


இதையொட்டி, அப்போது ஜெயலலிதாவுக்கு மிகுந்த விசுவாசமாக இருந்த காவல்துறை, உடனடியாக ராம், முரளி உள்ளிட்ட ஹிந்து நிர்வாகிகளை கைது செய்ய முனைந்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, முன் பிணை பெற்றவுடன், அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தின் பின்னணியில், ஜெயலலிதா மீது கடும் கோபம் கொண்ட ஹிந்து குழுமம், அந்நாள் முதல், ஹிந்து பத்திரிக்கை, பத்திரிக்கை தர்மத்தை மறந்து, கருணாநிதியின் ஊதுகுழல்களில் ஒன்றாக ஆனது.

இந்நாளேடு, ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எவ்வாறு செய்தி வெளியிட்டது என்பதும், இதற்காக, ஹிந்து ராமுக்கு இலங்கை அரசு லங்கா ரத்னா விருது வழங்கி கவுரவித்ததும் வரலாறு.



அடுத்து டெக்கான் க்ரானிக்கிள் நாளேடு. இந்நாளேடு, ஓரளவுக்கு நியாயமாக, பொதுமக்களின் பிரச்சினைகளையும், அரசின் தவறுகளையும் சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாகத்தான் இருந்து வந்தது. 2008 ஏப்ரல் 14 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் சென்னை பதிப்பு வெளிவந்தது. இந்நாளில், டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டை விட வியாபார ரீதியில் பிரபலமாக வேண்டும் என்ற உந்துதலில், முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி,ஐஏஎஸ் மற்றும் முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் எஸ்.கே.உபாத்யாய் ஆகிய இருவருக்கிடையே நடைபெற்ற உரையாடலை வெளியிட்டது.



இந்த உரையாடல் வெளியாகி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பரபரப்பை ஒட்டி, டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டின் சர்குலேஷன் பன்மடங்கு கூடியது. ஆனால், அந்த புகழுக்கு இந்த நாளேடு அளித்த விலை மிக அதிகம்.

முதலில், இந்நாளேட்டின் அலுவலகத்தை காவல்துறையை விட்டு சோதனை செய்து, எடிட்டரை கைது செய்யத் உத்தேசித்திருந்த கருணாநிதி, பத்திரிக்கைகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று சமயோசிதமாக யோசித்து, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு அரசு விளம்பரங்களை நிறுத்தினார். அரசு விளம்பரத்தை நிறுத்தினால், ஒரு செய்தித் தாள், தள்ளாடி தடுமாறும் என்பதை அறிந்த கருணாநிதி இவ்வாறு செய்தார். அதைப் போலவே, அந்நாளேடு தள்ளாடத் தொடங்கியது. விளம்பரத்தை நிறுத்தினால், ஒரு நாளுக்கு ஒரு செய்தித் தாளுக்கு ஏற்படும் நஷ்டம் என்ன தெரியுமா ?


டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் விளம்பரப் பலகை


குறைந்தது ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை. ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதை உலகத்தில் எந்த முதலாளி பொறுத்துக் கொள்வான் ? உலகில் உள்ள அத்தனை முதலாளிகளின் நோக்கமும் மூன்று விஷயங்கள் மட்டும் தான்.

1) லாபம்
2) லாபம்
3) லாபம்

இந்த லாபத்துக்காகத்தான் முதலாளிகள் தொழிலில் இறங்குகிறார்கள். அந்த லாபம் அடிபடத் தொடங்கினால் ? அரசின் காலில் முதலாளி மண்டியிடுவான். அதுதான் டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டின் கதையிலும் நடந்தது. உபாத்யாய் திரிபாதி தொலைபேசி உரையாடலை வெளியிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் மூத்த நிருபர் வி.பி.ரகு, அநேகமாக வேலையை விட்டு டிஸ்மிஸ் ஆகும் நிலைக்கு தள்ளப் பட்டார்.



டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் விளம்பரப் பலகை


பிறகு, அரசோடு சமாதானம் ஆனபின் அரசுக்கு எதிராக செய்திகள் வருவது, ஏறக்குறைய நிறுத்தப் படும் என்ற உடன்பாட்டுக்குப் பிறகு, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு மீண்டும் அரசு விளம்பரங்கள் வழங்கப் பட்டன.

உடன்பாட்டுக்கு ஏற்ப, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழும், அரசை வெகுவாகச் சாடாமல் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் தனது லாபத்துக்கு குறைவு ஏற்படாமல் இன்று செயல்பட்டுக் கொண்டு வருகிறது.


அடுத்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். இந்த நாளிதழ், எப்பொழுதுமே முதலாளிகள் மற்றும் முதலாளி வர்க்க சார்போடுதான் இருந்து வந்திருக்கிறது.




ஒரு பத்து பேர், உணவில்லாமல் பட்டினியால் சாக நேரிடும் ஒரு செய்தியையும், இந்திய அரசின் பொருளாதார கொள்கையால், பெரும் நிறுவனங்களுக்கு லாபத்தில் குறைவு ஏற்படும் ஒரு செய்தியையும் ஒப்பிட்டால், லாபத்தில் ஏற்படும், குறைபாட்டைத் தான் இந்நாளேடு பெரிதாக வெளியிடும்.

இது போல, தன்னுடைய முதலாளித்துவச் சார்பை சமன் செய்வதற்காக அவ்வப்பொழுது இங்கும் அங்கும் ஒரு ஏழையின் கஷ்டத்தை பற்றிச் செய்தி வெளியிட்டு நடுநிலையான நாளேடு போல காட்டிக் கொள்ளும். இந்நாளேட்டின் உரிமையாளர், இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிறுவனத்தின் இந்தியா டைம்ஸ் இணையத் தளம், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அனைத்திலும், இந்த முதலாளித்துவச் சார்பை காணலாம். இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில் அதிகம் பேர் விரும்பிப் பார்க்கும், கவர்ச்சிப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.


எஞ்சியுள்ளது, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு மட்டுமே. இந்நாளேடாவது நடுநிலையாக இருக்குமென்றால் இல்லை.



எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதாவை விமர்சித்து வரும் செய்திகளை பூதக்கண்ணாடி வைத்தாலும் காண முடியாது. சரி, ஆளுங்கட்சியை எதிர்ப்பதுதான், உண்மையான பத்திரிக்கை தர்மம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, சமீப காலமாக, இப்பத்திரிக்கையில், அரசுக்கு எதிராக வரும் செய்திகள் குறைந்த வண்ணம் உள்ளன.

பத்திரிக்கை உலகில் விபரம் அறிந்தவர்கள், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதலாளி, கருணாநிதியை வெகு சமீபத்தில் சந்தித்ததாகவும், அச்சந்திப்பின் போது, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் கருணாநிதி குடும்பத்தையும், கருணாநிதியையும், விமரிசித்து, தலையங்கப் பகுதிக்கு அருகில் வரும் கட்டுரைகள் மிகக் கடுமையாக இருப்பதாகவும், கருணாநிதி அங்கலாய்த்ததாக கூறப் படுகிறது.


இந்த அங்கலாய்ப்பின் விளைவாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அரசுக்கு எதிரான செய்திகளை குறைத்துக் கொள்ள எக்ஸ்பிரஸ் குழுமம் முடிவெடுத்திருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழ்நாட்டில் உள்ள நான்கு ஆங்கிலப் பத்திரிக்கைகளும் கருணாநிதியின் பிடியில் வந்து விட்டதல்லவா ? அடுத்து தமிழ் தினசரிகளைப் பார்ப்போம்.



தினமணி நாளேட்டின் தலையங்கங்கள் கடுமையான விமர்சனத்தை தாங்கி வந்தன. கருணாநிதி அரசின் அயோக்கியத்தனங்களை தினமணி தொடர்ந்து சாடியே வந்துள்ளது.

இவ்வாறு கடும் விமர்சனங்களை அடக்கிய தலையங்கம் வந்தபோதெல்லாம் அந்நாளேட்டின் ஆசிரியரை, பார்ப்பனர் என்றும், காதில் கேட்கக் கூசும் வார்த்தைகளால், காலை 6 மணி முதல் 8 மணி வரை கருணாநிதி அர்ச்சனை செய்வதுண்டு என்று, இந்த அர்ச்சனைகளை காதில் கேட்டவர்கள் கூறுகிறார்கள்.

இப்படியெல்லாம் அர்ச்சனை செய்தாலும், கருணாநிதியை பாராட்டி வரும் செய்திகளை “தினமணி நாளேடே கூறியுள்ளது“ என்று அதை எடுத்து முரசொலியில் பெரிய செய்தியாக வெளியிட கருணாநிதி தயங்கும் அளவுக்கு அவருக்கு சுயமரியாதை இல்லை.




பச்சை நிறத்தில் இல்லையே ஒழிய, கருணாநிதிக்கு பச்சோந்திக்கு உண்டான அத்தனை குணநலன்களும் உண்டு. கடந்த ஆண்டு கருணாநிதி பிறந்தநாளின் போது அவரை வாழ்த்தி தினமணி எழுதிய தலையங்கத்தை, கருணாநிதி விழா மேடையில் ஒரு வரி விடாமல் படித்தது குறிப்பிடத் தகுந்தது.

தலையங்கங்களைத் தவிர, தினமணியில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம், நடுப்பக்கத்தில் வரும் கட்டுரைகள்.


பழ.கருப்பையா


கட்டுரையாசிரியர் பழ.கருப்பையாவைத் தவிர அக்கட்டுரைகளில் கருணாநிதியை கடுமையாக விமரிசனம் செய்வது அரிதிலும் அரிதான விஷயம். எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கும் அரசிற்கும் ஏற்பட்ட உடன் பாட்டின் விளைவுகள், அக்குழுமத்திலேயே இருக்கும் தினமணியை மட்டும் பாதிக்காதா என்ன ?

அதன் விளைவு, சமீப காலமாக பழ.கருப்பையா காணாமல் போய் விட்டார். நேற்று எழுதிய கட்டுரையில் கூட, ஏசு பிரானைப் பற்றித் தான் பழ.கருப்பையா எழுதியிருக்கிறார். தினமணியின் தலையங்கங்கள் கூட, தமிழக அரசை தொடாமல், இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சுற்றி வருகின்றன.

கருணாநிதிக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த தினமணியை ஒரு வழியாக சரிக்கட்டியாகி விட்டது.

அடுத்து கருணாநிதியை தொடர்ந்து விமர்சித்து, தொல்லை கொடுத்து வந்த ஒரு நாளிதழ் தினமலர்.

முதலில், தினமலர் குழுமத்தில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை தனது உளவுத் துறை மூலம் பெரிதாக்கி அந்நெருப்பில் குளிர் காய்ந்தார் கருணாநிதி.



அதற்குப் பிறகும் சென்னை தினமலரின் விமர்சனங்கள் குறையாததால், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பனங்காட்டு நரியான கருணாநிதி. அருமையான சந்தர்ப்பத்தை தினமலர் நாளேடே ஏற்படுத்திக் கொடுத்தது.

ஊரில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் பற்றி எழுதிக் கிழித்து விட்டது போல, தமிழ் திரைப்படங்களின் முன்னாள் கதாநாயகிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்று, சில முன்னாள் முன்னணி நடிகைகளின் புகைப்படத்தோடு செய்தி வெளியிட்டது தினமலர்.



சர்ச்சைக்குரிய தினமலர் செய்தி



உண்மையிலேயே அந்நடிகைகள் பாலியல் தொழில் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அதனால் யாருடைய சோற்றில் மண் விழுந்தது ? ஆனால், இதை ஒரு மிகப் பெரிய சமுதாய பிரச்சினையாக்கி பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தது தினமலர்.



நடிகர் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு



“மயிர் நீக்கின் உயிர் வாழா கவரிமான்“ குடும்பத்தைச் சேர்ந்தவர்களான திரைத் துறையினர் மிகப்பெரிய கூத்தை போராட்டம் என்ற பெயரில் நடத்தினார்கள்.

அவ்வளவுதான் கருணாநிதிக்கு வந்ததே கோபம் !

தமிழகத்தின் அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்து விட்டது போலவும், இனி தீர்க்க வேறு பிரச்சினைகளே இல்லை என்பது போலவும், உடனடியாக “பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தின்“ கீழ் காவல்துறையை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இங்கேதான் இருக்கிறது கருணாநிதியின் தந்திரம்.

சட்டத்தின் படி, அவதூறான செய்தி வெளியிடும் பத்திரிக்கையின் ஆசிரியரும், பதிப்பாளரும் (முதலாளி) தான் வழக்கமாக கைது செய்யப் படுவார்கள்.

ஆனால், தினமலர் முதலாளிகளோடு, ஒரு “கள்ள ஒப்பந்தத்தை“ கருணாநிதி செய்து கொண்டு அந்நாளேட்டின் செய்தி ஆசிரியர் லெனினை காவல்துறையை வைத்து கைது செய்தார் கருணாநிதி.



தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப் படுகையில்



தினமலர் நிர்வாகமும், சந்தோஷமாக லெனினை காவல்துறையோடு அனுப்பி வைத்தது.

பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் கைதேர்ந்த கபட வேடதாரி கருணாநிதி, லெனின் கைதால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பை சமாளிக்க, லெனின் பிணை மனுவுக்கு நீதிமன்றத்தில் அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க உத்தரவிட்டார்.

மறுநாளே லெனின் சிறையிலிருந்து வெளியே வந்தார். முதலாளியை கைது செய்யாமல் செய்தி ஆசிரியரை கைது செய்ததற்கு நன்றியாக தினமலர், இன்று தனது அரசு எதிர்ப்பு செய்திகளை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு மற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வழக்கமாக, காரசாரமாக, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரைப் பற்றிய செய்திகளை தாங்கி வரும் தினமலரின் “டீக்கடை பென்ச்“ பகுதி கூட, உப்புச் சப்பில்லாமல் வருகிறது.


தமிழகத்தின் மிகப் பெரிய நாளிதழான தினத்தந்தியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.



20 பேர் இறந்த விபத்துச் செய்தியை சின்னதாக போட்டு விட்டு, நடிகையின் உள்பாவாடை காணாமல் போன செய்தியை தலைப்புச் செய்தியாக போடும் நாளிதழ்.

இதற்கு, மக்கள் நடிகையின் உள்பாவாடை பற்றித் தான் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்ற வியாக்கியானம் வேறு.

எப்போதும் தினத்தந்தி ஒரு கட்சி சார்பாகவே இருந்து வந்திருக்கிறது. அதிசயிக்காதீர்கள். அந்த ஒரு கட்சி வேறு எந்தக் கட்சியும் அல்ல. “ஆளும் கட்சி“தான் அது.


அடுத்து எஞ்சியிருப்பது, தினகரன் தான். குடும்பம் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, தினகரன் நிருபர்கள் அரசுக்கு எதிரான செய்திகளுக்காக ஆலாய்ப் பறப்பார்கள்.



குடும்பம் ஒன்று சேர்ந்ததும், அரசுக்கெதிரான செய்திகள் அடியில் போடப்பட்டு, கருணாநிதியின் அறிக்கைகளும், பாராட்டுகளும் முதல் பக்கத்தில் வருகின்றன.

இதில் ஜெயலலிதாவின் அறிக்கைகளை சின்னதாக வெளியிட்டு நடுநிலையாக இருப்பதாக வேறு காட்டிக் கொள்கிறார்கள். குடும்பம் சண்டையில் இருந்த காலத்தில், தினகரன் நாளேடு, அரசு விளம்பரம் வருவதில்லை என்று, நீதிமன்றம் சென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

எவ்வளவுதான் பணம் கொட்டிக் கிடந்தாலும், சன் டிவி குழுமத்தின் வருமானம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டினாலும், விளம்பர வருமானம் குறைந்தவுடன் நீதிமன்றம் செல்லும் பத்திரிக்கை முதலாளிகளின் கவலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.


பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் தமிழ் ஓசை நாளேட்டை, டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி தவிர ஒருவரும் படிப்பதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அன்புமணி ராமதாஸ் கூட ஹிந்து தான் படிக்கிறாராம்.


இதைத் தவிர சொல்லிக் கொள்ளும் படி ஒரு நாளிதழும் இல்லை.


வாரம் இருமுறை இதழ்களை எடுத்துக் கொண்டால், நக்கீரனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.



ஜெயலலிதா அரசாங்கத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டதால், நக்கீரன் பத்திரிக்கையில் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு ஜெயலலிதா மீது ஏற்பட்ட வெறுப்பு ஜெயலலிதாவை ஹிட்லர், முசோலினி போன்ற ஒரு கொடுங்கோலர் போலவும், கருணாநிதியை ஏசு பிரான் போலவும் எண்ண வைத்தது.

இதன் விளைவு, நக்கீரன் அறிவாலயத்தில் அச்சடிக்கப் படுவது போலவே செய்திகளைத் தாங்கி வருகிறது. மேலும், இப்பத்திரிக்கை, உளவுத் துறையின் ஒரு மூத்த அதிகாரியின் பிடியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்பத்திரிக்கையின் இணை ஆசிரியராக இருக்கும் காமராஜ், கருணாநிதிக்கு மிக மிக நெருக்கமாக உள்ளதால், கருணாநிதியின் எண்ணங்களே நக்கீரனில் செய்தியாக வருவதாக கூறப்படுகிறது.

ஈழப் போரின் போது ஈழச் செய்திகளை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்த்த நக்கீரன், தற்போழுது, ஈழப் போரை வழிநடத்தியவர் போலவும், பிரபாகரனுக்கே போர் முறைகளை கற்றுக் கொடுத்தவர் போலவும் பேசி வரும், போலிச் சாமியார் ஜெகத் கஸ்பர் எழுதும் தொடரை வெளியிட்டு வருகையிலேயே நக்கீரனின் அருமை புரியும்.


அடுத்து ஜுனியர் விகடன். மக்கள் மத்தியில் ஒரு நற்பெயரை பெற்றிருந்த இந்த இதழ், காவல்துறை அதிகாரிகளின் பிடியில் சிக்கி, நடுநிலையான பத்திரிக்கை என்ற பெயரை ஏறக்குறைய இழந்து நிற்கிறது.



குறிப்பாக, காவல்துறை அதிகாரிகளின் ஊழல்களை தைரியமாக அம்பலப்படுத்தி வந்த இந்த இதழ், தற்போது, காவல்துறை அதிகாரிகளின் புகழ் பாடும் பத்திரிக்கையாக உருமாற்றம் பெற்றுள்ளது.

மேலும், விகடன் குழுமம் திரைப்படத் தயாரிப்பில் இறங்கத் தொடங்கியதும், பத்திரிக்கையை விட, திரைப்படத்தில் இக்குழுமத்தின் முதலாளிகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமா என்ற மாய உலகம் காட்டிய கவர்ச்சியில் இக்குழுமத்தின் மேல்மட்ட நிர்வாகிகள் மயங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில ஆண்டுகளாக செக்ஸ் கதைகளை வெளியிடாமல் இருந்த ஜுனியர் விகடன், சமீப காலமாக செக்ஸ் கதைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஜுனியர் விகடன் புண்ணியத்தில், காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனின் நீலப்படம் இல்லாத செல்போனே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.


இலங்கை சென்று, ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கி, சிரித்துப் பேசி, விருந்துண்டு, பரிசுகள் அளித்து, பெற்று, இந்தியா திரும்பியுள்ள திருமாவளவனை வைத்து “முள்வலி“ என்ற தலைப்பில் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களை பற்றி எழுத வைத்து, ஈழத் தமிழருக்காக இன்னும் மிச்சம் உள்ள இரக்கத்தை வியாபாரம் செய்து லாபம் பார்த்து வருகிறது இந்த இதழ்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது “வேட்பாளர் தம்பட்டம்“ என்ற தலைப்பில் விளம்பரங்கள் வெளியிட்டு, ஜுனியர் விகடன் கொள்ளை லாபம் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பக்க விளம்பரத்துக்காக, இரண்டு லட்சம் என்று விலை பேசி, மார்க்கெடிங் செய்ய அனைத்து அரசியல் கட்சிகளிடமும், வேட்பாளர்களிடமும், ஜுனியர் விகடன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அடுத்த வாரம் இருமுறை இதழ், “குமுதம் ரிப்போர்ட்டர்“. இந்த பத்திரிக்கை அரசு, அரசியல் செய்திகள் என்றெல்லாம் ரொம்பவும் மெனக்கிடுவதில்லை.



எல்லா பத்திரிக்கைகளின் குறிக்கோளும் லாபம் என்றாலும், குமுதம் ரிப்போர்ட்டரின் குறிக்கோள், எப்படியாவது லாபம் என்பதுதான். இப்பத்திரிக்கை எப்போதும் கையாளும் ஒரு முக்கிய தந்திரம் “செக்ஸ்“.

செக்ஸ் தொடர்பாக எந்த செய்தி இருந்தாலும் அதை அட்டையில் போட்டு, அந்த இதழுக்கு கூடுதலாக 4 அல்லது 5 லட்ச ரூபாய் லாபம் பார்ப்பதுதான் இந்த இதழுக்கு வழக்கம்.

“பள்ளி மாணவிகளிடம் உலவும் செக்ஸ் வீடியோ“, “டேட்டிங் செய்யும் இளசுகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்“, “பெருகி வரும் கள்ள உறவுகள்“ “செக்ஸ் வீடியோவில் மாட்டிய எம்.எல்.ஏ“ செக்ஸ் படம் காட்டும் இணையத் தளங்கள்“ “மீண்டும் சரோஜாதேவி கதைகள் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்” என்ற ரீதியில் தான் இந்த இதழின் தலைப்புச் செய்திகள் இருக்கும்.

ஒரு வாரத்துக்கு செக்ஸ் செய்தி கிடைக்க வில்லை என்றால் “நான் ஸ்டாலினுக்கு போட்டியா ? அழகிரி அதிர்ச்சிப் பேட்டி“ அல்லது “நான் யாருக்கும் இளைத்தவன் இல்லை – விஜயகாந்த் உற்சாகப் பேட்டி“ என்று இதழை ஓட்டி விடுவார்கள்.

இது தவிர, இந்நிறுவனத்தின் முதலாளியின் 1500 ஏக்கர் நிலம் சென்னையை அடுத்து இருப்பதாகவும், இந்நிலத்தை, காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் மேற்பார்வை செய்து பிரச்சினைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும், இதனால், அந்த அதிகாரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் குறித்த செய்திகள் எதுவும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வரும் வார இதழ் “தமிழன் எக்ஸ்பிரஸ்“. இந்த இதழை டீக்கடையில் போண்டா மடிப்பதற்குக் கூட பயன் படுத்துவதில்லை என்று கூறப் படுகிறது.




வருமான வரியில் நஷ்டம் காட்டுவதற்காகத்தான் இந்த இதழை எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எஞ்சியுள்ளது, வெளிவந்து ஒரு வருடம் ஆன “தமிழக அரசியல்“ வார இதழ். அரசுக்கு எதிரான செய்திகள் ஓரளவுக்கு வந்தாலும் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு இந்த இதழ் செயல்படுகிறதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.



இந்த இதழில் வெளிவரும் செய்திகள் அரசின் மீது விமரிசனம் செய்யும் தொனியில் இருந்தாலும் துணை முதல்வருக்கு, ஏறக்குறைய சாமரம் வீசும் வகையில் தான் இருக்கிறது. சமீபத்தில் ஸ்டாலின் பற்றி வெளிவந்த ஒரு கட்டுரையில், ஸ்டாலினுக்கு பக்குவம் போதாது என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

எதற்காக என்றால், ஒரு அதிகாரி ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் ஊழல் இருந்தது என்று குறிப்பிட்டாராம். உடனடியாக ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட்டாராம். உடனடியாக இன்னொரு அதிகாரி பதறிப்போய், இந்த விஷயத்துக்கு ஒப்புதல் கொடுத்தது முதல்வர் கருணாநிதிதான், விசாரணை நடந்தால் அது அரசின் மீதே திரும்பும் என்பதால் விசாரணை வேண்டாம் என்று கூறினாராம்.

இது போல, ஒரு ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதால் ஸ்டாலினுக்கு பக்குவம் இல்லை என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ஊழல்களை மூடி மறைக்க ஸ்டாலின் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்றுதானே பொருள் ? ஒரு வேளை எப்படியும் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்.

இப்போதே ஸ்டாலினுக்கு ஜால்ரா போட ஆரம்பித்து நாளை ஸ்டாலின் முதல்வரானால், நாங்கள்தான் உங்களை முதல்வர் ஆக்க உத்தரவிட்டோம், அதனால் வாரம் 20 பக்கத்துக்கு அரசு விளம்பரம் தாருங்கள் என்று கேட்கலாமென, தமிழக அரசியல் நிர்வாகம் திட்டமிட்டுருக்கிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது.

இது போகவும், தமிழக அரசியல் நிர்வாகமும், தமிழக அரசியல் தவிர, திரிசக்தி என்ற ஆன்மீக பத்திரிக்கை, திரைப்படத் தயாரிப்பு என்று பல தொழில்கள் செய்து வருவதால் தமிழக அரசியல் பத்திரிக்கையை சீரியசாக நடத்துவது போலத் தெரியவில்லை.


முக்கிய அரசியல் பத்திரிக்கைகள் அனைத்தையும் பார்த்தாயிற்று. மற்ற வார, மாத இதழ்களுக்கு, அரசியல் ஒரு சிறு பகுதிதான் என்பதால், கருணாநிதி இவைகளை கண்டு கொள்வதில்லை.


தொலைக்காட்சி ஊடகங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை விளக்கத் தேவையில்லை. தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் மக்கள் அப்படியே உண்மை என்று நம்பும் காலம் மலையேறி விட்டது. பின்னே, விஜயின் வேட்டைக்காரன் படத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று சன் நியூஸில் அரை மணிக்கொரு முறை சொன்னால், மக்கள் சிரிக்க மாட்டார்கள் ?


பெரும்பாலான தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குவதால், அவற்றில் உண்மை செய்திகளை காண்பது கடினமாக இருக்கிறது.


இந்நிலையில், ஒரு ஜனநாயகத்துக்கு, சுதந்திரமான பத்திரிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லையென்றால், ஹிட்லரின் தளபதி, கோயபல்ஸ் பத்து முறை ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று கூறியது, இப்பொழுது இருக்கும் பத்திரிக்கைளால் நடைமுறைக்கு வந்து விடும்.




சரி. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. விமர்சனங்களே அவசியம் இல்லை என்றால் அதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சிறப்பாக நடக்கும் ஆட்சி கூட, தவறுகள் இழைக்கக் கூடும். அந்தத் தவறுகளை சுட்டிக் காட்டி, அந்த ஆட்சியை மேலும் சிறப்பாக நடத்த பத்திரிக்கைகள் அவசியம்.

அப்படிப்பட்ட சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லாது போனால் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை உருவாகும். ஜனநாயகம் என்பது, தானாக வாடி, வதங்கி, உதிர்ந்து விடும்.


தமிழ்நாட்டில், பத்திரிக்கைகள் ஏற்படுத்தியுள்ள இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பும் திறன், பதிவர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த பதிவுலகம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. இங்கே எழுத்துச் சுதந்திரம் உண்டு.

நியாயமாக எழுதினால், நம்மை வேலையை விட்டு அனுப்பி விடும் முதலாளியும் இல்லை, அரசுக்கு எதிராக எழுதினால், விளம்பரம் வராதே என்று கவலைப்படும் வியாபார நெருக்கடியும் இல்லை.

நமது பதிவுலகத்தில் பெரும்பாலான பதிவுகள் செய்தித் தாள்களில் வருபவற்றை மறு பதிவு செய்பவையாகவும், சினிமா செய்திகளை பெரிது படுத்துவதாகவும் உள்ளன.

இப்பதிவுலகத்தை, இந்த அரசில் ஏற்பட்டு வரும் ஊழல்களை வெளிக் கொணர சுதந்திரமான ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


அரசு இயந்திரத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் அரசு ஊழியர்களே !. அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலில், புறங்கையை நக்காமல், ஊழலை எதிர்க்க திராணியும் இல்லாமல் வெளியே சொல்ல இயலாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் போராளிகளே.

உங்களுக்குத் தெரிந்த ஊழல்களை, இந்த பதிவுலகத்தில் வெளியிடுங்கள்.
முக்கிய செய்திகளை ஆசிரியருக்கு அனுப்பி, அது பிரசுரமாகாததால் மனம் புழுங்கும் பத்திரிக்கையாளர்களே. பதிவுலகிற்கு வாருங்கள்.

பதிவர்களே சீரியசான பதிவுகளை எழுதுங்கள். மக்கள் பிரச்சினைகளை எழுதுங்கள். இந்தப் பத்திரிக்கைகள் செய்யத் தவறுவதை நாம் செய்வோம்.

இது அற்புதமான உலகம். நமது ஜனநாயகத்தை, நமது குழந்தைகளுக்கு பத்திரமாக விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு. அந்தப் பொறுப்பை தவற விட்டால், நம் கண் முன்னே, இந்த ஜனநாயகம் செத்து மடிவதை காணும் கொடுமைக்கு ஆளாவோம்.

ஜனநாயகத்தை பதிவுலகத்தால் மட்டுமே காப்பாற்ற இயலும். வாருங்கள் தோழர்களே!




சவுக்கு


வாக்களியுங்கள் நண்பர்களே

9 comments:

Sundararajan P said...

மேலை நாடுகளில் ஊடகங்களை கண்காணிப்பதற்காகவே மீடியா வாட்ச் (Media Watch) நிறுவனங்கள் உள்ளன. சில நாடுகளில் இந்த அமைப்புக்கு பிரஸ் கவுன்சிலுக்கு சமமான அந்தஸ்தும் உண்டு.

இந்தியாவில் இதுபோன்ற அமைப்புகள் இன்றைய காலத்தின் கட்டாயம். ஆனால் இந்த விழிப்புணர்வு வாசகர்களிடம், பார்வையாளர்களிடம் வந்துவிடாமல் மக்களை பரபரப்பு மற்றும் ஆபாச மயக்கத்திலேயே வைத்திருப்பதில் இந்திய ஊடகங்கள் இதுவரை வெற்றியே பெற்றுள்ளன.

இந்த நிலையை மாற்ற சமூத்தின் அனைத்துப்பிரிவினரும் குறிப்பாக உயர்கல்வி பெற்றவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தினாலே சமூகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழும்.

இதில் வலைபதிவர்களும் பெரும்பங்கு வகிக்கமுடியும். ஏனெனில் ஏறத்தாழ அனைத்து மீடியா அலுவலகங்களும் வலைபதிவுகள் கவனித்தே வருகின்றன. மேலும் இந்த ஊடகங்கள் உலகத்தமிழர்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும் இதுவே சிறந்த வழி.

நான், மீடியா விமர்சனத்தை தொடராகவே எழுதத் தொடங்கி இடையில் வேலைப்பளு காரணமாக நிறுத்தியுள்ளேன். அதை உடனே தொடங்க வேண்டியதன் அவசியத்தை தங்கள் பதிவு வலியுறுத்துகிறது.

பணியை தொடருங்கள். வாழ்த்துகள்.

Anonymous said...

நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்ற போதிலும் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.பதிவர்கள் பொருப்போடு இருந்தால் நிறையை சாதிக்கலாம்.
அன்புடன்..சைபர்சிம்மன்

மாசிலன் said...

இது ஒரு நல்ல பதிவுதான், இருந்தாலும் என் சின்ன மனதிற்குள் ஏதோ ஒன்று இடிப்பது போல் தெரிகிறது. பதிவு முழுதும் கருணாநிதையை தாக்கும் நீங்கள் நீங்கள் எதிர்கட்சியை சார்ந்தவரா?

எது எப்படியோ, மக்களாட்சி நிலைக்க உங்களது அனைத்து கருத்துக்களுடனும் ஒத்துப்போகிறேன். அதற்காக ஒரே கட்சியை மட்டும் குறைகூறி பிழைப்பு நடத்தவும் கூடாது.

நன்றி

ஜேம்ஸ் பாண்ட் 007 said...

அப்பப்ப ஏடாகூடமா பதிவு போட்டு எங்களை கலாய்க்கும் நீங்கள் யார் அய்யா?

சில பதிவுகள் ரொம்ப சூடா இருக்கு!

சில பதிவுகள் ரொம்ப விவகாரமா இருக்கு!

சில பதிவுகள் ரொம்ப டர்ரியலா இருக்கு!

படிச்சாலும் கமெண்ட் போட முடியலை.

கமென்ட் போட்டா வீட்டுக்கு ஆட்டோ வருமா? இல்லை போலீஸ் வருமான்னு தெரியலை?

என்ன செய்யறதுன்னு தெரியலையே!

ஐயய்யோ என்ன செய்யறதுன்னு தெரியலையே!!

போலிஸைபத்தியும் நிறையா உள்விவகாரங்கள் வருது. ஒருவேளை உளவுத்துறை இங்கயும் நுழைஞ்சிடுச்சா!!!!??????????????

சவுக்கு said...

நண்பர் மாசிலன் அவர்களே. பெயருக்கேற்றார்போல, நீங்கள் மாசு இலன் தான். வெளிப்படையாக உங்கள் ஐயத்தையும் வெளியிட்டு இருக்கிறீர்கள். நண்பரே, அதிகாரத்தையும், போலீசையும் கையில் வைத்திருக்கும் ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான், வீரம், நியாயம். அதிகாரம் இல்லாமல் பல் பிடுங்கப் பட்ட பாம்பாக இருக்கும் எதிர்க்கட்சியை விமர்சிப்பது இப்போதைய தேவை கிடையாது. மேலும், எதிர்க்கட்சிகளுக்கு, பத்திரிக்கைகளை கட்டுப்படுத்தும் அதிகார வரம்பு கிடையாது. அதனால்தான் ஆளுங்கட்சியைப் பற்றிய விமர்சனம்.

சவுக்கு said...

நன்றி நண்பர் ஜேம்ஸ்பாண்ட் அவர்களே. ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன் உளவுத்துறை நுழையவில்லை. உளவுத்துறையின் முகத்திரையையும் கிழிக்கும் தளம் தான் இது. பெயரை ஜேம்ஸ்பாண்ட் என்று வைத்துக் கொண்டு, உளவுத் துறையைப் பற்றி அஞ்சலாமா ?

vasan said...

Very bold, daring and the realistic article. The very needed one at THIS current period (NOW or NEVER). YOUR alarm will awake the RIGHT one to DO the RIGHT writting at the RIGHT place.You have belled the cat, it is now others to be aware of the guilty cat. I keep watching every day your investigative writtings. Good & tough work.
M.S.Vasan

Unknown said...

சவுக்கில் வந்த கட்டுரைகளிலேயே இதுதான் டாப் 1 கட்டுரை. வாழ்த்துக்கள்.உங்கள் கோரிக்கையை ஏற்று பின்னி பெடலேடுக்குறோம் கவலைபடாதீங்க

Anonymous said...

பொய் முகம்- புலம்பல் ஜனநாயகத்தை காப்பாற்றாது

நானும் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் பத்திரிகைகளின் தற்காலப் போக்கு குறித்து இதைவிட மிக கடுமையான விமர்சன கருத்துகள் உண்டு.

ஆனால், உலகமயமாக்கலுக்கு பிறகு பத்திரிகை நடத்துவது அந்தந்த முதலாளிகளின் லாப நோக்கமாக மாறிவிட்டது.

உலகின் இப்போதைய பொருளாதார சூழலில் பத்திரிகை நடத்துவது சமூக சேவை அல்ல, தொழில் என்ற கருத்து பல்வேறு நிலைகளில் வலுபெற்றுவிட்டது. இத்தகைய சூழலில் கொள்கை பிடிப்புடன் போராடிவரும் ஏழை பத்திரிகையாளர்களை தவிர்த்து மற்றவர்களிடம் சமூக பொறுப்பையும், ஜனநாயகத்தை காப்பாற்றும் செயல்பாடுகளையும் எதிர்பார்ப்பது எப்படி சரியக இருக்கும் என்பதே என் கேள்வி.

அடுத்து பதிவுலகம் ஜனநாயகத்தை காப்பாற்றும் என்ற சவுக்காரின் கருத்து அறியாமை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

நானும் ஒரு பதிவாளர் என்பதைவிட ஏராளமான பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் கூறுவதென்றால், சவுக்கு உள்பட எத்தனை பதிவர்கள் தங்கள் உண்மை முகத்துடன் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

பெரும்பாலான பதிவர்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துகளை வெளியிட பதிவுலகத்தை பயன்படுத்தினாலும், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கள் உண்மை முகத்தை மறைத்தே பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

பதிவுலகம் வெளியார் தலையீடு இன்றி கருத்துகளை வெளியிட ஒரு நல்ல ஊடகமாக இருக்கிறது என்பது சரி. ஆனால், அது ஜனநாயகத்தை காப்பாற்ற எந்த விதத்திலும் உதவாது.

அரசை கடுமையாக சாடி கருத்துகளை வெளியிடும் பதிவர்கள் ஓரிருவரை சைபர் கிரைம் சட்டத்தின் ஏதாவது சில பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைத்தால் எத்தனை பதிவர்கள் சாலையில் இறங்கி போராடுவார்கள்

எனவே, சவுக்கார் தனது கருத்தை மறு ஆய்வு செய்து காலத்துக்கு ஏற்ப நடைபோட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Post a Comment