தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ஒரு துறை, 1964ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறை உயிரோடு இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ள அவ்வப்போது, செய்தித் தாளில் “லஞ்சம் வாங்கிய விஏஓ கைது“, “லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கைது“ என்று சில செய்திகளை பார்த்துள்ளோம்.
விஏஓக்களும், தலைமைக் காவலர்களும், சர்வேயர்களும் மட்டும்தான் தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்குகிறார்களா ?
உயர் அதிகாரிகள் யாரும் வாங்குவதில்லையா ?
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாரும் தமிழ்நாட்டில் யோக்கியர்களா ?
அவர்கள் மீது ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை பாய்வதில்லை ? இதை ஆராயும் முன் லஞ்ச ஒழிப்புத் துறை, தன்னுடைய செயல்பாடுகளில் நேர்மையாக இருக்கிறதா என்பதை முதலில் பார்ப்போம்.
மே 2008ல், தமிழக அரசு, ஒரு ஆணையின் மூலம், லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மற்றும் விழிப்பு பணி ஆணையம் (Vigilance Commission) ஆகிய இரு துறைகளும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளித்து ஆணையிட்டது. இதற்கான காரணம் அந்த அரசு ஆணையில் “தற்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏராளமான விண்ணப்பங்கள் வருவதால்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு விலக்கு அளிக்கப் பட்டாலும், விலக்கு அளிக்கப் பட்டுள்ள துறைகளில் “ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்“ தொடர்பான தகவல்கள் கேட்கப் பட்டால், இந்த விதிவிலக்கு பொருந்தாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24 (4) கூறுகிறது.
கடந்த ஏப்ரல் 2009ல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பம் அனுப்பப் பட்டது. அந்த விண்ணப்பத்தில் “லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக இருந்து 31.12.2008ல் கே.நடராஜன், ஐபிஎஸ் என்ற அதிகாரி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பிறகும், அவரது வீட்டில் TN-01-G-3939 என்ற அம்பாசிடர் கார் மற்றும் TN-07-G-2524 என்ற பொலிரோ ஜீப்பும் ஓடி வருகிறது. இந்த வாகனங்களை காவலர்கள் இயக்கி வருகிறார்கள். இவ்வாறு ஓய்வு பெற்ற அலுவலர்கள் வீட்டில், அரசு வாகனங்கள் பயன்படுத்துவது என்பது, லஞ்ச ஒழிப்புச் சட்டம் 13 (1) (c) r/w 13 (2) ஆகிய லஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் என்றும் இந்த ஊழல் புகார் காரணமாக இந்த இரு வாகனங்கள் ஓட்டும் ஓட்டுனர் பெயர், அவ்வாகனங்களுக்கு எவ்வளவு எரிபொருள் ஒரு மாதத்துக்கு செலவாகிறது, அந்த இரு வாகனங்களின் பதிவேடுகளின் நகல்கள் போன்ற பல விபரங்கள் கேட்கப் பட்டிருந்தன.
இந்த விண்ணப்பத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் மத்திய சரக காவல் கண்காணிப்பாளர் லட்சுமி, லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பதில் அனுப்பினார். இந்த பதிலை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறையில் மேல் முறையீடு செய்ததற்கும் இதே பதில் தான் கிடைத்தது. இதை எதிர்த்து தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்ததன் பேரில், கடந்த வெள்ளியன்று, விசாரணை நடைபெற்றது.
இவ்விசாரணையில், மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். தனது வாதத்தில், சட்டத்தின் பிரிவு 24 (4), ஊழல் மற்றும் மனித உரிமை தொடர்பான விபரங்கள் கேட்கப் பட்டால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டாலும் தகவல் கொடுத்தே ஆக வேண்டும் என்று வாதாடினார்.
மேலும், தனது வாதத்தின் போது, திடுக்கிடும் புகார் ஒன்றையும் கூறினார். லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டபின், வேறு ஒரு நபருக்கு தகவல் வழங்கப் பட்டிருப்பதாகவும், இவ்வாறு, ஒரு நபருக்கு தகவல் வழங்கி, இன்னொரு நபருக்கு தகவல் வழங்காமல் இருப்பதென்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 20ன் படி, தண்டனைக்குரிய குற்றம் என்றும், பொது தகவல் அலுவலர் மீது, துறை நடவடிக்கை எடுப்பதோடல்லாமல், ரூபாய் 25,000 அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தகவல் ஆணையர் பெருமாள்சாமி, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
அரசு வாகனங்களுக்கு பெட்ரோல் ஒரு மாதத்துக்கு 160 லிட்டரும், டீசல் ஒரு மாதத்துக்கு 90 லிட்டரும், உச்சவரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இது போகவும், மாதத்துக்கு தலா 100 லிட்டர் வரை “எக்ஸ்ட்ரா கோட்டா“ உண்டு. மனுதாரர் தனது விண்ணப்பத்தில் கூறியுள்ள புகார்கள் உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளலாம். ஒரு மாதத்துக்கு 160 லிட்டர் பெட்ரோலுக்கு 160 X 50 = 8000.
ஒரு மாதத்துக்கு 90 லிட்டர் டீசலுக்கு 90 X 35 = 3150. ஒரு வண்டிக்கு இரண்டு டிரைவர்கள் உண்டு. ஒரு டிரைவருக்கு, காவலர் என்ற தரத்தில் வைத்துப் பார்த்தால் மாதம் 10,000 சராசரியாக ஊதியமாக இருக்கும். இரண்டு வண்டிகளுக்கு 4 டிரைவர்கள். மொத்தம் ரூபாய் 40,000. எரிபொருள், டிரைவர் ஊதியம் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், மாதச் செலவு ரூபாய் 51,150. (இதில் எக்ஸ்ட்ரா கோட்டா சேர்க்கப் படவில்லை.)
இவ்வாறு, நடராஜன் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி மாதத்திலிருந்து கணக்கிட்டால், தகவல் கேட்ட ஏப்ரல் மாதம் வரை ரூ.2,04,600 ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
இந்தத் தொகை, யாருடைய பணம் ? குப்பனும், சுப்பனும் கட்டும் மக்கள் வரிப்பணம். இப்படி மக்கள் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே கொள்ளை அடித்தால், இதர துறைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
இப்போது யோசியுங்கள். 300 ரூபாயும், 500 ரூபாயும் லஞ்சமாக வாங்கும் அரசு ஊழியர்களை பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என்ன யோக்யதை இருக்கிறது ?
லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக இருந்த ஒரு நபர், இப்படி மக்கள் வரிப்பணத்தை, ஊழல் செய்தால், பிற துறைகளில் இருக்கும் அதிகாரிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள் !
எப்படி இருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கித்தனம் ?
சவுக்கு
6 comments:
தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்
//இப்போது யோசியுங்கள். 300 ரூபாயும், 500 ரூபாயும் லஞ்சமாக வாங்கும் அரசு ஊழியர்களை பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என்ன யோக்யதை இருக்கிறது ? //
லஞ்சம் வாங்கும் உயரதிகாரர்களை பிடிக்க வேண்டும் என்ற உங்கள் ஆதஙகம் நியாயமானது, அதற்காக 300 ரூபாயும், 500 ரூபாயும் லஞ்சமாக வாங்கும் அரசு ஊழியர்களை பிடிக்காமல் விட்டால், இவர்கள்தான் நாளைய உயரதிகாரர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குப்பனோ சுப்பனோ கைநீட்டினால் “உள்ளே” என்ற நிலை வரவேண்டும்.
நல்ல சவுக்கடி.
அன்பார்ந்த மவுனி 300 ரூபாயும், 500 ரூபாயும், லஞ்சம் வாங்குபவர்களும், கைது செய்யப் படவேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், மாதம் 8000 ஊதியம் பெறும் ஒருவர் 300 ரூபாய் லஞ்சம் வாங்குவதையும், மாதம் 50,000 ஊதியம் பெற்றுவிட்டு, வீட்டுக்கு 4 வண்டிகள், வேலை செய்ய 5 கான்ஸ்டபிள்களை அரசு செலவில் வைத்துக் கொண்டிருப்பவர்களையும், ஒப்பிடுவது தவறு என்றுதான் கூறுகிறேன். வறுமைக்காக லஞ்சம் வாங்குவதும் குற்றம் என்றாலும் கூட, இதை ஒரு வகையில் மன்னிக்கலாம். ஆனால், ஆடம்பர வாழ்க்கைக்காக லஞ்சம் வாங்குவதென்பது கொடுங்குற்றம் என்பதே எனது கருத்து
//வறுமைக்காக லஞ்சம் வாங்குவதும் குற்றம் என்றாலும் கூட, இதை ஒரு வகையில் மன்னிக்கலாம்//
இதில் எனக்கு உடன்பாடு இல்லை. 200 ரூபாய் வாங்குகிறான் என்றால், அதை கொடுப்பவனை நினைத்து பாருங்கள், அவன் நிலைமை எவ்வளவு மோசம் என்று. அவன் வறுமையில் இல்லயா? அவனுக்கு எவ்வள்வு வயித்தெறிச்சல் இருக்கும்.
மற்றபடி நீங்களும் நானும் ஒரே side தான்,
அன்புள்ள நண்பர் மவுனி, நீங்களும் நானும் ஒரே பக்கத்தில்தான் இருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தங்கள் அன்பான ஆதரவை தாருங்கள்.
Post a Comment