
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பயணம் 1989ல் தொடங்கியது.
1989ல் நடைபெற்ற தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்டு, 15 லட்சத்து 36 ஆயிரத்து 350 வாக்குகளை பெற்றது. எனினும் ஓரிடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை.
1991ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாமக போட்டியிட்டு, ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அப்பொழுது பாமகவின் சின்னம் யானை. அந்தத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர் பன்ருட்டி ராமச்சந்திரன். யானை சின்னத்தில் வெற்றி பெற்றதால், முதல் நாள் சட்ட மன்றத்துக்கு, பன்ருட்டி ராமச்சந்திரன் யானையில் அழைத்து வரப்பட்டார். அதே ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
1996ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி, அப்போது, “திவாரி காங்கிரஸ்“ என்ற ஒரு “உப்புமா“ கட்சியை நடத்திக் கொண்டருந்த வாழப்பாடி ராமமூர்த்தியோடு சேர்ந்து போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது.
பாமக ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கவில்லை என்றாலும், அந்த ஆண்டு தேர்தலில் அடித்த “ஜெயலலிதா எதிர்ப்பு அலையையும்“ மீறி, பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது, அரசியல் நோக்கர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
1998ம் ஆண்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், எப்படியாவது தன் பலத்தை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த செல்வி ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டு சேர்ந்தார். இக்கூட்டணியில் நான்கு எம்பிக்களை பெற்றது பாமக.

இந்தத் தேர்தலில் இருந்துதான், மருத்துவர் ராமதாஸின் சறுக்கல் தொடங்கியது. தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் மந்திரி பதவியும் கிடைத்தது. அதுவும், மிக மிக “வளமை“ வாய்ந்த பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பதவி.
ஆண்டுதோறும், நலிவடைந்த மற்றும், தலித்துகளுக்கு, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் வழங்குவதற்காக நேர்முகத் தேர்வு நடத்தும். இந்த நேர்முகத் தேர்வுக்கு, என்னுடைய நண்பரோடு, நானும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. டிஎம்எஸ் எதிரில் உள்ள, ஸ்ரீலேகா இன்டர்நேஷனல் ஹோட்டலில்தான் நேர்முகத் தேர்வு நடந்தது.
அங்கே இருந்த, நேர்முகத் தேர்வு நடத்தும் அதிகாரியின் பி.ஏ, விண்ணப்பித்திருந்த என் நண்பரைப் பார்த்துச் சொன்னது, “இந்த இன்டர்வ்யூ எல்லாம் வெரும் ஐ வாஷ் சார். நேரா, தைலாபுரம் தோட்டத்துக்கு போயி, டாக்டர பாருங்க. அவர் நெனச்சா உங்களுக்கு அலாட்மென்ட் உண்டு. ஒரு அலாட்மென்ட்டுக்கு ரெண்டு லட்சம் ஆகும்“ என்று கூறினார்.
இந்த 1998ற்குள், ராமதோசோடு, ஆரம்பகாலத்தில் இருந்த அறிவு ஜீவிகள் அனைவரும் சிறிது சிறிதாக ராமதாஸ் கட்சி நடத்தும் போக்கைப் பார்த்த விலகத் தொடங்கினர்.
1998ல் பதவியில் இருந்த பிஜேபி அரசு, 13 மாதங்கள் பதவியில் இருந்தது. இந்த 13 மாதங்களில், ராமதாஸ், கோடிகளுக்கு அதிபதி ஆனார்.
திடீரென்று, பணமும், செல்வாக்கும் கொழிக்கத் தொடங்கின. இதில் ருசி கண்ட பூனையான மருத்துவர் அய்யா, கம்யூனிசம், தமிழ் உணர்வு, கொள்கை, கோட்பாடு, அனைத்தையும், பணம் சம்பாதிக்க ஒரு அருமையான வழி என்று உணர்ந்தார்.
சில்லரை வாணிபத்தை ஒழிக்கும், எம்என்சிக்களுக்கு எதிராகவும், குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம், சில்லரை வணிகத்தில் இறங்குவதற்கு எதிராகவும், பெரும் போராட்டத்தை அறிவித்த ராமதாஸ், சில நாட்களிலேயே, சத்தம் இல்லாமல், கொள்கையை கக்கத்தில் செறுகிக் கொண்டு, அமைதியானது இதற்கு ஒரு உதாரணம்.
இதற்கிடையில், தங்களுக்கு புதிதாக கிடைத்துள்ள அதிகாரம் பற்றி, வன்னிய சமுதாய மக்களுக்ளு ஒரே பூரிப்பு. தங்கள் சமுதாயத்தை வாழ்வாங்கு வாழ வைக்க வந்து விட்டார் தமிழ்க் குடிதாங்கி என்று மருத்தவர் ராமதாசை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். ஆனால், ராமதாசைப் பொறுத்த வரை, வன்னிய சமுதாயம் என்பது, அவரது குடும்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை, மக்கள் வெகு தாமதமாகத்தான் உணர்ந்தார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி, தங்கள் கட்சியின் சின்னமாக, மாங்கனிக்குப் பதிலாக, குரங்கைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அப்படி, மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல, அடுத்த ஆண்டே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவை அப்படியே தொங்கலில் விட்டு விட்டு, திமுக அணிக்குத் தாவினார், மருத்துவர் ராமதாஸ்.
அந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 5 எம்.பி சீட்டுக்களைப் பெற்று, 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.
2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் அடுத்த மரமான, அதிமுகவுக்கு வெட்கமேயில்லாமல் தாவியது. இப்போது, ஜெயலலிதாவை, போயஸ் தோட்டம் சென்று சந்தித்த, ராமதாஸ், தங்களுக்கு எத்தனை இடம் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு “அன்புச் சகோதரி முடிவு செய்வார்“ என்று சகோதர பாசத்தை கொட்டினார். இத்தேர்தலில், 20 எம்எல்ஏக்களைப் பெற்றது பாமக.
2004ம் ஆண்டு நடந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்று, 18 இடங்களில் வென்றது.
இதையடுத்து, 2009ல் பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், “மரம் தாவும்“ தனது கொள்கையை மறந்து விடக் கூடாது என்று, மீண்டும் அதிமுக அணிக்குத் தாவி தேர்தலில் போட்டியிட்டது.
இந்தத் தேர்தலில் இடம் ஒதுக்குகையில், ஜெயலலிதாவை சந்தித்து விட்டு, மருத்துவர் ராமதாஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படி கூறினார்.
''அன்புச் சகோதரியை சந்தித்தது, மகிழ்ச்சியான தருணம். 45 நிமிடங்கள் அரசியல் நிலவரம், சமூகப்பிரச்னைகள் குறித்துப் பேசினோம்.ஈழத்தமிழர்கள் பற்றித்தான் அவர் நிறைய நேரம் பேசினார். அந்தப் பேச்சில், கலைஞரைப் போல எதுகை-மோனை வசனம் எல்லாம் இல்லை. உண்மையான இரக்கம் இருந்தது. அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன''
இதுதான் ராமதாசின் பச்சோந்தித் தனம். இப்படிப் பேசி விட்டு, இன்று தன் மகனுக்கு, ராஜ்ய சபா சீட் வேண்டும் என்றவுடன், கருணாநிதிக்கு பாத பூஜை செய்ய பாமக எம்எல்ஏக்களை அனுப்பினால், அதை ஏற்றுக் கொண்டு, ராஜ்ய சபா சீட் கொடுக்க, கருணாநிதி என்ன அப்படி ஒரு ஏமாளியா ?

2009 பொதுத் தேர்தல், பாட்டாளி மக்கள் கட்சிக்கு நெப்போலியனின் வாட்டர்லூ வாக மைந்தது.
போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி “மண்ணைக் கவ்வியது“.
இந்தத் தேர்தலில், தேர்தலுக்குத் தேர்தல் அணி தாவும், இந்தக் கட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் எண்ணியது மட்டுமல்லாமல், திமுகவும் கங்கணம் கட்டிக் கொண்டுவேலை செய்தது. இதனாலேயே, பாமக, அனைத்து இடங்களிலும் மண்ணைக் கவ்வியது.
அணி தாவும், குழப்பங்கள் மட்டுமின்றி, வன்னிய சமுதாய மக்களே, மருத்துவர் அய்யாவை கைவிட்டனர். இதுதான், பாமகவின் மிகப் பெரிய சரிவாக அமைந்தது.

1998ல் பதவி சுகத்தை அனுபவிக்கத் தொடங்கிய மருத்துவர் அய்யா, அதற்குப் பிறகு, எப்படியாவது, பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தொடர்ந்து அணி மாறியதன் விளைவே, இன்று தெருக் கோடியில் நிற்கிறார்.

நண்பரோடு ஒரு நாள், தைலாபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர், ஒரு முக்கியமான பத்திரிக்கையாளர். திமுக அரசில் நடக்கும் ஊழல்கள் குறித்து சில முக்கிய ஆவணங்கள் அந்த நண்பருக்கு கிடைத்ததால், அதை மருத்துவர் அய்யாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முதன் முறையாக அவரைச் சந்திக்கச் சென்றார். காலை 9.30 மணிக்கு தைலாபுரம் சென்றவர், மருத்துவரைச் சந்திக்க மதியம் 2 மணி ஆகி விட்டது.
அது வரை, தொண்டர்களோடு தொண்டர்களாக, மரத்தடியில் நண்பரோடு காத்துக் கிடந்தோம்.
அங்கே மருத்துவரைச் சந்திக்க இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். தனிமையில் ரகசியமாக சந்திக்க வேண்டியி ருந்ததால், கூட்டம் குறையும் வரை காத்திருக்கலாம் என்றார் நண்பர்.
மதியம் சுமார் 12.30 மணிக்கு, ஒரு ஹோண்டா எஸ்யுவி வண்டி வந்தது. அந்த வண்டியில் மருத்துவர் அய்யாவின் மருமகள் சவும்யா வந்து இறங்கினார். வண்டியின் டிக்கியை திறந்ததும், சுமார் 50க்கும் மேற்பட்ட, சென்னை சில்க்ஸின் பட்டுப் புடவை டப்பாக்கள் இருந்தன. அங்கே கூடியிருந்த, தொண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு அய்யாவின் மருமகளுக்கு அந்தப் பெட்டியை தூக்கிச் செல்ல உதவிக்கு ஓடினர். ஐம்பது பட்டுப் புடவைகள் என்றால் விலை என்ன இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இதுதான் மருத்துவர் அய்யாவின் இன்றைய நிலை.
அதற்குப் பிறகு, நண்பர், திமுக அரசுக்கு எதிரான ஆவணங்களை மருத்துவர் அய்யாவிடம் வழங்க, அந்த ஆவணங்களை வைத்து, ராமதாஸ், பல நாட்கள் அறிக்கை யுத்தம் நடத்தி, கருணாநிதிக்கு, காலில் தைத்த முள்ளாய் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது, வேறு கதை.
கட்சி தொடங்கிய காலத்தில் “என் கட்சியில் யாராவது ஊழல் செய்தால், அவர்களை சவுக்கால் அடியுங்கள்“ என்று சொன்ன மருத்தவர் ராமதாஸ், முன்னாள் நக்சலைட்டுகளை தன் கட்சியின் கொள்கையை வகுப்பவர்களாக வைத்திருந்த மருத்துவர் ராமதாஸ், அம்பேத்கரின் கொள்கையை உயர்திப் பிடிப்பதற்கென்றே, கட்சியின் கொடியில் நீலத்தை சேர்த்த மருத்துவர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் லட்சியத்தோடு தன் கட்சியின் கொடியில் சிகப்பு நிறத்தை சேர்த்த மருத்துவர் ராமதாஸ், சில்லரைக் காசுகளை பெற்றுக் கொண்டு, ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் ராமதாஸ், இன்று, தன் மகனுக்கு ஒரு எம்பி சீட் கொடுங்கள் என்று, கோபாலபுரத்தில் மடியேந்திப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கருணாநிதி, எல்லாருக்கும் கொடுக்கும் அல்வாவைப் போலவே, அடுத்த முறை சீட் கொடுக்கப் படும் என்று சொல்கிறார். மீண்டும், ஜெயலலிதா பக்கம் போனால் சீட் கிடைக்குமா என்ற நப்பாசையோடு காத்திருக்கிறார். ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர்களை அறிவித்தவுடன், திமுகவுடன் கூட்டணி என்று அறிவிக்கிறார்.
ஒவ்வொடு முறை அணி மாறும் போது, அதிகாரம் கிடைத்த மமதையில், எந்த வன்னிய மக்களின் வாக்குகளால், வளர்ந்தாரோ, அந்த வன்னிய இன மக்களை மறந்து, தன் குடும்பத்தை தூக்கிப் பிடித்தால், கோடிகள் இருந்தாலும், தெருக் கோடிக்கு வந்து விட்டார்.
சிந்து பைரவி படத்தில் கதாநாயகன் சிவக்குமார், ஒரு பெரிய சங்கீத வித்வானாக இருப்பார். காதல் பிரச்சினையால் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வீடு வாசல், கார் அத்தனையையும் விற்று குடிக்கத் தொடங்கி விடுவார். ஒரு நாள் குடிக்க காசு இல்லாத போது, தனக்கு தொழில் எதிரியான சிவச்சந்திரனின் வீட்டில் நடக்கும் ஒரு பார்ட்டிக்கு போனால், சரக்கு கிடைக்கும் என்று போவார். பழைய தொழில் போட்டியில், சிவச்சந்திரன், சிவக்குமாரை அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காக மேடையில் பாடும் பாட்டு வேண்டாம், டப்பாங்குத்து பாட்டுப் பாடினால் சரக்குத் தருவதாக சொல்கிறார். குடி வெறியில், சிவக்குமாரும்,
“தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக் குட்டி நான்….
இந்தச் சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி…. ….. ….. ….. ….. “
மகாராஜா பிச்சை கேட்டு இங்கு பாடுறான்…..“
என்று பாடுவார்.
பாடலின் முடிவில், சிவக்குமாரின் வேட்டி அவிழ்ந்து விழ, பட்டா பட்டி அண்டர்வேரோடு நிற்பார்.
சினிமாவில், சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது. அரசியலில், செந்தாமரை வழுக்கி சேற்றில் விழுந்து, சூரியனிடம் காய்கிறது.
சவுக்கு