Flash News

Showing posts with label நளினி savukku. Show all posts
Showing posts with label நளினி savukku. Show all posts

Saturday, January 23, 2010

நளினியை விடுதலை செய்யாதீர்கள்




நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று சவுக்கு சொல்லவில்லை. தமிழக மக்கள் சொல்லவில்லை.

ஈழத் தமிழர்கள் சொல்லவில்லை. சொல்வது யார் தெரியுமா ?


முத்துவேல் கருணாநிதிதான்.


(கருணாநிதியை விமர்சனம் செய்தால், அநானியாக வந்து கெட்ட வார்த்தையில் பின்னூட்டம் போடுபவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு)


கருணாநிதி எப்போது சொன்னார் என்று யோசிக்கிறீர்களா ? விளக்கமாகவே சொல்கிறேன்.
தமிழகத்தில் கைதிகளை விடுதலை செய்வதில் இரண்டு வகை உண்டு.

ஒரு வகை ஆலோசனைக் குழுமத்தின் பரிந்துரையில் விடுதலை செய்வது. மற்றொரு வகை அண்ணா பிறந்த நாள் போன்ற தலைவர்கள் பிறந்த நாள் அன்று செய்யப் படும் விடுதலை மற்றொரு வகை.


முதல் வகையைப் பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் 10 ஆண்டுகள் தண்டனை கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலைக்காக பரிசீலிக்க சிறை விதிகளின் படி ஆலோசனைக் குழுமத்தை கூட்ட வேண்டும்.

அக்குழுமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி, மருத்துவர், நன்னடத்தை அலுவலர், அரசு சாரா உறுப்பினர்கள் இருவர் ஆகியோர் அடங்கிய குழு கூடி 10 ஆண்டுகள் சிறை முடித்த கைதிகளைப் பற்றி பரிசீலிக்க வேண்டும். 2001ல் நளினி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிக்கிறார். ஆனால், நளினிக்கான ஆலோசனைக் குழுமும் கூடவேயில்லை.

முதன் முறையாக 2007ம் ஆண்டுதான் ஆலோசனைக் குழுமம் டிசம்பர் மாதம் கூடி, நளினியின் வழக்கை பரிசீலித்தது. அந்தக் குழு கூடி “இலங்கையில் இப்போது போர் நடந்து கொண்டு இருக்கிறது. இறந்த ராஜீவ் காந்தி மிகப் பெரிய தலைவர். நளினியை விடுதலை செய்தால் இலங்கைக்குச் சென்று, புலிகளோடு சேர்ந்து கொள்வார்“ என்ற காரணத்தைக் கூறி நிராகரித்தது.


ஆனால் இவ்வாறு நிராகரித்த குழுமம் சரியான முறையில் கூடவில்லை, மொத்தம் உள்ள ஏழு உறுப்பினர்களில் மூன்றே பேர் கூடி இந்த முடிவை எடுத்துள்ளனர் ஆகையால், இந்தக் குழுமத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வெற்றி பெற்றார்.

இந்த ஆலோசனைக் குழுமம், கருணாநிதியின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுபவர்களால்தானே முடிவெடுக்கப் பட்டது ?

“தமிழினத்தின் தலைவர்“ நினைத்திருந்தால், அப்போது பரிந்துரை செய்திருக்க முடியாதா ?

நீதிமன்றம், ஆலோசனைக் குழுமத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டும் கூட ஒன்றரை ஆண்டுகளாக கூட்டப் படவேயில்லை. இதை எதிர்த்து நளினி மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார்.

அதன் பிறகு தான் ஆலோசனைக் குழுமம் கூட்டப் பட்டது.

இரண்டாவது வகை, அண்ணா பிறந்த நாளில் கைதிகளை முன் விடுதலை செய்வது.

2001ம் ஆண்டு பத்து ஆண்டுகள் தண்டனை முடித்த 63 கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். நளினி அப்போது 10 ஆண்டுகள் முடித்திருந்தார்.

இதற்கு அடுத்து 2006ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளில் 472 கைதிகள் முன் விடுதலை செய்யப் பட்டனர். இவர்கள் கழித்த தண்டனை காலம் எவ்வளவு தெரியுமா ? 10 ஆண்டுகள். நளினி அப்போது 14 ஆண்டுகளை முடித்திருந்தார்.


2007ம் ஆண்டில், இரண்டு முறை கைதிகள் முன் விடுதலை செய்யப் பட்டனர். அண்ணா பிறந்த நாளின் போது பத்து ஆண்டுகள் முடித்த 190 பேர் விடுதலை செய்யப் பட்டனர். அடுத்து கருணாநிதியின் சட்டமன்ற பொன் விழா ஆண்டின் போது 14 ஆண்டுகள் முடித்த 27 பேர் விடுதலை செய்யப் பட்டனர். அப்போது நளினி 15 ஆண்டுகள் முடித்திருந்தார்.


2008 ஆண்டில் 1408 பேர் விடுதலை செய்யப் பட்டனர். 1408 பேரும் விடுதலை செய்யப் படுவதற்கான தகுதி 7 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும். நளினி அப்போது 16 ஆண்டுகள் முடித்திருந்தார்.

நளினியை முன் விடுதலை செய்யாமல் இருப்பதற்கு அரசு சொல்லும் காரணம் ஒரு விதி. அவ்விதி என்ன சொல்கிறது என்றால், மத்திய அரசு புலனாய்வு நிறுவனங்கள் விசாரித்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட கைதிகளை முன் விடுதலைக்கு பரிசீலிக்கும் முன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்பதுதான் அந்த விதி.

2006ல் ஆட்சிக்கு வந்தாரல்லவா “தமிழினத்தின் தலைவர்“ ? எத்தனை முறை மத்திய அரசை நளினி தொடர்பாக கருணாநிதி கலந்தாலோசித்தார் தெரியுமா ?

ஒரு முறை கூட இல்லை. இன்று வரை கலந்தாலோசிக்க வில்லை.


இப்போது நடந்து கொண்டிருக்கும் கூத்துக்காகத்தான் இந்தப் பதிவே.


கடந்த 4 நாட்களாக தேசிய ஊடகங்களிலும், மாநில ஊடகங்களிலும் நளினி விடுதலை, நளினி விடுதலை என்று பெரிய பெரிய செய்திகள் வருகிறதே. இதன் பின்னணி தெரியுமா ?


திடீரென்று நளினியை விடுதலை செய்ய ஆலோசனைக் குழுமம் பரிந்துரை என்ற செய்தி முளைத்தது.

யாருக்குமே எப்படி இச்செய்தி திடீரென என்று புரியவில்லை. ஆனால், திடீரென்று அனைத்து பத்திரிக்கைகளுக்கும் இச்செய்தி பரப்பப் பட்டது. இது கருணாநிதியின் உளவுத் துறை செய்த வேலை.


ஆனால் 20ந் தேதிதான் ஆலோசனைக் குழுமம் நளினியை சிறையில் சந்தித்தது. அதற்கு முன்பாகவே நளினி விடுதலை என்பது போல பல பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.


RAJIV ASSASSIN NALINI TO BE RELEASED ? என்று தேசிய ஊடகங்கள் அலறின, ராஜீவ் இறந்த படத்தை அருகில் போட்டு நளினி விடுதலை ? என்று தமிழ் ஊடகங்கள் அலறின. தினத்தந்தி தலைப்புச் செய்தியாகவே போட்டது.


திடீரென்று சுப்ரமண்ய சாமி நீதிமன்றம் வந்தார். தலைமை நீதிபதியிடம் நளினியை முன் விடுதலை செய்யப் போகிறார்கள்.

அவ்வாறு செய்யக் கூடாது நான் போட்ட வழக்கை விரைந்து விசாரியுங்கள் என்று மனு அளித்தார்.

நளினியை விடுதலை செய்யக் கோரும் பரிந்துரையில் கையொப்பம் இடாதீர்கள் என்று கவர்னரிடம் மனு அளித்தார்.


ஆனால், ஆலோசனைக் குழுமம் கூடி, நளினியை விடுதலை செய்ய இது வரை பரிந்துரை அனுப்பவில்லை.

இந்நிலையில் எதற்காக இச்செய்தி ஊடகங்களில் கருணாநிதியால் பரப்பப்பட்டது ?


இங்கேதான் இருக்கிறது கருணாநிதியின் தந்திரம்.


ஆலோசனைக் குழுமம், இம்முறை நளினியை முன் விடுதலைக்கு தகுதியானவர் என்று சொல்லியே தீர வேண்டும்.

ஏனெனில் நளினி மீது சிறைக் குற்றங்கள் ஏதும் கிடையாது. அவ்வாறு பரிந்துரை செய்து குழு அறிக்கையை அரசிடம் அளித்தால் தமிழக அரசு அப்பரிந்துரையின் மீது தனது முடிவை எடுக்க வேண்டும்.

அவ்வாறு முடிவெடுத்தபின், மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டு கடிதம் எழுதினால், சோனியாவுக்கு நெருக்கடி ஏற்படும். நளினியை விடுதலை செய்யலாம் என்று மத்திய அரசு முடிவெடுத்தால் அரசியல் ரீதியாக நன்றாக இருக்கும் என்றாலும், நளினி சிறையிலேயே சாக வேண்டும் என்ற சோனியாவின் விருப்பம் நிறைவேறாது.


இப்படி ஒரு நெருக்கடிக்கு சோனியா ஆளானால், அதனால் முதலில் பாதிக்கப் படப் போவது கருணாநிதி தான்.

அதற்கு பதில், ஆலோசனைக் குழுமத்தின் முடிவுக்கு எப்படியாவது நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டால் ?


இதுதான் கருணாநிதியின் திட்டம். சுப்ரமண்ய சாமியின் வழக்கு விரைந்து விசாரிக்கப் படவில்லை என்றாலும் யாராவது ஒருவர் பொது நல வழக்கு திடீரென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.


எப்படி இருக்கிறது கருணாநிதியின் கயமை ?


இப்போது சொல்லுங்கள். நளினியை விடுதலை செய்யாதீர்கள் என்று சொல்லுவது யார் ?
முத்துவேல் கருணாநிதி தானே ?

இவர்தான் “தமிழினத்தின் தலைவர்“

வெட்கக்கேடு.

சவுக்கு