Flash News

Showing posts with label தலைமைச் செயலகம். Show all posts
Showing posts with label தலைமைச் செயலகம். Show all posts

Sunday, May 30, 2010

புதிய தலைமைச் செயலக கட்டிடமும், டாஸ்மாக் பாரும்




எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலக கட்டிடம் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது என்றும், 2011ல் அதிமுக ஆட்சி அமைத்ததும், பழைய புனித ஜார்ஜ் கோட்டையில் தான் ஆட்சி அமைப்பேன் என்றும், புதிய கட்டிடத்தை பயன் படுத்தப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

ஒரு வேளை, 2011ல் அதிமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், இந்தப் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக சவுக்கு ஆராய்ச்சியில் இறங்கிய போது, கிடைத்த ஆலோசனைகள் இதோ.. … ….

தமிழகம் முழுக்க, அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருந்தாலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருப்பது போல சிறந்த பார்கள் எங்குமே இல்லை. புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் உள்ள சட்டசபை வளாகம், குளிர் சாதன வசதியோடு, ஸ்பான்ஞ் வைத்த இருக்கைகளோடு, மேசைகளோடு இருப்பதால், இந்தப் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை டாஸ்மாக் பார் என்று அறிவிக்கலாம்.




இப்போது சட்டசபை நடக்கும் நாட்களில் உறுப்பினர்கள் எப்படி உளறுகிறார்களோ, அதே போல “குடி“ மக்கள் அனைவரும் உளறுவது பொருத்தமாக இருக்கும். ஆனால் சட்டசபை போல அல்லாமல் ஆண்டில் சில நாட்கள் மட்டும் நடக்காமல், வருடம் முழுவதும், ஜே ஜே என்று கூட்டம் இருக்கும். காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற நாட்களில் மட்டும் விடுமுறை விடலாம்.


ஓவராக குடித்து விட்டு, சளம்பும் குடிமக்களை, இப்போது உள்ள அவைக் காவலர்களை வைத்தே, தூக்கி வெளியே போடலாம். இப்போது நடுநாயகமாக சபாநாயகர் உட்கார்ந்திக்கும் இடத்தையே கிச்சனாக்கி, அங்கே சைடிஷ் ஐட்டங்களை சமைக்கலாம், இவ்வாறு சமைப்பதால், பார் முழுக்க, உணவுப் பொருட்களின் வாசனை பரவி சேல்ஸ் அதிகரிக்கும்.


இந்த பார் திறக்கப் பட்டால், உலகத்திலேயே பெரிய பார் என்று, பாரெல்லாம் புகழும் அளவுக்கு, தமிழகத்துக்கு பெருமை வந்து சேரும். இக்கட்டிடத்தை திறக்கும் முன்பு செட் போட்ட, தோட்டா தரணியையே வைத்து, உள் அலங்காரம் செய்யலாம்.


ஓவராக குடித்து விட்டு “மட்டை“ ஆகும், குடிமக்களை, புதிதாக கட்டப் பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலேயே குறைந்த கட்டணத்தில் தங்க வைக்கலாம். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதற்காக, மாநகர போக்குவரத்து கழகம் இயக்கும் பேருந்தினை பெரும்பாலான உறுப்பினர்கள் பயன்படுத்துவதில்லை என்பதால், கோயம்பேடு முதல், சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் இருந்து, இந்த பாருக்கு, பேருந்துகள் ஏற்பாடு செய்யலாம்.


பத்திரிக்கையாளர்கள் பல பேர், சென்னை நகரின் மோசமான டாஸ்மாக் பார்களிலும், ப்ரஸ் கிளப் அருகிலும், தண்ணியடித்து மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாவதால், தற்போது உள்ள பத்திரிக்கையாளர் மாடத்தை, பத்திரிக்கையாளர்கள் தண்ணியடிப்பதற்கு மட்டும் என்று அறிவித்து விட்டால், பத்திரிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் காக்கப் பட்டு விட்டது என்று சந்தோஷப் படுவார்கள்.

இந்தப் பகுதிக்கு “தண்ணீர் தேசம்“ என்று பெயர் வைக்கலாம்.


தற்போது, உயிரியல் பூங்கா, சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்திருப்பதால், பொது மக்கள் அவ்வளவு தூரம் சென்று விலங்குகளை பார்க்க சிரமப் படுகிறார்கள்.




அதனால், புதிய தலைமைச் செயலக வளாகத்தை உயிரியல் சரணாலயமாக மாற்றி அறிவிக்கலாம். சபாநாயகர் அமரும் இருக்கையில், சிங்கத்தின் கூண்டை அமைப்பது மிகப் பொறுத்தமாக இருக்கும்.


திடீரென்று விலங்குகளுக்குள் சண்டை ஏற்பட்டு ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டால், சட்டசபை நடப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்தும். மேலும், விலங்குகள், தங்கள் பாஷையில், குய்யோ முறையோ என்று கத்துவது, சூடான விவாதம் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்.


பழக்கப் படுத்தப்பட்ட, சொன்னால் டைவ் அடிக்கும், குரங்கு, சைக்கிள் ஓட்டும் யானை, வளையத்தை தாண்டும் நாய் போன்ற விலங்குகளை, தற்போது, அரசுக்கு, ஜால்ரா அடிக்கும் விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர்கள், மற்றும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடங்களில் வைக்கலாம்.




உலகிலேயே முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப் பட்ட விலங்குகள் சரணாலயம் தமிழகத்தில்தான் உள்ளது என்ற பெருமை நம்மை வந்து சேரும்.


தற்போது சட்டசபை காட்சிகளை தொகுத்து இரவு தொலைக்காட்சிகளில் காட்டுவது போல, டிஸ்கவரி சேனல், அனிமல் ப்ளானெட் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களோடு, லைவ் டெலிகாஸ்ட் செய்ய ஒப்பந்தம் போடலாம். இந்நிறுவனங்கள், இந்த விலங்குகளை படம் பிடிப்பதை விட, தற்போது நடக்கும் சட்டசபையை படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டக் கூடும். ஆனால், விலங்குகளின் நலன் மிக முக்கியம் என்பதால் விலங்குகள் பற்றிய ஒளிபரப்புக்கே அனுமதி அளிக்க வேண்டும்.


புலி, சிங்கம் போன்ற அரிய வகை விலங்குகள், அழிந்து வருவது குறித்து, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு இயற்றி வரும் சூழலில், இது போன்ற அரிய வகை விலங்குகளை, இந்த சட்டசபை வளாகத்துக்குள் பராமரித்தால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த விலங்குகள், பல்கிப் பெருகி, பெரிய அளவு வளர்ச்சி அடைந்திருப்பதை காண முடியும். இந்த இடத்தை இது போல பயன் படுத்தவதன் மூலம், மிக மிக அரிதான அத்தனை உயிரினங்களையும் ஐந்து ஆண்டுகளுக்குள் ஏராளமாய் பெருக்கி விடலாம்.
பத்திரிக்கையாளர் மாடத்தில், விலங்கியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு ஒதுக்கி விடலாம்.

இந்த இடத்துக்கு “மாக்கள் மன்றம்“ என்று பெயரிட்டு அழைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்

நன்றி. நம்தினமதி நாளேடு
சவுக்கு