Flash News

Showing posts with label ஜாபர் சேட். Show all posts
Showing posts with label ஜாபர் சேட். Show all posts

Thursday, July 29, 2010

அன்பார்ந்த தமிழக முதல்வரே … …. ….



சவுக்கின் கைதுக்கு முன்பு, தங்களிடம் சவுக்கு எழுதிய செம்மொழிப் பாடல், பதிவும், மற்றொரு பதிவும் காண்பிக்கப் பட்டு, சவுக்கு ஒரு தேசத் துரோகியாக சித்தரிக்கப் பட்டதாக சவுக்கு அறிகிறது.

தாங்களும் ஒரு எழுத்தாளர் என்ற முறையில், அந்தப் பதிவுகளை ரசித்திருப்பீர்கள் என்றே சவுக்கு நம்புகிறது. இத்தனை காலமாய் தங்களை விமர்சித்து சவுக்கு எழுதும் போதெல்லாம் அமைதியாக இருந்த ஜாபர் சேட், இப்போது சவுக்கைப் பற்றி தங்களிடம் கூறக் காரணம் என்று யோசித்தீர்களா ?

ஜாபர் சேட்டின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் சவுக்கு ஏற்றியதால் தான்.
உங்களை விமர்சித்த பதிவை காட்டினாரே ? இவர் எத்தனை இடத்தில் சொத்து வாங்கியுள்ளார் என்ற பதிவை காட்டினாரா ? காட்டமாட்டார்.



அய்யா என்னா அழகா இருக்கார் பாருங்க. பெண் சிங்கம் 2ம் பார்ட்ல ஹீரோ ஆக்கிடுங்கய்யா


முதல்வர் அவர்களே.. உங்களை அரசியல் சாணக்கியர் என்று கூறுகிறார்கள். மிகத் திறமையாக எதிரிகளைக் கையாண்டு சாணக்கியத்தனத்தோடு செயல்படுவதில் தாங்கள் வல்லவர் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அப்படிப் பட்ட சாணக்கியரான நீங்கள், ஒரு சகுனியை கூடவே வைத்துக் கொண்டு, அந்த சகுனியை நம்பி ஏமாந்து கொண்டு இருப்பதுதான் மிகுந்த வேதனையாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. உங்கள் உடனிருப்பவர்கள், உங்களிடம் உண்மையைச் சொல்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், சாதுர்யம் மிக்க நீங்கள், இந்த ஜாபர் சேட் விஷயத்தில் ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீர்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

இன்று உங்கள் கண்களாகவும், காதுகளாகவும் இருப்பது போல நடித்துக் கொண்டிருக்கும் இந்த ஜாபர் சேட் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

இவர் பணியில் சேர்ந்த நாள் முதலாகவே ஒழுக்கமாக இருந்தது கிடையாது முதல்வர் அவர்களே. முதல் போஸ்டிங்கில், ஏஎஸ்பி யாக, கோவையில் இவர் நியமிக்கப் பட்டார். அப்போதே, அங்கே இருந்த ஒரு பெண் காவலருடன் நெருக்கமாகப் பழகியதாகவும், அந்தப் பெண் காவலர், ஜாபரை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும், மறுத்தால் புகார் கூறப் போவதாகவும் கூறியதை அடுத்தே, ஜாபர் அவசர அவசரமாக திருமணம் செய்ததாக கோவை வட்டாரங்கள் கூறுகின்றன. பணியில் சேர்ந்த முதல் ஆண்டே தனது வேலையை காட்டத் தொடங்கியவர்தான் இந்த ஜாபர்.

1996 முதல் 2000ம் ஆண்டு வரை, தாங்கள் முதல்வராக இருந்த பொழுது ஜாபர் சேட் தங்களது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

அப்போதெல்லாம், இப்போது நடப்பது போன்று பல்வேறு விழாக்கள் தங்களுக்கு கிடையாது. காலையில் தலைமைச் செயலகம் வந்தால், மாலையில் அலுவலகம் முடியும் வரை அங்கேதான் இருப்பீர்கள். பாதுகாப்புப் பிரிவு எஸ்பி என்பதால், ஜாபருக்கு தாங்கள் எத்தனை மணிக்கு கிளம்புவீர்கள் என்ற விபரம் நன்கு தெரியும்.

அதனால், ஒரு ஜிப்ஸி ஜீப்பை எடுத்துக் கொண்டு, தானே அதை ஓட்டிச் சென்று, நேராக சென்னை விமான நிலையத்தின் சர்வதேச இறங்கு முனையின் விஐபி நுழைவாயிலுக்குச் செல்வார். அங்கே, இவரது நண்பர்கள் எடுத்து வரும் பொருட்களை கஸ்டம்ஸ் சோதனையின்றி, தன்னுடைய ஜீப்பிலேயே ஏற்றி அவர்கள் வீட்டுக்கு கொண்டு சேர்ப்பாராம். இதன் மூலமாக, சுங்க வரி ஏதும் செலுத்தாமல் இவர்களது பொருட்கள் வந்து சேரும்.


திருவான்மியூர் ப்ளாட் ஒரு சதுர அடி, 9000 ரூபா ஒரு தரம், ரெண்டு தரம்....



இதற்கான பிரதி பலனாக, இவருக்கு அரசு விருப்புரிமை கோட்டாவில் ஒதுக்கப் பட்ட, சென்னை முகபேர் ஏரித் திட்டத்தில் 10வது குறுக்குத் தெருவில் உள்ள மனையில், ஒரு பிரம்மாண்ட பங்களா கட்டினார் தெரியுமா ?

அந்த வீட்டை இவர் பொருள் எடுத்து வந்துக் கொடுத்த, செங்கல் சூளை முதலாளிகள் செங்கல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் இலவசமாக கொடுத்து, அந்த வீட்டை கட்டிக் கொடுத்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

அவ்வாறு கட்டிய வீட்டில் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, அதை 70 லட்ச ரூபாய்க்கு விற்று விட்டது தங்களுக்குத் தெரியுமா ?

பாதுகாப்புப் பிரிவு எஸ்பியாகவே இருந்து இவர் எப்படி சம்பாதித்தார் என்று பல போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் புதிராகவே உள்ளது. இப்படித்தான் சம்பாதித்தார்.
தங்களின் நள்ளிரவு கைதில் இவர் வகித்த பங்கு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ?

உங்களின் பாதுகாப்பு அதிகாரியாக நான்கு ஆண்டுகள் இருந்த அனுபவத்தால் இவரிடம் தான், எந்த இடத்துக்கு எந்த போலீஸ் அதிகாரியை அனுப்ப வேண்டும் என்ற பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.

உங்களின் நள்ளிரவு கைதின் போது இவருக்கு ஒதுக்கப் பட்ட இடம், முர்ரேஸ் கேட் ரோடு முனை. ஆனால், அங்கே இவர் நிற்காமல், ஆபாஷ் குமாரை நிற்க வைத்து விட்டு மைலாப்பூர் காவல் நிலையத்தில் சென்று ஒளிந்து கொண்டார்.

பிறகு, அங்கே திமுகவினர் வரப் போகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததும், ஓமந்தூரார் மாளிகைக்கு சென்று விட்டார்.


இந்தப் புன்னகை என்ன விலை ? (ஒரு சதுர சென்டி மீட்டர் 10,000 ரூபா)



உங்கள் கைது பற்றி முன் கூட்டியே தகவலைச் சொன்னது தான்தான் என்று உங்களிடம் புளுகியிருப்பார். ஆனால் சரியான நபரிடம் விசாரியுங்கள், அந்தத் தகவலை உங்களிடம் சொன்னது ஜாபர் சேட் இல்லை. சவுக்கு அந்த நபரின் பெயரை வெளியிட விரும்பவில்லை.

நள்ளிரவுக் கைதுக்குப் பின் என்ன நடந்தது தெரியுமா ? ஜாபர் சேட்தான் அந்தத் தகவலை உங்களுக்கு முன் கூட்டியே சொல்லி விட்டார் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதாவு தகவல் கூறப்பட்டது.

உடனடியாக, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு டிஐஜியாக திருச்சிக்கு நியமிக்கப் பட்டார் ஜாபர் சேட்.

ஜாபர் சேட்டின் மனைவி பர்வீனும், உங்கள் நள்ளிரவு கைதின் நாயகன் முத்துக்கருப்பனின் மனைவி மல்லிகாவும் இணைந்தே ப்யூரிட்டா மினரெல் வாட்டர், பால் பண்ணை தொழில்களில் ஈடுபட்டு வந்தார்கள். அதனால் இவர்கள் இருவருக்கும் மிகுந்த நட்பு உண்டு.

உங்களை நள்ளிரவில் கைது செய்த பின், முத்துக் கருப்பன், ஒரு சக்கரவர்த்தியைப் போல இருந்தார் தெரியுமா ? இவர் வந்தால் மட்டும் செல்வி.ஜெயலலிதா உடனடியாக அப்பாயின்ட்மென்ட் கொடுப்பார்.

இந்த நெருக்கத்தை பயன்படுத்தி சென்னைக்கே மாறுதல் வாங்க வேண்டும் என்று விரும்பிய ஜாபர் சேட் நேராக முத்துக் கருப்பன் வீட்டுக்குச் சென்று அவரிடம் மன்றாடியிருக்கிறார். முத்துக் கருப்பனிடம், என்னுடைய மகள் சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறாள், அவள் நலன் கருதியாவது எப்படியாவது சென்னைக்கு மாறுதல் வேண்டும் என்று மன்றாடியிருக்கிறார்.

மிகவும் தயங்கிய முத்துக் கருப்பன், ஜாபர் சேட்டும் அவரது மனைவியும் கெஞ்சிய கெஞ்சலைப் பார்த்து மிகவும் தயங்கிய படியே முதல்வரிடம் பேசுவதற்கு சம்மதித்திருக்கிறார்.
முத்துக்கருப்பனின் இந்த சிபாரிசைப் கேட்டு மிகவும் கோபம் அடைந்த ஜெயலலிதா, முடியவே முடியாது என்று மறுத்திருக்கிறார்.

உங்களின் நள்ளிரவு கைதுத் தகவலை முன் கூட்டியே சொன்னது ஜாபர் சேட்தான் என்று தனக்கு உறுதியான தகவல் வந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். இதை மறுத்த முத்துக் கருப்பன், தகவலை வெளியிட்டதாக ஒரு அதிகாரியின் பெயரை கூறுகிறார். இதைக் கேட்டு சந்தேகம் தெளிந்த ஜெயலலிதா, பழைய மாறுதல் ஆணையை ரத்து செய்து விட்டு, ஜாபர் சேட்டை சென்னையில் ஆயுதப் படை டிஐஜியாக நியமித்தார் என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமா முதல்வரே ?

இப்படியொரு உதவியை முத்துக்கருப்பனிடம் பெற்றுக் கொண்ட ஜாபர் சேட், இன்று முத்துக் கருப்பன் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டாலும், முத்துக் கருப்பனை விட பணியில் இளைவர்களான 13 பேர் கூடுதல் டிஜிபிக்களாக ஆகி விட்ட நிலையில், இவரின் பதவி உயர்வு தொடர்பான கோப்பு கையெழுத்து ஆகாமல் நிறுத்தி வைத்திருப்பது ஜாபர் சேட்தான் என்பது உங்களுக்கு தெரியுமா முதல்வர் அவர்களே ?



முந்தைய ஆட்சியில் ஒரு துணை முதல்வரைப் போல செயல்பட்டு, இன்று வரை எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா உங்கள் அரசை மைனாரிட்டி அரசு என்று அழைப்பதற்கு காரணமான சிவனாண்டியையே மன்னித்து நல்ல பதவி கொடுத்து அழகு பார்க்கும் நீங்கள், முத்துக் கருப்பனுக்கு பதவி உயர்வு வழங்காததற்குக் காரணம், அவர் ஒரு தலித் என்பதால் என்று அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் பரவலான பேச்சு உங்களுக்குத் தெரியுமா முதல்வர் அவர்களே ?

தலித் வீட்டில் பெண் எடுக்கும் அளவுக்கு பெரிய மனது கொண்ட நீங்கள், இப்படி ஒரு அவப்பெயருக்கு ஆளாகலாமா ?

2007ம் ஆண்டு முதல் பல்வேறு வேலைகள் காரணமாக 50 தடவைகளுக்கும் மேல் விமானத்தில், முதல் வகுப்பில் டெல்லி வந்திருக்கிறார் ஜாபர் சேட்.

ஒவ்வொரு முறை பயணத்திற்கும், உளவுத் துறையின் ரகசிய நிதியிலிருந்து பணம் கொடுக்கப் பட்டதை தாங்கள் அறிந்திருந்தாலும், இந்தத் தொகை இது வரை மீண்டும் ரகசிய நிதிக்கு வரவு வைக்கப் படவில்லை என்பதை தாங்கள் அறிவீர்களா முதல்வரே ? ஒரு முறை முதல் வகுப்பில் டெல்லி செல்வதற்கு ஏறக்குறைய 20,000 ஆகும் தெரியுமா முதல்வர் அவர்களே ?




மாதந்தோறும் இவர் தனது வீட்டு செலவுக்காக ரகசிய நிதியிலிருந்து எடுக்கும் ஒரு லட்ச ரூபாயையும், அறையை புதுப்பிப்பதற்காக கடந்த ஆண்டு எடுத்த ஐந்து லட்ச ரூபாயையும், இந்த ஆண்டு செலவிட்ட ஐந்து லட்ச ரூபாயையும் இவருக்கு வவுச்சர் போட்டு வாங்கிக் கொடுப்பது உளவுத் துறையின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் ராஜ்குமார் என்ற டிஎஸ்பி என்பது தங்களுக்குத் தெரியுமா முதல்வரே ?

இந்த ராஜ்குமார், ஜாபர் சேட் அடிக்கும் கொள்ளையில் தானும் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா ?

முதலமைச்சராகிய நீங்கள் கையெழுத்து போட்டு ஒப்புதல் தராமலேயே, பல பொருட்களை ரகசிய நிதியிலிருந்து வாங்கியிருக்கிறார் ஜாபர் சேட் தெரியுமா முதல்வரே ?

சமீபத்தில் இவர் தனது அறையில் வாங்கிப் போட்டிருக்கும் மேசை மட்டும் ஒரு லட்ச ரூபாய். உளவு சேகரிப்பதற்காக ரகசிய நிதி கொடுத்தீர்களா அறையை சொகுசு படுத்துவதற்காகவா ?

ஒவ்வொரு முறை புதுதில்லி செல்லும் போதும், இவரை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல பெரும் செல்வந்தர்களின் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் வருகின்றன என்பதை அறிவீர்களா முதல்வரே ?



50 தடவைகளுக்கு மேல் புது தில்லி சென்றுள்ள ஜாபர் சேட், ஒரு முறை கூட நீங்களே தங்கும் தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது இல்லை. ஒவ்வொரு முறையும் நட்சத்திர ஓட்டலில்தான் தங்குவார் என்று கூறுகிறார்கள்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகிய நீங்களே தமிழ்நாடு இல்லத்தில் தங்குகையில், உங்களிடம் ஊதியம் பெறும் ஒரு சாதாரண காவல்துறை அதிகாரி ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கும் அளவுக்கு இவருக்கு செலவு செய்யும் நபர்கள், இவரிடம் என்னென்ன சலுகைகளை எதிர்ப்பார்ப்பார்கள் என்பது நீங்கள் அறியாதது அல்ல.

இந்த சலுகைகளைப் பெறுவதற்காக இவர் உங்களைப் பற்றியே உளவு சொல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம் ?

இவர் மனைவி பெயரில் திருவான்மியூரில் கட்டி வரும் நான்கடுக்கு மாளிகையைப் பற்றித் தாங்கள் அறிந்திருப்பீர்கள். ஏனென்றால் இது தாங்கள் வழங்கியது தானே ? ஆனால், ஈஞ்சம் பாக்கத்தில் இவர் 2.5 கிரவுண்ட் இடத்தை ஜெய்சங்கர் என்ற பினாமி பெயரில் வாங்கியதை தாங்கள் அறிவீர்களா ?

இந்த இடத்தை இவர் சென்னை தேவி தியேட்டர் அருகில், பால்ஸ் என்ற காபரே நடனம் நடத்தும் நபரிடம் இருந்து வாங்கியிருக்கிறார் என்பது உங்களுக்கு உபரித் தகவல்.

இது தவிர பழைய மகாபலிபுரம் சாலையில் க்ளாசிக் ஃபார்ம்ஸ் என்ற இடத்தில் மேலும் 2.5 க்ரவுண்ட் இடத்தை பினாமி பெயரில் வாங்கியிருக்கிறார் என்பதாவது தெரியுமா உங்களுக்கு ?
உங்கள் பார்வையில் இவரை நல்ல அதிகாரி என்று வைத்துக் கொண்டால் கூட, இவருக்கு இட்ட வேலை எதையாவது ஒழுங்காகச் செய்திருக்கிறாரா இது வரை ?

ஏற்கனவே உளவுத் துறைக்கு சிதம்பரசாமி என்ற ஒரு அதிகாரி இருக்கையில் இவரை தாங்கள் நியமித்ததே வைகுண்டராஜனை கைது செய்வதற்காகத் தானே ? செய்தாரா இது வரை ? கைது செய்யாமல் இருப்பதற்காக வைகுண்டராஜனிடம் ஒரு பெரும் தொகையை பெற்றுக் கொண்டு, உங்களிடம் சாக்கும் போக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட அதிகாரியை நீங்கள் எப்படி இன்னும் நம்புகிறீர்கள் ?


உங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இருக்கும் இவரை எப்படி நீங்கள் இந்தப் பதவியில் வைத்திருக்கிறீர்கள் ? உமாசங்கர் ஐஏஎஸை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று இவர் செய்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டீர்களே ?


தேர்தல் நடக்க இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவாகவே உள்ள சூழ்நிலையில், தேவேந்திரக் குல வேளாளர் என்று அழைத்துக் கொள்ளும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த உமாசங்கரை இடைநீக்கம் செய்து எதற்காக இப்படி அந்நியப் படுத்தினீர்கள் ? இது ஒரு சரியான அரசியல் முடிவுதானா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

தினமும் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உமாசங்கர் பணி இடைநீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்று வருவதை தாங்கள் அறிவீர்களா ? உமாசங்கருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியதற்காக ஒரு ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தால் இந்தப் பிரச்சினையை மூடி விடலாம் என்று நினைக்கிறார் ஜாபர் சேட். ஆனால் தலித்துகள் அன்னியப் படுத்தப் படுவதாக உணர்ந்தால், அதற்கான விளைவுகள் தேர்தலில் எதிரொலிக்கும்.

இந்த தேர்தல் ஆண்டில் உமாசங்கரின் இடைநீக்கம் ஒரு சரியான நடவடிக்கைதானா முதல்வர் அவர்களே. இந்த நெருக்கடியான சூழலுக்கு யார் காரணம் ? உங்களுடன் இருக்கும் சகுனிதானே ?

சவுக்கு வாசகர்களுக்கும், உங்களுக்கும் இருக்கும் ஒரு ஐயம், இந்த ஜாபர் சேட்டின் மேல் சவுக்குக்கு அப்படி என்ன கோபம் ? தனிப்பட்ட கோபம் இருக்கிறதா என்பது.

ஜாபர் சேட்டை சவுக்கு பார்த்தது கூட கிடையாது. ஜாபர் சேட்டின் எதிரிகள் சவுக்கை தூண்டி விடுகிறார்கள் என்று கூட ஜாபர் சேட் உங்களிடம் தகவல் சொல்லக் கூடும். தனிப்பட்ட முறையில் எதிரியாக கருதும் அளவுக்கு ஜாபர் சேட்டுக்கும், சவுக்குக்கும் அவருடைய தொழில் பங்குதாரர்கள் போல எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்லை. ஆனால் ஜாபர் சேட் மீது கடும் கோபம், மாறாத ஆத்திரம் உண்டு. ஏன் தெரியுமா ?

அக்டோபர் 2008 முதல் ஈழத்தில் போர் உக்கிரமாக இருந்த போது, தமிழகம் வழியா இலங்கைக்கு உயிர் காக்கும் மருந்துகள் கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன என்பதை தாங்கள் அறிவீர்களா என்பது சவுக்குக்கு தெரியாது. இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ஏராளமான மருந்துகள் கடத்தப் பட்டன.

பேண்டேஜுகள், உயிர்காக்கும் மருந்துகள், சலைன்கள், இதயத்தை இயங்க வைக்கக் கூடிய ஸ்டீராய்டுகள் போன்றவையே அவை.

நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக தங்கள் உடலை வருத்தி, அனைத்துக் கட்சிக் கூட்டங்களும், கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்டமும், தள்ளாத வயதில் உண்ணாத விரதமும் நடத்திக் கொண்டிருக்கையில் உங்கள் ஜாபர் சேட் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ?

இது போல மருந்து கடத்திச் செல்ல முயன்ற ஈழத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் இலங்கைக்கு சாட்டிலைட் போன்கள் கடத்த முயன்றார்கள், லேப்டாப்புகளை கடத்த முயன்றார்கள் என்று வழக்கு போட்டு சகட்டு மேனிக்கு உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்.

இந்திய இறையாண்மையை காக்கும் பொறுப்பு உங்களுக்கு, சோனியாவை விட அதிகம் உள்ளது என்றாலும், இந்த மருந்துகள் இலங்கையை சென்று அடைந்திருந்தால் சில ஆயிரம் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் தானே ?

சவுக்கு ஆயுதம் கடத்துபவர்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. மருந்து கடத்துபவர்களை, அது சட்ட விரோதமாக இருந்தாலும் சில ஆயிரம் உயிர்களை காக்க பயன்படுகிறது என்ற போது கண்டும் காணாமல் இருந்திருந்தால்தான் என்ன ?

புலிகள் இயக்கத்துக்கு பணமும், ஆயுதமும் பயிற்சியும் வழங்கியது இதே தமிழ்நாடு தானே ? உங்களை விட இந்திய இறையாண்மையில் நம்பிக்கை உள்ள, உங்களால் தியாகத் திருவிளக்கு என்று அன்போடு அழைக்கப் படும், சோனியாவின் மாமியார் செய்யாததையா நீங்கள் செய்து விடப் போகிறீர்கள் ?

வழக்கு போடுவதிலாவது நேர்மையாக இருந்தாரா ஜாபர் சேட். கைப்பற்றப் பட்டவை மருந்துகளாக இருந்தாலும், அவற்றையெல்லாம் கணக்கில் காட்டாமல், வெறும் சாட்டிலைட் போனை மட்டும் வைத்து வழக்கு போடப்பட்டது தெரியுமா ?


இது போன்று வழக்கு போட்டு தள்ளிய நேர்வுகளிள் ஒன்று இதயத்தை உறையச் செய்யக் கூடியது. புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் உழைத்துச் சேர்த்த பணத்தில் இறுதி யுத்தத்தின் போது வாங்கிக் கொடுத்து அனுப்பிய 250 ரத்த உறைகளை கொடுத்து அனுப்புகிறார்கள்.

இந்த 250 ரத்த உறைகளும், குண்டுக் காயம் பட்டு, குற்றுயிரும் குலையிருமாக ஈழத்து வீதிகளில் கிடக்கும் தமிழ் உயிர்களைக் காப்பதற்காக கொடுத்து அனுப்பப் பட்டவை. தமிழகம் வந்தால் பிடிபடும் அபாயம் உண்டு என்பதை அறிந்தும், ரத்த உறைகள் இந்த நெருக்கடியான நேரத்தில் அனுப்பப் படும் என்பதை நம்பி அனுப்பப் பட்டன.


ஜாபர் சேட் பொறுப்பாக உள்ள க்யூ பிரிவு காவல்துறையினர், இந்த 250 ரத்த உறைகள் எடுத்து வந்த நபரை இடைமறித்து, அவர் சாட்டிலைட் போனை ஈழத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றதாக கைது செய்து, ரத்த உறைகளை கணக்கில் காட்டாமல் குப்பையில் கொட்டி அழித்த செய்தியை தாங்கள் அறிவீர்களா ?

இந்த வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்த க்யூ பிரிவு காவலர் ஒருவர், மனசாட்சி கேட்காமல் ஜாபர்சேட்டை காது கூசும் கெட்ட வார்த்தைகளால் திட்டி விட்டு சொன்ன தகவல் இது.

இது மட்டும் அல்ல… … …. இந்த ரத்த உறைகளை எடுத்து வந்த நபரிடமிருந்து 60 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டதே, அது ஏன் வழக்கு ஆவணங்களில் பதிவு செய்யப் படவில்லை என்பதை உங்கள் ஜாபர் சேட்டிடம் கேளுங்கள் அய்யா … …. இந்த வழக்கு பற்றிய ஒரு தனிப் பதிவு விரைவில் வரும்.

அரசாங்கப் பணத்தை திருடுவது பத்தாது என்பதால், புலம் பெயர்ந்த தமிழர்களின் வியர்வையில் வந்த பணத்தையும் திருடி விட்டார் இந்த விஷக் கிருமி. இப்படியெல்லாம் திருடினால்தானே, திருவான்மியூரிலும், ஈஞ்சம்பாக்கத்திலும் வீட்டு மனைகள் வாங்க முடியும்.



நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பீர்கள். உங்கள் கீழ் பணியாற்றும் அதிகாரி ஈழத் தமிழர்களுக்கான ரத்த உறைகளை குப்பையில் கொட்டி அழிப்பார் ? என்ன கொடுமை அய்யா இது ? நம்மை தமிழர் என்று நாம் சொல்லிக் கொள்ளும் தகுதி இருக்கிறதா நமக்கு ?

இந்த ரத்த உறைகளை எடுத்து வந்து க்யூ பிரிவு காவல்துறையில் பிடிபட்ட நபர், இன்னும் தமிழக சிறைகளில்தான் இருக்கிறார். முதல்வராகிய தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து, இன்றே அந்த நபரை நேரடியாக சந்தித்து தாங்கள் விசாரித்து உண்மையை அறிய முடியும்.

இப்படிப்பட்ட நபரை நீங்கள் எப்படி இன்னும் நம்பி தமிழகத்தின் முக்கியப் பொறுப்பை கொடுத்து இருக்கிறீர்கள் அய்யா ? 1996 முதல் 2001ம் ஆண்டு வரை உளவுத் துறையில் பணியாற்றிய அதிகாரிகள், உளவுத் துறை சொல்லும் தகவல்களை, தாங்கள் கட்சிக் காரர்களை வைத்து தனியே விசாரித்து உளவுத் துறை அதிகாரிகள் சொல்லும் தகவல்களின் உண்மைத் தன்மையை சரி பார்ப்பீர்கள்.

உளவுத் துறை கொடுத்த தகவல்கள் சரியில்லாமல் இருந்தால், வறுத்து எடுத்து விடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.

அப்படிப் பட்ட நிர்வாகத் திறமை வாய்ந்த நீங்களா இந்த சகுனியை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் ?

இந்த ஊழல் பேர்விழி மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக புகார் மனு நேற்று அனுப்பப் பட்டது.

உள்துறைச் செயலருக்கும், தலைமைச் செயலருக்கும் மத்திய அரசுக்கும் அனுப்பப் பட்ட அந்த புகார் மனு, தங்கள் பார்வைக்கு வைக்கப் படுமா என்பது சவுக்குக்கு தெரியாது.



















அதனால், அந்த புகார் மனுக்கள் தங்கள் பார்வைக்காக இங்கேயே வழங்கப் படுகின்றன.
இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தை உயர்நீதிமன்றம் செல்லும் சூழலுக்கு தள்ள மாட்டீர்கள் என்றே சவுக்கு நம்புகிறது.

வாழ்த்துக்கள் அய்யா.

வணக்கம்.

சவுக்கு

Tuesday, May 18, 2010

வாருங்கள் ஞானதேசிகன்.


அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஞானதேசிகன் அவர்களே,
முதலில் உங்களுக்கு உள்துறை செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

உங்களுக்கு சவுக்கின் அன்பு வணக்கங்கள். நீங்கள் யாரென்று சவுக்குக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு ஐஏஎஸ் ஆபீசர் என்பது தெரியும். ஐஏஎஸ் ஆபீசர்கள் என்றால் சவுக்குக்கு பிடிக்காதே என்று தயவு செய்து நினைக்காதீர்கள். சவுக்குக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் என்ற எந்த பாகுபாடும் கிடையாது.


சவுக்குக்கு தெரிந்ததெல்லாம் மனிதர்கள் தான். மனிதர்கள் என்றால், அத்தனை மனிதர்களும். இன்று தமிழக அரசில் இருக்கும் சில அதிகாரிகள், திராவிட முன்னேற்றக் கழக மக்களை மட்டும், மனிதர்கள் என்று கருதுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம், மாக்கள் என்று கருதுகிறார்கள். ஆனால் சவுக்குக்கு, அனைவரும் மனிதர்களே.

உங்களை குறிப்பாக வரவேற்க சவுக்குக்கு, பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான காரணம், இது வரை உள் துறை செயலாளராக இருந்த மாலதி, ஐஏஎஸ் ஆபிசராக அல்ல, இது வரை ஒரு மனித ஜென்மமாக கூட செயல்பட்ட தில்லை என்பதே சவுக்கின் அனுபவம்.


மாலதி மட்டுமல்ல, தமிழகத்தில் பல்வேறு அதிகாரிகள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வட்டச் செயலாளர்கள் போலத்தான் இது வரை செயல்பட்டு வந்ததார்கள், இதற்கெல்லாம் காரணம், கருணாநிதியின் அடங்காத பிடிவாதம் என்று வறட்டுக் காரணம் கூறுவார்கள். ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், இந்திய மக்களுக்கும், அரசியல் சட்டத்திற்கும், கருணாநிதியை விட கடமைப் பட்டவர்கள் அல்லவா ? தமிழக மக்களும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், கருணாநிதியை விட பெரியவை அல்லவா ?

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால், அதிமுக தொண்டர் போல செயல்படுவதும், கருணாநிதி ஆட்சியில் இருந்தால், திமுக உடன் பிறப்பு போல செயல்படுவதும், அகில இந்தியப் பணி அதிகாளிகளுக்கு அழகல்ல. ஆனாலும், மாலதி உள்துறை செயலாளராக இருந்த காலம் வரையில், அவர் கழக உடன் பிறப்பாக மட்டும் அல்ல, கருணாநிதி குடும்பத்தின் ஒரு அங்கமாகவும், கருணாநிதியின் நம்பிக்கைக்கு பாத்திரமான, அடியாள் போலவுமே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

இவ்வாறான செயல்பாடுகள், மாலதிக்கு, தலைமைச் செயலாளர் பதவியையும், கருணாநிதியின் நம்பிக்கையையும் பெற்றுத் தந்திருக்கக் கூடும். ஆனால், இந்திய அரசியல் அமைப்பின் பாலும், இந்திய மக்களின் பாலும், உளமார்ந்த அன்போடும், நேர்மையோடும், பணியாற்றுவேன் என்ற உறுதியில் இருந்து மாலதி தவறி விட்டார் என்பதே உண்மை.

மாலதி போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் என்பதை மறந்து, அன்றைய ஆட்சியாளர்களின் ஏவல் பணியாளர்களாக மாறிப் போவது, இந்த ஜனநாயகத்தின் மிகப் பெரிய சாபக் கேடு.

ஆனால், இதையும் தாண்டி, ஏதாவது ஒரு வகையில் ஒரு நம்பிக்கை கீற்று, ஒரு நம்பிக்கை ஒளி, இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது வரலாறு நெடுக இருந்தே வந்திருக்கிறது.
கிறித்துவ மதத்தின் ஆதிக்கத்தில் உலகமே இருந்த போதும், உலகத்தை படைத்தது, ஏசு கிறிஸ்து என்ற பொய்யை உலகத்தை நம்ப வைக்க, தேவாலயங்களும், மிக பலம் வாய்ந்த பாதிரியார்களும் முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்ற போதும், உலகம் உருண்டை என்று ஒரு கலகக் குரல் ஒலிக்கத் தான் செய்தது. அந்தக் குரல் வரலாறு நெடுக ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். அதை யார் நினைத்தாலும், தடுக்க இயலாது. சர்வ வல்லமை பொருந்திய கருணாநிதி நினைத்தால் கூட.

அதைப் போல, மாலதி, உள் துறையின் செயலாளராக, கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து, எவ்வளவோ, நல்ல காரியங்களைச் செய்திருக்க முடியும். எத்தனையோ குடும்பங்களில் ஒளியேற்றி வைத்திருக்க முடியும். ஆனால், மாலதி செய்ததெல்லாம், கருணாநிதி என்ற கயவனின் கையாளாக, அடியாளாக, ஏவலாளாக, மனசாட்சி இல்லாத பதராக, கருணாநிதியை விட மிகவும் மோசமான ஒரு அரசியல்வாதியாகவே இத்தனை ஆண்டு காலம் செயல்பட்டு வந்தார்.

இப்போது உங்களை உள்துறை செயலாளரா நியமித்திருப்பதும், ஏதோ, நீங்கள் ஒரு திறமையான ஐஏஎஸ் ஆபீசர் என்பதால் அல்ல. நீங்கள் மாலதியை விட, மிகுந்த விசுவாசமான ஒரு ஏவலாளாக கருணாநிதிக்கு வேலை செய்வீர்கள் என்று, யாரோ, உங்கள் சார்பாக கருணாநிதிக்கு சொல்லியிருப்பதால் தான். ஆனாலும், உள் துறை செயலாளர் என்ற இந்த பதவி மிகுந்த முக்கியமான பதவி.

இப்பதவியை நல்ல முறையில் பயன் படுத்தி, உண்மையில் உங்களுக்கு தங்கள் வரிப் பணத்தில் இருந்து ஊதியம் வழங்கம் அந்த மக்களுக்கு விசுவாசமாக செயல்படலாம். இல்லை, ஊரை அடித்து உலையில் போட்டு, தன் குடும்பத்தை மட்டுமே நேசிக்கும் கருணாநிதிக்கு விசுவாசமாகவும் செயல்படலாம்.

இதில் எப்படிப் பட்ட உள்துறை செயலாளராக நீங்கள் வரலாற்றில் பதிவு செய்யப் படுவீர்கள் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ஞானதேசிகன். உங்கள் மீது சவுக்கு மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. வீணாக்கி விடாதீர்கள். குறிப்பாக, உளவுத் துறையில் இருக்கும் ஜாபர் சேட்டை நம்பாதீர்கள். அவர் உங்களை மிரட்டக் கூடும். உங்கள் தொலைபேசியை ஒட்டுக் கேட்கக் கூடும். உங்களுக்கு ஏதேனும் பலவீனம் இருந்தால், அதை பயன்படுத்தி, உங்களை EXPLOIT செய்யக் கூடும்.

அதற்கெல்லாம் இடம் கொடுக்காதீர்கள் ஞானதேசிகன். ஜாபர் சேட், ஒரு, நயவஞ்சக நரி என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை நம்ப வைத்துக் கழுத்தறுக்கக் கூடும்.

உங்கள் பணி சிறக்க சவுக்கின் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏழை மக்களுக்கும், உழைப்பாளி மக்களுக்கும், குறிப்பாக, மக்களுக்காக பணியாற்றுங்கள். வாழ்த்துக்கள்.




சவுக்கு