Flash News

Showing posts with label செம்மொழி மாநாடு சவுக்கு. Show all posts
Showing posts with label செம்மொழி மாநாடு சவுக்கு. Show all posts

Sunday, June 27, 2010

ஏழைப் பங்காளர் டி.சுதர்சனம்.



நேற்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், காங்கிரஸில் முக்கியப் புள்ளியுமான திரு.டி.சுதர்சனம் அவர்கள், கோவையில் மாரடைப்பால் காலமானார் என்று செய்தி வந்துள்ளது.

பொதுவாக இறந்தவர்களை விமர்சனம் செய்யக் கூடாது என்ற ஒரு கிறுக்குத்தனமான அரசியல் மரபு இந்தியாவில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்“

என்றுதானே கண்ணதாசன் சொல்லியிருக்கிறார் ?

ராஜீவ் காந்தி இறந்தவுடன், அவர் புனிதராகி விடுகிறார். போபர்ஸ் ஊழல், 4000 சீக்கியர்கள் வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட போது, ஆலமரத்தின் கீழே விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும் என்ற ஆணவம், 20,000 பேரின் உயிர் போகக் காரணமாக இருந்த வாரன் ஆண்டர்சனை தப்ப விட்டது, ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டது, அதற்கு, ராணுவம் ஒரு இடத்திற்கு சென்றால் “அப்படி இப்படித்தான்“ இருக்கும் என்ற வியாக்கியானம் வேறு, இப்படி ராஜீவ் காந்தியைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் ராஜீவ் இறந்து போனவுடன் அவர் புனிதராகிறார். அவர் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப் படுகிறது. அவர் அந்த வேலையை நிராகரித்து, வேறொருவரை நியமிக்கிறார். இந்த கேலிக்கூத்துக்கள், இந்தியாவுக்கே பிரத்யேகமானவை.


இப்பொழுது இறந்துள்ள டி.சுதர்சனத்தைப் பற்றி பேசுகையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் “மக்களுக்காகவே உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து போன எம்.எல்.ஏக்கள்“ அனைவரும் ஏழைகளாக இருப்பதால் அவர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை முன்னெடுத்தது, இருப்பதிலேயே மிகவும் ஏழைக் கட்சியான காங்கிரஸ்தான்.

காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன்தான் இந்த கோரிக்கையை வைக்கிறார்.


நவீன கர்ணணும், வாரி வழங்கும் வள்ளலுமான கருணாநிதி, “ஊரான் வீட்டு நெய்யே… என் பொண்டாட்டி கையே“ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சென்னை மகாபலிபுரம் அருகே 2400 சதுர அடி வீட்டு மனை என்று அறிவிக்கிறார்.


கொஞ்சூன்டு மான ரோஷத்தோடு இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் இதை எதிர்த்தனர். குறிப்பாக எம்எல்ஏ பாலபாரதி, மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக அவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறோம், இங்கு வந்து எங்களுக்கு வீட்டு மனை ஒதுக்குங்கள் என்று கேட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.




உடனடியாக பேச எழுந்த டி.சுதர்சனம் என்ன சொன்னார் தெரியுமா ? “விருப்பம் இல்லாவிட்டால் இடது சாரிகள் வெளியேறலாம். அவர்கள் வீட்டு மனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்தவில்லை“ என்று கூறினார்.

இவ்வாறு, வெள்ள நிவாரணம் பெற வரிசையில் நிற்கும் கூட்டம் போல முண்டியடித்துக் கொண்டு பேசிய டி.சுதர்சனத்தின், சொத்துக்களின் விபரம் என்ன தெரியுமா ?


இந்த விபரங்கள் மே 2006 அன்று உள்ளபடி. இப்போது இதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும். மேலும், இந்த சொத்தக் கணக்கு “வெள்ளை“. கருப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.


1. ரொக்கம் கையிருப்பு
38,966

15,83,627

3, வங்கியில் பாண்டுகள்,
37,200
டிபென்சர்கள்
4. கார் உள்ளிட்ட வாகனங்கள்
12,00,000

5. நகைகள்
11,66,000

6. செம்பரம்பாக்கம் விளை நிலம்
10,00,000

2 ஏக்கர்
7. புதுப்பாக்கம் கிராமம்
6,00,000
1.51 ஏக்கர்
8. பொன்னேரி இருளிப்பட்டி
6,00,000

11.51 ஏக்கர்.
9. விலை நிலம் 42.51 ஏக்கர்
10. பண்ருட்டி 2.507 மற்றும் 3.170 ஏக்கர்
9,00,000

11. மணப்பாக்கம் கிராமம் 8.843 ஏக்கர்
5,00,000

12. நொலம்பூர் கிராமம் 1.753 ஏக்கர்
50,00,000

13. அண்ணாநகரில் வணிக வளாகம்
1,50,00,000

4250 சதுர அடி
14. ஷெனாய் நகர் வீடு 3950 ச.அடி
51,00,000

15. ஷெனாய் நகர் வீடு 2800 ச.அடி
25,00,000


மொத்தம்
3,64,74,814



ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நண்பர்களிடம் விசாரித்ததில், மேற்கூறிய மதிப்புகள் பத்தில் ஒரு பங்குதான். அசல் சந்தை மதிப்பு இதை விட பல மடங்கு கூடுதல் என்று கூறுகின்றனர். குறிப்பாக மணப்பாக்கத்தில் எல்லாம் ஒரு ஏக்கர் ஒரு கோடி என்று கூறுகின்றனர்.

சுதர்சனத்தின் மரணம் கூட, சர்ச்சைகளில்லாமல் இல்லை. சுதர்சனம் காங்கிரசில் ஜி.கே.வாசன் கோஷ்டி. 24 அன்று காலை, செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அப்போது அவரை வரவேற்பதற்காக ஜி.கே.வாசன் குழுவைச் சேர்ந்த மாநில இளைஞர் அணித் தலைவர் வி.யுவராஜும், எம்.எல்.ஏ கோவைத் தங்கமும் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென்று வாசன் வந்து விட, வரிசையில் முன்னால் நின்று கொண்டிருந்த யுவராஜை பின்னுக்குத் தள்ளி விட்டு கோவைத் தங்கம் முந்திக் கொண்டு சென்று சால்வை போர்த்துகிறார்.

இதைக் கண்டு கடும் கோபம் அடைந்த யுவராஜ், அவரை முறைக்கிறார். ஆனால் வாசன் அங்கே இருந்ததால், அமைதியாக இருந்தவர்களுக்குள், வாசன் சென்றவுடன் மோதல் தொடங்கி அது தள்ளுமுள்ளில் சென்று முடிகிறது. அருகில் இருந்த சுதர்சனம், பெரிய மனிதர் அல்லவா ? எப்படி அமைதியாக இருக்க முடியும் ? அதனால் இவர்கள் இருவருக்கிடையில் நுழைந்து சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.

அப்போது மோதிக் கொண்ட கோஷ்டிகள் விட்ட “குத்து“ ஒன்று சுதர்சனம் நெஞ்சில் விழுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்தான் சுதர்சனத்திற்கு, வயிற்றின் கீழே அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. இந்த குத்தை வாங்கிய சுதர்சனம், அன்று மாலையே ரத்த வாந்தி எடுக்கிறார்.

உடல்நிலை மிகவும் மோசமாக, உடனடியாக கோவையில் உள்ள கல்பனா மருத்தவமனையில் அனுமதிக்கப் படுகிறார். மறுநாள் 25 காலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் படுகிறார். 25 காலையிலேயே, சுதர்சனத்தின் உயிர் பிரிந்து விட்டது என்று கூறுகிறார்கள்.

சுதர்சனத்தின் உயிர் பிரிந்தாலும், செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் அமங்கலமான இந்தச் செய்தி வெளியானால், மாநாட்டின் சிறப்பு கெட்டு விடுமல்லவா ? இதனால், இறந்த செய்தியை வெளியே சொல்லாமல் His condition is critical and he is under intensive treatment என்ற “அல்வாவை“ எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இறந்த பிறகும், வெளியில் தகவல் சொல்லாமல் இரண்டு நாட்கள் தள்ளிப் போடச் சொல்லி, அவர் குடும்பத்தை ஒத்துக் கொள்ளச் செய்தவர், ஆற்காடு வீராசாமி என்று சுதர்சனம் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதர்சனத்தின் குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடியினால்தான், நேற்று இரவு அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப் பட்டது.

சுதர்சனத்தின் சொத்துப் பட்டியலை பார்த்தீர்கள். இவ்வளவு சொத்துக்களை வைத்துக் கொண்டு, அரசு தரும் ஒரு க்ரவுண்ட் நிலத்துக்கு அலையும் டி.சுதர்சனம், இப்போது அவரோடு என்ன கொண்டு செல்லுகிறார் ?

“காதற்ற ஊசியும் வாராது கண் கடை வழிக்கே“ என்ற சித்தரின் பாடலை படித்திருக்க மாட்டாரோ ?



சவுக்கு

Saturday, June 19, 2010

எங்கள் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும்….




மதுரையில் 10வது நாளாக உண்ணாவிரதம் இருந்த பகத்சிங், நடராஜன், ராஜேந்திரன், பாரதி, எழிலரசன் மற்றும் ராஜு ஆகியோரை எப்போதுமே வழக்கறிஞர்களை காவல்துறையினரை வைத்து ஒடுக்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதியின் காவல்துறை நேற்று இரவு, ஒரு பெரும் படையோடு எஸ்.பி.மனோகரன் தலைமையில் கைது செய்திருக்கிறது.

சொந்த மகன் பாராளுமன்றத்தில் தமிழ் பேச முடியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை. ஆனால் தமிழுக்கு செம்மொழி மாநாடாம்… இந்த வெட்கங்கெட்டவர்களை என்னவென்று சொல்வது. இதில் ஒரு வாரம் இருமுறை பத்திரிக்கை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பிதழ் செவ்வாயன்றே கடைகளில் கிடைக்கும், அதே விலைக்கு இரண்டு புத்தகங்கள் என்று விளம்பரம் வேறு செய்கிறது என்றால் இந்த வெட்கங்கெட்டவர்களின் கூட்டணி எவ்வளவு விரிவானது என்று பாருங்கள்.





இந்த லட்சணத்தில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பாம். சிறப்பு தற்செயல் விடுப்பு என்றால் என்ன தெரியுமா ? ஐந்து நாட்கள் விடுமுறை என்பதற்கு மறு பெயர். வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் பெண்கள் மட்டும் தாமதமாக வரலாம் என்று ஜெயலலிதா அரசாங்கம் வெளியிட்ட ஒரு முட்டாள்த்தனமான அரசாணையை இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த அனுமதி எதற்கென்றால், பெண்கள் வெள்ளிக்கிழமை தான் தலைக்கு குளிப்பார்களாம். இதன் காரணமாக உரிய நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர முடியாது என்பதால் ஒரு மணி நேரம் தாமதமாக வரலாம் என்ற இந்த ஆணையை பயன்படுத்திக் கொண்டு, 10 மணி அலுவலகத்திற்கு 12 மணிக்கு வரும் பெண் அரசு ஊழியர்களை எனக்குத் தெரியும். இப்படிப் பட்ட அரசு ஊழியர்களுக்கு, 5 நாள் சிறப்புத் தற்செயல் விடுப்பு அளித்தால் அரசு நிர்வாகம் முடங்கிப் போய் விடாதா ?

அப்படி அரசு நிர்வாகத்தையே முடக்கி விட்டு இப்படிப் பட்ட ஒரு செம்மொழி மாநாடு தேவையா ?


தான் முதுகு சொறிந்து கொள்வதற்கும் இது வரை கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாக்களின் தொகுப்பாக நடைபெறப் போகும், செம்மொழி மாநாட்டுக்க நமது வரிப்பணம் 400 கோடி…..

இதர நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட உரிமை உண்டு. இதற்கான சட்டம் 1956ல் வந்தது. இதன் காரணமாக, மாவட்ட நீதிமன்றங்களிலும் மற்ற நீதிமன்றங்களிலும், கிராமத்துப் பின்னணியில் இருந்து வரும் வழக்கறிஞர்கள், எளிமையாக தமிழிலேயே வாதாடி வருகின்றனர்.


ஆனால், இந்தியாவில், எல்லா கீழமை நீதிமன்றங்களிலும் நியாயம் கிடைத்து விடுகிறதா என்ன ? உயர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்கிறதல்லவா ? இங்கேதான் வருகிறது சிக்கல். கிராமங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற நீதிபதி ஆவது கனவில் கூட நடக்காதே … சென்னை உயர்நீதிமன்றத்தில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக் கொண்டு, நீதிபதிகளின் பின்னே காவடி தூக்கும் வழக்கறிஞர்கள் தானே உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகிறார்கள்.



மதுரையிலோ, தேனியிலோ தமிழில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆக முடியுமா ? அவ்வாறு முடியாத பட்சத்தில் நீதிபதிகளாக வந்து அமர்பவர்கள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பிரபு வம்சத்தினர் தானே ? அவர்கள் எப்படி தமிழில் வாதாடுவதை விரும்புவார்கள் ? இதனால்தான், 1956ல் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப் பட்டாலும் இன்று வரை உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை.

மொழியினால் ஆட்சிக்கு வந்த திமுக, உயர் நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது. தமிழ் மொழியினால் ஆட்சிக்கு வந்த திமுக தமிழ் மொழிக்காக பட்டினிப் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களை காவல்துறையை வைத்து கைது செய்வது எப்படிப் பட்ட காலத்தின் கோலம் ?

காமராஜர் கொண்டு வந்த மொழிச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு கூட கருணாநிதிக்கு வலிக்கிறதென்றால், தமிழின் பெயரால் ஆட்சி நடத்திக் கொண்டு தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதி, ஆன்மீகத்தின் பேரால் மோசடி செய்த சுவாமி நித்யானந்தாவை போன்றவர் தானே ? நித்யானந்தாவுக்கு ஆன்மீகம் கருணாநிதிக்கு தமிழ்.
வழக்கறிஞர்கள் கேட்பது நியாயம் தானே ?

சட்ட மேலவையை ஒரு வாரத்தில் கொண்டு வர முடிந்த கருணாநிதியால், உயர்நீதிமன்றத்தில் தமிழை கொண்டு வர முடியாதா ? மத்திய அரசில் முக்கிய கூட்டணித் தலைவராக இருக்கும் கருணாநிதி உண்மையில் தமிழை நேசிப்பவராக இருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமா இல்லையா ?





கருணாநிதியின் நடவடிக்கைகளை பாருங்கள். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் படுகொலை என்றால் கடிதம். ஈழத் தமிழரை காப்பாற்ற வேண்டுமென்றால் கடிதம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழி என்றால் கடிதம். பெட்ரோல் விலையை கூட்டக் கூடாது என்றால் கடிதம். இதற்கெல்லாம் கடிதம்.

தன்னுடைய மகனுக்கும், மகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் மந்திரி பதவி வேண்டுமென்றால் மட்டும் தள்ளுவண்டியில் டெல்லி செல்வாராம். எப்படி இருக்கிறது முத்தமிழ் அறிஞரின் தமிழ் உணர்வு ?


இந்தக் கருணாநிதியை நம்பினால் எந்த முன்னேற்றமும் நடக்காது என்பதை நன்கு உணர்ந்த மதுரை வழக்கறிஞர்கள், கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல் பட்டினிப் போரட்டம் நடத்திய வழக்கறிஞர்களிடம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளைப் பதிவாளர், மதுரைக் கிளையின் பெயர்ப் பலகை மூன்று நாட்களில் மாற்றப் படும் என்று உத்தரவாதம் அளித்தனர். ஆனால் இன்று வரை பெயர்ப்பலகை கூட மாற்றப் படவில்லை என்றால், அந்த வழக்கறிஞர்களுக்கு போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு என்ன வழி ?


பகத்சிங். மதுரையில் பட்டினிப் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களை தலைமையேற்று நடத்தி இன்று கைதாகி இருப்பவர். கொள்கை பிடிப்பானவர். கொண்ட நோக்கத்தில் உறுதியானவர். போராட்டத்தையே தன் வாழ்க்கை பாதையாக எடுத்துக் கொண்டவர். சமூகத்தின் பல்வேறு சீரழிவுகளை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்து நிவாரணம் பெற்றுத் தந்தவர். தமிழ் மற்றம் தமிழகத்தின் உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்திலும் முன்நிற்பவர். மேலவளவு கொலை வழக்கில் பாதிக்கப் பட்ட தலித் மக்களுக்கு நியாயம் கிடைப்பதில் பெரும் பங்கு வகித்தவர்.





பத்து நாட்களாக தண்ணீரை மட்டுமே அருந்தி போராட்டம் நடத்தியவரை நேற்று இரவு கருணாநிதியின் காவல்துறை வலுக்கட்டாயமாக ஆம்புலன்சில் ஏற்றி கைது செய்தது. கைதாவதற்கு முன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பகத் சிங் சொன்னது என்ன தெரியுமா ?

“எங்களது இந்த போராட்டம் சிறையிலும் தொடரும். எங்கள் இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போரட்டம் தொடரும். வழக்கறிஞர் சமூகம் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கருணாநிதியின் இந்த அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம். தமிழ் மொழிக்காக எங்களது உயிரைக் கொடுப்பதில் எங்களுக்கு இன்பமே.

உயர்நீதிமன்றத்தில் இல்லாத தமிழுக்கு எதற்கு மாநாடு ? எங்களின் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும். வலுக்கட்டாயமாக எங்களுக்கு உணவு கொடுக்க முயற்சித்தால், அதை எதிர்ப்போம். இதிலிருந்து அணுவளவும் பின் வாங்க மாட்டோம்” என்று சிங்கம் போல கர்ஜித்தார்.

இப்படி ஒரு உறுதியோடு, உயிரையும் இழக்கத் தயாராக ஒரு கூட்டம் இருக்கையில் கருணாநிதியும் அவர் காவல்துறையும் என்னதான் செய்து விட முடியும் ?

என் அன்பான சவுக்கு வாசகர்களே…. புலம் பெயர்ந்த தமிழர்களே…. முதன் முதலாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.




இந்தப் பதிவை உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் அனுப்புங்கள். குறிப்பாக செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளும் அறிஞர்களுக்கு அனுப்புங்கள். அல்லக்கைகளுக்கு அனுப்பாதீர்கள். அவர்கள், கருணாநிதி தலையிலிருந்து ஒரு மயிர் உதிர்ந்து விழுந்து, மயிர் இழந்த கவரிமான் என்று கருணாநிதிக்கு ஒரு பாராட்டு விழா நடந்தால் கூட முண்டியடித்துக் கொண்டு முன் வரிசையில் உட்காருவார்கள்.


ஆகையால், தமிழ் உணர்வாளர்களுக்கும் மனசாட்சி உள்ளவர்களுக்கும் இதை அனுப்புங்கள். செம்மொழி மாநாடு என்னும் கருணாநிதியின் பாராட்டுக் கூட்டங்களின் தொகுப்பு விழாவை, புறக்கணியுங்கள். இதுதான் நீங்கள் தமிழுக்கு செய்யும் மகத்தான சேவை. இந்த வேண்டுகோளை நீங்கள் நிராகரிக்காமல் செய்து முடிப்பீர்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. சவுக்கு வாசகர்களல்லவா நீங்கள் ?


Sunday, June 13, 2010

சவுக்கின் செம்மொழி விருதுகள்.


செம்மொழி மாநாட்டுக்காக கருணாநிதி குடும்பத்தை விட, அரசு இயந்திரமும், பரந்து பட்ட சமூகமும் கொடுத்திருக்கக் கூடிய உழைப்பு மெய் சிலிர்க்கச் செய்கிறது.

அரசு அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும், தமிழறிஞர்களும், காட்டும் ஆர்வமும், உணர்வும் பிரமிப்பூட்டுகின்றன.


இவர்களின் இந்த உழைப்பு இந்த கருணாநிதி குடும்ப மாநாட்டில் சரி வர கவுரவிக்கப் படாமல் போகப் போகிறதே என்ற அச்சமும் கவலையும் சவுக்குக்கு உண்டு.

அதனால், இந்தச் செம்மொழி மாநாட்டை ஒட்டி உழைத்தவர்கள், ஓடாகத் தேய்ந்தவர்கள் அனைவருக்கும் “செம்மொழி சொம்பு“ என்ற விருதை சவுக்கு வழங்குகிறது.



இந்த விருதுக்கு திமுகவைச் சேர்ந்தவர்களோ, கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, தகுதி பெற மாட்டார்கள். இந்த விருதுக்காக பரிந்துரைப்பவர்களின் பட்டியல் மட்டும் இப்போது வெளியிடப் படுகிறது.

இந்த விருதைப் பெறப்போகிறவர்கள் யார் என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.


சவுக்கின் வாசகர்கள் மேல் சவுக்குக்கு எப்போதுமே தீராத காதலும் நம்பிக்கையும் உண்டு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் விருதுக்கான முதல் மூன்று இடங்களை வாசகர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

ரகசியமாக சவுக்கின் ஐபி அட்ரஸை கண்காணிக்கும் உளவுத் துறையினருக்கு இதில் வாக்களிக்கும் உரிமை இல்லை.

முதல் பரிந்துரை




மாவீரன் ராஜபக்ஷே. இவர் ஏன் முதல் பரிந்துரையாக வருகிறார் என்றால் ஒரு ஆண்டுக்கு முன்பே சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன், தமிழர்களை ஒடுக்கி, கொன்று கருணாநிதியின் மனதை குளிரச் செய்ததால்.

இப்போது, இலங்கையில் போர் உக்கிரமாக நடப்பதாக நினைத்துப் பாருங்களேன். செம்மொழி மாநாடு நடத்தாமல் இந்நேரம் கருணாநிதி கடிதம் எழுதிக் கொண்டிருக்க வேண்டும், காஞ்சி ஜெயேந்திரரைப் போல, கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி நடத்துபவர்களை ஆசிர்வதிக்க வேண்டும், இரண்டு மணி நேரம் உண்ணா விரதம் இருக்க வேண்டும், ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும் என்று அறிக்கை வெளியிட வேண்டும்.

இந்த வேலைகளேல்லாம் இல்லாமல் கச்சிதமாக ஒரு வருடத்திற்கு முன்பே காரியத்தை முடித்ததால், இவர்தான் முதல் பரிந்துரை.

இரண்டாவது பரிந்துரை




தினமணி ஆசிரியர் வைத்தியநாதன். தனது தேர்ந்த எழுத்துக்கும், வளையான நேர்மைக்கும் சொந்தக் காரர் தான் இந்த வைத்தியநாதன்.

தினமணியின் கேப்ஷனாக நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்று போட்டிருக்கிறதே, அது இவருக்கு நன்றாகவே பொருந்தும்.

அப்படிப் பட்டவர் கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இவரின் தலையங்கங்களைப் படித்து கருணாநிதி இவரை திட்டாத கெட்ட வார்த்தைகளே இல்லை.

ஆனால், இவ்வாறு கருணாநிதி இவரைத் திட்டினார் என்று சொல்லும் போது, அதற்கான பதிலாக ஒரு புன்னகையை மட்டுமே உதிர்ப்பார்.

பத்திரிக்கை தர்மம் என்றால் என்ன என்பதை உணர்ந்து சுவாசித்து வாழ்ந்து வருபவர்.

இப்படிப்பட்ட வைத்தியநாதன், ஒரு ஆறு மாதத்திற்கு முன்னால் இருந்து அந்தர் பல்டி அடிக்கத் தொடங்கினார். தினமணியின் ஒரு தலையங்கத்தின் தலைப்பு “முதல்வர் மனது வைத்தால்“ என்று மேலவை அமையுங்கள் என்று மன்றாடுகிறார்.

மேலவை அறிவிப்பு வெளியானவுடன், முதல்வருக்கு நன்றி தெரிவித்து அடுத்த தலையங்கம். செம்மொழி மாநாடு அறிவிப்பு வெளியானவுடன், மாநாட்டில் இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்ற கெஞ்சல் தலையங்கங்கள்.

மறுநாளே கருணாநிதி இதை ஏற்று அறிவிப்பு வெளியிட்டவுடன், அதற்கு நன்றி தெரிவித்து அடுத்த தலையங்கம். கருணாநிதியை நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறார்ப் போல கேள்வி கேட்டு கட்டுரை எழுதும் சிறந்த கட்டுரை ஆசிரியர் பழ.கருப்பையாவின் கட்டுரைகள், 10 நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் வரும்.

ஆனால், வைத்தியநாதனின் அந்தர் பல்டிக்கு பின்னால், பழ.கருப்பையா காணாமல் போய் விட்டார். வாசகர்களின் தொடர்ந்த தொந்தரவினால், சமீபத்தில் ஒன்றிரண்டு கட்டுரைகள் வந்தன.

இது மட்டுமல்லாமல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு கவுன்ட் டவுன் போடுவது போல செம்மொழி மாநாட்டுக்கு இன்னும் 80 நாட்கள், 70 நாட்கள் என்று ஒரு தனி பத்தி. இதனால் அந்தர் பல்ட்டி அடித்த வைத்தியனாதன் இரண்டாவது பரிந்துரை.

மூன்றாவது பரிந்துரை




இந்தியன் எக்ஸ்பிரஸ் மெட்ரோ எடிட்டர் பாபு ஜெயக்குமார். ஆங்கிலப் பத்திரிக்கையின் மெட்ரோ எடிட்டராக இருந்தாலும், பாபு ஜெயக்குமாருக்கு இந்தச் செம்மொழி மாநாட்டில் இருக்கும் ஆர்வம் யாராலும் குறைத்து மதிப்பிட முடியாதது.

தமிழ்நாடு அரசியலில் தன்னை நிபுணராக நினைத்துக் கொள்ளும் பாபு ஜெயக்குமார் அரசுக்கோ, அரசு அதிகாரிகளுக்கோ எதிரான செய்திகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் வெளியானால், கருணாநிதி மனது நோகும் என்று அத்தனை செய்திகளையும் வெளியிடாமல் தடுப்பவர்.

கருணாநிதி பிறந்த நாளுக்கு, மூன்று பக்கங்களை ஒதுக்கி கருணாநிதியின் புகழ் பாடுபவர்.

செம்மொழி மாநாடு என்று சொல்லிக் கொண்டே யாராவது சிறுநீர் கழித்தால் கூட “செம்மொழி சிறுநீர்“ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து, எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் பிரதானமாக வெளியிடுபவர்.

அதனால் இவர்தான் இவ்விருதுக்கான மூன்றாவது பரிந்துரை.


நான்காவது பரிந்துரை




தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி. இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருப்பதே செம்மொழி மாநாட்டை நடத்துவதற்காகத் தான் என்பது போல இருக்கிறது இவர் செயல்பாடு.

இதற்காகத் தானே இவருக்கு பணி நீட்டிப்பு வேறு வழங்கப் பட்டிருக்கிறது. இவர் அலுவல் ரீதியான பணிகளை பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை விட, கருணாநிதியின் குடும்ப நிகழ்ச்சியான செம்மொழி மாநாட்டு வேலைகளில் காட்டும் ஆர்வம் மிக மிக அதிகம்.

பெயர் என்னவோ ஸ்ரீபதி என்று இருந்தாலும், செம்மொழி மாநாட்டில் காட்டும் ஆர்வத்தை கணக்கில் கொள்ளும் போது, இவர் ஒரு தமிழாய்ந்த அறிஞர் என்றே அறியப் படுகிறார். எப்பொழுது பார்த்தாலும் ஒரு முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு, கருணாநிதியின் பின்னாலேயே அலையும் இவர்தான் செம்மொழி சொம்புக்கான நான்காவது பரிந்துரை.


ஐந்தாவது பரிந்துரை




ராதாகிருஷ்ண நாயுடு. இவர் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி. ஆனால் இவர் செம்மொழி மாநாட்டிற்கு ஆற்றிய பணிகள் மற்றவர்கள் அனைவரையும் விட அளப்பற்கரியது.

செங்கல்பட்டில் ஆ…. ஊன்னா உண்ணாவிரதம் இருக்கும், ஈழ அகதிகளை போலீசை விட்டு தடியடி நடத்தி ஒடுக்கிய லாவகம் என்ன, ஈழத் தமிழர்களுக்காக போராடிய வழக்கறிஞர்களை காவல்துறையை விட்டு அடித்த வேகம் என்ன, அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கருப்புக் கொடி காட்டிய வழக்கறிஞர்களை கண்மூடித்தனமாக தாக்கி விட்டு, வீடியோவில் அடித்தவர்கள் பதிவாகி இருந்தாலும், அவர்களை கைது செய்யாமல் அடிபட்டவர்கள் மீதே வழக்கு போட்டு சிறைக்கு தள்ளும் அழகு என்ன, நாயுடுன்னா நாயுடுதான்.

இப்போது இவரின் பேச்சு, மூச்சு, சிந்தனை, உணவு அனைத்துமே செம்மொழி மாநாடுதான் என்று இவர் அருகில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

“அய்யா எப்பவுமே செம்மொழி மாநாட்டு வேலையில பிசியா இருக்காங்க“ “அய்யாவுக்கு டைமே இல்ல“ “அய்யா மத்யானம் லன்ச் கூட சாப்ட்றதில்ல. சிஎம், அய்யாகிட்டதான் எல்லா வேலையையும் ஒப்படைச்சிருக்காங்க. இந்த சீப் செக்ரட்ரி எந்த வேலையையும் செய்றதில்லன்னு அய்யா வருத்தப் பட்றாரு“ என்று அங்கலாய்கின்றனர்.

நாயுடுவும், அவ்வப்போது கோயம்பத்தூர் சென்று மாநாட்டுக்கான பாதுகாப்பு வேலைகளைச் செய்வதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பதும் என்று பின்னி எடுக்கிறார். இதனால் ராதாகிருஷ்ண நாயுடுவே சவுக்கின் ஐந்தாவது பரிந்துரை.

ஆறாவது பரிந்துரை




இது மீண்டும் ஒரு பத்திரிக்கையாளர். இவர் பெயர் காமராஜ். பாப்புலராக நக்கீரன் காமராஜ் என்று அழைக்கப் படுவார்.

இவர் செய்யும் அளப்பரிய பணியானது சொல்லி மாளாது. கருணாநிதியின் கண்களும் காதுகளும் என்று இவரை சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில், விலைவாசி விண்ணை முட்ட, அன்றாட வாழ்வை எப்படி நடத்துவது என்று மக்கள் விழி பிதுங்கிக் கொண்டிருக்க, காவல் துறையால் கடும் நெருக்கடிக்கு சாதாரண மக்கள் கூட ஆளாகிக் கொண்டிருக்க, தமிழ்நாடு ஏதோ அமைதிப் பூங்காவாக இருப்பது போலவும், மாதம் மும்மாரி பெய்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து,

என்ன செய்வதென்று தெரியாமல், பாலியல் கதைகளை படிக்கும் சூழலில் இருப்பது போலவும் நக்கீரனில், கவர் ஸ்டோரிகளாக தொடர்ந்து இவன் அவள் கூட படுத்துக் கொண்டான், அவள் இவன் கூட படுத்துக் கொண்டான், இவன் இவள்களோடு படுத்துக் கொண்டான், எப்படி படுத்துக் கொண்டார்கள், எவ்வளவு நேரம் படுத்துக் கொண்டார்கள், படுத்துக் கொள்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட உணர்வு என்ன, என்பது போன்ற தத்ரூபமான பாலியல் கதைகளை வெளியிட்டு,

செம்மொழி மாநாட்டுக்கான சீரான பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது, இவரின் பலம்.

ஏழாவது பரிந்துரை




இவர் ஒரு பத்திரிக்கையாளர். பெயர் என்.ராம். இவரை இந்து ராம் என்று அழைப்பார்கள். ஏற்கனவே ஒரு முறை கருணாநிதி இந்து என்றால் திருடன் என்று பொருள் என்று சொன்னவுடன், பெரும் பிரச்சினையானது.

அதனால் இவரை இந்து ராம் என்று அழைத்தால், இந்துக்களை இழிவு படுத்துவதாகிவிடும் என்பதால் இவரை என்.ராம் என்றே அழைப்போம். புதிய சட்டமன்ற வளாகம் கட்டும் பணியை மேற்பார்வையிடும்போதும் சரி, கட்டி முடித்ததும் கட்டிட தொழிலாளர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்கும் போதும் சரி,

அவர்கள் ஹிந்தி பாடல்களுக்கு நடனமாடும் போது, உங்களுக்கு ஹிந்தி பாடல்கள் பிடிக்குமா என்று கருணாநிதியை கேட்டு, அதை பெரிய அளவில் இந்து பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியிடுவதும் சரி, இந்த என் ராமின் பங்கு அளப்பறியது.

இந்து பத்திரிக்கையில் நாள்தோறும், செம்மொழி மாநாட்டு அரங்கில் பத்து எறும்புகள் வருகை தந்திருக்கின்றன, மாநாட்டு அரங்கை ஈக்கள் மொய்க்கின்றன, மாநாட்டு பந்தலை நாய்கள் நக்குகின்றன என்று செய்தி வெளியிட்டு, தமிழுக்கும் செம்மொழி மாநாட்டுக்கும் இவர் புரியும் சேவை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அதனால் இவர் சவுக்கின்
ஏழாவது பரிந்துரை.



எட்டாவது பரிந்துரை




லத்திக்கா சரண். காவல்துறையில் ஒரு “டம்மி பீஸு“ வேண்டும் என்று, இவரை சீனியரையெல்லாம் ஓரங்கட்டி விட்டு டிஜிபியாக ஆக்கினாலும், இவரும் தன் பங்குக்கு, செம்மொழி மாநாட்டுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியே வருகிறார்.

டிஜிபியாக பதவி ஏற்ற ஓரிரு நாட்களில் செங்கல்பட்டில் அகதிகள் முகாமில் மிருகத்தனமாக தடியடி நடந்தது. அன்றே இவர் தடியடியே நடக்கவில்லை, உள்நோக்கத்தோடு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று அரசியல்வாதி போல அறிக்கை வெளியிட்டார்.

என்னதான் இருந்தாலும் நான்தான் டிஜிபி என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்று அவ்வப் போது, கோயம்பத்தூர் சென்று, செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பது போல பாவ்லா காட்டுவதன் மூலம், இவரும் இந்த விருதுக்கு தகுதி பெறுகிறார்.

சீனியரை ஓரங்கட்டி விட்டு, தனக்கு ப்ரமோஷன் கொடுத்தற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக கருணாநிதிக்கு சொம்படிப்பதன் மூலம், இவர் நாமினேஷன் சிறப்பு வாய்ந்தது.

இது தவிர, டிஜிபி பதவியை இழந்த ஆர்.நட்ராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் டிவிஷன் பென்ச், நாங்கள் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கும் அளவுக்கு “உள்குத்து அரசியல்“ செய்தததால், இவர் பொருத்தமானவர் தான்.

ஒன்பதாவது பரிந்துரை




தொல்.திருமாவளவன். ராஜபக்ஷேவை ஒழிப்பேன். பிரபாகரனை காப்பேன். காங்கிரஸ் கட்சிதான் என் முதல் எதிரி என்று ஊர் முழுக்க முழக்கம் செய்து விட்டு, காலை நக்கும் பொமரெனியன் நாய்க்குட்டி போல, கருணாநிதியை சுற்றி வருபவர்.

இலங்கை பிரச்சினையில் தமிழ் மக்கள் கருணாநிதி மீது கோபமடையும் போதெல்லாம் ஒரு போராட்டம் நடத்தி, கருணாநிதி மீதான கோபத்தை தணியச் செய்பவர்.

தன் குடும்பத்துக்கு மந்திரி பதவி வேண்டும் என்று தள்ளு வண்டியில் டெல்லி பயணம் செய்யத் தெரிந்த கருணாநிதிக்கு, தனக்கு ஒரு இணையமைச்சர் பதவி கூட பெற்றுத் தர முயலவில்லையே என்று மான ரோஷமெல்லாம் இல்லாமல், திருவல்லிக்கேணி திமுக வட்டச் செயலாளரை விட, நான்தான் நன்றாக சொம்படிப்பேன் என்று சொல்லாமல் செய்தும் காட்டுபவர்.

இலங்கைக்கு போய் ராஜபக்ஷேவை சந்திப்பாராம், ஆனால் ராஜபக்ஷே இந்தியா வந்தால் சந்திக்க மாட்டாராம். இது போல, கருணாநிதியை விஞ்சும் அளவுக்கு நாடகம் போடுபவர். இதனால் கருணாநிதி பொருத்தமாகவே இவரை மாநாட்டின் ஆலோசனைக் குழு உறுப்பினராக போட்டுள்ளார்.

இந்த விருதுக்கான போட்டியில் இவருக்கே விருதுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்தக் கணிப்பு தெரிவிக்கிறது.

பத்தாவது பரிந்துரை



பேராசிரியர் சுப.வீரபாண்டியன். தமிழ்நாட்டின் நம்பிக்கைக்கு உரிய தலைவராக இருந்தவர். சிறந்த பேச்சாளர். சிறந்த சிந்தனையாளர் என்று அறியப்பட்டவர். சிறந்த உணர்வாளர் என்றும் சொல்வார்கள். ஆனால் இவர் எப்போதுமே ஒரு டம்மி பீஸாகத்தான் இருந்திருக்கிறார் என்று விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒரு முறை இவர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த போது, நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்கையில் கைவிலங்கு போட்டு அழைத்துச் செல்வர். இவருடன் இருந்த இசுலாமிய கைதிகள், இவ்வாறு கைவிலங்கு போடுவது, சட்டவிரோதம், நாம் இதற்காக போராட்டம் நடத்துவோம். அதில் நாம் தாக்கப் பட்டாலும் சரி என்று பேசுகின்றனர். இதற்கு சம்மதித்த சுப.வீரபாண்டியன், கைவிலங்கு போடுவதை எதிர்த்த இசுலாமிய கைதிகள் போலீசிடம் அடி பட்டு ரத்தம் ஒழுக காயம் பட்டுக் கிடக்கையில் சத்தம் போடாமல் கைவிலங்கு போட்டு போலீசோடு சென்றார் என்று கூறுகிறார்கள்.

தமிழ் என் மூச்சு, தமிழ் என் சுவாசம், தமிழ் என் உணர்வு என்று ஓவராக நெஞ்சை நக்குவார். ஆனால் ஈழத் தமிழர் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கையில் கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருந்தார். இவர் சிறப்பாக காலை நக்குகிறார் என்பதை அறிந்துதான் கருணாநிதி இவரை பொது அரங்க நிகழ்ச்சிக் குழு உறுப்பினராக போட்டிருக்கிறார். இதனால் இவர்தான் சவுக்கின் பத்தாவது பரிந்துரை.


சவுக்கு

Saturday, June 12, 2010

செம்மொழி மாநாட்டுக்கு சவுக்கின் யோசனைகள்




செம்மொழி மாநாட்டுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் கடிகார கோபுரம் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மணி அடிக்கும் போது ஒரு திருக்குறளைச் சொல்லி, அதற்கான விளக்கமும் சொல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழை வளர்க்க எப்படி ஏற்பாடுகள் பார்த்தீர்களா ?

இது போல் நூதன முறையில் தமிழை வளர்க்க, “சவுக்கின்“ ஆலோசனைகள் இதோ….
பொதுக் கழிப்பிடங்களின் கதவுகளின் உள்புறத்திலும், சுவர்களிலும், “ I Love You Meena I Love Namitha “ போன்ற வாசகங்கள் கிறுக்கப் பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

இதைத் தவிர்க்கும் பொருட்டு, அனைத்து பொதுக் கழிப்பிடக் கதவுகளுக்கும், பெயின்ட் அடித்து, கருணாநிதியின் பொன்மொழிகளான “என்து, உன்துன்னா உதடு ஒட்டாது… நம்பள்துன்னா உதடு ஒட்டும்“ என்று எழுதி போடலாம்.

“சான்றோரே… சான்றோரே… நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும்…. போன்ற வாசகங்களை சுவற்றில் எழுதிப் போடலாம்.

இவ்வாறு செய்தால், அவசரத்துக்கு, இங்க வந்தா, இந்தக் கருமத்தையெல்லாம் வேற படிக்க வேண்டியிருக்கு என்று, பெரும்பாலான பொதுமக்கள் பொதுக் கழிப்பிடங்களை பயன் படுத்துவதற்கு, மலச்சிக்கல் எவ்வளவோ தேவலை என்று பொதுக் கழிப்பிடங்களை பயன் படுத்தவதையே தவிர்த்து விடுவார்கள்.

இதனால், தமிழ் வளர்வதோடு, பொதுக் கழிப்பிடங்களும் சுத்தமாக இருக்கும். இது மட்டுமின்றி, கழிப்பிடத்தில் தமிழ் வளர்த்த தலைவர் என்று வரலாற்றில் எழுதப் படும்.

அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களுக்கான வருகைப் பதிவேட்டை மாற்றி விட்டு, ஒரு குயர் நோட்டு ஒன்றை கொடுத்து, தினமும் காலையில் அலுவலகம் வந்தவுடன், வருகைப் பதிவேட்டிற்குப் பதிலாக “கலைஞர்தான் தமிழ்… தமிழ்தான் கலைஞர். “ என்று ஐந்து முறை அல்லது பத்து முறை எழுதச் சொல்லாம்.

தொடர்ந்து தவறாமல் எழுதும் அரசு ஊழியர்களுக்கு, ஊக்கப் படியாக மாதம் ரூபாய் 20 என்று அறிவித்துப் பாருங்கள். இந்த இருபது ரூபாய்க்காக, 10 முறை அல்ல, தினமும் நூறு முறை எழுதுவார்கள் இந்த அரசு ஊழியர்கள்.

குழந்தைகளுக்கு பயன்படுத்தப் படும் டயப்பர்களில், தமிழ் வாழ்க, செம்மொழி வாழ்க, கலைஞர் வாழ்க போன்ற வாசகங்களை கட்டாயம் அச்சிட வேண்டும் என்று உத்தரவிடலாம்.

இதனால், குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழுணர்வு வளர்க்கப் படும். இது மட்டுமன்றி, ஒவ்வொரு முறையும், டயப்பரை மாற்றும், தாய்மார்கள் இதைப் படித்து தமிழுணர்வு பெறுவார்கள். இதனால், தமிழ் மொழி மென்மேலும் வளரும்.

இளம்பெண்கள் LOOK AT ME, STARE ME NOT, DON’T TOUCH போன்ற விதவிதமான வாசகங்களோடு “டிஷர்ட்டுகள்“ அணிந்து வருவார்கள். இதனால், இளைஞர்கள் இந்த வாசகங்களை படிக்க வேண்டும் என்ற இளம் பெண்களின் விருப்பமும் நிறைவேறும். இதைப் படிக்கும் சாக்கில், இளைஞர்கள் காமப் பார்வையை அள்ளி வீசவும் செய்யலாம்.

இது போன்ற “டிஷர்ட்டுகளில்“ கட்டாயம் இனி மேல் “கலைஞர் வாழ்க, செம்மொழி ஆசான் வாழ்க, திருவள்ளுவருக்கே திருக்குறளா ? கலைஞருக்கே தமிழா ? “ போன்ற வாசகங்களை வெளியிட வேண்டும் என்று உடனடியாக அரசாணை வெளியிடலாம்.

அரசாணை வெளியிட்ட மறு நாளே, டிஜிபி லத்திக்கா சரண் இந்த டிஷர்ட் அணிந்து வந்து, கருணாநிதியை சந்திப்பார். இதை கலைஞர் டிவியில் பெரிய அளவில் செய்தியாக வெளியிடலாம்.




தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் மெக்டொவெல், ஜானெக்ஷா, ரொமானாவ், பேக்பைப்பர், ஓல்ட் மங்க், ஓல்ட் சீக்ரெட் என அனைத்து சரக்குகளும் ஆங்கிலப் பெயர் கொண்டவையாகவே உள்ளது, தமிழ் மொழியின் வளர்ச்சியில் பெரும் தடையாக உள்ளது.

இதை சீர் செய்யும் பொருட்டு, கலைஞர் சரக்கு, முத்தமிழறிஞர் சரக்கு, செம்மொழிச் சரக்கு, திராவிடச் சரக்கு, என தமிழ்ப் பெயர்களில் மட்டுமே இனி மதுபானங்கள் விற்கப் படும் என அறிவிக்கலாம்.

தமிழ்ச் சரக்குகள் விற்கப் படுவதால், 24 மணி நேரமும், டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்கலாம். இதனால் அரசுக்கு வருவாயும் கூடும். சரக்கு வாங்கும் குடிமக்கள் மிகுந்த தமிழுணர்வோடு போதையாவார்கள்.

அந்தப் போதையும் தமிழ் போதையாக இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும், பெரும்பாலான டாஸ்மாக் பார்களில், அனைவரும் அடிக்கடி பயன்படுத்தும் சொல் “ஆப் பாயில்“. இதைத் தவிர்க்க, “அரை வேக்காடு“ என்ற சொல்லை கட்டாயம் பயன் படுத்த வேண்டும் என்று அனைத்து பார்களிலும் போர்ட் வைக்கலாம்.

தமிழ் கற்றுக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த செம்மொழிப் பாடலை பாடிக் காட்டும் மார்வாடிகளுக்கு, வரிவிலக்கு என்ற அறிவிப்பு வெளியிட்டால், 10 நாட்களில் சவுகார்ப்பேட்டையில் உள்ள அனைத்து மார்வாடிகளும், பாடுவதோடு அல்லாமல்,


“வெஜிடெபிள் பிரிஞ்சி தமிழுக்கு சிஎம்ஜி
ஏழை வயிறு எரிஞ்சி பூத்துக் குலுங்கும் குறிஞ்சி
மைனே பியார் கியா கலைஞர் பேரன் தயா
ஹம் ஆப்கே ஹேன் கவுன். கலைஞர் மனசு நூறு பவுன்
ஏக் துஜே கேலியே.. ஜெயலலிதா காலியே…
போன்ற கவிதைகள் பாடுவார்கள்.

இதனால், மார்வாடிகள் மத்தியில் தமிழ் வளர்த்த அறிஞர் என்று கருணாநிதியின் புகழ் வரலாற்றில் பதிவு செய்யப் படும்.

கொடநாடு என்று ஒரு இடம் இருக்கிறதே. அந்த இடத்தின் பெயர், “செம்மொழி மாநாடு“ என்று மாற்றம் செய்யப் பட்டது என்று அரசு கெஜட்டில் அறிவிப்பு வெளியிடலாம். இந்த அறிவிப்பானது, பல விளைவுகளை ஏற்படுத்தும்.

பத்திரிக்கைகள், வருடத்தில் பத்து முறையாவது, “செம்மொழி மாநாட்டில் ஜெயலலிதா“ என்று தலைப்புச் செய்திகள் வெளியிடும். இதனால், எதிர்க்கட்சித் தலைவரை செம்மொழி மாநாட்டுக்கு வரவழைத்த கலைஞர் என்று, பெயர் கிடைக்கும்.

செம்மொழி மாநாட்டில், சுவாமி நித்யானந்தா மற்றும், தேவநாதன் ஆகியோரது புதிய படங்கள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டால், செம்மொழி மாநாட்டில் இருக்கும் கூட்டத்தைப் பாருங்கள். என்னடா இது இத்தனை பேருக்கா தமிழார்வம் என்று கருணாநிதியே ஆச்சர்யப் பட்டுப் போவார்.


ஹெல்மெட் அணிவது எப்படி கட்டாயச் சட்டம் ஆனதோ, அதே போல அனைத்து ஹெல்மெட்டுகளிலும், தமிழ் வாழ்க, செம்மொழி மாநாடு வாழ்க, கலைஞர் வாழ்க என்ற வாசகங்கள் கட்டாயம் எழுதப் பட வேண்டும் என்று உத்தரவு போடலாம். இதனால் பல்வேறு பயன்கள் உண்டு. வண்டி ஓட்டும் அனைவரும் ஹெல்மெட்டுகளைப் பார்த்து தமிழுணர்வு பெறுவார்கள். ஸ்டிக்கர் ஒட்டும் தொழிலாளர்கள், ஓவியர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு பெறுவார்கள். இதற்கெல்லாம் மேலாக, கருணாநிதிக்கு மிகவும் பிடித்த, காவல்றை நண்பர்கள் மாமூல் வாங்க அற்புதமான வாய்ப்பு பெறுவார்கள். கருணாநிதியை வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.

சவுக்கு

Sunday, January 3, 2010

அனாதைகளுக்கு அடைக்கலம் தரும் செம்மொழி மாநாடு ?




அனாதைகளுக்கும், செம்மொழி மாநாட்டுக்கும் என்ன தொடர்பு ?

இருக்கிறது.


இந்த ஆண்டு நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை எப்படியாவது வெற்றி பெற்றதாக காட்ட வேண்டும் என்று கருணாநிதி கடும் முனைப்பு காட்டி வருகிறார் என்பது குழந்தைக்குக் கூட தெரியும்.


இந்த மாநாட்டை நடத்தி விடுவதன் மூலம் தமிழினத்தின் மத்தியில் தனக்கு கிடைத்திருக்கும் “துரோகி“ என்ற பட்டம் அழிக்கப் படும் என்ற கருணாநிதியின் நம்பிக்கையே இந்த மாநாட்டில் அவர் காட்டும் அதி தீவிர முனைப்புக்கு காரணம்.


இம்மாநாடு அறிவிப்பு வெளியான நாள் முதலே குளறுபடிதான். முதலில் உலகத்தமிழ் மாநாடாக அறிவிக்கப் பட்டிருந்தது. உலகத் தமிழ் மாநாடு நடத்த ஒப்புதல் கொடுக்க வேண்டியவரான நொபொரு கரோஷிமா ஒப்புதல் வழங்கவில்லை என்பதால், உலகத்தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு ஆயிற்று.


ஜனவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்த, மாநாடு 6 மாதங்கள் தள்ளி வைக்கப் பட்டது.


அடுத்த சர்ச்சை, ஈழத் தமிழ் அறிஞர் சிவத்தம்பியின் பங்கேற்பு பற்றியது. சிவத்தம்பி பங்கேற்கப் போவதில்லை என்று பத்திரிக்கைகளில் வெளிவந்த அறிவிப்பினை அடுத்து, கடும் கோபம் அடைந்த கருணாநிதி, தனது உளவுத்துறையை முடுக்கி விட்டு, சிவத்தம்பி வாயாலேயே தான் கலந்து கொள்கிறேன் என்று சொல்ல வைத்தார்.


அதற்கு அடுத்த நாட்களிலெல்லாம் தொடர்ந்து செம்மொழி மாநாடு பற்றி விளக்கமாக அறிக்கைகளும் கடிதங்களும் வெளியிட்டு வந்தார் கருணாநிதி.


செம்மொழி மாநாட்டில் யாரும் கலந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது என்று அடுத்த முகாரியாக செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஓய்வு என்று அறிவித்தார்.

2001ல் நடந்த தேர்தலிலும், 2006ல் நடந்த தேர்தலிலும் இதுதான் எனது கடைசித் தேர்தல் என்ற கருணாநிதியின் அறிவிப்புக்கு என்ன கதி நேர்ந்ததோ அதே கதிதான் இந்த அறிவிப்புக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்யன் போல, “ஓய்வு அறிவிப்பை“ விடாப்பிடியாக பிடித்துக் கொண்டுள்ளார் கருணாநிதி.


இம்மாநாட்டில் கலந்து கொள்ள உலகெங்கும் உள்ள தமிழாய்ந்த அறிஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன் பதிவு செய்து வருகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டு மாநாடு அமோகமாக நடக்கப் போகிறது என்ற மாயையை ஏற்படுத்த முனைப்பாக இருக்கும் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பு தான் வியாழனன்று மாநாட்டில் பங்கேற்க 30.12.2009 வரை 1244 அறிஞர்கள் முன் பதிவு செய்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு.


இந்த அறிவிப்பில் விசித்திரம் என்னவென்றால் உலகெங்கும் இருந்து வெப்சைட் மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும், தபால் மூலமாகவும் 1244 பேர் முன் பதிவு செய்திருக்கிறார்களாம்.


இந்த அறிவிப்பில் வெளிநாட்டவர் 188 பேர் என்பதோடு, “நாடு தெரியாதோர்“ என்று 4 பேர் முன் பதிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. எந்த நாடு என்றே தெரியாமல், மாநாட்டில் முன்பதிவு செய்தால் அதை ஏற்றுக் கொண்டு அதை அறிவிப்பாகவும் வெளியிடும் கருணாநிதிக்கு மறை கழன்று விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

சாதாரணமாக ரயில்வே முன் பதிவு படிவத்தில் கூட ஏதாவது ஒன்றை சரியாக பூர்த்தி செய்யாமல் விட்டால் படிவம் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ஒரு உலகத் தமிழ் மாநாட்டுக்கு பங்கேற்கப் போகும் ஒரு நபர் எந்த நாடு என்றே குறிப்பிடாமல் விண்ணப்பம் அளித்தால், அதையும் ஏற்றுக் கொண்டு அறிவிப்பாக வெளியிடுவதில் இருந்து கருணாநிதியின் desperation நன்கு தெரிகிறது.


நடக்கப் போவது தமிழ்ச் செம்மொழி மாநாடு தானே ? ஆங்கில மாநாடு அல்லவே ?






முரசொலி நாளிதழில் 03.01.2010 அன்று வெளிவந்த அறிவிப்பு


வெப்சைட்டுக்கு இணையத்தளம் என்ற தமிழ்ச் சொல் இருப்பது தமிழாய்ந்த அறிஞருக்கு தெரியாதா ? ஈமெயிலுக்கு மின்னஞ்சல் என்ற அழகான தமிழ்ச்சொல் இருப்பது மாநாடு நடத்துபவருக்கு தெரியாதா ?

இணையத்தில் பார்த்தால், புலம் பெயர்ந்த தமிழர்களும், பதிவர்களும், அழகான தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவது தெரிந்திருக்குமே ?

அஞ்சல் என்ற அழகுத் தமிழ் சொல்லிருக்க தபால் என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்திருப்பது "கனியிருப்ப காய் கவர்வது தானே"

நடக்கப் போகும் செம்மொழி மாநாட்டால் மக்கள் பணம் பல கோடிகள் செலவாவது தவிர வேறு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.




சவுக்கு