Flash News

Tuesday, July 6, 2010

‘பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள்...’வெடித்துக் கிளம்பும் சர்ச்சைகள்!

அரசு செலவில் ஊர்ச்சுற்றிப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள், காவல்துறை உயர் அதிகாரிகள்! மேலாண்மை குறித்த பயிற்சி என்ற பெயரில் லண்டனை சுற்றிப் பார்க்க, எட்டு கூடுதல் டி.ஜி.பி-க்கள் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றிருப்பதைத் தொடர்ந்து தான் இப்படியொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

கூடுதல் டி.ஜி.பி-க்கள் தரத்தில் உள்ள அதிகாரிகளை பயிற்சிக்கு அனுப்பியிருப்பது, போலீஸ் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்தப் பயிற்சிக்கு, தமிழகத்தைச் சேர்ந்த கூடுதல் டி.ஜி.பி-க்களாக இருக்கும் கே.ராதாகிருஷ்ணன், ஆர்.சேகர், டி.கே.ராஜேந்திரன், லல்லாம் சங்கா, டி.ராஜேந்திரன், டி.ராதாகிருஷ்ணன். கே.பி.மகேந்திரன், எஸ்.கே.டோக்ரா ஆகியோர் பங்கேற்கப் போவதாக முன்பே செய்திகள் கசிந்தது.


இந்தப் பயிற்சிப் பயணம் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இருந்து ஆரம்பமாகிறது. முதல் மூன்று வாரங்களுக்கு, ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல்துறை பயிற்சிக் கல்லூரியிலும் அதையடுத்து, லண்டனில் உள்ள லண்டன் பிசினஸ் ஸ்கூலிலும் நடைபெறுமாம்.



லண்டனில் கிட்டத்தட்ட ஒரு வார காலம் தங்கியிருந்து லண்டன் பிஸினஸ் ஸ்கூலில் மேலாண்மை பயிற்சி எடுக்கவிருக்கிறார்களாம், நம்முடைய காவல்துறை அதிகாரிகள்.
இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள அதிகாரிகள் கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்த்தில் இருப்பவர்கள்.

அவர்களுக்கு காவல்துறையில் 25 ஆண்டுகளுக்குக்கும் மேற்பட்ட அனுபவம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மேலாண்மை சம்பந்தப்பட்ட பயிற்சியை அளிக்கத் திடுமென ஏன் ஏற்பாடு செய்தார்கள் என்பது குறித்து தான் இப்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இது போன்ற மூத்த அதிகாரிகளை இந்தமாதிரியான பயிற்சிகளுக்கு அனுப்பாமல், எஸ்.பி. அந்தஸ்த்தில் உள்ள அதிகாரிகளை அனுப்பினால், வரக்கூடிய காலங்களில் அவர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்ய ஏதுவாக அமையும் என்று கூறுகிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
மேலும், இந்தப் பயிற்சியில் பங்கெடுத்துள்ள அதிகாரிகளில், எஸ்.கே.டோக்ரா தவிர, மற்ற அனைவருமே, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தகுதி மதிப்பெண் பெறாத தனது மகனுக்கு, முதல்வர் கோட்டாவில், அண்ணாப் பல்கலைக்கழகத்தில் ஒதுக்கீடு பெற்றார் என்று கே.ராதாகிருஷ்ணன் மீது புகார்கள் வந்து, அது தொடர்பாக பொது நல வழக்கெல்லாம் போடப்பட்டது.

இது தவிர, இங்கிலாந்து ராணி விருதுத் தொகையை செலவழித்தது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர் மீதான தாக்குதலில், முக்கியப் பங்கு வகித்ததாக, நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளானவர்தான் இந்த கே.ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆர்.சேகர், சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்தபோது, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டபோது, காவல்துறை அமைதியாக கைகட்டி வேடிக்கை பார்த்தது தொடர்பாக உடனடியாக பதவியிலிருந்து மாற்றப்பட்டவர்.


கூடுதல் டி.ஜி.பி-யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன், லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக இருந்தபோது, தினந்தோறும் 12 நாளிதழ்கள் வாங்கிப் படிப்பது போல போலிப் பட்டியல் தயாரித்து ரகசிய நிதியை கையாடல் செய்தார் என்றும், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தனது மகளை கல்லூரிக்கு அழைத்துச்செல்ல உரிய நேரத்தில் வரவில்லை என்பதால், ஒரு காவலரை மணிமுத்தாறுக்கு மாறுதல் செய்தார் என்றும், எஸ்.பி-யாக இருந்தபோது தன்னிடம் பணியாற்றிய காவல் ஆய்வாளர் மேல் லஞ்ச ஒழிப்புத் துறை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக வழக்குப்பதிவு செய்ததால், அந்த வழக்கிலிருந்து அவரை லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக இருந்த பொழுது, காப்பாற்றியதாகவும் குற்றச் சாட்டுகள் உண்டு.

இதுதவிர, தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும், உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, தவறான பதவி உயர்வு வழங்கியதாகவும், இவர் மீது புகார்கள் உண்டு.
லல்லாம் சங்கா எஸ்.பி-யாக இருந்த காலத்தில் ஏற்பட்ட ஊழல் புகார்கள் பற்றிய ஒரு பூர்வாங்க விசாரணை, லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்தது.

பிறகு, போதுமான ஆதாரங்கள் இல்லாததால், இந்த வழக்கு மூடப்பட்டது. டி.ராதாகிருஷ்ணன், ஏற்கெனவே காவலர் தேர்வில் கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டில், சி.பி.ஐ. நடவடிக்கைக்கு ஆளானவர். மேலும், தன்னுடைய மனைவி நடத்தும் நிதி நிறுவனத்தின் மூலமாக, நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகவும், காவல்துறையில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி உரிய வழக்குப்பதிவு செய்ய விடாமல் தடுத்ததாகவும், சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.


கே.பி.மகேந்திரன் மீது, லஞ்ச ஒழிப்புத் துறையில் மொத்தம் நான்கு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இவர் எஸ்.பி-யாக இருந்த காலத்தில் இரண்டு வழக்குகளும், வடக்கு மண்டல ஐ.ஜி-யாக ஆனதும் இரண்டு வழக்குகளும் விசாரணையில் இருந்தன. இவர் கட்டியிருந்த வீட்டின் சாலை வழியே, கனரக வாகனங்கள் எதுவும் வரக்கூடாது என்று காவல்துறையை விட்டு, அந்த வழியே வரும் கனரக வாகனங்கள் அனைத்தையும், பிடித்து வைத்து அலைக்கழித்தது உள்ளிட்ட புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரிக்கப்பட்டன.

இவர் குறுகிய காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய போது, இவர் எஸ்.பி-யாக இருந்த காலத்தில் இவர் மீது நடந்த ஊழல் வழக்கின் கோப்பை பார்வையிட கேட்டு, அது உயர் அதிகாரிகளின் காதில் போடப்பட்டு, பெரும் சர்ச்சையானது.


சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் டி.ராஜேந்திரனைப் பற்றிய விவரங்கள் ஊரறிந்தது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலைத் திறப்பு விழாவின் போது, முதல்வர் முன்னிலையிலேயே, பெரும் வன்முறை நடந்த போது, தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் பத்திரிகையாளர்களை அடித்துத் துவைத்தபோது, அது அத்தனையையும் வேடிக்கை பார்த்து விட்டு, பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பான புகாரைப் பதிவு செய்வதற்குக் கூட, தலைமைச் செயலாளரிடம் மூத்த பத்திரிக்கையாளர்கள் பேசிய பிறகு தான் நடவடிக்கை எடுத்தார்.

இவர் காலத்தில்தான் சென்னை நகரில் குற்றங்கள் பெருகியுள்ளன.

இவர்களில் எஸ்.கே.டோக்ரா மீது மட்டும் எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை. ஊழல் தொடர்பான விவகாரங்களை துளியும் அனுமதிப்பதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த அதிகாரிகளைத் தவிர, தகுதியான வேறு அதிகாரிகள் உண்டா என்றால் இருக்கிறார்கள். மிகச் சிறந்த உளவுத் துறை அதிகாரி என்று பெயர் வாங்கிய ராமானுஜம், தன்னுடைய பணியில் சிறிதும் சளைக்காத, எந்த புகார்களுக்கும் இடம் தராத அனூப் ஜெய்ஸ்வால், நேர்மையான அதிகாரியான டாக்டர் மெஹபூப் ஆலம், மிகச் சிறந்த நிர்வாக அதிகாரியும், கடும் உழைப்பாளியுமான அசோக்குமார், “கருணாநிதியின் நள்ளிரவு கைதில்“ முக்கியப் பங்கு வகித்ததால், நான்கு ஆண்டுகளாக, கன்னியாகுமரியில் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும், ஐ.ஐ.டி-யில் பொறியியல் படித்த ஜார்ஜ், போன்ற தகுதி வாய்ந்த அதிகாரிகள் இருக்கையில், ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறுவிதமான சர்ச்சைகளுக்கும் ஆளான இந்த அதிகாரிகளை தேர்ந்தெடுத்து லண்டனில் பயிற்சிக்கு அனுப்பியதற்கான காரணம் என்ன, என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுகின்றன.


லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து, இவர்களை லண்டனுக்கு பயிற்சிக்கு அனுப்பியிருப்பதால், காவல்துறைக்கு என்ன பயன் என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இவ்வாறு, இவர்களை பயிற்சிக்கு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்குப் பதில், சென்னையை அடுத்துள்ள ஊமனஞ்சேரியில் உள்ள காவல்துறை பயிற்சி அகாடமியை மேம்படுத்தினால், தகுதியான பல காவல்துறையினர் உருவாவார்கள் என்றும் கூறுகின்றனர்.


மேலும் முக்கியப் பொறுப்பு உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் ஏற்கனவே, செம்மொழி மாநாட்டுக்காக பத்து நாட்களுக்கும் மேலாக கோவையில் இருந்ததால், பல கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் மீண்டும் ஒரு மாதம் பயிற்சி என்ற பெயரில், இந்த அதிகாரிகள் ஹைதராபாத்துக்கும் லண்டனுக்கும் பயணமானதால், கோப்புகள் தேங்கி, நிர்வாகம் தேக்கமடைந்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.


மேலும், லண்டன் பிசினஸ் ஸ்கூல் என்பது, கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாளர்களுக்கும், பிசினஸில் ஈடுபடுபவர்களுக்கும் பயிற்சி அளிக்க உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளான இவர்கள் என்ன பயிற்சி எடுக்கப்போகிறார்கள் என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

உயர் அதிகாரிகளான இவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் அரசு, கீழ்நிலையில் உள்ள காவலர்கள் தலைமைக் காவலர்களுக்கு பணியில் சேர்ந்த பின், இதுபோன்ற எந்தப் பயிற்சியுமே சுத்தமாக தருவதில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறு எந்தப் பயிற்சியுமே இல்லாத காரணத்தால், இவர்கள் தொந்தியும் தொப்பையுமாக, எந்த ஒரு பணியையும் விரைவாக செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். இவர்களின் பயிற்சிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், உயர் அதிகாரிகளுக்கு மட்டும் இது போன்ற பயிற்சி அளிப்பது என்பது, காவல்துறையில் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பயிற்சிக்கு, தங்கள் சொந்த செலவில் கலந்து கொள்பவர்கள் வரலாம் என்று அரசு உத்தரவிடுமேயானால், ஒருவர் கூட கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ பயிற்சி என்ற பெயரில், மக்கள் வரிப்பணம் தான் வீணாகிறது என்று ஒரு தரப்புக் கூறினாலும், இந்தப் பயிற்சியை முடித்து வரும் அதிகாரிகள், காவல்துறையில் தங்கள் பயிற்சியின் அனுபவத்தை புகுத்தி, குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், நடந்த குற்றங்களை விரைவாகக் கண்டுபிடிக்கவும், பயன்படுத்திக் கொள்வார்கள் என்று சம்பந்த்ப்பட்டவர்கள் அரசாங்கத்துக்கு உறுதியளித்தார்களானால், அவர்களை பயிற்சிக்கு அனுப்பியதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கப் போவதில்லை.

அதை விடுத்து, காவல்துறை அதிகாரிகளுக்கு பிஸினஸ் சம்பந்தப்பட்ட மேலாண்மை பயிற்சி எதற்கு என்று கேட்கப்படும் கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அரசாங்கத் தரப்பில் இந்த கேள்விகளுக்கான நியாயமான பதில்தான் என்ன?

சொன்னால், இதோ லண்டனுக்குச் சென்றிருக்கிறார்களே போலீஸ் அதிகாரிகள்... அவர்கள் போனதற்கும் - திரும்புவதற்கும் சேர்த்து வரி செலுத்தும் அப்பாவி பொதுஜனங்கள் தெரிந்து கொள்வார்கள்தானே? செய்வார்களா?

நன்றி நம்தினமதி நாளிதழ்

சவுக்கு

3 comments:

Anand said...

சரியான கேலிகூத்து!

vignaani said...

மிகச் சரி.
இன்னும் ஒன்று: கூடுதல் எட்டு டீ ஜி பீ நிலை அதிகாரிகளா?
ஒரு பதவி இருக்கும் போது இவ்வளவு பேரை இந்த நிலைக்கு என் பதவி உயர்வு கொடுக்கிறார்கள்? இதனால் அரசுக்கு எவ்வளவு கூடுதல் செலவு?
இதே போல் இந்திய மேலாண்மைத் துறையிலும் கூடுதல் செயலர், தலைமை செயலர் பதவிக்கு கூடுதல் பதவி உயர்வு கொடுப்பது மாநில அரசின் வழக்கம். அப்பன் வீட்டு சொத்தா கொள்ளை போகிறது? மக்கள் வரிப் பணம் தானே?

Unknown said...

லண்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் தங்கள் பதவியைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் தங்களுடைய பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளலாம் அதற்கு என்னவெல்லாம் வாய்ப்புக்கள் இருக்கின்றன (modern methods) என்று படிப்பார்களோ என்னவோ.

Post a Comment