ஒரு படைப்பு என்பது என்ன ? பார்வை யாளனையோ, வாசகனையோ, சிந்திக்கத் தூண்டி, அவன் மனதில் என்ன விதமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் ?
நாம் எல்லோரும், சரவணா ஸ்டோர்சுக்கு பல முறை சென்றிருப்போம். அங்கே பணியாற்றும் பலரிடம் பொருட்கள் வாங்கியிருப்போம். “என்னதான் வெலை கம்மியா இருந்தாலும், மரியாதை தெரியாத பசங்க. கஸ்டமர்ஸ் வரும்போது, பொறுமையா எடுத்துக் காட்றாங்களா ? என்னதான் இருந்தாலும் பெரிய கடை, பெரிய கடைதான்“ என்று அலுத்துக் கொண்டு நமது மிடில் க்ளாஸ் மனசாட்சியை சமாதானப் படுத்திக் கொண்டு வருவோம்.
பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு முறை, சரவணா ஸ்டோர்சுக்கு, துணி வாங்கச் சென்ற போது, மூன்றாவது தளத்தின் நுழைவு அருகே, ஒரு பெண் நின்றிருந்தாள். அவள் இடுப்பில் ஒரு கைக்குழந்தை. அருகே ஒரு எட்டு வயது சிறுவன். அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் “இந்த சேலையை நான் திருடினேன் “ என்று எழுதப்பட்ட பலகை தொங்கிக் கொண்டிருந்தது. அந்தச் சேலை 150 ரூபாய் மதிப்புள்ள ஒரு சாதாரண சேலை. இது போல பல சம்பவங்கள் நடந்திருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்தப் பெண்ணின் 8 வயது மகன் மனது என்ன பாடு படும் என்று யோசித்துப் பாருங்கள். தன் மகன் முன்பு இப்படி அவமானப் படுத்தப் பட்ட அந்தப் பெண் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
இப்படிப் பட்ட கொடுமைக்காரர்கள் முதலாளிகளாக இருக்கையில், இப்படத்தில் எந்த இடத்திலும் மிகைப் படுத்தல் இருப்பதாக நான் கருதவில்லை.
அங்காடித் தெரு, பல முறை சரவணா ஸ்டோர்சுக்கு நீங்கள் சென்றிருந்தாலும், நீங்கள் பார்க்கத் தவறிய உலகத்தை, நீங்கள் உதாசீனப் படுத்திய மனிதர்களை, நீங்கள் அலட்சியத்தோடு புறந்தள்ளிய முகங்களை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி, உங்களை வெட்கப் பட வைக்கிறது. உங்கள் மனதுக்குள் ஒரு முள்ளை எடுத்துக் குத்துகிறது. தொண்டைக் குழிக்குள் ஒரு உறுத்தல் உணர்வை ஏற்படுத்துகிறது.
இதுதான் வசந்தபாலனின் வெற்றி. பன்ச் டயலாக்குகளை கேட்டு கேட்டு பழகிப் போன காதுகளையும், மனங்களையும் உலுக்கி எடுத்து நிஜ உலகிற்கு கொண்டு வருகிறது அங்காடித் தெரு.
சிவாஜிகளையும், போக்கிரிகளையும், வேட்டைக்காரன்களையும், அசல்களையும் படம் பிடிக்க எத்தனையோ இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால், நாம் கவனிக்க மறுத்த மனிதர்களை கதைக் களனாக்குவதில், நான் கடவுள் பாலாவுக்குப் பிறகு வசந்தபாலன் வெற்றிப் பெற்றிருக்கிறார்.
படத்தின் தொடக்கத்திலேயே பின் புலத்தில் சரவணா செல்வரத்தினம் கடையின் போர்ட்டை காட்டும் போது கதை எதைப் பற்றியது என்று நன்றாகத் தெரிகிறது. மேலும், ஸ்நேகாவை வைத்து விளம்பரம் எடுக்கும் காட்சியிலும், சந்தேகங்கள் தெளிவாக்கப் படுகின்றன.
தமிழின் தலைச் சிறந்த புதினமல்லாத எழுத்தாளர் பழ.கருப்பைய்யாவா அது ? வசந்த பாலனுக்கு எப்படி இவரை நடிக்க வைக்க வேண்டும் என்று தோன்றியது எனத் தெரியவில்லை. மிகச் சிறந்த பாத்திரப் படைப்பு. அவ்வளவு அழகாக நடித்திருக்கிறார்.
ஆனால், பழ.கருப்பையா தொடர்ந்து நடித்தாரேயானால் தமிழ் சினிமா, இவருக்கு இருக்கும் இலக்கியவாதி என்ற இமேஜை நாசப்படுத்தி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. கவனமாக இருங்கள் பழ.கருப்பையா அவர்களே.
சரவணா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வை, எப்படி அங்குலம் அங்குலமாக வசந்தபாலன் கவனித்திருக்கிறார் என்பது, படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. ஊரிலிருந்து வேலைக்கு வருபவர்களை கடை முதலாளி பழ.கருப்பையாவிடம் அறிமுகப் படுத்துவதிலாகட்டும், முதலாளி என்ற தோரணையுடன் கருப்பையா அலட்சியமாக வந்தவர்களுக்கு அறிவுரை வழங்குவதாகட்டும், ஆட்களை கூட்டி வந்தவர், ப்ரோக்கர் கமிஷன் கேட்பதாகட்டும், கடைகளை அண்ணாந்து வியந்து பார்க்கும் பாத்திரங்களின் தன்மையாகட்டும்,
இதற்கெல்லாம் மேல், முதல் தேதி ஆனவுடன், காவல்துறையின் உயர் அதிகாரி முதல், கீழ்நிலைக் காவலர் வரை பதவிக்கேற்றார்ப் போல வந்து சல்யூட் அடித்து மாமூல் பெற்றுச் செல்லும் காட்சியாகட்டும், மதிய உணவு இடைவேளையில் குறித்த நேரத்தில் கடைக்கு திரும்ப வேண்டுமேயென்று, அடித்துப் பிடித்துக் கொண்டு அரையும் குறையுமாக ஊழியர்கள் சாப்பிடும் காட்சியாகட்டும், கேரளாவுக்கு கறிக்கு அனுப்பப் படும் மாடுகளை நெருக்கமாக லாரியில் கட்டி எடுத்துப் போவது போல, இவர்கள் இரவு படுத்து உறங்கும் காட்சியாகட்டு… …. …. அற்புதம். மிகச் சிறப்பான கவனமான பதிவு.
இந்த உதாசீனப்படுத்தப் படும் மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் மகிழ்ச்சி, அவர்கள் நிலைமைக்குத் தக்க இருப்பது போல அமைத்திருக்கிறார். உதாரணத்திற்கு, இருட்டு கோடவுனில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை மூன்றாவது தளத்திற்கு வேலைக்கு செல்லச் சொன்னதும், அந்தப் பாத்திரங்கள் “அய்யா… ஜாலி… ஏசி“ என்று மகிழ்வதாகக் காட்டுவது, எவ்வளவு இயல்பு ? இருட்டுக் கோடவுனில் இருந்து ஏசி அறைக்குச் செல்வது, அந்த விளிம்பு நிலை மனிதனுக்கு மகிழ்ச்சியைத்தானே தரும்.
கடையில் தவறு செய்த ஊழியரை திட்டிக் கொண்டே அடிக்கையில் “சவட்டு மூதி, உங்களுக்கெல்லாம் சம்பளம் குடுத்து, ஏசியப் போட்டு.. ..“ என்று மேனேஜர் பாத்திரம் சொல்வது, கஸ்டமர்களுக்காக போட்ட ஏசியை, ஏதோ அந்த ஊழியர்களுக்காக போட்டது போலச் சொல்வதாக எழுதப் பட்ட வசனம், அற்புதம். மேலும், கதாநாயகன் பாத்திரம் ஹீரோயினை மேனேஜர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக சொல்லுகையில், “அவன் அப்படித்தாம்லே பண்ணுவான் மூதி“ என்று எவ்வித அதிர்ச்சியும் இல்லாமல் கடை முதலாளி சொல்வதாக இருக்கும் காட்சியும், மிக யதார்த்தம். எந்த முதலாளி, தொழிலாளிக்காக பேசப் போகிறான் ?
படத்தோடு இழையோடுவதாக நகைச்சுவை காட்சிகளை அமைக்க இயக்குநர் பிரயத்தனப்பட்டிருப்பது புரிந்தாலும், இந்த திரைப்படம் ஏற்படுத்தும் பாதிப்பில் மனம் இருப்பதால், இந்த நகைச்சுவை காட்சிகள் எரிச்சலையே ஏற்படுத்தின.
கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்தாலும், அந்த நெருக்கடியிலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும், ஈர்ப்பையும், சிருங்காரங்களையும், பதிவு செய்திருப்பது, கவித்துவமாக இருக்கிறது.
ஒரு காதல் ஜோடி, மேனேஜரிடம் அகப்பட்டுக் கொண்டதும், அந்தப் பெண், தைரியமாக நான்தான் அது என்று சொல்வதும், அந்த ஆண் நான் காதலிக்கவில்லை என்று சொல்லி, “அய்யா வேலைய விட்டு தூக்கிடாதீங்கய்யா“ என்று மேனேஜர் காலில் விழுந்து கதறுவதும் இதயத்தை பிசைகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் கணவனும், மாதம் 75 ஆயிரம் சம்பாதிக்கும் மனைவியும், கார் எடுத்துச் சென்று, பாண்டி பஜாரில் காரை நிறுத்தி விட்டு, சரவணா ஸ்டோர்சுக்கு நடந்து சென்று, பர்சேஸ் செய்யும் குடும்பத்தை நான் அறிவேன். மாதம் ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் சம்பாதிக்கும் ஒரு குடும்பம், காசை மிச்சப் படுத்த வேண்டும் என்று, கருமித்தனமாக, சரவணா ஸ்டோர்ஸின் புழுக்கத்திலும், நெரிசலிலும் பர்சேஸ் செய்கிறார்கள் என்றால், அவர்கள், அந்த ஏழை உழைப்பாளிகளின் வாழ்வைப் பற்றி என்ன அக்கறை கொள்வார்கள் ?
அது போன்றவர்களின் மனசாட்சியை பிடித்து உலுக்குவதுதான் அங்காடித் தெரு.
புதுமுக நாயகனும், அஞ்சலியும், இயல்புத்தன்மை மீறாமல் நடித்திருப்பதும், அவர்களிடம்
இப்படி அற்புதமாக வேலை வாங்கியிருப்பதும், வசந்தபாலன், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வசந்தம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
பொதுவாக தமிழ் சினிமா என்றால் கதாநாயகியும் சரி, துணைக் கதாபாத்திரங்களும் சரி, பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்ற மரபை மீறி, சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் நாம் பார்க்கும் சாதாரணமான முகங்களையே, பாத்திரங்களுக்கு பயன் படுத்தியிருப்பது, இம்மக்களின் மீதான வசந்தபாலனின் நேசத்தை காட்டுகிறது.
இத்திரைப்படம் தொடர்பான சவுக்கின் பரிந்துரை. “அவசியம் பாருங்கள்“
10 comments:
உங்கள் விமர்சனம் மிக அருமை.
மனோ
ஏதாவது குறை சொன்னால்தான் விமர்சகராக மதிக்கப் படுவார்களோ? நகைச்சுவைக் காட்சிகளை நீங்கள் குறைகாட்டி இருப்பது நீங்கள் ஒரு perfectionist என்று காட்டுகிறது. முதற் கால்பாதிப் படத்தில் எனக்கு ஓர் அச்சம் எழுந்தது: படம் இவ்வளவு இறுக்கமாக நகர்கிறதே இடையிடையே தளர்த்துவாரா அல்லது இப்படியே இறுக்கிக் கெடுத்துவிடுவாரா என்று. நல்ல வேலை தளர்த்தி இருந்தார். நடிகை ஸ்னேகா வரும் காட்சிகள் அப்படி ஒரு தளர்த்தல் உத்திதான். வணிகப் படத்துக்கு அது தேவை என்று நாம் தப்பாகப் பேசி வருகிறோம். எந்த ஒரு கலைப்படைப்புக்கும் அது அத்தியாவசியம். வெறும் dark shadesமட்டும் வைத்து வரையப்படும் ஓர் ஓவியம் எப்படி இருக்கும்? மற்று, அதில் light tones-உம் இடைக்கலந்து இருந்தால் எப்படி இருக்கும்?
For a commercial movie 'அங்காடித் தெரு' is too good!
- ராஜசுந்தரராஜன்
//இத்திரைப்படம் தொடர்பான சவுக்கின் பரிந்துரை. “அவசியம் பாருங்கள்"//
வழி மொழிகிறேன்
விமர்சனம் நன்று சார்
மக்கள் இது மாதிரியான படங்களை ஊக்குவித்தால் மட்டுமே தமிழ்நாட்டு சினிமாத்துறை ஆரோக்யமான பாதையில் செல்லும் ...
நல்ல படம்.நல்ல விமர்சனம்.
ரைட் சார்.. கண்டிப்பாக பார்க்கிறோம்..
நன்றி சவுக்கு..
நன்றி, பட்டாபட்டி, மணிஜீ, துபாய் ராஜா, யூர்கன் கருக்கியர், ராஜா சுந்தர்ராஜன் மற்றும் யூர்கன் கருக்கியர் அவர்களே. தங்கள் ஆதரவை என்றும் எதிர்ப்பார்க்கிறேன்.
vasanth balan is good
Good review. But the owner character is not Pazha.Karupaiza. Please check. He is tv serial actor.
Post a Comment