Flash News

Monday, March 22, 2010

அல்லி ராணி அடிமையும், தள்ளு வண்டி தனயனும்…





இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் அல்லி ராணி யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த அல்லி ராணியின் அடிமையாகவும், பிரதிநிதியாகவும் இன்று பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் தனது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






இந்தியாவின் பல மாநிலங்களை தனது மகனின் பட்டம் சூட்டும் விழாவுக்கு சோதனைக் கூடங்களாக சோனியா பயன் படுத்திக் கொண்டிருப்பது குறித்த செய்திகளை நாம் பத்திரிக்கைகளின் காண்கிறோம்.

இந்தியா நேரு குடும்பத்துக்கு நிரந்தர லீசுக்கு விடப்பட்டது போல, அந்தக் குடும்பம் இன்றும், என்றும் நடந்து கொண்டே வந்திருக்கிறது.



உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் நடத்தப் பட்ட சோதனை நல்ல பயனை கொடுத்திருப்பதையடுத்து, காங்கிரஸ் பலவீனமாக இருக்கும், தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கும், தனது மகன் பட்டம் சூட்டப் படும் நாளில், காங்கிரசுக்கு போட்டியாளர்களே இல்லாத ஒரு சூழலை உருவாக்கவும், காங்கிரஸ் தொடர்ந்து திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறது.



இந்தியாவின் மிகப் பெரிய ஊழலாக உருவெடுத்த ஸ்பெக்ட்ரம் ஊழலை திமுகவுக்க நெருக்கடி கொடுக்க ஒரு அருமையான ஆயுதமாகவே காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. 2009ல் காங்கிரஸ் கட்சிக்கு முன்பை விட அதிகமான அளவுக்கு எம்.பி.கள் கிடைத்ததும், திமுகவை அக்கட்சி 2004ல் நடத்தியதற்கும் தற்போது நடத்துவதற்கும் ஏராளமான வித்தியாசம் இருந்தது என்பதைக் கண்டோம்.


ராசாவுக்கு மீண்டும் தொலைத் தொடர்பு அமைச்சகம் வழங்கப் பட மாட்டாது என்று காங்கிரஸ் பிடிவாதம் பிடித்ததும், கருணாநிதி பிடிவாதமாக அத்துறைதான் வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து அத்துறையை பெற்றதும் நாம் அறிந்ததே.


கிராமங்களில் பொலி காளை என்று காளை மாட்டை வளர்த்து வருவார்கள். இன்று போல Artificial insemination டெக்னாலஜியெல்லாம் வளராத காலத்தில், பசு மாட்டோடு இனப்பெருக்கம் செய்வதற்கு இந்தப் பொலி காளைகள் மட்டும் தான். இந்தப் பொலி காளைகள், அடங்கவே அடங்காது. மாட்டு வண்டியில் பூட்டினால், தறி கெட்டு ஒழுங்காகச் செல்லாமல் அலையும். எப்போது பார்த்தாலும் ஊரைச் சுற்றிக் கொண்டு திரியும். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இந்தப் பொலி காளையின் தொல்லை பொறுக்க முடியவில்லை என்றால் “காயடிப்பது” என்ற ஒரு தந்திரத்தை பயன்படுத்துவார்கள். இது என்னவென்றால் இந்தப் பொலிகாளையின் விதைப் பைகளை நசுக்கி, இந்தக் காளையை இனப்பெருக்கத்திற்கு தகுதியிழப்பு செய்து விடுவார்கள். காயடிக்கப் பட்ட காளை, சாதுவாக, வைக்கோலை மேய்ந்து கொண்டு சாதுவாக இருக்கும். வண்டியில் பூட்டினால் ஒழுங்காக போகும்.


தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தில், எந்த முடிவு எடுப்பதென்றாலும் 5 அல்லது 6 அமைச்சர்கள் கொண்ட குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்ற விதியை போட்டு, புதிதாக டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளைத் திறந்து வைப்பதைத் தவிர, தன்னிச்சையாக எந்த வேலையையும் ஆ.ராசா செய்ய முடியாத வகையில் நெருக்கடி அளித்து, ராசாவை, “காயடிக்கப் பட்ட காளையாகவே” மன்மோகன் சிங் மாற்றி விட்டார்.




இந்தத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தில் நெருக்கடிகள் வரும் என்றுத் தெரிந்தும், இத்துறைதான் வேண்டும் என்று கருணாநிதி பிடிவாதம் பிடித்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. சுதந்திர இந்தியா சந்தித்த மிகப்பெரிய ஊழல், எந்த நாளிலும் விசாரணைக்கு வரும் என்பது, ஊழலிலே ஊறித் திளைத்த கருணாநிதிக்கு தெரியாததல்ல. அதனால், மீண்டும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தை பெற்று, ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அழிப்பதுதான் கருணாநிதி மற்றும் ராசாவின் திட்டம்.


வல்லவனுக்கு வல்லவன் வைகயகத்தில் உண்டல்லவா ? இத்திட்டத்தை அறிந்த மன்மோகன் சிங், ஆ.ராசா அமைச்சராக இருக்கும் போதே, ராசாவின் துறையில், சிபிஐ யை விட்டு சோதனை நடத்தினார். இச்சோதனையில் ஏராளமான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது. இந்த ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ வசம் உள்ளதால், எப்போது வேண்டுமானாலும், வழக்கு பதிவு செய்து, ராசாவுக்கு பெரிய ஆப்பாக வைக்க காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது.



ஆனாலும், சிபிஐ தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக காட்டிக் கொள்ள பகீரத பிரயத்தனம் செய்தாலும், சீக்கிய கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் காரர்கள் மீது நடவடிக்கை எடுத்ததிலும், அல்லி ராணியின் நெருங்கிய குடும்ப நண்பர், ஒட்டோவியோ கொட்டரோச்சியை வெளிநாட்டுக்கு தப்ப விட்டு, அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவர் எடுக்க வசதி செய்து கொடுத்ததிலெல்லாம் சிபிஐயின் பாரபட்சமற்ற நடவடிக்கையை அனைவரும் அறிவார்கள் என்பதால், தானாக சிபிஐயை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வைக்காமல், டெல்லி உயர்நீதிமன்றமும், டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் தொடுத்திருக்கம் வழக்கில் ஏதாவது உத்தரவு கிடைத்தால் இதுதான் சாக்கென்று, உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது.


இந்நிலையில், டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, கடந்த வாரம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஆ.ராசா மீது வழக்கு தொடுக்க இரண்டு வாரங்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அனுமதி வழங்க ஆணை பெறுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.


இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கை, திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க ஒரு ஆயுதமாக காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது என்பதே உண்மை. ஏனெனில், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முடிவுகள் எடுக்கப் பட்டாலும், இதையறிந்த பிரதமர் என்று வேண்டுமானாலும் தலையிட்டு இதைத் தடுத்திருக்க முடியும். அப்படி செய்யாமல், ராசாவும், கருணாநிதியும், இப்படி ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளிக் குவிக்கையில் வாய் மூடி மவுனியாக இருந்த, அல்லி ராணியின் அடிமைக்கம் இந்த ஊழலில் பெரும் பங்கு உள்ளது.


இது தவிர, இன்னும் ஒரு பெரிய ஊழலில், திமுக பெரும் புள்ளிகள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும், மேம்படுத்தப் பட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப் பட்டது. முதலில் இத்திட்டத்திற்கு மதிப்பீடு தந்தது L&T Ramboll என்ற நிறுவனம். இந்நிறுவனம், இத்திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி செலவாகும் என்ற மதிப்பீட்டை வழங்கியிருந்தது.

சில நாட்கள் கழித்து, இந்த மதிப்பீட்டைக் கணக்கில் கொள்ளாமலேயே, அமெரிக்காவைச் சேர்ந்த Willbur Smith Associates என்ற ஒரு நிறுவனம், ரூபாய் 1500 கோடி செலவாகும் என்ற திருத்திய மதிப்பீட்டை வழங்கியது. இந்த வில்பர் ஸ்மித் என்ற நிறுவனத்தின் சார்பாக, இந்த மதிப்பீட்டை வழங்கியது, ஆ.ராசாவின் பினாமி நிறுவனம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெயரளவில் Willbur Smith மதிப்பீடு வழங்கினாலும், இம்மதிப்பீட்டையெல்லாம் தயாரித்து வழங்கியது, ஆ.ராசாவின் மனைவி இயக்குநராக உள்ள Greenhouse நிறுவனம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





இதுபோன்ற வேலைகளில் ராசா தன்னிச்சையாக இறங்கும் அளவுக்கு தைரியம் இல்லாதவர் என்பதும், ராசாவின் ஒவ்வொரு அசைவின் பின்னணியிலும் கருணாநிதி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறான ஊழல்களில் திமுக இப்போது இறங்குவதற்கான காரணம் இருக்கிறது.


கடந்த யுபிஏ அரசாங்கத்தில், கப்பல் மற்றும் தரைப் போக்குவரத்து டி.ஆர்.பாலு வசம் இருந்ததால், இந்தியா முழுவதும் கட்டப் படும் சாலைகள் மற்றும், பாலங்கள் கட்டுமானத்தில் பெரும் தொகையை கையாடுவது சிரமம் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போதைய யுபிஏ அரசாங்கத்தில், இந்த சாலைப் போக்குவரத்து, திமுக வசம் இல்லை. தொலைத்தொடர்புத் துறையில் எந்த ஊழலும் செய்ய முடியாத அளவுக்கு கடுமையான கட்டுப் பாடுகள் இருக்கின்றன.

ஜவுளித் துறையில் பெரிய அளவில் ஊழல் ஏதும் செய்ய முடியாது. மேலும், தயாநிதி மாறனை, முன்பு போல முழுமையாக நம்ப கருணாநிதி தயாராக இல்லை.


ரசாயனம் மற்றும் உரத் துறைக்கு அமைச்சராக இருக்கும் அழகிரி, பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் அழும் குழந்தை போல, மதுரையில், காதுகுத்து, கபடிப் போட்டி, பூப்பூ நீராட்டு விழா போன்ற விழாக்களில் கலந்து கொள்வதில் பிசியாக இருப்பதால் அந்தத் துறையிலும் ஒன்றும் காசு பார்க்க முடியவில்லை.


அதனாலேயே இது போல, தமிழ்நாட்டில் நடக்கும் எந்தத் திட்டங்களாக இருந்தாலும், எந்தத் துறையாக இருந்தாலும், அதில் காசு பார்ப்பது என்று கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், இதிலும் ராசாவுக்கு ஆப்பு காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வில்பர் ஸ்மித் நிறுவனம் வழங்கியிருந்த திட்ட மதிப்பீட்டை கப்பல் போக்குவரத்துத் துறையும் சாலைப் போக்குவரத்துத் துறையும் நிராகரித்து விட்டன. மேலும் கடந்த ஜனவரி மாதத்தில், சென்னை க்ரீம்ஸ் சாலையில் இருந்த, ஆ.ராசாவின் பினாமி அலுவலகத்தில், டெல்லியைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டு, இந்த மதிப்பீடு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றிச் சென்று விட்டதாகவும் தெரிகிறது.


இந்நிலையில், இந்த சென்னைத் துறைமுகம், மதுரவாயல், மேம்படுத்தப் பட்ட இணைப்புச் சாலைத் திட்டத்தையே சுத்தமாக கைவிட்டு விட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், நேற்று (20.03.2010) இந்த சென்னைத் துறைமுகம் மதுரவாயல் மேம்படுத்தப் பட்ட இணைப்புச் சாலை தொடர்பாக சிபிஐ முழுமையான விசாரணை நடத்த சிபிஐக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஸ்பெக்ட்ரம், மதுரவாயல் சாலை போன்ற திட்டங்களில் சிபிஐ விசாரணையை முடுக்கி விட்டதன் மூலம், சட்டமன்றத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி வைக்கும் பட்சத்தில் 100க்கும் அதிகமான இடங்களும், துணை முதல்வர் பதவியோடு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் வைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு திமுக மசியா விட்டால், கூட்டணியை முறித்துக் கொண்டு, திமுக மத்தியில் செய்த ஊழல்கள் தொடர்பாக விசாரணையைத் தீவிரப் படுத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதையெல்லாம் நன்கு அறிந்த தள்ளுவண்டித் தனயன், காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனியே தேர்தலை சந்தித்தால் என்ன வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்று உளவுத் துறையை முடுக்கி விட்டு, சர்வே நடத்திக் கொண்டிருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்லிராணியின் அடிமையும் தள்ளு வண்டித் தனயனும் நடத்தும் இந்த கீரி பாம்பு சண்டையால், வேடிக்கைப் பார்க்கும் நமக்குத் தான் நஷ்டம் என்பதுதான் வேதனை.


சவுக்கு

1 comment:

vasan said...

அல்லிராணியின் அடிமையும் தள்ளு வண்டித் தனயனும் // அடிமை makkal // அடிமை maakkal.

Post a Comment