Flash News

Thursday, November 26, 2009

இந்தியா ஏழை நாடா ?



இந்தியா வளரும் நாடு, மூன்றாம் உலக நாடு, என்று அனைவரும் கூறுகிறார்கள். இது உண்மையா ? ஏன் இந்த நிலை ?

இந்தியா சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் 3 மாதங்கள் மற்றும் 9 நாட்கள் ஆகின்றன. இந்திய அரசின் கணக்குப் படி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான அளவுகோல், மாதத்துக்கு ரூபாய் 300க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கின்றனர். இவ்வாறு மாதத்துக்கு ரூபாய் 300க்கும் கீழே சம்பாதித்து, வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா ? 30 கோடி.


உலக வங்கி நிர்ணயித்துள்ள அளவுகோலின்படி, ஒரு சாதாரண வாழ்க்கை வாழ, மாதத்துக்கு ரூபாய் 1410/- சம்பாதிக்க வேண்டும். இந்திய அரசு நிர்ணயித்துள்ள கணக்குப் படி, (அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியத்தின்படி) மாதம் ஒரு நபர் ரூபாய் 1250/- சம்பாதிக்க வேண்டும்.


ஆனால், மாதம் ரூபாய் 300க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கையே 30 கோடியைத் தாண்டுகிறது. இந்நிலையில் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாகப் பெறுபவர்களின் எண்ணிக்கையை உத்தேசமாக கணக்கிட்டால் கூட, 50 சதவிகிதத்தைத் தாண்டுகிறது.


இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்ப்ஸ் என்ற பத்திரிக்கை, ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இவ்வாறு, இந்த ஆண்டு இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை இப்பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா ? 14,95,040 கோடி இந்திய ரூபாய்கள்.

இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர், பிறப்பில் இந்தியராக வெளிநாட்டில் வசிக்கும், லட்சுமி மிட்டல். இவரது சொத்து மதிப்பு 14,01,600 கோடி இந்திய ரூபாய்கள்.

மூன்றாவது இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானியின் இளைய சகோதரரும், அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவருமான அனில் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 8,17,600 கோடி இந்திய ரூபாய்கள்.


இப்பட்டியலில் 100வது இடத்தில் இருப்பவர் டெல்லியைச் சேர்ந்த ஹர்தீப் பேடி. ட்யூலிப் டெலிகாம் நிறுவனத்தின் தலைவரான இவரின் சொத்து மதிப்பு 19,388 கோடி இந்திய ரூபாய்கள்.


இப்பட்டியலில் உள்ள 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ? 1,28,79,022 கோடி இந்திய ரூபாய்கள். அதாவது ஒரு கோடியே, இருபத்தி எட்டு லட்சத்து, எழுபத்து ஒன்பதாயிரத்து இருபத்தி இரண்டு கோடி ரூபாய்கள்.


தலை சுற்றுகிறதா ? 100வது இடத்தில் இருப்பவரின் சொத்து மதிப்பே பத்தொன்பதாயிரத்து முன்னூற்று எண்பத்து எட்டு கோடி ரூபாய்கள் என்றால், ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் வைத்திருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் ?


இந்தத் தொகை அனைத்தும், கணக்கில் காட்டப்பட்ட வெள்ளைப் பணம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவில், கருப்புப் பணத்தை சேர்க்காத நிறுவனமே இல்லை என்பதையும் மறவாதீர்கள்.

இவர்கள் பணக்காரர்களாக இருப்பது தவறா என்ன என்று கேட்பீர்கள். தவறு இல்லைதான். ஆனால் கீழ்கண்ட புள்ளி விபரங்களை பாருங்கள்.


இந்திய அரசின் புள்ளி விபரங்களின் படியே, 1997ம் ஆண்டு முதல், 2007 வரை கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 1,82,936.

சராசரியாக இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 15,747 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன ?

தாள முடியாத கடன் தொல்லை மட்டுமே. இந்தியா பெரும்பான்மையாக விவசாய நாடாக இருப்பினும், விளையும் விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கவில்லை எனில், விவசாயி கடனை எப்படி திருப்பிக் கட்டுவான் ?

வங்கிகளில் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்யும். கந்து வட்டிக் காரனிடம் வாங்கிய கடன் ?


1991 முதல் 2001 வரையிலான காலத்தில் கட்டுப்படி ஆகவில்லை என்று விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழிலுக்கு போனவர்களின் எண்ணிக்கை 80 லட்சம்.


இந்தியாவில் விவசாயத்திற்கு மான்யம் கொடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கும் பன்னாட்டு ஆணையம் மற்றும் உலக வங்கி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விவசாயிகளுக்கு வழங்கப் படும் மான்யத்தை கண்ட கொள்ளாமல் போனதால்தான், இந்தியாவில் விவசாயிக்கு, அத்தொழில் கட்டுப்படியாகாமல் போகிறது.

பருத்தி விவசாயிகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சந்தைகளுக்கு போட்டியிட முடியாமல்தான் நொடித்துப் போய், பருத்திக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை நாடுகின்றனர்.
வணிக நிறுவனங்கள் நேரடியாக, விவசாயியின் நிலத்தை சொந்தம் கொண்டாடா விட்டாலும், இது தொடர்பான இதர அத்தனை இடங்களிலும், தங்களின் சூழ்ச்சி வலையை மிக நெருக்கமாக பின்னியுள்ளனர்.

கொள்முதல், விற்பனை மையங்கள், சந்தை, விளை பொருட்களின் விலை ஆகிய அத்தனையும், நிறுவனங்களின் பிடியில் இருக்கையில், நிலத்தை மட்டும் கையில் வைத்து என்ன செய்வான் விவசாயி ?

இது போக, விவசாயியிடம் மிச்சமிருக்கும், ஒரே சொத்தான நிலத்தையும் பிடுங்கி பன்நாட்டு நிறுவனங்களின் கைகளில் தாரை வார்க்கத்தான், Special Economic Zones என்று அழைக்கப் படும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப் பட்டு வருகின்றன.


தற்போது, பன்னாட்டு நிறுவனங்களின் சதி வலையால் இந்தியாவின் பல பகுதிகளில் மரபணு மாற்றப் பட்ட பருத்தி மற்றும் இதர பயிர்களை மட்டுமே விதைக்கும் அளவுக்கு விவசாயிகள் தள்ளப் படுகிறார்கள். இந்த மரபணு மாற்றப் பட்ட விதைகள், வழக்கத்தை விட, அதிக தண்ணீர் இழுப்பதால், விவசாயிகள், தண்ணீருக்கும் கஷ்டப்பட்டு, விவசாயத்தை பெரிய தலைவலியாக நினைக்கும் அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.


இதையும், இதற்கு முன் கூறிய இந்திய பணக்காரர்களின் பட்டியலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். மேலும் ஒரு புள்ளி விபரத்தை உங்களுக்காக வழங்குகிறேன்.

இந்தியாவில், அதிகம் ஊதியம் பெறும் நபர்களின் பட்டியலை “பிசினஸ் இந்தியா நாளேடு“ வெளியிட்டுள்ளது. முதல் பத்து நபர்களின் பட்டியலை மட்டும் கீழே தருகிறேன். (இந்தப் பட்டியலில் குறிப்பிடப்படும் ஊதியம் ஆண்டுதோறும் வரும் பங்குத்தொகை மற்றும் போனசையும் சேர்த்து )


அனில் அம்பானி


1) அனில் அம்பானி 104 கோடிகள்
(அனில் திருபாய் அம்பானி நிறுவனம்)


கலாநிதி மாறன்


2) கலாநிதி மாறன் 37 கோடிகள்
(சன் டிவி குழுமம்)


மல்லிகா கலாநிதி


3) மல்லிகா கலாநிதி 37 கோடிகள்
(சன் டிவி குழுமம்)


ராமசுப்ரமணிய ராஜா

4) பி.ஆர்.ராமசுப்ரமணிய ராசா 57 கோடிகள்
(இந்தியா சிமென்ட்ஸ் மேலாண்மை இயக்குநர்)


நவீன் ஜின்டால்

5) நவீன் ஜின்டால் 48 கோடிகள்
(இணை மேலாண் இயக்குநர், ஜின்டால் குழுமம்)


மல்வீந்தர் சிங்

6) மல்வீந்தர் சிங் 23 கோடிகள்
(ரான்பாக்சி மருந்து நிறுவன தலைவர் மற்றும்
மேலாண் இயக்குநர்)

சுனில் மிட்டல்


7) சுனில் பாரதி மிட்டல் 20 கோடிகள்
(ஏர் டெல் நிறுவன மேலாண் இயக்குநர்)


ஐநாக்ஸ் தியேட்டர்


8) விவேக் ஜெயின் 20 கோடிகள்
(ஐநாக்ஸ் குழும மேலாண் இயக்குநர்)


கவுதம் அடானி


9) கவுதம் அடானி 20 கோடிகள்
(அடானி குழும தலைவர்)

ப்ரிஜ் மோகன் லால் முன்ஜால்

10) பிரிஜ் மோகன் முன்ஜால் 19 கோடிகள்
(ஹீரோ ஹோண்டா நிறுவன தலைவர்)

இப்பட்டியலில் அதிகம் ஊதியம் பெறும் 3134 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் முதல் பத்தைத்தான் மேலே பார்த்தீர்கள். இப்பட்டியலில் கடைசியாக 3134வது இடத்தில் இருப்பவரின் ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா ?


ரூபாய் 50 லட்சம்.

3134வது இடத்தில் இருப்பவரே ஆண்டுக்கு 50 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள் என்றால் இவருக்கு மேலே இருப்பவர்கள் எவ்வளவு பெறுவார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

இந்தப் பட்டியலை பார்த்து விட்டீர்களா ?

இந்தப் பட்டியலில் இருப்பவர்கள்தான், இந்திய அரசையும், இந்திய சட்டங்களையும், இந்திய நீதிமன்றங்களையும், அனைத்து மாநில அரசுகளையும், மாநில சட்டங்களையும், இந்தியா மற்றும் மாநிலங்களின் கொள்கைகளையும், இந்தியா மற்றும் மாநிலங்களின் பட்ஜெட்களையும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பிரதமர்களையும், முதலமைச்சர்களையும், மத்திய மாநில அமைச்சர்களையும், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற உயர் அதிகாரிகளையும், உண்மையில் நிர்வகிப்பவர்கள்.

இவர்கள்தான் அனைத்துக்கும் சூத்திரதாரிகள்.

இவர்களின் கையில் இருக்கும் நூலிலேதான் பிரதமர் உட்பட, இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளும் பொம்மைகளாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள்தான் பரப்பிரம்மம்.

இவர்கள்தான் கடவுள்.

இவர்களன்றி, இந்தியாவில் ஓர் அணுவும் அசையாது.

இவர்கள் இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் ஒரு சதவிகிதத்திற்கும் வெகு கீழேதான் இருப்பார்கள்.

இந்திய மக்கட்தொகையில் பெரும்பான்மை மக்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா ?


கீழே உள்ள இந்தப் படங்களை பாருங்கள்.




























இப்போது உங்களுக்கு ஆத்திரம் வருகிறதா ?

இதே ஆத்திரம் ஆந்திரா, சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு வந்ததால்தான் அவர்கள் நக்சலைட்டுகள் ஆனார்கள்.

அவர்கள் தீவிரவாதிகளா ? அவர்கள் தீவிரவாதிகாளானால், ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டும், இவ்வளவு பணம் மேலும் மேலும் சேர்வதற்கு காரணமாக இருந்து வழிவகை செய்து கொடுத்து, அவர்கள் ஆட்டுவித்தபடி ஆடிக்கொண்டிருக்கும், நம் அரசியல்வாதிகள் மஹாத்மாக்களா ?

சவுக்கு

2 comments:

Sundararajan P said...

அருமையான பதிவு. இந்தியாவின் அரசியல் சட்டம், அம்பேத்கார் தலையிலான குழுவால் இயற்றப்பட்டு நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்ட நாளில் வெளிவந்துள்ள இந்த பதிவு, இந்திய அரசியல் சட்டம் யாருக்காக, யாரால், எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.

Anonymous said...

எல்லாமே வாசிக்கும்போது நல்லபதிவுதான் வாசித்த பின் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதே கேழ்வி.
பிரியாணிக்கும் சாராயப்புட்டிக்கும் வோட் டைப்
போடும்வரை இது மாறப்போவதில்லை.
ம.கண்ணபிரான்.

Post a Comment