Flash News

Saturday, November 14, 2009

தாமதிக்கப் பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதியா ?





கருணாநிதி, முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக “தாமதிக்கப் பட்ட நீதி, மறுக்கப் பட்ட நீதி“ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கருணாநிதி பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.

“உச்ச நீதிமன்றம் அல்ல, வேறு எந்த நீதிமன்றமாக இருந்தாலும், அதன் தீர்ப்பை எதிர்த்து நான் கருத்து சொல்வதில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக் மாறாக ஒரு மாநில அரசு சட்டம் இயற்றிய பிறகும் அதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அந்த சட்டத்தை பற்றி எதுவும் கூறாமல், அந்த மாநில கோரிக்கையை ஏற்று தீர்ப்பளிக்கிறது என்றால், ஏன் இப்படி என்ற திகைப்பும், எதற்காக இப்படி என்ற வியப்பும் ஏற்படுமா இல்லையா ?

தாமதிக்கப் பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதி என்ற பழமொழி பலித்து விடாமல் இருக்க யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை“ என்று கூறியுள்ளார்.






முதலில் கருணாநிதி தீர்ப்பை மதிக்கிறாரா ? கருணாநிதிக்கு நீதிமன்றங்களின் மேல் மரியாதை உள்ளதா ?

கேரள அரசு நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், தானே ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது, அதை உச்ச நீதிமன்றம் கண்டிக்காமல் விட்டு விட்டதே என்று அங்கலாய்க்கும் கருணாநிதி, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்கிறாரா ?

சென்னை உயர்நீதிமன்றம் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்யச் சொல்லி 15 நாட்களுக்கு மேல் ஆகிறதே !

இந்தக் கருணாநிதியின் செயலற்ற தன்மை நீதிமன்ற அவமதிப்பாக ஆகாதா ?

யாரை ஏமாற்றுகிறார் கருணாநிதி ?

“கபட நாடகம்“ ஆடுவதில், கருணாநிதியை விஞ்ச யாருமே கிடையாது. கருணாநிதியை நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்றாலும், உள் துறையின் அமைச்சராக இருக்கும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகளை சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு, துறை நடவடிக்கை, ஆகிய நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும், இதை எடுக்க ஏதுவாக அவர்கள் நால்வரையும் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்ததே.

பதினைந்து நாட்களாக கருணாநிதி, என்ன செய்கிறார் ? “மானாட மயிலாட“ பார்த்துக் கொண்டிருப்பாரோ ?

சொல்ல முடியாது மானாட மயிலாட பார்க்காமல் அவர் கதை வசனம் எழுத, தற்போது ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் “பெண் சிங்கம்“ பட வேலைகளை கவனித்துக் கொண்டிருப்பார்.

அச்சுதானந்தனாவது பரவாயில்லை, தங்களது மாநிலத்தின் நலனுக்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பை வளைக்க சட்டம் இயற்றி தங்களின் மாநில நலனை பாதுகாக்கிறார்.

ஆனால் கருணாநிதி ????? வழக்கறிஞர்களை, பொதுமக்களை, நீதிபதிகளை, நீதிமன்ற சொத்துக்களை அடித்து நொறுக்கிய காவல்துறை பொறுக்கிகளை அல்லவா பாதுகாக்கிறார் ?
அயோக்கியத்தனமில்லையா இது ?

எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா, இத்தீர்ப்பு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் இச்சம்பவத்திற்கு கருணாநிதி உடனடியாக அந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பென்ட் செய்திருக்க வேண்டும், அப்படி செய்யவில்லை என்றால் கருணாநிதி உத்தரவில்தான் இத்தாக்குதல் நடைபெற்றது, ஆகையால் கருணாநிதி இதற்கு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும், நீதிமன்றம் சென்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்று அறிக்கை விட்டாரே.

எல்லா அறிக்கைகளுக்கும், ஆந்திராவைப் பார், கேரளாவைப் பார், தமிழகம்தான் அமைதிப் பூங்கா என்று வாய் கிழிய அறிக்கை வெளியிடும் கருணாநிதி, ஜெயலலிதாவின் இந்த அறிக்கைக்கு ஒரே வார்த்தையில், நீதிமன்றம் தன்னைக் கண்டிக்கவில்லை, பாராட்டித்தான் இருக்கிறது என்று முடித்து விட்டார்.

ஆனால், இந்த அதிகாரிகள் ஏன் பணி இடைநீக்கம் செய்யப் படவில்லை என்று ஒரு வார்த்தைக் கூட கூறவில்லை.

முதலைக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதியின் கபட நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில், தக்க பாடம் புகட்டப் படுவார் கருணாநிதி.

சவுக்கு

2 comments:

பித்தன் said...

//முதலைக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதியின் கபட நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில், தக்க பாடம் புகட்டப் படுவார் கருணாநிதி.//


பார்த்துக் கொண்டு மட்டும்தான் இருக்கிறார்கள்.....

சவுக்கு said...

அந்த வருத்தத்தில் தான் நண்பரே, இத்தனை புலம்பல். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

Post a Comment