நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பல அரசியல் கட்சிகளை நிலைகுலையச் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி எதிர்பாராமல் கிடைத்த வெற்றியில், இறுமாப்புடன் இருக்கிறது. பிரதான எதிர்க் கட்சிகள், இந்த தோல்வியை எப்படி எதிர்கொள்வது, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில், திசை தெரியாமல் நிற்கின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்று களத்தில் இறங்கிய பிஜேபி, பெருங்குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் அறிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஒரு நாள் யஷ்வந்த் சின்கா ஒரு அறிக்கை வெளியிட்டு கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறார். மறுநாள், ஜஸ்வந்த் சிங் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். கட்சியில் குழப்பமே இல்லை என்று ஒரு தலைவர் அறிக்கை வெளியிடுகிறார். அதிகாரம் இல்லையென்றால், கட்சி நடத்த முடியாது என்பதையே இந்தக் குழப்பங்கள் காட்டுகின்றன.
பிலிபித் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பிஜேபி வேட்பாளர் வருண் காந்தியின் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்த பேச்சு நாடெங்கிலும் கடுமையாக கண்டிக்கப் பட்ட போதிலும், பிஜேபியால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. “இந்துக்கள் பலவீனமானவர்கள் என்றோ, அவர்கள் பின்னால் யாரும் இல்லை என்றோ அவர்களுக்கு எதிராக யாராவது கரம் உயர்த்துவார்களேயானால், கீதையின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், அந்தக் கரத்தை வெட்டி எறிவேன்“ என்று மேடையில் பேசினார் வருண் காந்தி. தேர்தல் ஆணையம், வருண் காந்தியை வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று பிஜேபிக்கு ஆலோசனை வழங்கியது. ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, வருண் காந்தி பேசியது கொஞ்சம்தான் வெளிவந்திருக்கிறது, முழுமையான பேச்சு இன்னும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று பேட்டியில் கூறினார். இதையெல்லாம் மீறி வருண் காந்தியின் பேச்சுக்கு வக்காலத்து வாங்கியது பிஜேபி, வருண் காந்தி, அந்தப் பேச்சுக்களை தான் பேசவில்லை, அந்த டேப்புகள் பொய் என்று மழுப்பினார். இன்று வருண் காந்தியின் பேச்சுக்கள் உண்மை, என்று ஐதராபாத்தில் உள்ள தடய அறிவியல் நிறுவனம் சான்றளித்துள்ளது. இன்றாவது, வருண் காந்தி பேசியது தவறு என்று வெளிப்படையாக பேச முடியாமல் மழுப்பி வருகிறது பிஜேபி.
தீவிர இந்துத்வாவா அல்லது மிதமான இந்துத்துவாவா என்று ஏக குழப்பத்தில் இருந்தது பிஜேபி. இன்னும் இந்தக் குழப்பம் தீரவில்லை. அத்வானி தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்றதும், அடுத்தக் கட்ட தலைவர்களுக்குள் தலைவர் பதவிக்கான குடுமிப் பிடி சண்டையை தவிர்க்க அத்வானியையே தலைவர் பதவியில் நீடிக்கச் செய்தது பிஜேபி.
ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து, காங்கிரஸ் அரசுக்கு எவ்வளவோ தலைவைலி தர முடியும் என்பதை பிஜேபி உணர மறுக்கிறது. காங்கிரஸ் கடைபிடித்து வரும் இந்தப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்க முடியாமல், உள்ளது பிஜேபி. ஏனெனில், இந்தக் கொள்கைகளை 2004 வரை பின்பற்றிய கட்சிதானே இது. தேசிய செயற்குழுக் கூட்டத்தில், தோல்விக்கான காரணங்கள் ஆராயப் படும் என்று அறிவிக்கப் பட்ட பின்னர், முன்னணித் தலைவர்கள் குறைவான நேரமே பேச அனுமதிக்கப் பட்டார்கள் என்பது, இன்னும் தன்னுடைய தவறுகளை உணர பிஜேபி தயாராக இல்லை என்பதையே உணர்த்துகிறது.
அடுத்து, மூன்றாவது அணி அமைக்கப் போகிறோம் என்று கிளம்பிய மார்க்சிஸ்ட் கட்சி, இன்று தன்னுடைய வேர்களை இழந்து தடுமாறிக்கொண்டு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளியிலிருந்து ஆதரவு என்பதில் தொடங்கி, ஏறக்குறைய ஆளுங்கட்சியாகவே மாறிப்போனார்கள் தோழர்கள். தினமும், மன்மோகன் சிங்கிற்கு மிரட்டல் விடுவது நாங்கள் இல்லாமல் இந்த அரசு இல்லை என்று மார்தட்டிக் கொள்வது என்று தொடங்கி, இறுதியில், மக்களிடமிருந்து அந்நியப் பட்டுப் போனார்கள். இவர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கங்களும், போராட்ட குணத்தை இழந்து மழுங்கிப் போனதுதான் இந்த ஐந்தாண்டுகளில் இடதுசாரிகள் கண்ட பலன்.
அணு ஒப்பந்தத்தை எதிர்த்து ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கியது தவறு என்று இன்று பேசி வருகிறார்கள். அணு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை வாபஸ் வாங்காமல், வேறு எதை எதிர்த்து வாபஸ் வாங்க வேண்டும் ? காங்கிரசோடு சேர்ந்து அமெரிக்காவிற்கு துதி பாட வேண்டும் என்கிறார்களா ? ஆதரவை வாபஸ் வாங்கியவுடன், எதற்காக வாபஸ் பெற்றோம் என்பதையும், அணு ஒப்பந்தத்தால் இந்தியா சந்திக்கவிருக்கும் ஆபத்துகளையும் மக்கள் மத்தியில் விளக்கத் தவறி விட்டார்கள் இடது சாரிகள். 1991ல் புதிய பொருளாதார கொள்கை செயல்படுத்தப் பட்டபோது, அதன் ஆபத்தை விளக்கி இந்தியா முழுவதும், இடதுசாரிகள் மேற்கொண்ட பிரச்சாரங்களும், போராட்டங்களும் தான், அவர்களை வளர்த்து 2004 தேர்தலில், பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. அதை மறந்ததால், இன்று வேர்களை இழந்து குழப்பத்தில் இருக்கிறார்கள் இடது சாரிகள்.
ஐந்தாண்டுகள் ஆட்சிக்கு அருகில் இருந்ததன் பலன், ஊழல் குற்றச் சாட்டில் சிக்கியுள்ள தங்களது கட்சியின் பொலிட்ப்யூரோ உறுப்பினரை பாதுகாப்பதில் முடிந்துள்ளது. இடது சாரிகளின் கோட்டையான மேற்கு வங்கம், நக்சல்பாரிகள் வலுவான தளத்தை அமைக்கும் அளவுக்கு அதன் கூடாரமே கலகலத்துப் போய் உள்ளது.
நாட்டில் உள்ள பிற கட்சிகள், தங்களிடம் இருக்கும் ஒன்று இரண்டு எம்பி சீட்டுகளை வைத்து எப்படி காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுப்பது என்ற போட்டியில், 10, ஜன்பத் சாலையில், வரிசையில் நிற்கின்றன. ஒரே மாநிலத்தில் நேரெதிர் துருவங்களாக இருக்கும் கட்சிகள் கூட, காங்கிரஸ் ஆதரவு என்பதில் போட்டி போடுகின்றன.
இந்தச் சூழ்நிலையில், எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அரசியல் வானில், ஒரு பெரும் வெறுமை ஏற்பட்டுள்ளது. இந்த வெறுமை, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஏகபோகத் தன்மையை (monopoly) ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த ஏகபோகம், இந்திய பொருளாதாரத்தை, மொத்தமாக பந்நாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கும் நிலைக்கும், இந்தியப் பொருளாதாரத்தின் சுயசார்புத் தன்மையை அழிக்கும் நிலைக்கும் இட்டுச் செல்லும்.
இடது சாரிகள் தங்கள் உறக்கத்திலிருந்து மீண்டு எழ வேண்டும். இடது சாரிகளுக்கு முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் பொறுப்பு இப்போதுதான் உள்ளது.
பிஜேபி, தனது இந்துத்வா கொள்கையை உதறி எரிந்து பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.
இல்லையெனில், வரும் ஐந்தாண்டுகளில், காங்கிரசின் துரோகங்களுக்கு மவுன சாட்சியாய் இருந்த குற்றவாளிகள் என வரலாறு இவர்களை பதிவு செய்யும்.
/ஒப்பாரி/
2 comments:
நல்ல அலசல், இந்த தேர்தல் நிறைய பேரின் ஜாதகத்தை மாற்றிப்போட்டு விட்டது, முக்கியமாக தோழர்கள் தங்கள் பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்தை உண்டுபண்ணியுள்ளது.
தோழர், பிஜேபி தனக்கு பாராளுமன்றத்தில் உள்ள பலத்தை, சரியாக பயன்படுத்தினால், காங்கிரஸ் கட்சி கொண்டு வரப்போகும், பல மோசடியான சட்டங்களுக்கு முட்டுக் கட்டை போட முடியும் என்ற எண்ணத்திலேயே அப்படி எழுதியுள்ளேன். மற்றபடி, பிஜேபி பற்றிய உங்கள் கருத்தில் நானும் உடன்படுகிறேன்.
Post a Comment