Flash News

Friday, June 5, 2009

மாயாண்டி குடும்பத்தார் திரைப்பட விமர்சனம்





திமுக பட நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்திருக்கிறது "மாயாண்டிக் குடும்பத்தார்" திரைப்படம். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக வந்திருக்கிறது. கதாநாயகனாக நடிக்கும் கருணாநிதியே எழுதி இயக்கியுள்ள படம் இது.

திருக்குவளையிலிருந்து ஒரு தகரப் பெட்டியோடு சென்னைக்கு வந்து சென்னை மாநகரத்தையே விலைக்கு வாங்கும் அளவுக்கு வளர்ந்த ஒரு மனிதனின் கதைதான் இந்தப் படம். அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் உழைப்பால் திடீர் பணக்காரர் ஆவது போலல்லாமல் ஊரை அடித்து உலையில் போட்டு எப்படி மாயாண்டி தன்னையும் தன்
குடும்பத்தாரையும் பெரும் செல்வந்தர் ஆக்குகிறார் என்பதை, ஆடல் பாடல் காட்சிகளோடு சுவையோடு விளக்கப் பட்டிருக்கிறது.



கதாநாயகன் தன்னுடைய தமிழை மட்டுமே மூலதனமாக வைத்து சென்னைக்கு வருகிறார். சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார். நாடகங்கள் எழுதுகிறார். இந்த தொழிலில் எதிர்ப்பார்த்த அளவுக்கு வருமானம் வராததால் அரசியலில் சேரலாம் என்று முடிவெடுத்து அரசியலில் நுழைகிறார். அப்போதைய கட்சித் தலைவர் கழகம் என்பது குடும்பம் போல என்று சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு குடும்பத்தையே கழகமாக கதாநாயகன் எப்படி மாற்றியமைக்கிறார் என்பது துல்லியமான காட்சிகளால் விளக்கப் பட்டுள்ளது.

திரைப்படத்தில் மொத்தம் மூன்று கதாநாயகிகள். முதல் கதாநாயகி பத்மாவதி அதிக முக்கியத்துவம் இல்லாமல், ஒரு சில காட்சிகளிளேயே காணாமல் போய் விடுகிறார். அவர் மகனாக நடிக்கும் முத்துவுக்கும் கனமான பாத்திரம் கொடுக்கப் படவில்லை. குடிப்பழக்கம் ஏற்பட்டு, பத்மாவதி மறைவுக்குப் பின் முக்கியத்துவம் இல்லாமல் விடப்பட்டுள்ளார்.

சில காட்சிகளுக்குப் பிறகு இரண்டாவது கதாநாயகி தயாளு வருகிறார். படம் முழுக்க கதாநாயகன் மீது ஆக்ரமிப்பு செலுத்துவதாக திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. இவருக்கு பிறக்கும் பிள்ளைகள் எப்படி தமிழகத்தையும், படத்தின் இறுதியில் டெல்லியையும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள் என்பதை இயக்குநர் அழகுணர்ச்சியோடு விளக்கியுள்ளார்.




மூன்றாவது கதாநாயகியான ராசாத்தியை காதலித்து, சுயமரியாதை முறைப்படி திருமணம் செய்யும் காட்சிகள் காண்பவர் மனதை கொள்ளை கொள்கின்றன. திருமணம் விமரிசையாக நடந்தாலும், மூன்றாவது கதாநாயகிக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப் படவில்லை. இயக்குநர் ஏன் ராசாத்தியையும் அவர் மகள் கனிமொழியையும் முக்கியத்துவம் குறைந்த பாத்திரங்களாக படைத்திருக்கிறார் என்ற கேள்வி பார்வையாளர் மனதில் எழுகிறது.




அரசியலில் கதாநாயகன் இருக்கையில், கதாநாயனாகன் போல் தோற்றமளித்தாலும், வில்லனாக மாயாண்டிக்கு கடும் நெருக்கடி கொடுப்பவராகவும், பலம் வாய்ந்த வில்லனாகவும் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்தப் படுகிறார். மாயாண்டியாலேயே அரசியலில் அறிமுகப் படுத்தப் பட்டு, கடைசியில் மாயாண்டிக்கே ஆப்பு வைக்கிறார் எம்ஜிஆர். கதாநாயகனை எதிர்த்து கட்சி தொடங்கும் எம்ஜிஆர், ஆட்சியை பிடித்து மாயாண்டியை ஓட ஓட விரட்டுகிறார். இந்த இடத்தில் இடைவேளை வருகிறது.




வில்லனாக வரும் எம்ஜிஆருக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போகவே,சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அந்த கேப்பில் ஆப்படிக்கலாம் என நினைத்த மாயாண்டி, அமெரிக்காவிலிருந்து எம்ஜிஆர் திரும்பி வரும் வரை என்னிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் என்று கோமாளித்தனம் செய்தது எடுபடவில்லை.

13 ஆண்டுகளாக தலைகீழாக நின்று டக்கரடித்துப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல், மாயாண்டி ஓய்ந்து போன நேரத்தில், திடீரென்று வில்லன் எம்ஜிஆர் இயற்கை மரணம் அடைகிறார். இந்த கேப்பில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார் மாயாண்டி.

ஆட்சியை பிடித்தவுடன் மாயாண்டிக்கு சுக்கிர திசைதான். குடும்பம் செழித்து வளர்வதை நன்றாக பார்க்கமுடிகிறது. தமிழகமெங்கும் ஆக்டோபஸ் போல தன் குடும்பத்தினரின் வலையில் வளைத்துப் போடுகிறார் மாயாண்டி.

சன் டிவி என்ற நிறுவனத்தை தன் மருமகன் மற்றும் பேரன் தொடங்க, அதன் காரணமாக குடும்பத்தில் சண்டை ஏற்பட, இந்தக் குடும்பச் சண்டையில் அப்பாவிகள் மூன்று பேரை கொலை செய்யும் காட்சி மிகுந்த திகைப்பை ஏற்படுத்துகிறது. ஆனாலும், இந்தச் சண்டையை சாதுர்யமாக சமாளித்து, குடும்பத்தில் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்துகிறார் மாயாண்டி.

மாயாண்டி நள்ளிரவில் கைது செய்யப் படும் காட்சி படத்தில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.


எம்ஜிஆர் மறைவுக்குப் பின் வில்லியாக அறிமுகமாகும் ஜெயலலிதா, எம்ஜிஆர் அளவுக்கு சோபிக்கவில்லை. மாயாண்டி அவரை எளிதாக வெற்றி கொள்கிறார்.

திரைப்படத்தில் இசைக்கு சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சி அறிமுகப் படுத்தப் பட்டு, படத்துக்கு களை கூட்டுகிறது.

படத்தில் தனியாக காமெடி நடிகர்கள் யாரும் இல்லாமல், மாயாண்டியே காமெடியையும் கையாளுகிறார். மனிதச் சங்கிலி, டெல்லிக்கு தந்தியடிப்பது, 4 மணி நேர உண்ணாவிரதக் காட்சிகளிலெல்லாம் கண்டு தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.

படத்தின் இறுதியில், மாயாண்டிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப் படுவதும் உடல் சுத்தமாக ஒத்துழைக்காவிடினும், தொடர்ந்து ஆட்சியில் ஒட்டிக் கொண்டு இருப்பதாக படம் நிறைவடைகிறது.

மாயண்டியாக நடிக்கும் கருணாநிதியின் நடிப்பு காண்பவர் மனதை கொள்ளை கொள்கிறது. மொத்தத்தில், நவரசங்களும் நிறைந்த ஒரு சிறந்த திரைப்படமாக மாயாண்டி குடும்பத்தார் உருவாகியுள்ளது.

ஒப்பாரி

5 comments:

ananth said...

தங்கள் நையாண்டி பதிவு நன்று. இன்றுதான் தங்கள் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். மீண்டும் வருவேன்

ஒப்பாரி said...

நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

tamilvanan said...

do it like this and remove there skin wish you all the best.

Anonymous said...

மாயாண்டி குடும்பத்தார் படம் சூபருங்கோ....சரி படம் எந்த தேட்டர்ல ஓடுது...

...மாயாவி

Anonymous said...

mayandi kudumbatar thripadam taminadu non a/c yil mulanera kaatchigal dheli il matni yahavum odukiradu for oppari
by
aanand
srilanka

Post a Comment