Flash News

Tuesday, May 12, 2009

அரசரைவிட அரசுக்கு விசுவாசம்


போலீசாரால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் வழக்கறிஞர் புகழேந்தி

கருணாநிதியின் அடிவருடியாய் செயல்படுவதில் காவல்துறை காட்டும் முனைப்பும் அவசரமும் வியக்கத் தக்கதாய் உள்ளது. ஆங்கிலத்தில் MORE LOYAL THAN THE KING HIMSELF என்று ஒரு பழமொழி உண்டு. அதன் பொருள் அரசனை விட அரசுக்கு விசுவாசமாய் இருத்தல். இதைப் போலவே கருணாநிதியைவிட கருணாநிதிக்கு விசுவாசமாக இருக்குமாறு காட்டிக்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு காவல்துறை செயல்பட்டு வருவதை காண முடிகிறது. 10.05.2009 அன்று சோனியாவின் தமிழக வருகையை ஒட்டி பழ.நெடுமாறன் தலைமையில் கருப்புக் கொடி காட்டிய பாரதிராஜா உள்ளிட்ட 120 பேரை காவல் துறை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தது. இவ்வாறு கைது செய்யப் பட்டவர்களில் 3 வழக்கறிஞர்களும் அடக்கம்.

வழக்கமாக மந்தமாக வேலை செய்யும் காவல்துறை, 11.05.2009 விடியற்காலை 4 மணிக்கு சிறையில் அடைக்கப் பட்ட வழக்கறிஞர்கள் மீதுள்ள பழைய வழக்குகளை எடுத்து அவசர அவசரமாக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அரெஸ்ட் வாரண்ட் வாங்கி அன்று மதியமே புழல் சிறைக்கு எடுத்துச் சென்று வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் மீது முறையே 3 மற்றும் 8 அரெஸ்ட் வாரண்ட்டுகளை வழங்கியது காவல்துறை. இவ்வளவு வேகத்தை காவல்துறை நிலுவையிலுள்ள மற்ற வழக்குகளில் காண்பித்திருந்தால் இவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருக்காது.

இந்த காவல்துறையின் அவசரத்திற்கு உதாரணங்களைத் தருகிறேன். இந்த இரு வழக்கறிஞர்கள் மீதும் நிலுவையிலுள்ள வழக்குகள் ஒன்றும் பெரிய கிரிமினல் வழக்குகள் அல்ல. அனைத்து வழக்குகளுமே காவல் துறையால் புனையப் பட்ட பொய் வழக்குகள். வழக்கறிஞர் திரு.புகழேந்தியை 17.02.2009 அன்று திரு.சுப்ரமணிய சுவாமி மீது முட்டை வீசி அவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக பதியப் பட்ட வழக்காகும். 19.02.2009 அன்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய கொடுந்தாக்குதலுக்குப் பிறகு அன்று இரவு கூடிய அன்றைய தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு "17.02.2009 அன்று நடந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப் பட்ட நபர்கள் உடனடியாக விடுதலை செய்யப் படுவார்கள், அச்சம்பவம் தொடர்பாக இனி யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை காவல் துறையினர் அளித்துள்ளனர். இவ்வாறு இவர்கள் அளித்த உத்தரவாதத்தை மீறினால் அது நீதிமன்ற ஆணையை மீறியதாகும் " என்று வழங்கப் பட்டிருந்த உயர்நீதிமன்ற ஆணையை மீறி புகழேந்தியை இவ்வழக்கில் கைது செய்திருக்கிறார்கள்.



போலீ்ஸ் வேனில் அமர்ந்துள்ள வழக்கறிஞர் ரஜினிகாந்த்

அடுத்ததாக 12.11.2008 அன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக உண்மையை (????!!!!)கண்டறிய நீதியரசர் (??!!) சண்முகம் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்தது. அந்த சண்முகம் கமிஷன் அரசு சார்பான சாட்சியாக வழக்கறிஞர் ரஜினிகாந்தை அழைத்து விசாரித்தது. அரசு சார்பாக சாட்சியளித்து சாட்சிகளின் விசாரணை முடிந்தது. இந்நிலையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் அரசு சார்பாக சாட்சியளித்த வழக்கறிஞர் ரஜினிகாந்தை குற்றவாளியாக கைது செய்துள்ளது கருணாநிதியின் காவல்துறை. அரசு சார்பு சாட்சி திடீரென எப்படி குற்றவாளியானார் என்பது ஆள்பவனுக்குத்தான் வெளிச்சம்.
12.05.2009 அன்று 17வது பெருநகர நீதிபதி முன் ஆஜர்படுத்தப் பட்ட இந்த இரு வழக்கறிஞர்களையும் புதிய வழக்குகளில் ரிமாண்ட் செய்ய நீதிபதி மறுத்து இவர்கள் இருவரும் புழல் சிறைக்குச் சென்றபின் சிறையிலிருந்து விடுதலை ஆக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சென்னை மாநகர காவல் துறை ஆணையரும் மற்ற உயர் அதிகாரிகளும் கருணாநிதி நிரந்தர முதல்வர் என்று நினைத்துச் செயல்படுகிறார்களா, அல்லது மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இதைவிட கூழைக் கும்பிடு போட்டு போயஸ் தோட்டத்து நாய்களாய் மாறிவிடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
செல்வி.ஜெயலலிதா ஒரு ஆண்டுக்கு முன் பேசிய ஒரு பொதுக்கூட்டத்தில் இன்று அநியாயமாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகளை தான் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வாழ்நாள் முழுவதும் காக்கிச் சட்டையே போடவிடாமல் செய்வேன் என்று பேசியதை இந்தக் காவல்துறை அதிகாரிகள் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.


"படிச்சவன் சூதும் வாதும் பண்ணினா போவான் போவான் அய்யோன்னு போவான்" என்ற பாரதியின் வரிகளை இந்தக் காவல்துறை அதிகாரிகள் படித்திருப்பார்களா ?

-ஒப்பாரி-

No comments:

Post a Comment