Flash News

Thursday, May 28, 2009

யாருக்கும் வெட்கமில்லை !


நன்றி. துக்ளக்

ஒரு வழியாக கருணாநிதி நடத்திய உள்ளே வெளியே நாடகம் முடிவுக்கு வந்து விட்டது. தமிழினத் தலைவராய் இருப்பதைக் காட்டிலும், குடும்பத் தலைவராய் இருப்பதுதான் பிரதான பணி என அப்பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார். காங்கிரஸ் தலைமையும், திமுக தலைமையை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப் படுத்தி, கொடுத்ததை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னதை, முதலில் வீராவேசம் காட்டி எதிர்த்த கருணாநிதி, பின்பு அமைதியாக ஏற்றுக் கொண்டார். மொத்தம் திமுகவுக்கு கிடைத்த மூன்று கேபினேட் அமைச்சர் பதவிகளில், இரண்டை குடும்பத்துக்கும், மூன்றாவதை குடும்பத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் வாரி வழங்கிய ராசாவுக்கும் வழங்கியுள்ளார் கருணாநிதி. இதற்காக இவர் டெல்லி சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்து பேரம் பேசி தோல்வியுடன் திரும்பியதை, இந்தியாவே பரிதாபமாக பார்த்தது.


முதல் முறை எம்.பி யான தன் மகன் அழகிரிக்கு கேபினெட் அமைச்சர் பதவி கொடுப்பதற்காக, கட்சியின் மூத்த உறுப்பினரும், ஏற்கனவே கேபினெட் அமைச்சராக பல முறை இருந்துள்ள டி.ஆர்.பாலு காவு கொடுக்கப் பட்டுள்ளார். ஜெயலலிதா அரசாங்கத்தால் நள்ளிரவில் கைது செய்யப் பட்டு, சி.பி.சிஐடி அலுவலகத்தில் கருணாநிதி வைக்கப் பட்டிருந்தபோது, அங்கே வந்து பொதுமக்களுடன் அந்த நள்ளிரவு நேரத்திலும், போராட்டம் நடத்தியது டி.ஆர்.பாலு என்பதை கருணாநிதி வசதியாக மறந்து விட்டார்.





1996ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் அழகிரியைவிட பன்மடங்கு தகுதி பெற்ற திருச்சி சிவா, இணை அமைச்சராகக் கூட பரிசீலிக்கப் படவில்லை.

கட்சியில் பல மூத்த உறுப்பினர்கள் இருந்தும், வெளிப்படையாக வெட்கமில்லாமல் தன் குடும்பத்துக்கு முன்னுரிமை அளித்து வரும் கருணாநிதிக்கு தன் மறைவுக்கு பின்னால், திராவிட முன்னேற்ற கழகம், பல துண்டுகளாக உடையும் அபாயம் உள்ளது என்பதை ஏன் எண்ணிப் பார்க்க மறுக்கிறார் என்று புரியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம், தன் குடும்ப சொத்து என்பதை, ஆற்காடு வீராசாமியிடமிருந்து, பல ஆண்டுகளாக அவரிடம் இருந்த பொருளாளர் பதவியை பறித்ததன் மூலமும், அழகிரிக்கு கட்சிப் பதவி அளித்து, தற்போது கேபினெட் அமைச்சராக ஆக்கியிருப்பதன் மூலமும், திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெளிவாகி உள்ளது.



மாறன் சகோதரர்கள் பிரிந்து இருக்கையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளிதழ்களில் வண்ண விளம்பரங்கள் வெளியிட்டதையும், ஸ்பெக்ட்ரம் ஊழலை தினமும் விரிவான செய்தியாக தமிழகம் முழுவதும் பரவச் செய்ததில் சன் டிவியின் பங்கு மறக்க முடியாதது.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணம் முந்தைய அமைச்சர் தயாநிதி எடுத்த முடிவுகள்தான் என ராஜாவும், நான் அமைச்சராக இருக்கையில் ஊழலே நடைபெறவில்லை என்று தயாநிதியும், மாறி மாறி பேட்டி கொடுத்தையும் இந்த தமிழகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

மாறன் சகோதரர்களை ஒழித்துக் கட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, மதுரையில் அழகிரி ராயல் கேபிள் விஷன் தொடங்கியதும், சென்னையில் ஹாத்வே நிறுவனத்துடன் இணைந்து சுமங்கலி நிறுவனத்தின் ஏகபோகத்தை ஒழிக்க அழகிரி எடுத்த முயற்சிகளும், சன் பிக்சர்ஸின் காதலில் விழுந்தேன் திரைப்படத்தை மதுரை மற்றும் மதுரையை ஒட்டிய பகுதிகளில் திரையிட விடாமல், அழகிரியின் கூட்டம் செய்த அராஜகத்தையும், அந்த அராஜகத்தை சன் டிவியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய தயாநிதியும் நடத்திய கேலிக்கூத்துக்களையும் இத்தமிழகம் கண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக, சுமங்கலி நிறுவனத்தின் ஏகபோகத்தை ஒழிக்க வேண்டும் என்று கருணாநிதியே முன்னின்று நடத்திய நாடகம் தான், அரசு கேபிள் கார்ப்பரேஷன். அரசுப் பணத்தில் பல கிலோமீட்டர்களுக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் போடப்பட்டு, பிறகு அவை மாறன் சகோதரர்களின் ஏற்பாட்டால் பல இடங்களில் அறுத்து எறியப்பட்டதும், அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், உமா சங்கர், மனம் வெறுத்து, சுமங்கலி கேபிள் நிறுவனத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்ததையும், அதன் மறுநாள் அவர் மாற்றப் பட்டதையும், ஏதோ ஒரு வெற்றுக் காரணத்தை வைத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டதையும்தான் இத் தமிழகம் பார்த்திருக்கிறது.

இத்தனை அநியாயங்கள் நடந்தும், சிறு சலனமும் இல்லாமல் தமிழக மக்கள் அமைதியாக இருப்பது ஏதோ ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தத் தான் என்று சிலர் எண்ணக் கூடும்.

எந்த மாற்றமும் இல்லை. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில், பாராளுமன்றத் தேர்தலில் கொடுத்ததைவிட அதிகமான தொகையை கொடுக்கக் கூடிய வல்லமை படைத்தது திமுகவா அதிமுகவா என்ற ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார்கள் அவர்கள்.

சரி தேர்தல் வரும் வரை என்ன செய்வது ?

அதையெல்லாம் மறந்து சிரிக்கத்தானே இருக்கிறது, ஆதித்யாவும் சிரிப்பொலியும்.....


அதுவும் போர் அடித்தால் "மானான மயிலாட" பார்த்தால் மனது மகிழாதா என்ன ?

யாருக்கும் வெட்கமில்லை.... ... .... ... !



//ஒப்பாரி//

No comments:

Post a Comment