Flash News

Showing posts with label வீரமணி. Show all posts
Showing posts with label வீரமணி. Show all posts

Thursday, July 30, 2009

பெரியார் திடல் எனும் சங்கர மடம்



தந்தை பெரியார் தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் பகுத்தறிவு மற்றும் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்காகவே அளித்தவர். இம்மக்களை மூடத்தனத்திலிருந்து விடுவித்து, விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்க்கையை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அர்ப்பணித்தவர். அந்தப் பெரியாரின் கொள்கைகளை இவ்வுலகமெல்லாம் பரப்புவதே பகுத்தறிவு உள்ள ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்க முடியும். ஆனால், பெரியாரின் சிந்தனைகள் யாரையும் சென்றடையக் கூடாது என்ற எண்ணத்தில் “குடியரசு“ இதழ் தொகுப்பை வெளியிடத் தடை கோரி பெரியார் திடலை சங்கர மடமாக மாற்றி வைத்திருக்கும் கி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இவ்வழக்கில், திங்களன்று நீதியரசர் சந்துரு தீர்ப்பளித்தார்.

நீதியரசர் சந்துரு


வழக்கு விபரங்களுக்குச் செல்லும் முன், பெரியாரின் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்படுத்தப் பட்ட பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மற்றும் அதன் தலைவர் வீரமணியின் செயல்பாடுகள் குறித்து காண்பது அவசியம். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, யார் ஆட்சியில் இருந்தாலும், பெரியாரின் பெயரைச் சொல்லி, அவர்களுக்கு துதிபாடுவதில் வீரமணிக்குச் சளைத்தவர்கள் யாரும் கிடையாது. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், “தடா“ என்ற ஒரு கொடிய ஆள்தூக்கிச் சட்டத்தில் ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டனர். இக்கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, ஜெயலலிதாவை தஞ்சைக்கு அழைத்து “சமூக நீதி காத்த வீராங்கனை“ என்று பட்டமளித்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பியவர்தான் இந்த வீரமணி.



பெரியார் திடலை தன் சொந்த சொத்தாக பாவித்து யாருக்கும் அதில் உரிமை கிடையாது என்பது போல் வீரமணி நடந்து கொண்டிருக்கிறார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் வரும் வருமானம் எவ்வளவு, அவ்வருமானம் எவ்வாறு செலவழிக்கப் படுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு இது வரை விடையில்லை.
இந்நிலையில், வீரமணியின் போக்கு பிடிக்காமல், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்ற கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்றவர்கள் “பெரியார் திராவிடர் கழகம்“ என்ற அமைப்பை துவக்கி, பெரியாரின் கொள்கைகளை பரப்புவதற்கு தொடர்ந்து உழைத்துக் கொண்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக பெரியாரின் உழைப்பில் வெளிவந்த “குடியரசு“ இதழை தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அத்தொகுப்பை மலிவு விலையில் வெளியிட முயற்சி மேற்கொண்டனர்.
இந்த நிலையில்தான் பெரியாரின் பேரனாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முயற்சி செய்யும் கி.வீரமணி, இவ்வாறு “குடியரசு“, இதழ் தொகுத்து வெளியிடும் முயற்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பெரியாரின் சொத்துக்களை நிர்வகிப்பதில், அவர் தலைவராயிருக்கும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்குத் தான் உரிமை என்றும், பெரியாரின் எழுத்துக்களும் அவருக்கே சொந்தம் என்றும், வேறு யாரும் வெளியிடக் கூடாது என்றும், வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தன் தீர்ப்புரையில், “பெரியார் இரண்டு உலகப் போர்களுக்கிடையேயான காலகட்டத்தில் குடியரசு இதழை கொண்டு வந்தார். இதற்காக ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப் பட்டார். எந்தவித பலனையும் எதிர்பாராமல் சமூக சீர்திருத்தத்துக்கான தனது பணியை தொடர்ந்தார். 2009ம் ஆண்டு, பெரியாரின் 130வது ஆண்டு. இந்த ஆண்டில், பெரியாரின் எழுத்துக்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவது மிகுந்த வேதனையை தருகிறது. இவ்வழக்குகளால், பெரியாரின் சிந்தனைகள், நீதிமன்ற கோப்புகளுக்குள் முடங்கி விடக் கூடாது. நூறு பூக்கள் மலரட்டும், ஆயிரம் எண்ணங்கள் உதிக்கட்டும் என்பது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்“ என்று கூறியுள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வந்திருந்தாலும், இதை எதிர்த்து, வீரமணி, மேல் முறையீடு செய்து, இத்தீர்ப்புக்கு தடையாணை பெற்றுள்ளார் என்பது, வருத்தமளிக்கும் செய்தி.
பெரியார் கொள்கைகளை வளர்ப்பதை விட, அவற்றை முடக்குவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளார் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.


/ஒப்பாரி/