Flash News

Showing posts with label சவுக்கு கைது சிறை. Show all posts
Showing posts with label சவுக்கு கைது சிறை. Show all posts

Monday, July 26, 2010

சிறையில் சவுக்கு… ….



ல்லாப் பொழுதுகளைப் போலவேதான் அந்த புதனும் விடிந்தது. சவுக்கு வழக்கம் போல நீதிமன்றத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த காலை வேளையில் தான் அந்த அழைப்பு மணி அடித்தது.

வுக்கின் கைதில் உண்மையில் நடந்தது என்ன, காவல்துறையினர் கூறிய சம்பவங்கள் உண்மையா, பதிவுக்காகத்தான் இந்தக் கைதா என பல்வேறு கேள்விகள் பலர் மனதில் நிழலாடுவது உண்மை. அதனால் நடந்ததை அப்படியே, சவுக்கு வாசகர்கள் முன்னிலையில் தெரியப் படுத்தவது, சவுக்கின் கடமை.

ஏற்கனவே, சவுக்கை முடக்கு… அதிரடி திட்டம் என்ற பதிவில் குறிப்பிட்டுருந்தது போல, ஒரு மகிழ்ச்சி, ஒரு சோகம் பதிவு வெளியிடப் பட்ட பின், இது போன்ற ஒரு நடவடிக்கையை சவுக்கு எதிர்ப்பார்த்தே இருந்தது. ஏனெனில், சவுக்கு வைக்கும் குற்றச் சாட்டுகள் முகத்தில் அறையும் உண்மைகளாக இருந்தன. இந்தக் குற்றச் சாட்டுகள், சட்ட ரீதியாக ஜாபர் சேட் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சிக்கலை உண்டு பண்ணும் தன்மை படைத்தவை. இவர்களின் அதிகார பீடத்தை ஆடச் செய்யும் வலிமை படைத்தவை. அதனாலேயே, சவுக்கை முடக்கி விட்டால், இது போன்ற தொல்லைகள் இருக்காது என்று, டர்ட்டி பாய்ஸ் வகுத்த திட்டத்தின் வெளிப்பாடே இந்த கைது நடவடிக்கை.

சவுக்குக்கு, இந்த ஜாபர் சேட் உள்ளிட்ட அதிகாரிகளின் மீதோ, கர்ம வீரர் மீதோ, தனிப்பட்ட வெறுப்போ, காழ்ப்புணர்வோ, எப்போதும் இருந்ததில்லை. தங்களிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மக்கள் பணத்தை கொள்ளையடித்து, சுகபோகங்களை அனுபவிக்கும் இவர்களின் போக்கையே சவுக்கு சுட்டிக் காட்டுகிறது, சாடுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரில் உள்ள தெருக்களில், தங்கள் வாழ்க்கையை நடத்தும் எத்தனையோ குடும்பங்களை இன்றும் காணலாம்.

அந்த சாலையிலேயே சமைத்து, அங்கே உண்டு, அங்கேயே உடுத்தி, அங்கேயே உடலுறவு கொண்டு, வாழ்வின் மீதுள்ள பிடிப்போடு போராட்டத்தோடு வாழ்க்கையை நடத்தும் அந்த உயர்ந்த மனிதர்களோடு நம்ப டர்ட்டீ பாய்ஸை ஒப்பிட்டு பாருங்கள். இயல்பாக கோபம் வரும். அந்தக் கோபம்தான் சவுக்குக்கு. வேறு என்ன இவர்களிடம் காழ்ப்புணர்வு இருக்க முடியும் ?

பாரிமுனையின் நடைபாதைகளில் கடை வைத்திருக்கும் அப்படி ஒரு குடும்பத் தலைவி, சவுக்கை பார்த்தவுடன் “சார் வணக்கம் சார். பையனுக்கு இஸ்கூல் பீஸ் கட்டணும் சார். யூனிபாரம் வாங்கணும் சார்“ என்று ஐநூறு ரூபாய் கூட இல்லாமல் கேட்கும் சூழலில் வாழும் நிலையில், ஒரே மாதத்தில் 1.28 கோடி ரூபாய்களை அனாயசமாக தூக்கி எறிந்து, அதில் 18 கோடி ரூபாய்களை லாபம் ஈட்டும் ஊழல் பேர்விழிகளை எப்படி மன்னிப்பீர்கள் ?

இந்த டர்ட்டீ பாய்ஸின் மீதான புகார்கள் தொடர்பான ஆதாரங்களை, சவுக்கு போன்றதோர் சாதாரண நபர் பெற முடிகிறதென்றால், தமிழகத்தில் இருக்கும் பெரிய ஜாம்பவான்களான பத்திரிக்கைகளால் பெற முடிந்திருக்காதா என்ன ? அவைகளை வெளியிட்டிருக்க முடியாதா என்ன ?

ஆனால், அதற்கான முயற்சிகள் ஏதும் இந்தப் பத்திரிக்கைகள் எடுக்க வில்லை. இந்த ஆதாரங்களை வெகுஜன ஊடகங்களில் வெளிக் கொணர சவுக்கு எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. அதனாலேயே, சவுக்கு தளத்தில் இது வெளியிடப் பட்டது.

எங்கே வெளியிட்டாலும் ஆதாரம் ஆதாரம்தானே… ? அதனால்தான், டர்ட்டீ பாய்ஸை சவுக்கின் பதிவுகள் வெகுவாக பாதித்திருக்கிறது.


காலை 8.30 மணிக்கு அழைப்பு மணி அடித்ததும், கதவைத் திறந்த சவுக்கின் தாயார், சவுக்கை அழைத்தார். இரும்பு க்ரில் கேட்டுக்கு வெளியே இருந்த சப் இன்ஸ்பெக்டரும், இரண்டு காவலர்களும், “சார் உங்க மேல கம்ப்ளேய்ன்ட் வந்திருக்கு. இன்ஸ்பெக்டர் வரச் சொல்றார்“ என்றார்கள்.

சவுக்கு ஒன்றுமே பேசவில்லை. எதிர்ப்பார்த்தது நடந்தது என்ற உணர்வே வந்தது. உடனடியாக ஆடை உடுத்திய சவுக்கு, கவனமாக, பர்ஸ், மொபைல் போன், போன்ற முக்கிய பொருட்களை வீட்டிலேயே ஒப்படைத்து விட்டு, வழக்கறிஞருக்கு போன் செய்து, தகவலை தெரிவித்து விட்டு கிளம்பியது. பர்ஸ் போன் போன்றவற்றை ஒப்படைத்து விட்டு செல்லும் காரணம், திருடர்களின் கட்டுப் பாட்டில் செல்கிறோம் என்ற ஜாக்ரதை உணர்வு தான். 2008ல் சிபி.சிஐடி போலீசாரால் கைது செய்யப் பட்ட போது, சவுக்கின் பர்ஸில் இருந்து 5000 ரூபாய் எப்படி மாயமானது என்றே தெரியவில்லை.

சைபர் க்ரைம் டிஎஸ்பி யாக அப்போது இருந்த, இப்போது சிவகங்கையில் கூடுதல் எஸ்பியாக இருக்கும், சவுக்கை இரவு முழுவதும் நிர்வாணப் படுத்தி கடும் சித்திரவதை செய்த பாலுவை பின்னொரு நாளில் சவுக்கு பார்க்கும் போது, இதைப் பற்றி கேட்கையில், இதையெல்லாம் பெரிது படுத்த வேண்டாம் என்ற அட்வைஸ் கிடைத்தது. அதனால், அனைத்துப் பொருட்களையும் வீட்டில் வைத்து விட்டு, வண்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டு, வந்திருந்த காவல்துறையினரோடு கிளம்பிய சவுக்கிடம், அந்தக் காவலர்களில் ஒருவர், “சார், போலீஸ் ஜீப்பில வர்றதுக்கு சங்கடமா இருந்தா, என் கூட பைக்கிலே வாங்க“ என்றார்.

போலீஸ் ஜீப்பில் வருவதற்கு எந்த சங்கடமும் இல்லை என்று தெரிவித்து, சவுக்கு ஜீப்பில் ஏறியது. காவல் நிலையம் சென்ற ஜீப்பில் இருந்து இறங்கி, சவுக்கு நேராக காவல் ஆய்வாளர் தமிழ்வாணன் அறைக்கு அழைத்துச் செல்லப் பட்டது.


“சார் என் மேல ஏதோ கம்ப்ளேயின்ட் இருக்காமே “ என்று கேட்டதற்கு, ஒரு 10 நிமிஷம் உட்காருங்க, கூப்பிட்றேன் என்றார் தமிழ்வாணன்.

அந்த 10 நிமிடங்கள் 60 நிமிடங்கள் ஆனதும், மீண்டும் தமிழ்வாணனிடம் சென்று என்ன சார் விஷயம் என்று கேட்டதும், மனுஷன் நாக்கு சுத்தம் சார். அப்போ சொன்னதயே திருப்பிச் சொன்னார். “ஒரு பத்து நிமிஷம் உட்காருங்க“ என்று. அந்த தமிழ்வாணனின் அறையில் எங்கு பார்த்தாலும் கடவுள் படங்கள்.

அவர் வேறு நெற்றியில் ஒரு பெரிய திருநீரு அணிந்திருந்தார். திருட்டுத்தனம் செய்யும் நபர்களுக்கு பக்தியைப் பார்த்தீர்களா ?

இந்த காவல் நிலையத்தில் அமர்ந்திருப்பதில் என்ன சிரமம் தெரியுமா ? வர்றவன் போறவனெல்லாம், பெரிய அப்பா டக்கரு மாதிரி கேள்வி கேப்பான். புதிதாக ட்யூட்டிக்கு வரும் காவலர்கள், நேராக புதிதாக உட்கார்ந்திருக்கும் நபரைப் பார்த்து, “என்னடா கேசு“ என்று கேட்பார்கள்.

நீங்கள் உடுத்திருக்கும் உடையைப் பொறுத்து, இந்தத் தொனி மாறும். இது போலவே, வருபவர் போகிறவர் எல்லாம் சவுக்கிடம் என்ன கேசு, எதற்கு வந்திருக்கிறாய் என்று கேட்ட வண்ணம் இருந்தனர். ஒரு இரண்டு நபர்களிடம் கதை சொல்லி முடித்ததும், கேட்கும் ஒவ்வொரு நபரிடமும், ஒவ்வொரு கதையை சொல்லத் தொடங்கியது சவுக்கு. கதையை கேட்டு விட்டு, அவர்கள் பங்குக்கு ஒவ்வொருவரும், இலவச அட்வைஸ் கொடுப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவர் மனதிலும், தங்களை சாக்ரட்டீஸ், ப்ளேட்டோ ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்கிறாகள்.

இதற்கு நடுவே, ஆய்வாளர் தமிர்வாணன், எழுந்து நின்ற படி, யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் விசாரித்ததில் அந்த அழைப்பு ஜாபர் சேட்டிடமிருந்து என்று அறியப் பட்டது.

11.30 மணிக்கு ஆய்வாளர் தமிழ்வாணன் அறையை விட்டு வெளியே வந்தார். அவர் கையில் ஒரு டைரி இருந்தது. அந்த டைரியில் ஒரு பேப்பர் இருந்தது. அந்த பேப்பரில், விடுநர் முகவரி காலியாக இருந்தது. பெறுநர் முகவரியில், ஆய்வாளர், மதுரவாயல் காவல் நிலையம் என்று இருந்தது.

அதன் கீழே, சவுக்கு அவசரத்தில் படித்த பொழுது, பார்த்த வாசகங்கள், “நான் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த 30 வயது மதிக்கத் தக்க நபர், கத்தியை காட்டி மிரட்டி, பாக்கெட்டில் இருந்த பணத்தை எட்றா என்று மிரட்டினார் என்று இருந்தது. சவுக்குக்கு இது உடனடியாக நம் மீது போட உத்தேசித்திருக்கும் எப்ஐஆர் என்று புரிந்தது.
11.45 மணிக்கு வழக்கறிஞர் பார்க்க வந்தார். ஆய்வாளரிடம் என்ன புகார் என்று கேட்கச் சென்றதற்கு, அவர் இன்னும் அரை மணி நேரம் கழித்து வாருங்கள். இப்போது பிசியாக இருக்கிறேன் என்று கூறினார்.


அதாவது 12.30 மணி வரை சவுக்கின் மேல் என்ன வழக்கு போடுவதென்றே அந்தப் பண்ணாடைகள் முடிவு செய்ய வில்லை. சவுக்குக்கு வந்த தகவல்களின் படி, Non-Bailable செக்ஷன்களில் வழக்கு போட வேண்டும் என்று ஜாபர் சேட் உத்தரவிட்டாலும், பொய் கேஸ் போடுகையில் கொலைக் கேசா போட முடியும் ? அதனால்தான் ஒரு மணி வரை முழித்துக் கொண்டிருந்தனர் மங்குணிப் பாண்டியர்கள்.


1245 மணிக்கு, ஒரு காவலர், கைதுக் குறிப்பாணையில் கையொப்பம் பெற வந்தார். அந்தப் படிவம் எதுவும் எழுதப் படாமல் காலியாக இருந்தது. முழுமையாக நிரப்பப் படாமல் கையொப்பம் இட இயலாது என்று சவுக்கு மறுத்ததை அடுத்து, அந்தக் காவலர் திரும்பிச் சென்றார்.

இதற்கிடையில் ஐந்து வழக்கறிஞர்கள் சவுக்கைப் பார்க்க காவல் நிலையம் வந்தனர். அவர்களை பார்க்க விடாமல் நெடு நேரம் காக்க வைத்து விட்டு, பார்க்க அனுமதித்ததும், சி.ஜே.ஸ்டாலின் என்ற உதவி ஆய்வாளர், வானம் இடிந்து விழுந்து விட்டது போல குதித்தார். திருப்பி வழக்கறிஞர்கள் சத்தம் போட்டதும் அடங்கினார்.

சவுக்கை சந்தித்த வழக்கறிஞர்கள், சுதாகர் என்ற நபரிடம் சாலையில் சண்டையிட்டு அவரை அடித்து சட்டையை கிழித்து, செங்கலை எடுத்து கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறினர். அந்த சுதாகர், சவுக்கு காவல்நிலையத்தை விட்டு செல்லும் வரை, காவல் நிலையத்துக்கே வர வில்லை என்பது குறிப்பிடத் தக்கது (தமிழ்வாணன் சார், சுதாகர் கையெழுத்த நீங்க போட்டீங்களா, ஸ்டாலின் போட்டாரா ?)


ஒரு வழியாக 2.45 மணிக்கு வழக்கு ஆவணங்கள் தயார் செய்யப் பட்டு, சவுக்கை நீதிபதி முன் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகள் முடிந்தன. தமிழ்வாணனின் அலுவலக ஜீப் வாசலிலேயே நின்று கொண்டிருந்தும், இரண்டு காவலர்களை அனுப்பி கால்நடையாக சவுக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பினர். அந்தக் காவலர்கள் “சார் ஆட்டோ வைக்கிறீங்களா, டாக்சி வைக்கிறீங்களா.

இல்லேன்னா உங்கள பஸ்லதான் கூட்டிட்டுப் போவோம்“ என்று அவர்களை கையில் இருந்த கைவிலங்கை காட்டி மிரட்டினர். ஆட்டோவெல்லாம் வைக்க முடியாது. பஸ்சில் போவோம் என்று கூறியதும் வேறு வழியின்றி, சவுக்கை அழைத்தக் கொண்டு பூந்தமல்லி சென்றனர். வரும் வழியில் அந்த இரண்டு காவலர்களில் ஒருவர் “என்னா சார் கேசு“ என்று ஆரம்பித்தார். சவுக்கு, இது வரை சொல்லாத ஒரு புதுக் கதையை அவரிடம் சொல்ல ஆரம்பித்தது.

அந்தக் காவலர், ரொம்ப சுவாரசியமாக அந்தக் கதையை உண்மை என்று நம்பி நெடு நேரம் கேட்டுக் கொண்டிருந்தார். இது போன்ற காவலர்களிடம், நான் இணையத்தில் எழுதினேன், ஜாபர் சேட் சொத்து வாங்கியிருக்கிறார், அதனால் உங்கள் இன்ஸ்பெக்டர், ஜாபர் சேட் பேச்சைக் கேட்டு ஆடுகிறார் என்று சொல்லியிருந்தால், அவருக்கு புரிய வைப்பதற்குள் விடிந்து விடும். அதனால் அந்தக் காவலருக்கு புரிவது போல, எளிமையான கதையை சவுக்கு சொல்லியது.


பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கறிஞர்கள் காத்திருந்தனர். நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப் பட்டதும், நீதிபதி, “நீங்கள் அவதூறாகப் பேசி தாக்கியிருக்கிறீர்கள். உங்களை ஆகஸ்ட் 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடுகிறேன்“ என்று கூறினார்.
வெளியில் வந்ததும், இந்த வழக்கின் எப்ஐஆரை பதிவு செய்த உதவி ஆய்வாளர் ஸ்டாலின் பைக்கில் நின்று கொண்டிருந்தார்.
சவுக்கை பார்த்ததும் “சார் நான் கூட உங்க ஊருக்கு பக்கத்து ஊருதான். கடைசில நம்ப ரெண்டு பேரும் ஒரே ஊராயிட்டோம்“ என்று சொல்லி சிரித்தார். சவுக்கு ஒப்புக்கு அவரிடம் சிரித்து விட்டு, நீ இருடி. உனக்கு இருக்கு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டது.
வெளியே வந்ததும் அந்த இரண்டு காவலர்களும், “சார் இப்போவாவது ஆட்டோ வைக்கறீங்களா ? “ என்று கேட்டனர். அப்போதும் முடியாது என்று கூறியதும, வேறு வழியின்றி, புழலுக்கு பஸ் ஏறினோம்.


புழல் வந்ததும், தொடக்கதில் நடக்கும் சம்பிரதாயங்கள் முடிந்ததும், குற்றவாளியை பெற்றுக் கொண்டோம் என்று ஒப்புகை பெற்றதும், அந்தக் காவலர்கள் இருவரும் விடை பெற்றனர்.
புழல் சிறையின் வெளியே இருக்கும் அந்தப் பெரிய கதவுக்குள் நுழைந்ததும், வரிசையாக கைதிகள் நிற்க வைக்கப் படுவார்கள். முதலில் அனைத்து ஆடைகளையும் களைந்து ஜட்டியோடு நிற்க வேண்டும்.

கழற்ற மறுத்தால் அங்கேயே அடி விழும். அன்றைக்கு என்று பார்த்து சவுக்கு போட்டிருந்த ஜட்டியில் 13 ஓட்டைகள். முழுக்க நனைஞ்சாச்சு. இதெல்லாம் பார்த்தா முடியுமா ?

அங்கே கைதிகளைப் சரி பார்த்துக் கொண்டிருந்த உதவி ஜெயிலர், என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை என்று கூறியதும், உடனடியாக ஜெயிலர், கூடுதல் சிறைக் கண்காணிப்பாளர், சிறைக் கண்காணிப்பாளர் அனைவருக்கும் தகவல் போனது.

ஜெயிலர் இளவரசன் உடனடியாக அழைத்தார். என்ன கேசு என்று விசாரித்தார். ஏன் சண்டை போட்டீர்கள் என்று கேட்டார். சார் போடவில்லை பொய் வழக்கு என்றதும், நம்பிக்கை இல்லாத ஒரு அலட்சியப் பார்வை பார்த்தார்.

கண்காணிப்பாளரிடம் இருந்து இன்டர்காம் அழைப்பு வந்தது. “ஆமா சார். அவருகிட்டதான் சார் பேசிக்கிட்டு இருந்தேன். ஆமா சார், தண்ணியப் போட்டுட்டு தகராறு பண்ணிருக்கார் போல சார்“ என்றார். (இவரு பெரிய ஸ்கிரிப்ட் ரைட்டரா இருப்பார் போலருக்கே)


“எழுத்து வேலைகள் முடிந்ததும் “க்வாரைண்டைன் ப்ளாக்“ என்று அழைக்கப் படும பிணி நீக்கப் பிரிவில், சவுக்கு அடைக்கப் பட்டது. முதல் நாள் கைதிகள் அனைவரும் இந்தப் பிரிவில்தான் அடைக்கப் படுவர். மறு நாள் தர வாரியாக வேறு வேறு தொகுதிகளுக்கு மாற்றப் படுவர்.


அந்தப் பிரிவில் ஒரு அறையில் ஒரு 40 பேருடன் சவுக்கு அடைக்கப் பட்டு, உறங்கத் தொடங்கி 30 நிமிடங்கள் கழித்து, சவுக்கு எழுப்பப் பட்டு, நீங்கள் முதல் வகுப்புக்குச் செல்லுங்கள் என்று கூறப்பட்டு, ஒரு காவலரோடு அனுப்பப் பட்டது.

அந்தசிறைக் காவலர், தன்னை ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸ் என்று நினைத்துக் கொண்டார். “உங்களுக்கு எந்த ஊர் சொந்த ஊர்“ என்று கேட்டார்.

“தஞ்சாவூர்“

“நீங்க மாவோயிஸ்ட்டா ? “

“இல்ல சார்“

“நீங்க மாவேயிஸ்ட்டுன்னு எனக்கு உறுதியா தகவல் கிடைச்சுருக்கு“

“உறுதியா நான் மாவோயிஸ்ட் இல்ல சார்“

“தஞ்சாவூர் பூரா ஹில் ஏரியா தானே ? அங்க மாவோயிஸ்ட் நிறைய இருக்காங்களே “ (எப்பூடி…. ….. ….தஞ்சாவூர் ஹில் ஏரியாவாம். திருக்குவளைக் காரர் கேட்டிருந்தால் கொதித்திருப்பார்.)

“இங்க உங்க இயக்கத்துக்காரங்கள சந்திக்கத் தான் நீங்க ஜெயிலுக்கு வந்திருக்கீங்களாமே “
“அதெல்லாம் இல்ல சார்“

“உங்கள மாதிரி ஆட்களெல்லாம், ஹ்யூமன் ரைட்ஸ், அது இதுன்னு பேசி நாட்டையே குட்டிச்சுவர் பண்றீங்க“

“உங்களோட ஹ்யூமன் ரைட்ஸுக்கும் சேத்துதான் சார் பேசுறோம்“

அதற்குள் எதிரில் ஒரு சிறைக் காவலர் வந்தார். அவரிடம் இந்த ஸ்காட்லேன்ட் யார்டு காவலர் இவரை முதல் வகுப்பில் அடைக்க வேண்டும் என்று கூறியதும், அந்தக் சிறைக் காவலர் ஜெயிலரை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு, சவுக்கை பார்த்து, “இவனுக்கு என்ன கேடு. பர்ஸ்ட் க்ளாஸ்லதான் படுப்பாரோ“ என்று ஒரு முறை கத்தி விட்டு, சென்று விட்டார்.

சவுக்கு முதல் வகுப்பில் இருவர் இருக்கக் கூடிய ஒரு அறையில் அடைக்கப் பட்டது. அந்த அறைகுள்ளே, 23 வயது இளைஞன். அவனுக்கு இப்போதுதான் மீசை அரும்ப ஆரம்பித்திருக்கிறது.

அவன் மாவேயிஸ்டாக இருப்பானோ என்ற சந்தேகம் வந்தது.
அவன் சவுக்கைப் பார்த்து “என்ன கேசுன்னா ? “ என்று கேட்டான்.

“சண்டை கேசு“ என்று சொன்னதும் அமைதியாகி விட்டான்

ஜெயில் மொழியில் வழக்குகள் ஐந்து வகையாக பிரிக்கப் படும். முதலில் பவுடர் கேசு. (போதைப் பொருள் வழக்கு) மட்டை கேசு (கொலை வழக்கு) சண்டை கேசு (சாதாரண அடிதடி. சவுக்கு வழக்கைப் போல) கஞ்சா கேசு (கஞ்சா கடத்திய வழக்கு) ராபரி கேசு (திருட்டு வழக்கு) என்று பிரிக்கப் படும்.

“சாப்டியாண்ணா ? “

“சாப்டேன் பிரதர்“

அவன் அதற்குப் பிறகு தனது வழக்கு ஆவணங்களில் மூழ்கி விட்டான்.
மறு நாள் காலையில் சிறிது நட்பாகினான். “அண்ணே. சிங்கமுத்து இந்த செல்லுலதான்னே இருந்தாரு“ என்றான்.

அவனுக்கு சவுக்கைப் பார்த்ததும் என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவனுக்கு வந்திருந்த திண்பண்டங்களை உண்ணும் படி வற்புறுத்தினான்.

சவுக்கு அவனுடன் இருந்த இரண்டு நாட்களிலும் மிகுந்த அன்பாக கவனித்துக் கொண்டான்.
முதல் வகுப்பு தொகுதியில் முதல் 8 அறைகள் மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்தது.

அதில் முதல் அறையில் இருந்த சார்லஸ் என்பவன், எப்போது பார்த்தாலும் அறைக் குள்ளேயே நடந்து கொண்டே இருப்பான். அவனுடைய அறை உணவு வழங்குவதற்காக திறக்கப் படுவதைத் தவிர வேறு எதற்காகவும் திறக்கப் படுவதே இல்லை.
அவன் மீது என்ன வழக்கு என்றால், 75 கேஸ் என்று அழைக்கப் படும் சாதாரண தகறாறு வழக்கு.

இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் என்ன தண்டனை தெரியுமா ? வெறும் அபராதம். ஆனால் அவனுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததாலும், பெற்றோர் அவனைக் கைவிட்டதாலும், அந்த அறைக்குள்ளேயே நடந்து நடந்து தன் வாழ்க்கையை ஓட்டுகிறான்.
அடுத்தடுத்த அறைகளில் இருப்பவர்கள் அவ்வளவு மோசமில்லை. அவர்கள் அறை காலையில் திறக்கப் படுகிறது. வெளியில் வருகிறார்கள். யாரோடும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்கள்.

மாலை 6 மணிக்கு அடைக்கப் படும் அறைக் கதவுகள், காலை 6 மணிக்கு மீண்டும் திறக்கப் படுகின்றன.

இரவு உணவை மாலை 5 மணிக்கே வாங்கி வைத்து விட வேண்டும். 15 அடி உயர அறை. மின் விசிறி உண்டு. முதல் வகுப்பு என்பதால் கட்டில் உண்டு.
24 மணி நேரமும் அறைக்குள்ளேயே வரும் நல்ல குடிநீர். காலையில் நடைப் பயிற்சியில் ஈடுபட விசாலமான இடம்.

சிறையில் கிடைத்த இரண்டு நாட்களில், சிறைக்குள் உயர் பாதுகாப்புப் பிரிவில் இருந்த நண்பர்கள் வைத்திருந்த “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்“ படிக்க முடிந்தது.

வழக்கமாக 1 அல்லது 2 மணிக்கு உறங்கச் செல்லும் சவுக்கு, இரவு 10 மணிக்கே உறங்கச் சென்றது.

பகல் பொழுதில் வேறு வேலைகள் இல்லாததால், பகலிலும் உறக்கம்.
வேகமாக நகர்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெள்ளியன்று மாலை பிணை கிடைத்து விட்டது என்ற தகவல் பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு சென்றிருந்த மற்றொரு கைதி மூலமாக கிடைத்தது.

அறையில் இருந்த அந்த இளைஞனிடம் வெளியில் வந்ததும் தொடர்பு கொள்ளும் படியும், என்ன உதவி வேண்டுமானாலும் கேட்கும் படியும் கேட்டுக் கொண்டு, சவுக்கு விடை பெற்றது.
சவுக்கு கைது செய்யப் பட்டதும் வழக்கறிஞர் புகழேந்தியும், அவரது நண்பர்களும் ஆற்றிய உதவி என்றைக்கும் மறக்க முடியாதது.

உயர்நீதிமன்றத்தில் ப்ராக்டீஸ் செய்யும் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், சவுக்கின் பிணைக்காக, பூந்தமல்லியில் உள்ள மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜராகி வாதாடியதும், உயர்நீதிமன்றத்தில் சட்ட விரோத கைது என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததும், மறக்க முடியாதது.

வழக்கறிஞர்கள் சுந்தர்ராஜன், வெற்றிச் செல்வன், இளவரசன், கல்யாணி, ஜெய்நுல்லாபுதீன், சிவபெருமாள், ஆகியோரின் உதவிகள் என்றென்றைக்கும் நினைவில் கொள்ளத் தக்கன.

எவனோ ஒரு பேரு தெரியாத ஒருத்தன், தன்னோட ப்ளாகில, கண்டபடி எழுதிகிட்டு இருக்கான் என்று நினைக்காமல், பதிவுலகினர் காட்டிய ஆதரவும் அன்பும் சவுக்கை நெகிழச் செய்கின்றன.

குறிப்பாக, நண்பர்கள் உண்மைத் தமிழன், வினவு, ஆகியோர் அளித்த ஆதரவு மறக்க முடியாதது.

இந்தக் கைதைப் பற்றி செய்தி வெளியிட்டு, கருணாநிதியையும் மீறி, உண்மையை எழுத முடியும் என்று நிரூபித்த தினமணி, டெக்கான் க்ரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா, தினமதி, நாளேடுகளின் செய்தியாளர்களுக்கும், மற்றும் ஜுனியர் விகடன் வாரமிருமுறை இதழின் செய்தியாளருக்கும், ஆசிரியருக்கும் சவுக்கின் நெஞ்சார்ந்த நன்றிகள்.


இவை எல்லாவற்றுக்கும் மேல், சவுக்கின் மீது தங்கள் அன்பைப் பொழிந்த பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கு சவுக்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளது. அவர்கள் பெயர்களைப் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்காது என்பதால் குறிப்பிடவில்லை. ஆனால், இவர்கள் ஆற்றிய பணியும், காட்டிய அன்பும், நேசமும், சவுக்கின் மூச்சு உள்ளவரை செழுமையோடு நினைக்கப் படும்.

இந்தக் கைதால் விளைந்த பலன் என்ன ? ஜாபர் சேட் ஒரு கடைந்தெடுத்த ஊழல் அதிகாரி என்ற நாலு பேருக்கு தெரிந்த விஷயம், நாலாயிரம் பேருக்கு தெரிந்தது.

சவுக்கு கைதான அன்று காலை ஒரு லட்சமாக இருந்த ஹிட்டுகளின் எண்ணிக்கை 1,33,822.
கைது காரணமாக சந்தனக் காடு தொடர் எழுத முடியவில்லை. வரும் வியாழன் அன்று இரவு உறுதியாக தொடர் பதிவேற்றப் படும்.


சவுக்கின் வாழ்விலும், தாழ்விலும், கூடவே நின்று எத்தனை அடக்கு முறைகள் வந்தாலும், சவுக்கை விட உறுதியாக அந்த அடக்கு முறைகளை சந்திக்கும் சவுக்கின் தாய்க்கு, இந்தப் பதிவுகள் அனைத்தும் அர்ப்பணம்.

இந்தக் கைது பற்றி, ஜாபர் சேட்டுக்கு சவுக்கு எந்தப் பதிலும் சொல்ல விரும்பவில்லை. சவுக்குக்கு பதிலாகத் தானே பாரதி சொல்லியிருக்கிறான்.


தேடிச் சோறு நிதந்தின்று-பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்

வாடித் துன்பமிக உழன்று-பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து- நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல

வேடிக்கை மனிதரைப் போலே-நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ ?

சவுக்கு