Flash News

Saturday, January 30, 2010

இரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்




அறிவாலயம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் புதிதாக வெளி வந்திருக்கும் திரைப்படம்தான் இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்.

படத்தின் தலைப்பிற்கேற்றார்போல், கதாநாயகன் சிறு வயது தொடங்கி, தள்ளாத வயது வரை, எவ்வளவு வயதானாலும் விடாப்பிடியாக நான்தான் கதாநாயகனாக இருப்பேன் என்று பிடிவாதமாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வரும் முதல் கௌபாய் படம் இது. ஆங்கிலத்தில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற 100 Rifles, The Good, The Bad, The Ugly, McKenna’s Gold போன்ற படங்களை விஞ்சும் விதத்தில் எடுக்கப் பட்டுள்ளது.

கதாநாயகநாக நடித்திருக்கும் கருணாநிதி பாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கருணாநிதியே தேர்ந்தெடுப்பதால், அநேகமாக இவ்வாண்டின் சிறந்த நடிப்புக்கான மாநில அரசின் விருது கருணாநிதிக்கே வழங்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கௌபாய் படத்தை எதிர்ப்பார்த்து செல்லும் ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவுக்கு காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு நிறைந்து எடுக்கப் பட்டிருக்கிறது இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்.

சாதாரணமாக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒருவன் எப்படி மிகச்சிறந்த துப்பாக்கி வீரனாகி தமிழ்நாட்டை கொள்ளையடிப்பதில் முதலிடத்தைப் பிடிக்கிறான் என்பதுதான் படத்தின் “ஒன் லைன்“.

கதாநாயகம் கருணாநிதி குழந்தையாக ஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்கிறான். சிறிது விபரம் தெரிந்தவுடன் அண்ணாதுரை என்ற ஒருவர் துவக்கும் கொள்ளைக் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான். அண்ணாத்துரை தான் துவக்கும் “கேங்“ மிகப்பெரிய அளவில் வளரப் போகிறது என்பது தெரியாமலே கேங்கை துவக்குகிறார். தமிழ்நாட்டில் அது வரை இருந்து வந்த காங்கிரஸ் கேங்கை தனது சாமர்த்தியத்தால் விரட்டி அடிக்கிறார்.
அன்று அண்ணாத்துரையால் விரட்டியடிக்கப் பட்ட காங்கிரஸ் கேங், படத்தின் இறுதி வரை பலம் பெறாமலேயே இருப்பதாக கதை அமைக்கப் பட்டிருப்பதால் இப்படத்தில் வில்லனாக இருப்பதற்கு காங்கிரஸ் கேங்குக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.

காங்கிரஸ் கேங்கை விரட்டியடித்து மொத்த தமிழ்நாட்டையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வரும் அண்ணாத்துரை நீண்ட நாள் தன் கொள்ளைக் கூட்டத்தை வழிநடத்தாமல் உடல் நலிவடைந்து இறந்து போகிறார்.



கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கிய அண்ணாத்துரை


அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு ரசிகர்கள் கொள்ளைக் கூட்டத்தின் இரண்டாம் கட்ட தலைவராக, அண்ணாதுரைக்கு நெருக்கமாக இருக்கும் நெடுஞ்செழியன் தலைவராக ஆகப் போகிறார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் இயக்குநர்.

கருணாநிதி கொள்ளைக் கூட்டத்தில் சேரும் முன்பே இரண்டாம் கட்ட தலைவர்களாக அக்கூட்டத்தில் இருக்கும் சீனியர்களையெல்லாம் ஓரங்கட்டி விட்டு கொள்ளைக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை பிடிப்பது, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இருந்தாலும் இந்த இடத்தில் திரைக்கதை விறுவிறுப்பை அடைகிறது.

கொள்ளைக் கூட்டத்தின் உறுப்பினர்களின் மத்தியில் தன் சாகசங்களால் பாப்புலராக உள்ள எம்ஜிஆரின் துணையுடன் கருணாநிதி தலைவர் பொறுப்பை பிடிக்கிறார். நெடுஞ்செழியனை ஓரங்கட்டிவிட்டு அநாயசமாக, தலைமை பொறுப்பை பிடித்து விட்டு, கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு கருணாநிதி ஒரு அலட்சியச் சிரிப்பு சிரிக்கும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.



கதாநாயகன் வாழ்வில் ஹீரோயின்களுக்கு பஞ்சமே இல்லை. மூன்று ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டே ஆனந்தமாக கதாநாயகன் பொழுதைக் கழிக்கையில் திடீரென்று நண்பனாக இருந்த எம்ஜிஆர் உருவில் பிரச்சினை உதிக்கிறது. எம்ஜிஆர் கொள்ளைக் கூட்ட உறுப்பினர்களிடையே மிகவும் பிரபலமாகி வருவதை கண்டு பொறுக்காத கதாநாயகன், குரங்கு ஆப்பசைத்த கதையாக, கொள்ளைக் கூட்டத்தில் மொத்தம் எத்தனை துப்பாக்கிகள் என்று எம்ஜிஆரைப் பார்த்து கணக்கு கேட்கிறார்.

துப்பாக்கி கணக்கு கேட்டதால் கடும் கோபம் அடையும் எம்ஜிஆர் கதாநாயகக் கருணாநிதியிடம் இருந்து பிரிந்து தனியே ஒரு கொள்ளைக் கூட்டத்தை தொடங்குகிறார்.

எம்ஜிஆர் தொடங்கிய கொள்ளைக் கூட்டம் மிகவும் பிரபலமாகி தமிழ்நாட்டின் நம்பர் கூட்டமாகிறது. இதனால் கதாநாயகன் கருணாநிதி மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கிறார். அவருக்கு தேவையான ஆயுதங்கள் குறைந்து கொள்ளைக் கூட்டத்தை நடத்த முடியாமல் திணறுகிறார். தினந்தோறும் கொள்ளையடித்துப் பழகி, கொள்ளையடிக்க வாய்ப்பே இல்லாமல் கதாநாயகன் ஏறக்குறைய பைத்தியம் பிடித்த நிலைக்கு தள்ளப் படும்போது, கொள்ளைக் கூட்ட தலைவன் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்.

எம்ஜிஆர் இறந்ததும் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், எம்ஜிஆர் என் நண்பர், அவர் இல்லையென்றால் நான் கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆகியிருக்க முடியாது என்று மழுப்புகிறார்.

எம்ஜிஆர் இறந்ததும் போட்டிக்கு ஆளே இல்லாமல் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத் தலைவனாக ஆகிறார் கதாநாயகன் கருணாநிதி. நிம்மதியாக கொள்ளையடித்து பொழுதை ஓட்டலாம் என்று இருக்கையில் களத்தில் குதிக்கிறார் ரிவால்வர் ரீட்டா.

எம்ஜிஆரின் கொள்ளைக் கூட்டத்தில் நீண்ட காலம் இருந்த ரிவால்வர் ரீட்டா நலிவடைந்திருந்த எம்ஜிஆரின் கேங்குக்கு புத்துணர்ச்சி ஊட்டி, கேங்குக்கு தலைமை ஏற்கிறார்.

இதைக் கண்டு கதாநாயகன் கருணாநிதி அதிர்ச்சி அடைந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இதனால் தனக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பது போல இருக்கிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவர்கள் சம்மேளனத்தில் புகார் செய்து கருணாநிதியின் தலைவர் பதவியை பறிக்கிறார் ரிவால்வர் ரீட்டா. செய்வதறியாது திகைக்கும் கருணாநிதி மீண்டும் எப்படியாவது தலைவர் ஆகி விடலாம் என்று நினைக்கையில் அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவன் ராஜீவ் காந்தி ஒரு வெடி விபத்தில் மரணமடைகிறார்.

இதனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு அடிக்கிறது யோகம். உடனடியாக தலைமைப் பதவியை பிடித்து தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத்தின் தலைவியாகிறார். இவர் கொள்ளைக் கூட்ட தலைவியானதும், தன் கூட்டத்தில் உள்ள ஒருவரை வளர்ப்பு மகனாக தத்தெடுக்கிறார்.

தத்தெடுத்ததோடு நில்லாமல் கொள்ளைக் கூட்ட வரலாறிலேயே இல்லாத அளவுக்கு தான் தத்தெடுத்த வளர்ப்பு மகனுக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்கிறார். இதைக் கண்ட கதாநாயகன் கருணாநிதி வயிற்றெரிச்சலில் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பும் காட்சி காண்போர் நெஞ்சை உருக்குகிறது.

ரிவால்வர் ரீட்டா நெம்பர் ஒன் பொசிஷனில் ஐந்தாண்டு இருந்த பிறகு மீண்டும் கருணாநிதி தன் சாதுர்யத்தால் நெம்பர் ஒன் பொசிஷனை தட்டிப் பறிக்கிறார். நெம்பர் ஒன் பொசிஷனுக்கு வந்த பிறகு ரிவால்வர் ரீட்டாவை சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. ஆனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு இருக்கும் ஆதரவை குறைத்து மதிப்பிட்டு விடுகிறார் கருணாநிதி. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நெம்பர் ஒன் பொசிஷனுக்கு ரிவால்வர் ரீட்டா வருகிறார்.

ரிவால்வர் ரீட்டா நம்பர் ஒன் பொசிஷனில் வந்தவுடன், தான் ஒரு காலத்தில் கொள்ளைக் கூட்டத்திற்கே தகுதியில்லாத பண்டாரங்கள் என்று விமர்சித்த அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தோடு கூட்டணி வைத்து சில நிர்வாகிப் பதவிகளை கைப்பற்றுகிறார் கருணாநிதி.

வந்ததும் கருணாநிதியை பழிவாங்கும் விதமாக அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. கைது செய்யப் படுகையில் “அய்யோ கொலை பண்றாங்க“ என்று அலறுகிறார் கருணாநிதி. ஆனாலும் கருணாநிதியால் ஐந்தாண்டுகளுக்கு நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க முடியவில்லை.




அய்யோ கொலை பண்றாங்க


கருணாநிதியின் கொள்ளைக் கூட்டம் நலிவுற்றிருந்தாலும், அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தில் கருணாநிதியின் கூட்டத்தைச் சேர்ந்த 7 பேர் நிர்வாகிப் பதவியில் இருப்பதால் சிறிது காலம் சமாளிக்கிறார் கருணாநிதி.

சிறிது காலம் போராடிய பிறகு, தமிழ்நாட்டில் உள்ள உதிரி கொள்ளைக் கூட்டம் அனைத்தையும் ஒன்று சேர்த்து கூட்டணி அமைத்து மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனுக்கு வருகிறார் கருணாநிதி.




கருணாநிதியிடம் நம்பர் ஒன் பொசிஷனை தவற விட்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைக்கிறார். எப்படியாவது மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்கிறார் ரீட்டா. கருணாநிதிக்கு வயதாகி விட்டதால் அவரை எப்படியாவது துப்பாக்கிச் சண்டையில் ஜெயித்து விட வேண்டும் என்று திட்டமிடுகிறார் ரீட்டா.

துப்பாக்கிச் சண்டையில் கருணாநிதியை எப்படியாவது வெற்றிப் பெற வேண்டும் என்று ரீட்டா தொடர்ந்து முயற்சிக்கிறார். ஆனால் கருணாநிதிக்கோ வயதாகி, தள்ளு வண்டியில் போகும் நிலைக்கு ஆளாகிறார். இதனால் தைரியம் அடைந்த ஜெயலலிதா, துப்பாக்கிச் சண்டையில் ஜெயிக்கலாம் என்று தன்னை தயார் செய்து கொண்டு வரும் வேளையில் கருணாநிதி புதிய தந்திரத்தை கையாளுவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.



துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு, குண்டடிப்பட்டு அனைவரும் செத்து விழுவார்கள் என்று எதிர்ப்பார்க்கையில், சண்டையில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் 5000, 10,000 என்று கவரில் கருணாநிதி பணத்தை வழங்குகிறார். கவரில் பணத்தை பெற்றுக் கொண்ட அனைவரும், குண்டடி படாமலேயே செத்து விழுந்தது போல் நடிக்கிறார்கள்.

இதைக் கண்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைத்து அவரும் கவரில் பணம் வழங்கும் தந்திரத்தை கையாண்டாலும் அவரின் தந்திரம் எடுபடவில்லை. கருணாநிதி வழங்கும் கவரைத்தான் அனைவரும் விரும்பி குண்டடி பட்டது போல செத்து விழுகிறார்கள்.

இதற்கு நடுவே, கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. தன் கொள்ளைக் கூட்டத்தின் நெருக்கடி தாளாமல், தன் மகனை கொள்ளைக் கூட்டத்தின் துணைத் தலைவராக்கி நம்பர் 2 பொசிஷனுக்கு கொண்டு வருகிறார். இதைக் கண்ட இன்னொரு மகன் தான்தான் நம்பர் 2 பொசிஷனுக்கு வர வேண்டும் என்று சண்டை போடுகிறார்.



கருணாநிதியின் மகள்


இன்னொரு மகள், தனக்கு நம்பர் 3 பொசிஷன் வேண்டும் என்று வரிந்து கட்டுகிறார். ஆனால் நம்பர் 3 பொசிஷனை மகளுக்கு தர முடியாத வண்ணம், மருமகனின் பேரன்கள் சண்டை போடுகின்றனர்.

இதனால் கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் பெரும் கலவரம் உண்டாகிறது. தள்ளு வண்டியில் உள்ள வயது முதிர்ந்த கதாநாயகன், வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும், தன் நம்பர் ஒன் பொசிஷனை விட்டுத் தராமல் இறுதி வரை போராடுகிறார்.



தள்ளுவண்டியில் வயது முதிர்ந்த கதாநாயகன்


இறுதிக் காட்சி 2011ல் நடைபெறுகிறது. நம்பர் ஒன் பொசிஷனுக்காக தொடர்ந்து போராடும் ரிவால்வர் ரீட்டா ஜெயிக்கிறாரா, தள்ளுவண்டியில் உள்ள கருணாநிதி ஜெயிக்கிறாரா, அல்லது அவரது மகனோ அல்லது மகளோ ஜெயிக்கிறார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
விறுவிறுப்பான திரைக்கதையும், சுறுசுறுப்பான எடிட்டிங்கும் படத்துக்கு சுவை கூட்டுகின்றன.

தேவையான இடத்தில் தேவைப்படாத காட்சிகளை வெட்டியெறிந்து, படத்துக்கு விறுவிறுப்பு கூட்டும் வகையில் படத்தை எடிட்டிங் செய்திருப்பவர் அந்தோனியோ மொய்னோ சோனியா காந்தி. இவர் இத்தாலியில் எடிட்டிங் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஒளிப்பதிவு பேராசிரியர் அன்பழகன். கேமரா பாய்ந்து பாய்ந்து ஒளிப்பதிவு செய்ய வேண்டிய இடங்களிலெல்லாம் மங்குணி போல நகராமல் உட்கார்ந்திருப்பது ரசிகர்களை எரிச்சலாக்குகிறது.


ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆ.ராசா. வசனங்களை கதாநாயகன் கருணாநிதியே எழுதியிருக்கிறார். சட்டமன்ற வளாகத்தில் கருணாநிதி ரிவால்வர் ரீட்டாவைப் பார்த்து “நீங்கள் கௌபாய் ஆக முடியாது, ஏனென்றால் பெயரிலேயே “பாய்“ இருக்கிறது, நீங்கள் பெண்“ என்று சொல்லுவதும் அதற்கு ரிவால்வர் ரீட்டா, அந்தச் சொல்லின் முதல் எழுத்தே “கௌ“ தான். கௌ என்றால் பசு என்று பொருள், பசு பெண்பால் ஆகையால் நான்தான் உண்மையான கௌபாய்“ என்ற வசனங்களுக்கு தியேட்டரே அதிர்கிறது.


பல இடங்களில் துப்பாக்கிச் சண்டை துவங்கும் முன்பே, எனக்கு, எனக்கு என்று போட்டி போட்டுக் கொண்டு கவரை வாங்கி, குண்டடி பட்டது போல மக்கள் செத்து விழும் காட்சி இந்திய சினிமா வரலாற்றில் புதுமையான காட்சி.


சண்டைக் காட்சிகள் துரை முருகன். அதிரடியாக சண்டை காட்சிகள் அமைப்பார் என்று எதிர்ப்பார்த்தால் ரிவால்வர் ரீட்டாவின் சேலையை பிடித்து இழுப்பது போல் காட்சி அமைத்திருக்கிறார். தியேட்டரில் பெண்கள் துரை முருகனை வெளிப்படையாக திட்டுவது நன்கு கேட்கிறது. இனி துரை முருகன் இது போன்ற காட்சிகளை அமைப்பதை தவிர்ப்பது நல்லது.


சவுண்ட் ஆற்காடு வீராசாமி. பல இடங்களில் ஒலி மந்தமாக இருக்கிறது ஒலிப்பதிவாளரின் கோளாறே. உடைகள் தமிழச்சி தங்க பாண்டியன். இசை அருட்தந்தை ஜெகத் கஸ்பர். இவர் இசையில் பல பாடல்கள் போலியானதாகவும், காப்பியடித்தது போலவும் இருக்றது. இவர் இசையமைப்பதை விட்டு விட்டு பேசாமல் போதகர் தொழிலுக்கே போகலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

வைரமுத்து, வாலியின் பாடல் வரிகள் கருணாநிதியை புகழ்வதை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப் பட்டது போல் இருக்கிறது.

மக்கள் தொடர்பை கருணாநிதி மகன் அழகிரியே கவனித்துக் கொள்கிறார். நகைச்சுவைக்கு ஆவுடையப்பன் என்ற புதிய கதாபாத்திரத்தை அறிமுகப் படுத்தியுள்ளனர். இவர் நடுநிலையோடு நடந்து கொள்வது போல் நடித்து பல நேரங்களில் சிரிப்பை ஏற்படுத்துகிறார். ஆவுடையப்பன் தவிர்த்து கதாநாயகன் கருணாநிதியே பிரமாதமான காமெடி செய்வதால் தனி காமெடி ட்ராக் தேவையே இல்லை.


எவ்வளவு பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும், கொள்ளைக் கூட்டத்தை விட குடும்பமே பெரிது என்ற மெசேஜை படம் பார்க்கும் எவ்வளவு பேர் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.


மொத்தத்தில் நீண்ட நாட்கள் கழித்து வந்திருந்தாலும், ஒரு சிறந்த கௌபாய் படம் பார்த்த திருப்தி படம் பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் அனைவர் முகத்திலும் தெரிந்தது.



சவுக்கு

12 comments:

டவுசர் பாண்டி... said...

பேரறிஞர் அன்னாதுரை அவர்களை இழிவு செய்யும் விதமாய் எழுதியுள்ள வரிகளை நீக்கிவிடுமாறு வேண்டுகிறேன். பதிவின் சாரத்திற்கும் மறைந்த தலைவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதால் தாங்கள் அதனை நீக்கி விடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

-டவுசர்பாண்டி

டவுசர் பாண்டி... said...

பேரறிஞர் அண்ணா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட கேங் பின்னாளில் வேண்டுமானால் நீங்கள் சொல்கிற மாதிரி ஆகியிருக்கலாம். ஆனால் அண்ணாவின் ஆரம்ப நோக்கம் அப்படியானதாக இல்லை என்பதை நீங்கள் அறிந்தவராக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

Anonymous said...

anna arumaiyana pathivu , arputhamana vimarsanam

Uthamaputhra Purushotham said...

படம் எப்போ முடியும்னு சொல்லுங்களேன். எத்தினி இண்டர்வெல்லு... ஜவ்வா இழுக்கிறாரே... யார் முடிச்சுவைச்சாலும் சந்தோசமே...

yogi said...

super... :)

Anonymous said...

oru chinna thiruththam
அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவன் ராஜீவ் காந்தி ஒரு வெடி விபத்தில் மரணமடைகிறார்.
ithu thavaRu.
pakkaththu naattil thalaivarkaLaiyum makkaLaiyum konRu kuviththu vantha oru karungaali koottam arippu koodiyathaal inthiyaavil thanathu thiramaiyai parichothithu tharkaalikamaay vetRiyum kaNdaarkal. aanaal paavam avarkalukku appoothu theriyavillai ithu oru naal thangalai alukippona anaathai piNamaay kidaththum ena.

Anonymous said...

very gooood superappu

சவுக்கு said...

அன்புள்ள நண்பர் டவுசர் பாண்டி அவர்களே. அறிஞர் அண்ணா துவங்கிய கழகம் பின்னாளில் மாறியது உண்மை என்றாலும், இன்று நாம் இழந்து நிற்கும் உரிமைகளுக்கு அண்ணாதுரை ஒரு பெருங்காரணம்.

கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் தங்களை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை. நாம்தான் தமிழர்கள் என்பதை மறந்து விட்டு திராவிடர்கள் என்று கூறிக் கொள்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரே தவறு. தமிழர் முன்னேற்றக் கழகம் என்று இருந்திருந்தால் இன்றைக்கு நம்முடைய உரிமைகளை, கர்நாடகாவிற்கும், ஆந்திராவிற்கும், கேரளாவிற்கும் விட்டுக் கொடுத்து விட்டு கையேந்தி நிற்க மாட்டோம். திராவிட என்று பெயரிட்டதே அண்ணாதுரை செய்த முதல் தவறு.

பிரிவினை கோரும் கட்சிகள் தடை செய்யப் படும் என்ற செய்தி காற்று வாக்கில் வந்த உடனேயே திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டவர் அண்ணா. கட்சியை தடை செய்தால் என்ன ? இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது தடை செய்யப் பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி இன்று இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இல்லை ?

மேலும் கட்சியை தடை செய்திருந்தால் இன்னும் அதிக வீச்சோடு வளர்ந்திருக்கும். அக்கோரிக்கையை கைவிட்டு மிகப் பெரிய தவறிழைத்து விட்டார் அண்ணா.

மேலும், கட்சி வளர்ச்சிக்கு பயன்படுகிறதே என்று, சினிமாக் காரர்களை ஊக்குவித்து, கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்து, அரசியலில் சினிமா கலாச்சாரத்தை வளர்த்தெடுத்ததற்கு அண்ணா துரை ஒரு முக்கிய காரணம். அதன் பயனை நாம் இன்று வரை அனுபவித்து வருகிறோம்.

அராகன் said...

சவுக்கை எடுத்து விளாசி இருக்கிறீர்கள். சிங்களவர்களும் திராவிட என்ற சொல்லை தமிழர்களை சுட்ட மட்டும் பயன்படுத்துவார்கள் .

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாழும் வள்ளுவருக்கு 'சுயசரிதம்' எழுத அருமையான பாயிண்ட்-சா கிடைத்துவிட்டது..

விரைவில் சன்- பிச்சர்ஸ் சார்பில் மசாலா, காரம் , ஒட்டல், வெட்டல் முடிந்து , படமா வந்தாலும் வரும் சார்.....

இவர்களுக்கு இப்படி ஒரு ஐடியா கொடுத்துவிட்டீர்களே.

Anonymous said...

nallailla..!!!
oru nalla munushana..!!! ipdiyaa.
kolradhu cha..!!

Anonymous said...

தோழர் சவுக்கு அவர்களே திராவிட என்ற சொல்லுக்கும் ஆந்திர , கேரளா , கர்நாடக அரசுகள் தமிழகத்துக்கு தண்ணீர் தராமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் .மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுரீங்கன்னு நினைக்கிறேன்

Post a Comment