சென்னையை அடுத்த பனையூரில், கடந்த 24.08.2009 அன்று இளங்கோவன் செட்டியார் மற்றும் அவரது மனைவி ரமணி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது மருமகள், காயமடைந்தார். இக்கொலை வழக்கில், ராஜன் எனும் சண்முகசுந்தரம் என்பவர், இக்கொலையை செய்ததாக சந்தேகிக்கப் பட்டு பொதுமக்களால் பிடிக்கப் பட்டு, காவல்துறை வசம் ஒப்படைக்கப் பட்டார்.
இச்சம்பவத்தில் ராஜன் எப்படி காவல்துறையினரால் அடித்துக் கொல்லப் பட்டார் என்பது பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. காவல்துறையினர், ஆரம்பம் முதலே இவ்விஷயத்தில் உண்மை வெளிவராவண்ணம் கவனமாக செயல்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது.
சம்பவம் நடந்த தினமான 24.08.2009 மாலை 6 மணிக்கு சண்முகராஜனின் வீட்டுக்கு ஜே.1 சைதாப்பேட்டை காவல்நிலையத்திலிருந்து இருவர் வந்து ராஜனின் மனைவி அமுதவல்லியை காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளனர். அமுதவல்லி தனியாக அனுப்ப விருப்பமில்லாமல், ராஜனின் தம்பி வெங்கடேஷ் மற்றும் அவரது தாயார் ஆகியோர் சைதை காவல்நிலையத்திற்கு சென்றுள்ளனர். அமுதவல்லி, முதுநிலை பொறியியல் பட்டதாரி. காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டவர்கள், தொடர்ந்து கடுமையாக விசாரிக்கப் பட்டுள்ளனர். ஏற்கனவே நடந்த “டாமின்” நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி சரவணனுக்கும், ராஜனுக்கும் தொடர்பு என்னவென்று கேட்டு துன்புறுத்தியுள்ளனர்.
இரவு 09.30 மணிக்கு ராஜனின் தம்பி வெங்கடேஷை மட்டும் ஒரு போலீஸ் ஜீப்பில் வீட்டுக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டுள்ளனர். ராஜன் அறை முழுவதும் 1 மணி நேரம் சோதனையிட்டபின் எதுவும் கிடைக்காமல் போகலாம் என முடிவெடுத்தபின் அந்த அறையை பூட்ட வெங்கடேஷ் எத்தனித்தபோது, பூட்ட வேண்டாம் என தடுத்த போலீசார், மீண்டும் ஒரு முறை சோதனையிட வேண்டும் என கூறியுள்ளனர்.
அப்பொழுது வெங்கடேஷை அருகில் இருந்த அறைக்குச் சென்று கலைந்திருந்த பொருட்களை எடுத்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பெண்கள் வந்ததும் எடுத்து வைத்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளதற்கு “போய் எடுத்து வைடா “ என்று மிரட்டியுள்ளார்கள்.
வெங்கடேஷ் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வெங்கடேஷை அழைத்து அங்கே பார் என்று உயர இருந்த அலமாரியைக் காட்டியுள்ளனர். அங்கே ஒரு பை இருந்தது. “சார் அது காலியாத் தானே இருந்தது, அது எங்க பை இல்ல சார்“ என்று கூறியதற்கு “வாய மூடுடா, அதுல துப்பாக்கி இருக்குது, அத இங்கதான் எடுத்தோம், புரிஞ்சுதா ? “ என்று மிரட்டியுள்ளனர்.
பிறகு பீரோவில் இருந்த அமுதவல்லியின் நகைகளை எடுத்து தரையில் அடுக்கி போட்டோ எடுத்தனர்.
பிறகு இரவு 10.30 மணிக்கு மீண்டும் வெங்கடேஷ் சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் அண்ணி மற்றும் தாயாரோடு விசாரிக்கப் பட்டார். இரவு 12.30 மணிக்கு மூவரும் அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டு, ராஜனோடு பேச வைத்துள்ளனர்.
ராஜனை பார்த்த குடும்பத்தினர், ராஜன் பேன்ட் மட்டும் அணிந்து, உடல் முழுவதும் காயங்களோடு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஜனோடு அமுதவல்லியை பேசவைத்த போலீசார், ராஜன் பேச முற்படுகையிலேயே, கடுமையாக வாய் மீது தாக்கியுள்ளனர். தன் மனைவி முன்னிலையில் கடும் தாக்குதலுக்கு உள்ளான ராஜன், தொடர்ந்து அடிவாங்கியபடி இருந்துள்ளார்.
அப்போது அடையாறு காவல் நிலையத்தில் இணை ஆணையர் ரவிக்குமார், துணை ஆணையர்கள் திருஞானம், சம்பத் குமார், மவுரியா மற்றும் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் அங்கோ குழுமியிருந்தனர்.
எந்தவித புகாரிலும், குற்றச் சாட்டிலும் சிக்காத தன் கணவர் ராஜன், இப்படி காவல்துறையினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி நிலைகுலைந்து இருப்பதைப் பார்த்த அமுதவல்லி கதறி அழுதார்.
பின்னர் ராஜனின் இன்னொரு தம்பி குருமூர்த்தியும் காவல்நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். ராஜன், அவரது தம்பிகள் குருமூர்த்தி, மற்றும் வெங்கடேஷ் ஆகிய மூவரும், கடும் தாக்குதலுக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளனர். ராஜனை, அசோக் நகர் உதவி ஆணையர், தலையிலேயே முஷ்டியால் குத்தியுள்ளார். ஐந்து முறை குத்தியவுடன், ராஜன் அதிர்ச்சி அடைந்து தரையில் உட்கார்ந்துள்ளார்.
சுமார் 3.30 மணிக்கு ராஜன் வாந்தி எடுத்துள்ளதாக குரல் வந்துள்ளது. அப்போது வெள்ளை உடை அணிந்த ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிந்து வந்துள்ளார். அதற்குப் பிறகு, காவல்நிலையத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் ஒவ்வொருவராக வெளியேறியுள்ளனர். காலை சுமார் 430 மணிக்கு, ராஜன் குடும்பத்தாரை நீங்கள் வீட்டுக்குப் போகலாம் என்று அனுப்பியுள்ளனர்.
மறுநாள் மாலை 7 மணிக்கு மீண்டும் ராஜன் வீட்டுக்கு வந்த போலீசார், ராஜன் வீட்டிலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப் பட்டதாக சோதனைப் பட்டியலில் கையொப்பம் இடச் சொல்லி ராஜன் தம்பி வெங்கடேஷை வற்புறுத்தியுள்ளனர். மறுத்த வெங்கடேஷை கடுமையாக தாக்கி கையொப்பம் பெற்றுள்ளனர்.
வீட்டுக்கு வந்த ராஜன் குடும்பத்தினர், தொலைக்காட்சியைப் பார்த்தே, ராஜன் கொல்லப்பட்ட விவகாரத்தை அறிந்துள்ளனர். ராஜன் உடல் ராயப்பேட்டை போஸ்ட் மார்ட்டத்திற்காக ராயப்பேட்டையில் இருந்தபோது, ராஜன் உறவினர்களை, ராயப்பேட்டையில் இருந்து நேரடியாக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். உறவினர்கள் வரவேண்டியுள்ளது என்று கூறியதற்கு 3 மணி நேரம் அவகாசம் தருகிறோம், அதற்குள் எரிக்க வேண்டும் என்று கடும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
பயந்து போன ராஜன் குடும்பத்தினர், வேறு வழியில்லாமல், ராஜன் உடலை உடனடியாக காவல்துறையினர் கட்டளையிட்டவாறு எரித்துள்ளனர். உடல் சரியாக எரிந்துள்ளதா என்று துணை ஆணையர் ஒருவர் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
பீகார் மற்றும் ஆந்திரா சென்று வந்ததற்கான ஆவணங்கள் ராஜன் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்டது என்று செய்தி வெளியானதை அறவே மறுக்கின்றனர் ராஜன் குடும்பத்தார். அவ்வாறு சோதனையும் நடக்கவில்லை, ராஜன் வெளி மாநிலங்களுக்கு செல்லவும் இல்லை என்று கூறுகின்றனர்.
சி.பி.சிஐடி போலீசார், இன்று வெளியிட்ட அறிக்கையில், நீலாங்கரை இரட்டைக் கொலையில், ராஜன் மட்டும்தான் குற்றவாளி, இதில் வேறு யாருக்குமோ, அரசியல் தொடர்போ அறவே இல்லை என்று வெளியிட்டதிலிருந்து முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைக்க முயற்சித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
மேலும், இவ்விஷயத்தில், கதிரவன் என்ற நபரின் பங்கு போலீசாரால் விசாரிக்கப் படாமலேயே மறைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. கதிரவன் என்ற நபர்தான் ராஜனின் நண்பர், அவருக்குத் தான் ராஜனின் நடவடிக்கைகள் பற்றிய முழு விபரம் தெரியும் என்று கூறுகின்றனர் ராஜன் குடும்பத்தார்.
ஆனால், இந்தக் கதிரவன் பற்றி காவல்துறையினர் விசாரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது கடும் முரணாக உள்ளது. இந்த மர்ம முடிச்சுகள் அவிழாமல் பார்த்துக்கொள்ள, காவல்துறைக்கு அதிகார வட்டங்களில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்த இரட்டைக் கொலை வழக்கில், இத்தனை மர்மங்கள் இருந்தும், காவல்துறையின் மெத்தனமான, ஏனோ தானோ என்ற விசாரணை கடும் ஐயங்களை எழுப்புகிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் கருணாநிதிதான் இதற்கு விளக்கமளிக்க வேண்டும், ஆனால், அறிக்கை விட்டதற்கெல்லாம் சம்மன் அனுப்பி, எதிர்ப்புக் குரல்களை நெறிக்கத்தான் பார்க்கிறார் கருணாநிதி.
ஒப்பாரி
1 comment:
ராஜன் லாக்கப் மரணம் காவல்துறையின் கோர முகம். Very pity case. Poor innocent man killed for increasing the wealth of some big politcan.
Post a Comment