Flash News

Thursday, April 30, 2009

பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி - கருணாநிதியின் புதிய நாடக விமரிசனம்

“பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி “
கருணாநிதியின் புதிய நாடக விமரிசனம்

தலைச்சிறந்த எழுத்தாளரான கலைஞர் மு.கருணாநிதி தான் எழுதி இயக்கி வரும் நாடகங்களின் தொடர்ச்சியாக “பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி” என்ற புதிய நாடகத்தை எழுதி கடந்த திங்கள் அன்று சென்னை மெரினா கடற்கரையில் காலை அரங்கேற்றினார். ஏற்கனவே

“அபாயவேளையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்“
“மரண ஓலத்தின் நடுவே மனிதச் சங்கிலி“
“சொக்கத் தங்கம் சோனியா“
“மருத்துவமனையிலிருந்து மரண ஓலம்“
“இலங்கையில் பிரணாப்பு, ஈழத்தமிழருக்கு ஆப்பு“
“பசில் அடிக்கும் விசில்“
“மந்தி அடிக்கும் தந்தி“
“நேற்று தீவிரவாதி இன்று நண்பன்“
”முதலைக் கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர்”

ஆகிய பல நாடகங்களை நடத்தி தோல்வியை தழுவிய பின்னும் மனம் தளராமல் “பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி” என்ற இப்புதிய நாடகத்தை தயாரித்து எழுதி இயக்கி நடித்து அண்ணா நினைவிடத்தில் திங்களன்று அரங்கேற்றியுள்ளார். இந்நாடகத்தில் கவிஞர் கனிமொழி முக்கிய வேடம் ஏற்று நடித்தார். மன்மோகன் சிங் மற்றும் சோனியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பொய்யாகி ஒரு தொலைபேசி அழைப்போடு அவர்கள் பாத்திரங்கள் முடிந்து விட்டது. ஆனால் எதிர்பாரா விதமாக “செருப்படி வாங்கிய செட்டி நாட்டுச் சீமான்” சிதம்பரம் முக்கிய வேடமேற்று நடித்து க்ளைமாக்ஸ் காட்சியை முடித்து வைத்தார்.
கருணாநிதியின் பல நாடகங்களில் நடித்து கண்ணீர் சிந்தி உருக்கமான பல வேடங்களில் நடித்துள்ள கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கனமான பாத்திரம் வழங்கப் படும் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் வரவில்லை. கருணாநிதியின் “நள்ளிரவு கைதும் நயவஞ்சக நாடகமும்“ என்ற பழைய நாடகத்தில் கருணாநிதி கைது செய்யப் பட்டவுடன் “தமிழை கைது செய்து விட்டார்கள்“ என்ற வைரமுத்துவின் வசனம் இன்றும் நாடக ரசிகர்களால் பெரிதும் பாராட்டப் படுகிறது.

நாடகத்தின் இரு கதாநாயகிகளும் நாடகத்தில் பெரும்பாலான நேரம் கதாநாயகன் அருகிலேயே போட்டிப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தது காண்போர் உள்ளங்களை உருக்கியது. அதிலும் ஒரு கதாநாயகி கதாநாயகன் தலை வேர்த்து வழிகையில் தன் முந்தானையால் துடைத்து விட்டதையும் அதைக் கண்ட இரண்டாவது கதாநாயகி பொறாமையால் கண் சிவந்ததும் நல்ல காட்சியமைப்புகள்.
கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் அருகிலேயே இருந்தாலும் அது நாடகத்தின் சஸ்பென்சை துளியும் கூட்டவில்லை. உடன்பிறப்புகளும் கருணாநிதியின் மனைவியும் துணைவியும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாநிலத்தின் குறுநில மன்னர்கள் அனைவரும் கதறி அழும் உருக்கமான காட்சிகளும் காண்போர் நெஞ்சத்தை கசக்கிப் பிழிவதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால் இவ்வாறு இல்லாமல் பார்வையாளர்கள் மிகவும் மனச்சோர்வு அளிக்கும் வகையில் நாடகம் இருந்தது. நாடகத்தில் திடீர் திருப்பமாக “பெரியார் நாடக கம்பேனி“ நடத்தி வரும் கி.வீரமணியின் வருகை அமைந்தது. இருவரும் பெரியார் பாசறையிலிருந்து வந்த நடிகர்களாதாலால் நடிப்பின் இமயங்கள் சந்தித்தது போல் இருந்தது. மேலும் கருணாநிதியின் நாடகங்களில் நகைச்சுவை நடிகர்களாக நடித்து பெயர் பெற்ற “சோனியாவின் செருப்பு“ கே.வி.தங்கபாலு மற்றும் “மங்குணி பாண்டியர் “ சுதர்சனம் ஆகியோர் முக்கிய நகைச்சுவை வேடத்தில் நடித்ததை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.

கருணாநிதியின் ரசிகர்கள், மூன்று மாதத்திற்கு முன்பே இந்நாடகத்தை கருணாநிதி நடத்தியிருந்தால் இலங்கையில் 10,000க்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும் கையிழந்து காலிழந்து இன்று மருந்தில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பலர் காப்பாற்றப் பட்டிருப்பார்கள் என்று கருத்து தெரிவித்தனர்.
இருந்தாலும் இன்னும் 10 மணி நேரம் நடந்திருக்க வேண்டிய நாடகம் மிக குறைவான நேரத்தில் திடீரென்று முடிந்ததால் எரிச்சலடைந்த ரசிகர்கள் கதாநாயகனை காரி உமிழ்ந்து, அழுகிய முட்டைகளை வீசும் அளவுக்கு கோபமடைந்ததைக் கண்ட நாடக அமைப்பாளர்கள் விரைவாக நாடகக் குழுவினரை அப்புறப் படுத்தினர்.
இவ்வளவு சிறப்பாக பல நாடகங்களில் நடித்திருந்தாலும் இன்னும் கருணாநிதிக்கு இந்திய அரசு வழங்கும் தேசிய விருதோ, தாதா சாகேப் பால்கே விருதோ, ஆஸ்கர் விருதோ வழங்கப் படாதது வருத்தம் அளிக்கும் விஷயம் என்று பழம்பெரும் நடிகர்கள் தெரிவிக்கின்றனர்.
மே 13க்குள் மீண்டும் ஒரு அதிரடி நாடகத்தை கருணாநிதி வெளியிடுவார் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்க்கிறார்கள்.

-ஒப்பாரி-

No comments:

Post a Comment