
இந்தியாவிலேயே மிகச் சிறந்த சாணக்கியர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவர் கருணாநிதி. இவரின் சாணக்கியத்தனத்துக்கு முன்னால், எவரும் நிற்க முடியாது. கருணாநிதி கண்ணசைத்தால் ஒரு பொருள், திரும்பினால் ஒரு பொருள் என்று இவரின் அனைத்து அசைவுகளுக்கும் ஒரு பொருள் உண்டு.
அரசியலில் பல்வேறு புயல்களைச் சந்தித்தவர் கருணாநிதி. மிகப் பெரிய இரண்டு பிளவுகளை கட்சி சந்தித்தும், இன்னும், திமுகவை ஒரு கோட்டையாக கட்டி ஆண்டு வரும் கருணாநிதியின் திறமைகள் அசாத்தியமானவை.
இத்தனை திறமைகளோடு, இன்று ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பில் இருந்து வரும் கருணாநிதி, நிதானம் தவறி வருகிறாரோ என்ற சந்தேகம், அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கருணாநிதிக்கு தமிழக மக்களை விடவும், தனது குடும்பத்தின் மீதுதான் அக்கறை அதிகம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் என்றாலும், அதை வெளிப்படையாக கருணாநிதி சொல்லிக் கொள்ள மாட்டார். தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் வாழ்கிறேன். கோடிக்கணக்கான அன்பு உடன்பிறப்புகளுக்காகத் தான் என் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.
ஆனால் முதல் முறையாக, எனது குடும்பத்தினர் தான் முக்கியம். அவர்கள் சினிமாவுக்கு வந்தால் என்ன என்று பேசியிருக்கிறார். அவரின் கோபத்துக்கு காரணம், தினமணி நாளேட்டில் வந்த ஒரு சிறிய கார்ட்டூன்.

அந்த கார்ட்டூன் தொடர்பாக கருணாநிதி பேசியது.
“இந்த விழாவிற்கு வருகின்ற நேரத்தில், காலையில் நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அந்தப் பத்திரிகையிலே ஒரு விகடத் துணுக்கு. என்ன விகடத் துணுக்கு என்றால் - """"கலைஞர் வரலாற்றிலேயே முதன் முறையாக - கலைஞர் கதை வசனத்தில் - கலைஞர் பேரன் தயாரிப்பில் - கலைஞர் பேரன் இயக்கத்தில் - கலைஞர் பேரன் நடித்த - புத்தம் புதிய திரைக்காவியம் - கலைஞர் டி.வி. யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்"" என்று இப்படியொரு விளம்பரம் போன்ற விகடத் துணுக்கு. அந்தப் பத்திரிகையைப் படித்தவர்கள் எல்லாம் இதைக் கண்டிருக்கக் கூடும். """"அடடே……!"" என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது இது.
என்ன; கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா? நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா? அந்தக் குடும்பத்திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா? தனுஷ் நடிக்கக் கூடாதா?
அந்தக் குடும்பம் மாத்திரமல்ல. நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவிலே பிரிதிவி ராஜ் கபூர், பிரமாண்டமான நடிகர். மாநிலங்களவையிலே எட்டாண்டு காலம் உறுப்பினராக இருந்தவர். நானும் மறைந்த நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும், அவருடைய சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி அவர்களும் மைசூரில் """"நாம்"" திரைப்படத் திற்காக சென்று பணியாற்றிக் கொண்டிருந்த போது - மைசூரில் பிரிதிவி ராஜ் கபூரின் நாடகம் """"பதான்"" என்ற தலைப்பிலே நடைபெற்றது. அதைக் காண நாங்கள் சென்றிருந்தோம்.

பிரிதிவி ராஜ் கபூர் நடித்தார். அவர் பல படங்களில் நடித்தார். """"அக்பர்"" அவர் நடித்த படம் தான். நீங்கள் கண்டிருப்பீர்கள். நாங்கள் பார்த்த """"பதான்"" நாடகத்தில், முக்கிய வேடத்தில் அமர்ந்திருக்கும் அவர், தன்னுடைய மனைவியை அழைத்து இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது - வாய் நிறைய தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டு - சிரிப்பு வந்த காரணத்தால் அடக்க முடியாமல், அதை படுக்கை அறையிலேயே துப்புவார். அந்தக் காட்சியை ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் அந்தத் தியேட்டரே அதிரக் கூடிய அளவிற்கு கையொலி செய்து வரவேற்பார்கள்.
அதை அவ்வளவு பெரிய நடிப்பாக மக்கள் கருதுகின்ற அளவிற்கு - அவ்வளவு பெரிய மகத்தான நடிகர் பிரிதிவி ராஜ் கபூர் - அவருடைய மகன் ராஜ் கபூர் நடிகர் இல்லையா? அவரும் மாநிலங்களவையிலே உறுப்பினராக இருந்தவர் அல்லவா? ராஜ் கபூரின் தம்பிகள் ஷம்மி கபூர், சசீ கபூர் அவருடைய மகன்கள் ரிஷி கபூர், ரந்தீவ் கபூர் இந்தக் கபூர்கள் எல்லாம் யார்? ஒரே குடும்பத்தினர் அல்லவா?
கலைஞர் வீட்டில் மாத்திரம் உதய நிதி, கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவு நிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது. இதற்காக ஒரு பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை. ஆனால் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பிரிதிவி ராஜ் கபூரின் பேரன் பேத்தி கொள்ளுப் பேரன், பேத்தி வரை இருக்கலாம் கலைத் துறையிலே - மற்றவர்களின் இல்லங்களில் இருக்கலாம் - என்னுடைய அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு இருக்கலாம், பிரபுவின் மகன் துஷ்யந்த்; - அவர் இருக்கலாம், ஆனால் கருணாநிதி மாத்திரம் இருக்கக் கூடாது. ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அவன் திராவிடச் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அதை ஒழிக்க வேண்டும், அதை வீழ்த்த வேண்டுமென்ற குறுகிய நோக்கமே தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்திற்கு வரும்போது, பிரிதிவி ராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும்.

என் பெயர் ஞாபகத்திற்கு வந்த போது, நம்முடைய ரஜினி அவர்களின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். நான் ஏதோ அவர் மீது கோபத்தாலோ, பொறாமையாலோ இதைச் சொல்லவில்லை. ரஜினி காந்த் அரசியலிலே முழுக்க முழுக்க இல்லாத காரணத்தால், அவரை விட்டு விடுகிறார்கள். நான் அரசியலிலே முழுக்க முழுக்க இருக்கின்ற காரணத்தால், கலைத் துறையிலே எனக்கு இருக்கின்ற ஈடுபாடு தான் காரணம் என்று சொன்னால், என்னைப் போன்ற அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள், கலைத் துறை நண்பர்களை எப்படி நேசிக்க முடியும்?
கலைத்துறையிலே எப்படி தொடர்பு கொள்ள முடியும்? கலைத்துறையிலே உள்ள யார் எதிர்த்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படாமல், நட்புணர்வும், நேச உணர்வும் கொண்டிருக்கின்ற காரணத்தால் தான் தம்பி பாரதிராஜா இங்கே சொன்னதைப் போல இன்று நேற்றல்ல - ஆண்டாண்டு காலத்திற்கும் அவர்கள் என்னை நினைக்கின்ற அளவிற்கு - நான் அவர்களை நினைக்கின்ற அளவுக்கு அந்த இனிய தொடர்பு எங்களிடத்திலே இழைந்தோடிக் கொண்டிருக்கின்றது. அதை யாரும், எவரும் எந்த வகையிலும் தடுக்க முடியாது என்பதையும் அப்படி தடுக்க முடியாது என்பதற்கு பலமான சுவராகத் தான் பையனனூரில் 15 ஆயிரம் பேருக்கான வீடுகள் கட்டப்பட்டு, திறக்கப்படவுள்ளன என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். “
இந்த உரையில் குறிப்பிடப் படாமல் விடப்பட்டதும், கருணாநிதி பேசியதும் என்னவென்றால், “என் மனைவி என்ன மலடியா ? “ என்பது.
கருணாநிதி போன்ற வயது முதிர்ந்த அரசியல் அனுபவம் மிக்க தலைவரின் வாயில் இருந்து பொது மேடையில் வரக் கூடிய வார்த்தைகள் இது வல்ல. அவரின் முதிர்ச்சிக்கும், அனுபவத்திற்கும், இந்த வார்த்தைகள் பொருத்தமானவை அல்ல.
தினமணியில் வெளி வந்த ஒரு சாதாரண கார்ட்டூனுக்கு, கருணாநிதியின் இந்த எதிர்வினையானது மிக மிக கூடுதலானது. தேவையற்றது.
கருணாநிதியின் இந்த எதிர்வினைக்கு காரணம், தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை செம்மொழி மாநாட்டுக் குழுவில் எல்லாம் போட்டு, அவரை கவுரவித்தேனே. அந்த நன்றியை நினைத்துப் பார்க்காமல் என்னைப் பற்றி இப்படி கார்ட்டூன் போட்டிருக்கிறார்களே என்ற ஆதங்கம் மற்றும் கோபம்.
தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை கருணாநிதி செம்மொழிக் குழுவில் போட்டது, வைத்தியநாதனுக்கு கவுரவம் அல்ல. கருணாநிதிக்குத் தான் கவுரவம். இது போல செம்மொழிக் குழுவில் போட்டால், தன்னைப் பற்றி எதுவும் எழுத மாட்டார்கள் என்று எண்ணுவது, கருணாநிதியின் நிதானமின்மையையே காட்டுகிறது.
ஒரு கார்ட்டூனுக்கு எதிர்வினையாக, ராஜ்கபூர் பதான் நாடகத்தில் வெற்றிலையை குதப்பி துப்பினார், அதை மக்கள் ரசித்தார்கள் என்று பேசுவதை எதில் சேர்த்துக் கொள்வது ?
திரைப்படத் துறையினருக்கும், தனக்கும் இருக்கும் உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று கருணாநிதி பேசியிருப்பது, அவரது ஆதங்கத்தை காட்டுகிறதே தவிர, யதார்த்தத்தை காட்டவில்லை. ஆட்சி மாறினால், இன்று கருணாநிதிக்கு விழா எடுக்கும் இந்த காகங்கள், நேரு உள்விளையாட்டு அரங்கில், பச்சை நிற மேடையில், பச்சை இருக்கைகளால், அரங்கத்தையே பச்சையாக்கி விழா எடுக்கப் போகிறார்களா இல்லையா ?
வெளியில் சொல்ல முடியாமல், திரைப்படத் துறையினரும், தயாரிப்பாளர்களும், பெரும் பொருமலில் இருக்கிறார்கள் என்பதை கருணாநிதியின் மனது நம்ப மறுக்கிறது. பல ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் இருந்து, பல திரைப்படங்களை தயாரித்த நிறுவனங்களையெல்லாம், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களான, ரெட் ஜெயன்ட் பிக்சர்சும், சன் பிக்சர்சும், க்ளவுட் னைன் பிக்சர்சும், ஆக்டோபஸ் போல வளைத்து கபளீகரம் பண்ணுவதை மகிழ்ச்சியாகவா எதிர்கொள்வார்கள் ?
இன்றே திரைப்டத் துறையினர், எத்தனை பேர் அதிமுகவோடு ரகசியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கருணாநிதிக்கு தெரியுமா ?
என்னுடைய குடும்பத்தினர் திரைப்படம் தயாரித்தால் விமர்சிக்கிறார்கள் என்று ஆதங்கப் படுகிறாரே கருணாநிதி….. எங்கிருந்து வந்தது, இவரது குடும்பத்தினருக்கு இவ்வளவு பணம் ? அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமலா இவ்வளவு பணம் வந்தது ?

கருணாநிதியின் அடுத்த சறுக்கல், விஜயகாந்த், தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளத்தை கருப்புப் பணமாக பெறுகிறார் என்று அறிக்கை விட்டது.
கருப்புப் பணம் வைத்திருப்பதும், அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்வதும் ஒன்றா ? விஜயகாந்த் கருணாநிதி போல, ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருந்து சேர்த்த சொத்துக்கள் இல்லையே இவை ?
கருப்புப் பணமாக விஜயகாந்த் வாங்குகிறார் என்கிறாரே கருணாநிதி… தன்னுடைய பேரன்கள் தயாரிக்கும் எந்திரன் படத்தில் கருப்புப் பணமே இல்லை என்று உறுதியாக கூற முடியுமா கருணாநிதியால் ?
ரெட் ஜெயன்ட் பிக்சர்சும், க்ளவுட் நைன் பிக்சர்சும் கருப்புப் பணம் இல்லாமலே திரைப்படத்தை எடுத்து முடித்து விடுவார்கள் என்று கருணாநிதியால் கூற முடியுமா ?
இது போல நிதானம் தவறி, தேவையற்ற அறிக்கைகளை கருணாநிதி விடக் கூடியவர் அல்ல. ஆனால், இது போன்ற அறிக்கைகளை கருணாநிதி விட்டிருப்பது, அவர் நிதானம் தவறி வருகிறார் என்பதையே காட்டுகிறது.
மேலும், கருணாநிதி, தற்போது அவரின் செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டின் பிடியில் இருப்பதாக விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
பெரும்பாலான விஷயங்களில் இவர்கள் இருவரும் கூறும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே கருணாநிதி முடிவெடுப்பதாக கூறுகிறார்கள்.
தங்களின் வசதிப்படி, கருணாநிதியை முடிவெடுக்க வைத்து, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தித் தரும் பல காரியங்களை இந்த நிழல் முதல்வர்கள் இருவரும் செய்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கருணாநிதியின் மகன், மகள்களை விட, இந்த நிழல் முதல்வர்களுக்கு, செல்வாக்கு அதிகம் இருப்பதால், இவர்கள் போக்கிலேயே பல அரசு முடிவுகள் எடுக்கப் படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில் பொட்டு சுரேஷ் என்ற நபரோடு விகடன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட உரசல் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதி அவர்களோடு உரையாடிய போது, கருணாநிதி இரண்டு வார்த்தைகள் பேசினால், ராஜமாணிக்கம் இருபது வார்த்தைகள் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.
பொட்டு விஷயத்தை ஜாபர் சேட் பார்த்து முடித்து விடுவார் என்று தரப்பட்ட உறுதி மொழி மீது இது வரை எந்த நடவடிக்கைகளும் இல்லை என்றும், அடுத்த மாதம், விகடன் குழுமத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு மதுரையில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப் பட்ட வழக்கு, இது வரை வாபஸ் பெறப் படவில்லை என்பதும், இந்த நிழல் முதல்வர்களின் செல்வாக்கினாலேயே என்று கூறப் படுகிறது.

தேவையற்ற முறையில் பத்திரிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளும் அளவுக்கு கருணாநிதி, பக்குவமில்லாத அரசியல்வாதி இல்லையென்றாலும், விகடன் விஷயத்தில் அரசு கடைபிடிக்கும் அணுகு முறை மிக மோசமான விளைவுகளை திமுக அரசுக்கு ஏற்படுத்தும் என்பது தெரிந்தும், இந்த நிழல் முதல்வர்கள், கருணாநிதி மீது செல்வாக்கு செலுத்தி, ராஜமாணிக்கம் மற்றும், ஜாபர் சேட் ஆகிய இருவருக்கும், விகடன் குழுமத்தோடு தனிப்பட்ட முறையில் இருக்கும் விரோதத்துக்காக இந்த பிரச்சினையை பயன் படுத்திக் கொள்ளுகிறார்கள் என்றும் கூறப் படுகிறது.
அடுத்த மாதம் மதுரையில் வழக்கு நடக்கும் போது, தமிழகமெங்கும் இருந்து பத்திரிக்கையாளர்கள் மதுரையில் திரள திட்டமிட்டிருக்கும் சூழலில், அரசுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக உருவாக இருக்கிறது என்றும் கூறப் படுகிறது.
இது தவிர, திமுக தலைவர்கள் வட்டத்தில் இப்போது ஏற்பட்டிருக்கக் கூடிய இன்னொரு முணுமுணுப்பு, நேற்று கட்சியில் சேர்ந்த குஷ்பூ, துணை முதல்வர் அளவுக்கு, செல்வாக்கோடு இருப்பதாக கூறப் படுகிறது. முதல்வர் இல்லத்திற்கு எந்த நேரம் வேண்டுமானாலும் அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் செல்வதற்கும், எப்போது வேண்டுமானாலும் முதல்வரை சந்திப்பதற்கும், குஷ்பூவால் மட்டும் முடிகிறது என்றும், கட்சியின் மூத்த தலைவர்களை விட, குறுகிய காலத்தில் குஷ்பூ செல்வாக்கு பெற்று விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சியை திமுக கூட்டணியில் சேர்க்காமல் காலம் தாழ்த்துவது கூட, இந்த இருவரின் செல்வாக்காலேயே என்று தகவல்கள் கூறுகின்றன.
தேர்தல் ஆண்டில் அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று விருப்பமிருந்தால், திமுக அரசு மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதை தவிர்க்க வேண்டும். ஆனால், இந்த கட்டுச் சோற்று பெருச்சாளிகளை வைத்துக் கொண்டு, திமுக அரசு எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதே அரசியல் நோக்கர்கள் எழுப்பும் கேள்வி.
சவுக்கு