Flash News

Wednesday, July 14, 2010

உடைக்கப் படும் நான்காவது தூண்….



நான்காவது தூண். ஜனநாயகத்தின் முக்கியமான பங்கு வகிக்கும் ஒரு தூண். பத்திரிக்கைகளைத்தான் இவ்வாறு முக்கியமான தூணாக கருதுகிறார்கள் அறிஞர்கள்.
இன்று இந்த நான்காவது தூண் மெல்ல மெல்ல கருணாநிதியால் உடைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தத் தூணை உடைத்து, தனக்கு துதி பாடும் ஜால்ராக் கூட்டங்களை வைத்து ஒரு உளுத்துப் போன ஒரு தூணைக் கட்டலாம் என்று கனவு கண்டு கொண்டிருப்பாரேயானால், அவரைப் பெற்ற முத்துவேல் உயிரோடு வந்தால் கூட நடக்காது என்பதை அவர் உணர வேண்டும்.

பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல், திமுக அரசு வந்ததிலிருந்து தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சரி ஜெயலலிதா அரசில் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடக்கவேயில்லை என்றால், ஜெயலலிதா ஆட்சியில் தாக்குதல் எல்லாம் இல்லை. அதற்குப் பதில், போட்டா, தடா போன்ற ஆள் தூக்கிச் சட்டங்களின் கீழ் வழக்கு, அவதூறு வழக்கு போன்றவை இருக்கும்.

ஆனாலும், ஜெயலலிதா செய்ததை விட, கருணாநிதி பத்திரிக்கையாளர்களை இம்சிப்பதும், தாக்குவதும் மோசமானது. ஏனென்றால், ஜெயலலிதா எப்போதும் நானும் ஒரு பத்திரிக்கையாளர், மாநாடு முடிந்ததும், உங்களில் ஒருவனாக, அதிகாரத்தை விட்டு, உங்களோடு இருப்பேன் என்றெல்லாம் எப்போதும் பம்மாத்து பண்ணியதில்லை. தர்மசங்கடமாக கேள்வி கேட்டால், “எந்தப் ப்ரெஸ்சுடா நீ“ என்று கேட்டு விட்டு, பழக்கடை அன்பழகனைப் பார்த்து கண்ணைக் காட்டுவதில்லை.



நானே ஒரு பத்திரிக்கையாளன் தான் என்று நடிக்கும் கருணாநிதி ஆட்சியில்தான், பத்திரிக்கையாளர்கள் தாக்கப் படுவதும், “புகார் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப் படும்“ என்று வழக்கமான பழைய ரெக்கார்டை போடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான், கடந்த திங்களன்று, நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப் பட்ட போது பத்திரிக்கையாளர்கள் மீது நடந்த தாக்குதல்.




பத்திரிக்கையாளர்களுக்கு சீமானை காவல்துறையிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்ற வேண்டுதலா என்ன ? காவல் துறையினர் தங்கள் கடமையைச் செய்வது போலவே அவர்களும் தங்கள் கடமையைத் தானே செய்கிறார்கள் ?

அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அயோக்கியத்தனத்தை செய்யும் இந்தக் காவல் துறையினருக்கு இந்தத் துணிச்சலைத் தந்தது யார் ? அது வேறு யாருமல்ல. கருணாநிதிதான் அது.



காவல்துறையினருக்கு அன்று இருந்த உத்தரவு, சீமான் பத்திரிக்கையாளர்களிடம் பேசக் கூடாது என்பதுதான். இதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற பயத்தில்தான் இப்படி பத்திரிக்கையாளர்களைத் தாக்குகிறார்கள்.

சரி. ஒரு வேளை சீமான் பத்திரிக்கையாளர்களிடம் பேசி விட்டார். என்ன ஆகும். ஒன்றும் குடி முழுகிப் போய் விடாது. அந்தத் துணை ஆணையர் சாரங்கன் மாற்றப் படுவார். அந்த இணை ஆணையர் தாமரைக் கண்ணன் மாற்றப் படுவார்.

ஒரு சில உதவி ஆணையர்களும், காவல் ஆய்வாளர்களும் மாற்றப் படுவார்கள். இவ்வளவுதான் நடக்கும்.




ஆனால், பதவி மாற்றப் பட்டு, பழனி சிறப்பு போலீஸ் பட்டாலியனிலோ, ஆவடி சிறப்புப் போலீஸ் பட்டாலியனுக்கோ, மாற்றப் பட்டால், அதிகார மையத்தில் இருக்கும், இந்தக் காவல் துறை அதிகாரிகளுக்கு உயிரே போய் விடும்.

இந்த அதிகாரமும், மாமூலும், இல்லாவிட்டால் செத்து விடுவார்கள். இதற்குப் பதிலாகத்தான், பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் இந்த சமரசம்.
இணை ஆணையர் தாமரைக்கண்ணன், தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அதிமுகவின் முன்னாள் எம்பியும், முன்னாள் உள்துறைச் செயலாளருமான மலைச்சாமியின் உறவினர். முன்னாள் சபாநாயகரின் மருமகன்.

இவர் மீது பெரிய அளவில் ஊழல் குற்றச் சாட்டுகள் இல்லையென்றாலும், “ராஜா மெச்சியது ரம்பை“ என்று, ஜால்ரா போட்டு விட்டு, தன் பதவியை காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்குத்தான், இவருக்கு நேர்மை உணர்ச்சி.



ஆனால், அன்று தாமரைக் கண்ணன் வரும் முன்பு, அந்த கைது நிகழ்ச்சிக்கு பொறுப்பாக இருந்த எம்.சி.சாரங்கன் ஒரு மலை முழுங்கி மகாதேவன். சாரங்கன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.

2002ல் செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக இருந்தார் இந்த சாரங்கன். அப்போது, சென்னையில் கனிம வளம் மற்றும், பூமியியல் துறையில் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்று, ஒரு தனியார் கனிம நிறுவனத்தில் எம்.டியாக இருந்தார் சீனிவாசன் என்பவர்.

இந்த கனிம நிறுவனத்தின் சொத்துக்களையும், அதன் பங்குகளையும் அபகரிக்க ஒரு நபர் திட்டமிடுகிறார். அந்த நபர், அப்போது ராதாபுரம் தொகுதியின் சுயேட்சை எம்எல்ஏவாக இருந்த அப்பாவுவை அணுகுகிறார். இந்த அப்பாவு, எஸ்பிக்கு ஒரு வெயிட்டான அமவுண்ட்ட கொடுத்துடுங்க. ஒரு ஸ்கார்ப்பியோ வாங்கிக் கொடுத்துடுங்க, மீதிய அவரு பாத்துக்குவாரு என்று கூறுகிறார். இதன் அடிப்படையில் பேரம் நடக்கிறது. இந்த சீனிவாசன் நம்பிக்கை மோசடி செய்ததாக ஒரு புகாரை அந்த நபர் அளிக்கிறார்.

இந்தப் புகாரின் பேரில் எப்ஐஆர் பதிவு செய்த சாரங்கன், 62 வயதான சீனிவாசனை, சென்னையில் கைது செய்து திருநெல்வேலி வரை போலீஸ் வேனில் ஏற்றிச் செல்கிறார். வேனில் வந்தால், இதய நோயாளியான தனக்கு, மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது என்று சீனிவாசன் கூறியவுடன், அவரை திருநெல்வேலி வரை காரில் அழைத்துச் செல்ல தனியாக ஒரு அமவுண்ட்டை வாங்கிக் கொள்கிறார்.

நெல்லை சென்றதும் கைது செய்யப் பட்ட, சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்.

அந்த மருத்தவமனையில், விஷ்ணு என்ற ஆய்வாளர் தலைமையில் சாரங்கன் உத்தரவின் படி ஒரு தனிப்படை, மருத்துவமனை சென்று, சீனிவாசனின் மகன் மற்றும் மனைவியை கைது செய்வோம் என்று மிரட்டி அந்த நிறுவனத்தின் சொத்துக்களையும், பங்குகளையும், அப்பாவு எம்எல்ஏ சொல்லும் நபருக்கு மாற்றம் செய்யச் சொல்லி மிரட்டுகிறது.

போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் சீனிவாசன் வேறு வழியின்றி, மாற்றித் தருகிறார். இதற்கான பத்திரப் பதிவு, இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

இது மட்டுமின்றி, சாரங்கன் நெல்லை மாவட்டத்தில் இருந்த போது, “பொம்பளை சோக்கு“ உள்ளவர் என்று கூறுகின்றனர். அடிக்கடி, தென்காசியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், ஒரு பெண் உதவி ஆய்வாளரோடு, தனி அறையில் “சட்டம் ஒழுங்கு“ பிரச்சினை குறித்து விவாதிப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறு இவர் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து நடத்தும் விவாதங்கள் குறித்த புகார்கள் அப்போதைய நெல்லை டிஐஜி கோபாலகிருஷ்ணனிடம் செல்கிறது. அவர் சாரங்கன் தங்கியிருக்கும் அறையை பூட்டச் சொல்லி உத்தரவிட்டு, நேரடியாக செல்கிறார். இவரே சென்று பூட்டைத் திறந்தால், சாரங்கன் கழன்ற டவுசரோடு (Caught with his pants down) மாட்டுகிறார்.

இந்த இரண்டு விவகாரங்களும், முதலமைச்சருக்கு தெரிவிக்கப் பட, சென்னைக்கு சாரங்கனை அழைத்து, சாரங்கன் காது கிழியும் வரை திட்டி, சஸ்பென்ஷன் ஆர்டரை கையில் கொடுத்து அனுப்புகிறார்.

சஸ்பெண்ட் ஆன சாரங்கன், மீண்டும் வேலை பெறுவதற்கு அணுகும் நபர், அப்போது அதிமுக கூட்டணியில் இருந்த திருமாவளவன். திருமாவளவன், ஜெயலலிதாவிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றவுடன், கடுமையான வார்த்தைகளால், இது போன்ற கோரிக்கைகளோடு வரக் கூடாது என்று கண்டித்து அனுப்புகிறார்.

இந்த சீனிவாசன் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது. சாரங்கனின் கெட்ட நேரம், இந்த விசாரணை, செல்சம் மாணிக்க ராவ் என்று ஒரு நேர்மையான அதிகாரியிடம் கொடுக்கப் படுகிறது. மாணிக்க ராவ் ஒரு கிறித்துவர் என்பதை அறிந்த சாரங்கன், விசாரணை தொடங்கிய இரண்டாவது நாள், டிஜிஎஸ் தினகரனை பிடித்து விசாரணையை அமுக்க முயற்சிக்கிறார்.

சாரங்கனின் மனைவி நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் ஆதலால், அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐஜியாக இருந்த நாயுடு மகாஜன சபா தலைவர் கே.ராதாகிருஷ்ணன் மூலமாகவும் முயற்சி நடக்கிறது. ராதாகிருஷ்ணன் தலையீட்டின் பேரில், ஸ்கார்ப்பியோ கார் வாங்கிய விவகாரம் மட்டும் வழக்கில் சேர்க்கப் படவில்லை.

ஆனால், விசாரணை அதிகாரி மாணிக்க ராவ், மிகத் திறமையாக விசாரணையைக் கையாண்டு, சாரங்கனுக்கு ஆப்படிக்கும் அளவுக்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார்.
ஜெயலலிதா பதவிக்காலம் முடியும் வரை சாரங்கன் பணி இடைநீக்கத்திலிருந்து விடுவிக்கப் படவில்லை.

திமுக ஆட்சி வந்தும் கூட, சாரங்கனுக்கு பணி வழங்கப் படவில்லை. சாரங்கன் மீண்டும் திருமாவளவனை அணுகி, (இப்போதான் திமுகவுக்கு வந்துட்டாரே) திருமாவளவனுக்கு, 15 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்து, சென்னையிலேயே நல்ல பதவியை பெறுகிறார். இதுதான் சாரங்கனின் பின்புலம்.

இப்படிப் பட்ட அதிகாரியை சென்னை மாநகரில் முக்கிய பொறுப்பில் உட்கார வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி, பத்திரிக்கையாளர் மன்றத்தின் அருகே கட்டப் பட்டிருக்கும் குதிரையின் சாணத்தை ஒரு வாரத்திற்கு பொறுக்கா விட்டால், டிரான்ஸ்பர் வரும் என்று சாரங்கனுக்கு உத்தரவு போட்டால் அவர் மறுப்பார் என்றா நினைக்கிறீர்கள் ?



இந்த சாரங்கனிடம் தான் சீமானின் கைது ஒப்படைக்கப் பட்டது. சீமான் வந்து இறங்கியவுடன், ஒரே களேபரம் நடந்து கொண்டிருக்கும் போது, சாரங்கன் அந்தக் கூட்டத்தை விட்டு வெளியே நின்று கொண்டு, தனக்குக் கீழ் பணியாற்றும், உதவி ஆணையர்களை, ஏக வசனத்தில் பேசிக் கொண்டிருந்தார். சாரங்கன் சொன்ன வார்த்தைகள் “தூக்குய்யா… என்னய்யா வேடிக்கை பார்த்துக்கிட்டுருக்கே“ என்பதுதான்.

சாரங்கன் உத்தரவை ஏற்று, பத்திரிக்கையாளரை சந்திக்கும் முன் எப்படியாவது சீமானை வேனில் ஏற்ற வேண்டும் என்று, உதவி ஆணையாளர் சங்கரலிங்கம் முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் சாரங்கனின் கூச்சல் அதிகமாகவே, “ப்ரேஸ்ஸ தூக்கிப் போடுய்யா“ என்று உத்தரவிடுகிறார்.



இயந்திர மனிதர்களாக பயிற்றுவிக்கப் பட்ட காவலர்கள் “அய்யாவே சொல்லிட்டார்“ என்று, புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை பிடித்து தள்ளி, தாக்கி, சீமானை வேனில் ஏற்றினர்.



இதனால் ஆத்திரமடைந்த பத்திரிக்கையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கோபத்தோடு பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த பத்திரிக்கையாளர் பாரதி தமிழன், கூட்டத்தை ஒழுங்கு படுத்தி என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்கிறார். பத்திரிக்கையாளர்கள் பெரும்பாலானோர், தெரிவித்த கருத்தின் படி, சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.



அப்போது அங்கு வந்து சேர்ந்த அன்பு, புகைப்படக் கலைஞர்கள், ஒளி ஓவியர்கள், அனைவரும், சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்புகின்றனர்.
சம்பவ இடத்திற்கு, வந்த இணை ஆணையர் தாமரைக் கண்ணன் சாரங்கனை என்ன இது என்று சாடுகிறார். பிறகு, சாரங்கன், பத்திரிக்கையாளர்களிடம், “நான்தான் இந்த ஜுரிஸ்டிக்ஷன் டிசி. நடந்த சம்பவத்துக்கு நான் பொறுப்பு ஏத்துக்குறேன். மன்னிப்பு கேட்டுக்குறேன்“ என்று கூறுகிறார். (அந்த குதிரைச் சாணம் கதையை இந்த இடத்தில் நினைவு படுத்தவும்)



பாலிமர் டிவியைச் சேர்ந்த ஒரு இளம் பத்திரிக்கையாளர், “சார் அடி வாங்குனது நான்தான் சார். எனக்குல்ல வலிக்குது. எங்கள அடிக்க உத்தரவிட்டது அந்த சங்கரலிங்கம் ஏசி தான். அவர வந்து மன்னிப்பு கேக்கச் சொல்லுங்க“ என்று கூறுகிறார்.

சங்கரலிங்கம் அருகில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்தாலும், அவரை அழைத்து வந்து மன்னிப்பு கேட்கச் சொன்னால், “யோவ். நீ சொல்லித்தானே அவங்கள அடிச்சேன்“ என்று திருப்பிக் கேட்டு விட்டால்…. அதனால், சாரங்கனும், தாமரைக்கண்ணணும், பம்முகிறார்கள்.




இதற்குள், அந்தக் கூட்டத்தில் இருந்த, மூத்த பத்திரிக்கையாளர்கள் அன்பு, பாரதி தமிழன் ஆகியோர், உள் துறைச் செயலாளரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை விளக்குகிறார்கள்.

பத்திரிக்கையாளர் போராட்டம் குறித்த இந்த தகவல் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் பரவுகிறது. தகவல் அறிந்து, தமிழக அரசியல் ஆசிரியர், எஸ்.பி.லட்சுமணன், அங்கே வந்து போராடும் பத்திரிக்கையாளர்களோடு சாலையில் அமர்கிறார்.



உள்துறைச் செயலர், முதலமைச்சரின் தகவல் தொடர்பு அதிகாரியிடம் விஷயத்தை சொல்கிறார். அவர், தாமரைக் கண்ணனைத் தொடர்பு கொண்டு, 15 நிமிடத்தில் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப் பட வேண்டும் என்று உத்தரவிடுகிறார். வேறு வழியின்றி, சங்கரலிங்கத்தை அழைத்து வந்து மன்னிப்புக் கேட்கச் சொல்கின்றனர்.



அதிகாரி இட்ட உத்தரவை நிறைவேற்றியதற்காக, தன்னை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்களே என்ற ஆதங்கம் சங்கரலிங்கம் முகத்தில் இருந்தது. மிகுந்த தயக்கத்தோடு, “பத்திரிக்கையாளர்கள் என்னோட நண்பர்கள். அவங்கள தாக்கணும்ற எண்ணம் எனக்கில்ல. நான் தாக்கவும் உத்தரவிடல. ஆனாலும், அரெஸ்ட் பண்ணும் போது ஏதாவது நடந்திருந்தா மன்னிச்சுடுங்க“ என்று கூறி விட்டு, உடனடியாக அந்தக் கூட்டத்திலிருந்து விலகி, மறைவான இடத்தை நோக்கி நகர்ந்தார்.



அவர் நகரும் போதே, தாமரைக் கண்ணன் அவர் தோளில் ஆறுதலாக தட்டினார் (ஆறுதல் சொல்றாஆஆஆறாம்). அந்த சங்கரலிங்கத்தை ஒரு ஏட்டையா, குடிக்கத் தண்ணீர் கொடுத்து அழைத்துப் போனார்.

புகார் கொடுத்தால் மூன்று நாட்களில் சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்ற உத்தரவாதத்தின் பேரில் பத்திரிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்.
நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது, இந்த சம்பவங்களுக்கெல்லாம் வேர், கருணாநிதியின் பாசிசப் போக்கேயன்றி வேறு அல்ல.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கைதே செய்யாமல் சீமான் மீது வழக்கு தொடுத்திருக்க முடியுமா முடியாதா ?

அப்படியே கைது செய்தாலும், பத்திரிக்கையாளர்களிடம் சீமான் பேசிய பிறகு கைது செய்தால் தான் என்ன ? இவுரு மட்டும் வாய் கிழிய பேசிக்கிட்டே இருப்பாராம். ஊருல எவனும் பேசக் கூடாதாம். இந்த போக்கு, இந்தத் தமிழ்நாடே எனக்கும் என் குடும்பத்துக்கும் மட்டுமே சொந்தம், இங்கே நான் வைப்பதுதான் சட்டம், என்னைத் தவிர யாரும் பேசக் கூடாது, எழுதக் கூடாது என்பது பாசிசத்தின் உச்சக் கட்டம் அல்லவா ?


நாசி ஜெர்மனியில் நடந்ததற்கும் இங்கே நடப்பதற்கும் உள்ள ஒரே வித்தியாசம். அங்கே யூதர்களை கொன்றழித்தார்கள். இங்கே, தமிழர்களை சிறையில் அடைக்கிறார்கள்.
நான் வளர்த்த கட்சியை என்னைத் தவிர யாரையும் அழிக்க விட மாட்டேன். நான்தான் அழிப்பேன் என்று கருணாநிதி திட்டமிட்டு செயல்படுவது போலவே அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன.

சர்வ அதிகாரம் படைத்த, உலகை ஆளுவேன் என்று எக்காளமிட்ட ஹிட்லர் ஒரு சுரங்கப் பாதையில் காதலியோடு தற்கொலை செய்ய நேர்ந்தது என்பதை கருணாநிதி அறிவாரா ?
ஆனால், ஹிட்லர் அளவுக்கு, கருணாநிதி ஆளுமை கொண்டவரல்ல. இந்தப் பாசிச போக்குக்கான பலன் வெகு விரைவில் வரத்தான் போகிறது.



சவுக்கு