![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB098duDSdbD6IevqKYzd-bO7K6GdqcgFyx71tCJn3HVjGezRFUddy8iO-zAUczZNohxK9_GMsnaiGWmo5cNtwRGJKAlVG7LQqctsyFoklHLD3_kGtjZJ3pIH0trifVNvBnYmzs2TnwZU/s400/tblfpnnews_65835207701.jpg)
ஒரு மொழி என்பது யாரால் சிறப்பு பெறுகிறது ? மக்களால் சிறப்பு பெறுகிறது. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி... “ என்றெல்லாம் பழம்பெருமை பேசி வருகிறோமே. இத்தனை ஆண்டுகாலம், மக்கள் இந்த மொழியை பேசி வருவதால்தான் இன்னும் தமிழ் என்ற மொழி வாழ்ந்து வருகிறது. மக்களால் பேசப்படாத சமஸ்கிருதம், இன்று ஏட்டளவில்தான் உள்ளது என்பதை மறக்கவியலாது.
மொழியைவிட, அம்மொழி பேசும் மக்களால்தான் எந்த மொழிக்குமே சிறப்பு. 4 நாட்கள் பட்டினியாய் இருக்கும் ஒருவனிடம், “வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்“ என்று கூறினால், “போடா மயிறு“ என்று திட்டுவான். எல்லாவற்றிலும், மக்களே பிரதானம். மக்களால்தான், கடவுளுக்குக் கூட சிறப்பு. மக்கள் கூட்டம் செல்லாத கோயிலுக்குக் கூட பெருமையில்லை.
இன்று 9வது உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடக்கும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த மாநாட்டு அறிவிப்புக்கு, தினமணி நாளேடு, கீழ்க்கண்டவாறு தலையங்கம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளது.
“14 ஆண்டுகளுக்குப் பிறகு, சோர்ந்து போயிருக்கும் தமிழனுக்கும், துவண்டு கிடக்கும் தமிழுணர்வுக்கும் புத்துயிர் ஊட்டும் விதமாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்த முன்வந்திருக்கும் முதல்வர் கருணாநிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்கூறு நல்லுலகின் சார்பாக முதல்வருக்கு நன்றி... நன்றி... நன்றி! “
இந்த 9ம் உலகத் தமிழ் மாநாடு, நடைபெறும் இந்தச் சூழ்நிலையை, ஆராய்ந்து பார்ப்பது, சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரின் கடமை.
இன்று தமிழர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் ? தமிழர்கள் என்றதும், ஈழத்தை நினைக்காமல் இருக்க இயலாது.
ஈழத்தில், தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYy-au3zovNlX-Ee4riK67QIVbNjICuqdb3PK9A1uL2ET7On_rjL_SOqyZ_jKkFh5AdHp8tVR_R4dA5U4Dlxv3QJ6rPGOGweMxrVcsV5CjKJ09YlAn33qcEDViM9pYPKqgFxWR4ugkHrM/s400/ba926e739b948be2f71bbe0559bd9307.jpg)
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொத்துக் குண்டுகளாலும், காயங்களுக்கு மருந்தில்லாமலும், உணவில்லாமலும், ஈசல்களைப் போல செத்து மடிந்து கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?
அக்டோபர் 2008லிருந்து, ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகமெங்கும் அனுதினமும் உண்ணாவிரதங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzVNrvMO28yW6TIbCA4jAa13v7ibOeU_h7-61hmcNHYqU8xSjrIernAKT8YnMpSbcDuVTHtHrKUs6gimLSb_uOVJYtJB0voPSGIJZsLhVpivfzSwnH2j3w4JH5a7EANSXbBbsu7LZp8XE/s400/adadey-kalainjar-karunanidhi-murasoli-letters-govt-dmk.jpg)
“போரை நிறுத்து“ என்ற முழக்கம் தமிழத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXuCy_b9pf0cl_n6DlAk4sJR956vPOuA5oRyd6_HO16CyU-_UV3gmxBGlQPce5dumMEbFqYc6AbETmw6ZVowiJxfdyjQu9AjDxzUiVPhc0uNtoUFrmOrPkUznbODIIYXZsyGnqGYlMiPo/s400/tamil-civilians-stand-in-line-to-receive-food-and-supplies-in-a-refugee-camp-located-on-the-outskirts-of-the-town-of-vavuniya-in-northern-sri-lanka.jpg)
மனிதச் சங்கிலி நடத்தி, “காப்பாற்றுங்கள் தாயே“ என்று மன்றாடத் தெரிந்த கருணாநிதிக்கு, இப்போரை நடத்தும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை முறித்துக் கொள்ள தெரியவில்லை. 4 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து, “போர் நின்று விட்டது“ என்று போலி அறிவிப்பு வெளியிடத் தெரிந்த கருணாநிதிக்கு, இந்தியா தலையிடாவிட்டால், ஆதரவு வாபஸ் என்று சொல்லத் தெரியவில்லை.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjes8oGWyr1-SpYuS73PvjbdS4vW7-2sRLnMIcsTDROndb1ClWFODuGlnS0vFJ_OHp3qrZHcZ6GLRE9OTGbap8dmaQpfQ_lL5elW__2lQchtnK9WAviSzpypAgR0lJafWfmpCD62QUJeeA/s400/dmk-leaders-then-now-family-karunanidhy-kanimozhi1.jpg)
உண்ணாவிரதத்திற்குப் பின் இன்னும் மக்கள் சாகிறார்களே என்று கேட்டதற்கு, மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்று பசப்பத் தெரிந்த கருணாநிதிக்கு ரத்தக் கரங்களுக்குச் சொந்தமான காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்டுவேன் என்று சொல்லத் தெரியவில்லை. மகனுக்கும் மகளுக்கும் மந்திரி பதவி வேண்டி, டெல்லி சென்று, தள்ளு வண்டியில், சோனியா வீட்டுக்குச் சென்று மன்றாடத் தெரிந்த கருணாநிதிக்கு போரை நிறுத்துங்கள் என்று மிரட்டத் தெரியவில்லை.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_KjW1cIXitky1hxLAVkcbLb9YrxqDOLSP6qflay292qO7wx5lEqWvY7J5PYiLeHI9kBbmCVPYCCOMJZNB5AdY1VivLAc8deSKj6YTAVPMUD3qfrF5EbNgdbl6tbPBsrXYTDOkigm5DpM/s400/wheel+karunanidhi.jpg)
கேட்ட பதவி கிடைக்கவில்லை என்றதும், பதவியேற்பு விழாவில் பங்கெடுக்காமல், கோபித்துக் கொண்டு வரத் தெரிந்த கருணாநிதிக்கு போரை நிறுத்தாததால், காங்கிரஸ் கட்சியுடன் கோபித்துக் கொள்ளத் தெரியவில்லை.
பிரிந்த குடும்பம் இணைந்தவுடன் “இதயம் இனித்தது, கண்கள் பனித்தது“ என்று மகிழ்ந்த கருணாநிதிக்கு தமிழர்களின் மரணமும் இதயத்தில் இனித்ததோ என்னவோ ?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvPSZbqMg3uiEDk5uUlbXlUe-9r5BPy1wFU9LbE7JPbFrRzLpU4FNP3gTaMB6BwHuLYX4CN5VYxT2WWnZEswe4THvIoVRqebsDEUEXBvfzXArYBlixUxVeyyc5oGp9etToY9SlMxFfz9s/s400/yiruthi-naadagam.jpg)
போர் முடிந்ததுமாவது, முகாம்களுக்குள் அடைபட்டு வாடி வதங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்ற ஏதாவது முயற்சி எடுத்தாரா இந்தக் கருணாநிதி ?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjy2H-QljkwNRdo1LmhrSWnchVn6kLJ8q7v9Zx9lzyXDExSKZOVMWiqu7YCI6Rme0XpWsILPVIWi4C6oda4KHhUhPcbNJLfc1dsQ91rl6UF4jEwhAeyTTwVGiMfTrpLAyBv7hwJt0sEFk/s400/Sri_Lanka_587163a.jpg)
டெல்லிக்கு ஒரு கடிதம் அனுப்பி விட்டு எனது கடமை முடிந்து விட்டது என புதிதாக கட்டப் பட்டு கொண்டிருக்கும் தலைமைச் செயலக கட்டிடத்தை சுற்றிப் பார்க்க தனது தள்ளு வண்டியில் கிளம்பி விடுகிறார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEWIp-msByBkuO-VuvL3Efzlx64nAKJiUUKIcLYitcSLM9Ip4IDzkakDlZEFgj5WcvoXBdy2Ts-2IcNyeMheIHQTGcXDTKIDPTnIeb0S4-gtZPc-qlE0A0nk5-yUh4XBONg3BG1mgmeuU/s400/tamil-civilians-stand-in-line-to-receive-food-and-supplies-in-a-refugee-camp-located-on-the-outskirts-of-the-town-of-vavuniya-in-northern-sri-lanka.jpg)
ஈழத்தில் இருக்கும் தமிழர்களை விடுங்கள். இந்தியத் தமிழர்களான மீனவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்களே .... ! 300க்கும் மேற்பட்டவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்களே; என்ன செய்து கொண்டிருக்கிறார் இந்தக் கருணாநிதி ? முன்புதான் விடுதலைப் புலிகள் என்று சந்தேகத்தில் கொன்றார்கள். இப்பொழுது இவர்கள் கணக்குப்படிதான் விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டுவிட்டார்களே. நாள்தோறும் தமிழக மீனவர்கள், கச்சத் தீவு அருகிலும், இந்திய எல்லைக்குள்ளாகவும் துரத்தித் துரத்தித் தாக்கப் படுகிறார்களே.... என்ன செய்கிறார் இந்தக் கருணாநிதி ?
உலகத் தமிழர்கள் கருணாநிதியால் ஏமாந்து போனார்கள் என்று நெடுமாறன் அறிக்கை விட்டால், என் உயிரைப் பிரிக்க சதி என்று பதிலறிக்கை விடுகிறார். கருணாநிதியின் உயிரை எடுப்பதால் யாருக்கு என்ன லாபம் ? கருணாநிதியின் குடும்பத்தில் வேண்டுமானால் யாராவது சதி செய்யலாம். என் உயிரைப் பறிக்க சதி என்று அறிக்கை விட்டால், கருணாநிதியின் துரோகங்கள் மறைந்து, மக்கள் அவரை மன்னித்து விடுவார்கள் என்று கருணாநிதி பகல் கனவு காணுவாரேயானால் அவரது கனவு பலிக்காது.
தமிழர்கள் இத்தனை துயரத்தில் இருக்கையில், தமிழுக்கு மாநாடு நடத்துவது யார் காதில் பூச் சுற்ற ? இத்தனை தமிழர்களின் பிணங்களின் மேல் தன் ரத்தக் கறை படிந்த கரங்களோடு, கருணாநிதி நடத்தும் இந்த மாநாட்டை தமிழன்னை விரும்பமாட்டாள். இந்த உலகத் தமிழ் மாநாடு, தமிழர்களுக்கு நடத்தப்படும் கருமாதியே தவிர வேறு இல்லை.
/ஒப்பாரி/
1 comment:
உங்கள் blog நன்றாக உள்ளது, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள், நன்றி
Post a Comment