நளினி
சமீபத்தில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களான ராபர்ட் பயாஸ் மற்றும் நளினி ஆகியோர், முன்விடுதலை கோரி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
ராபர்ட் பயஸ்
இதையொட்டி, தேசிய ஊடகங்களில் கடும் விவாதம் நடைபெற்றது. இவ்விவாதங்களில் பங்கு பெற்ற பெரும்பாலானோர் இந்த தேசத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவைக் கொன்ற கொலையாளிகளுக்கு எவ்வித கருணையும் காட்டக் கூடாது, இவர்கள் உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்று பலவாறு கருத்துச் சொன்னார்கள்.
இந்த விஷயத்தில் என்னதான் நடந்தது ? நளினியும் ராபர்ட் பயாசும் உண்ணாவிரதம் இருக்கக் காரணம் என்ன ?
வேலூர் சிறை
1991ல் ராஜீவ் கொலை, இந்தியாவை உலுக்கியது என்பது யாரும் மறுக்க முடியாததே. ஆனால், ராஜீவ் மரணத்தை தனியாக ஒரு அரசியல் கொலை என்று பார்க்க இயலாது. ராஜீவ் மரணம், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையோடும், இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய படுகொலைகளோடும் சேர்த்துதான் பார்க்க வேண்டும்.
இலங்கையிலிருந்து திரும்பி வரும் அமைதிப்படை
ராஜீவ் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் இன்று முள்வேளிக்குள் மூன்றரை லட்சம் தமிழர்கள் அடைப்பட்டிருக்கமாட்டார்கள். உங்கள் வீட்டிற்குள் ரவுடிகளை அனுப்பி உங்கள் அக்காவையும், தங்கையையும் பலாத்காரம் செய்த ராணுவத்தை அனுப்பியவரிடம், நீங்கள் சமாதானம் பேசுவீர்களா என்று சிந்தித்து பாருங்கள். இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய அட்டூழியத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் விரிவாக விவரித்திருக்கிறது.
அமைதிப்படை அட்டூழியங்களை விவரிக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை
இது தவிர பல்வேறு ஊடகங்களில் இந்த விஷயம் தெளிவாகவே பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
ராஜீவ் மரணம் குறித்து, வருத்தத்தோடு பேசும் அறிவு ஜீவிகள், இந்திய ராணுவத்தால், அழிக்கப் பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களைப் பற்றி வாய்த்திறக்க மறுக்கிறார்களே ஏன் ? அவர்களின் உயிர், ராஜீவ் உயிரைவிட மதிப்புக் குறைவானதா என்ன ?
இலங்கை கடற்படை வீரரால் தாக்கப் பட்ட ராஜீவ்
ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது என்று கூப்பாடு போடும் ஊடகங்கள், இந்திரா படுகொலைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியினரால் நடத்தப்பட்ட கொலைவெறியாட்டத்தில், இறந்த 4000 சீக்கிய உயிர்களுக்காக இன்னும் ஒருவர் கூட தண்டிக்கப் படவில்லை என்று தெரியுமா ? 4000 சீக்கியர்கள் படுகொலை செய்யப் படுகையில், ராஜீவ் அளித்த விளக்கம் நினைவிருக்கிறதா ? “ஒரு பெரிய ஆலமரம் விழுகையில், பூமி அதிரத்தான் செய்யும்“ சீக்கியப் படுகொலைகளுக்காக இது வரை 10 விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
1984 சீக்கியர்கள் படுகொலை
1984ல் நவம்பரில் “மார்வா“ கமிஷன் அமைக்கப் பட்டது. ராஜீவ் காந்தி, இந்தக் கமிஷனை உடனடியாக கலைத்தார். மே 1985ல் “மிஸ்ரா“ கமிஷன் அமைக்கப் பட்டு, அது இன்னும் மூன்று கமிஷன்கள் அமைக்க வேண்டும் என்று பரிந்துரை அளித்தது. நவம்பர் 1985ல் தில்லோன் கமிஷன் அமைக்கப் பட்டு, இறந்த சீக்கியர்களுக்கான நிவாரணத் தொகையை பரிந்துரை செய்தது. ஆனால் ராஜீவ் அரசாங்கம், இந்தக் கமிஷனின் பரிந்துரையை நிராகரித்தது. பிப்ரவரி 1987ல், “கபூர்-மிட்டல்“ கமிஷன் அமைக்கப் பட்டு, 72 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தது. ஆனால், அரசு ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை. பிப்ரவரி 1987ல் அமைக்கப் பட்ட “ஜெயின்-பானர்ஜி“ கமிட்டி, ஜக்தீஷ் டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமார் ஆகிய இரு காங்கிரஸ் பிரமுகர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யச் சொல்லி பரிந்துரைத்தது. டெல்லி உயர்நீதிமன்றம், இக்கமிஷன் அமைக்கப் பட்டதே செல்லாது என்று தீர்ப்பளித்தது. “மிஷ்ரா“ கமிஷன் பரிந்துரையின் படி அமைக்கப் பட்ட “அஹுஜா“ கமிட்டி, கலவரத்தில் இறந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 2733 என்று உறுதி செய்தது. இதற்குப் பின் மார்ச் 1990ல் அமைக்கப் பட்ட “பொட்டி-ரோஷா“ கமிட்டி சஜ்ஜன் குமார் மற்றும் ஜெக்தீஷ் டைட்லர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்தது. டிசம்பர் 1990ல் அமைக்கப் பட்ட “ஜெயின்-அகர்வால்“ கமிஷனும் ஜெக்தீஷ் டைட்லர், எஜ்.கே.எல்.பகத் மற்றும் சஜ்ஜன் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யும் பரிந்துரையை உறுதி செய்தது.
ஜெகதீஷ் டைட்லர்
ஆனால் அப்போது இருந்த நரசிம்ம ராவ் அரசு இந்த கமிட்டியை கலைத்து விசாரணையை நிறுத்தி 1993ல் உத்தரவிட்டது. பிறகு டிசம்பர் 1993ல் அமைக்கப் பட்ட “நாருல்லா“ கமிஷனும், இந்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யும் பரிந்துரையை உறுதி செய்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இறுதியாக பிஜேபி அரசாங்கத்தால் அமைக்கப் பட்ட “நானாவதி“ கமிஷனும் டைட்லர், சஜ்ஜன் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்வதை உறுதி செய்தது.
ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் என்ன செய்தது ? ஜெக்தீஷ் டைட்லருக்கு டெல்லியில் பாராளுமன்றத் தொகுதியில் நிற்க டிக்கெட் அளித்தது. பொதுமக்கள் எதிர்ப்பால், பிறகு டைட்லர் வாபஸ் பெற்றார்.
4000 சீக்கிய மக்கள் படுகொலை செய்யப் பட்டதற்கு இது வரை ஒருவரை கூட தண்டிக்காத தேசம் இது. ! ஆனால் ராஜீவ் கொலையாளிகள் மட்டும் சிறையை விட்டு வெளியே வரவே கூடாதாம்.
ராஜீவ் சோனியா
நளினி மற்றும் ராபர்ட் பயாஸ் ஒன்றும் நியாயமற்ற கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை. 2001ம் ஆண்டிலேயே நளினி 10 ஆண்டுகள் தண்டனை முடித்து விட்டார். ஆனால் 2001ம் ஆண்டிலிருந்து, நளினியை விட குறைந்த தண்டனை காலத்தை கழித்தவர்கள் (7 ஆண்டுகள் முடித்தவர்கள் உட்பட) 2000 பேரை, தமிழக அரசு முன்விடுதலை செய்துள்ளது.
ஆயுள் தண்டனை பெற்ற மற்ற கைதிகளை 7 ஆண்டுகளுக்குள் விடுதலை செய்கையில், 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எங்களை விடுதலை செய்யுங்கள். எங்கள் மீது மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று கேட்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது ?
சிபிஎம் கவுன்சிலர், லீலாவதி அழகிரியின் குண்டர்களால் படுகொலை செய்யப் பட்டார். அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப் பெற்று, உயர்நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இவர்கள் அனைவரையும் 7 ஆண்டுகள் முடிந்ததால், அண்ணா பிறந்தநாளையொட்டி 2008ம் ஆண்டு தமிழக அரசு விடுதலை செய்தது. லீலாவதி கொலையாளிகளுக்கு மட்டும் 7 ஆண்டுகள் தண்டனை. ராஜீவ் கொலையாளிகளுக்கு 18 ஆண்டுகள் கடந்த பிறகும் எப்போது விடுதலை என்று சொல்ல இயலாது என்று மத்திய அரசும் மாநில அரசும் சொல்லுகிறது. இந்த அநியாயத்தையும் பாரபட்சத்தையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தால் அது தவறா ?
செப்டம்பர் 2008ல் சென்னை உயர்நீதிமன்றம், நளினி முன் விடுதலை செய்வதற்காக கூட்டப்பட்ட ஆலோசனைக் குழுமம் செல்லாது, புதிதாக ஒரு ஆலோசனைக் குழுமத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஒரு வருடம் கழிந்தும் இந்த ஆலோசனைக் குழுமம் தமிழக அரசால் கூட்டப் படவேயில்லை. நளினியும் ராபர்ட் பயாசும் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டதும், அரசு அவசர அவசரமாக அக்டோபர் 10க்குள் ஆலோசனைக் குழுமத்தை கூட்டுகிறோம் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கே, உண்ணாவிரதம் இருக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் தேசிய ஊடகங்கள் ராஜீவ் கொலையாளிகள் வெளியே வரவே கூடாது என்று முழங்குகின்றன.
என்டிடிவி சேனலில், நளினி உண்ணாவிரதம் இருப்பதைப் பற்றி குஷ்பூ-விடம் கருத்து கேட்கப் பட்டபோது “ஏற்கனவே மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பரிந்துரைத்ததன் மூலம் சோனியா நளினிக்கு கருணை காட்டிவிட்டார், இப்போழுது நளினி உண்ணாவிரதம் இருப்பது தவறானது“ என்று கூறுகிறார். ஒரு அரசியல் கொலை வழக்கில் தண்டனை பெற்று முன் விடுதலை கோரி உண்ணாவிரதம் இருக்கும் ஒருவரைப் பற்றி “மானாட மயிலாட“ நிகழ்ச்சியில் அரை நிர்வாண நடனத்திற்கு நடுவராக இருப்பவரிடம் கருத்து கேட்கும் என்டிடிவி நிருபர் சஞ்சய் பின்டோவையும், என்டிடிவியையும் என்னவென்று சொல்வது. ?
நளினி
18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராஜீவ் கொலையாளிகளை மேலும் சிறையில் வைத்திருப்பது, மிக மிக கடுமையான மனித உரிமை மீறலாகும். எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும்.
/ஒப்பாரி/