கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், சாரதா என்ற 55 வயது பெண்மணி, ரயில்வே போலீசாரால் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப் பட்டு வேலூர் பெண்களுக்கான சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் அடைக்கப்படுகையில் ரூ.5000/- பணத்தை மறைத்து தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார் சாரதா. சிறை அதிகாரிகள் பணம் வைத்திருப்பதை கண்டுபிடித்தால் கடும் தண்டனை என்று அவருடன் இருந்த சக கைதி அறிவுறுத்தியதன் படி, தன்னிடம் இருந்த பணத்தை அக்கைதியிடம் ஒப்படைத்துள்ளார் சாரதா.
இரண்டு நாட்கள் கழித்து, சாரதா அப்பணத்தை திருப்பி கேட்கையில், அக்கைதி கொடுக்க மறுக்கவே, உடனடியாக ஜெயிலரிடம் புகார் செய்யப் போகிறேன் என்று சொல்லி புறப்பட்ட சாரதாவை, கஸ்தூரி, தனம் மற்றும் முனீஸ்வரி ஆகிய கான்விக்ட் வார்டர்கள் மற்றும் சிறை அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது, ராஜீவ் கொலையில் தண்டனை பெற்று அச்சிறையில் இருந்த நளினி, இத்தாக்குதலை தடுக்க முயற்சித்துள்ளார். அவரின் முயற்சியையும் மீறி, அனைவராலும் சூழப்பட்டு, சாரதா கடுந்தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டார். நிர்வாணப்படுத்தப் பட்டு, தரதரவென இழுத்துச் செல்லப் பட்டு தலைமுடியை சிறைக்கதவில் கட்டி மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானார். அன்று இரவு முழுவதும், அவருக்கு ஆடை வழங்கப் படாமல் கதறியபடி இருந்துள்ளார்.
மனித மனதை பதறச் செய்யும் இந்த கொடுமையான சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து 4 நாட்கள் சாரதா மீதான இந்தத் தாக்குதல் தொடர்ந்தபடி இருந்தது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpKzcDv6dlXVQezzr8YtP7U0HPr6cB4gkC8EW2HrDWTzJ-Jx-ztrp1VL9DHvAcSXzQvtUuTckgvOuXNmsLAmZoMMvHqNUgE0kF8jogX6nbpMsceCamNvSYt2uhsgkFuxBecDPTzTSkJe30/s400/Nalini.jpg)
நளினி
4 நாட்கள் கழித்து, தன் கட்சிக்காரரான நளினியைப் பார்க்க வழக்கறிஞர் புகழேந்தி சென்றார். அப்போது, அவரிடம் நளினி நடந்த விபரங்களைத் தெரிவிக்க, புகழேந்தி துரிதமாக நடந்த கொடுமைகள் குறித்து, உள்துறைச் செயலர் மற்றும் சிறை டிஜிபிக்கும் தந்தி அடித்தார். மறுநாளே, சாரதா மீது நடந்த தாக்குதலை விரிவாக விளக்கி, சாரதாவிற்கு மருத்துவ சிகிச்சை, சிறை அதிகாரிகள் மேல் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சாரதாவிற்கு இழப்பீடு கேட்டு ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்மனு, ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தது. உடனடியாக நீதிமன்றம், தாக்குதலுக்கு உள்ளான சாரதாவிற்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறும், சிகிச்சை தொடர்பாக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், சிறைக் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது.
மீண்டும் இம்மனு விசாரணைக்கு வந்தபொழுது, அரசு தாக்கல் செய்த மனுவில் திருப்தி அடையாத நீதிமன்றம், வேலூர் மாவட்ட நீதிபதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. பாதிக்கப் பட்ட சாரதாவை நேரில் அழைத்து, நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் எலிப்பி தர்மாராவ் ஆகியோர் நடந்தவைகளை விசாரித்தனர். அப்போது சாரதா, நளினி மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், தான் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். இந்த விபரத்தையும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம், கடந்த 17.07.2009 அன்று சிறப்பான தீர்ப்பை வழங்கியது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த தீர்ப்பின் சாராம்சம் பின் வருமாறு.
“நன்பகல் 2 மணிக்கு வெளிச்சத்தில் சிறை வளாகத்துக்குள் இப்படி ஒரு கொடுந்தாக்குதல் நடந்த சமயத்தில் சிறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று இந்நீதிமன்றம் கவலை கொள்கிறது. சிறை அதிகாரிகளால் நியமிக்கப் பட்ட கன்விக்ட் வார்டர்களால் இத்தாக்குதல் நடந்திருப்பதால் கன்விக்ட் வார்டர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. மேலும், இச்சம்பவம் நடந்திருப்பது தங்களுக்கு தெரியாது என்று சிறை அதிகாரிகள் கைகழுவி விட முடியாது. ஏனெனில், பாதிக்கப் பட்டவரின் அலறல் அவர்களுக்கு கட்டாயம் கேட்டிருக்கும். பாதிக்கப் பட்ட நபர், மேலும் தாக்குதல் நடக்கக்கூடும் என்று அஞ்சி புகார் கொடுக்காமல் இருந்தாலும் கூட, சிறை அதிகாரிகள் தாங்களாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அரசு தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவில் சாரதா மனநலம் பாதிக்கப் பட்ட ஒரு நபர் என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. ஆனால் அதே பதில் மனுவில், சாரதா சிறைக்குள் அனுமதிக்கப் படுகையில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிகளுக்கேற்ப சிறையின் மருத்துவ அலுவலர் சாரதாவை பரிசோதித்து சாரதா மனநலம் பாதிக்கப் பட்டவர் என்று எவ்வித அறிக்கையும் தரவில்லை. இந்நிலையில், இந்நீதிமன்றத்தின் முன் இவ்வழக்கு வந்த உடன், ஒரு நபர் எப்படி மனநிலை பாதிக்கப் பட்டவராக மாறுவார் என்று தெரியவில்லை.
சிஎம்சி மருத்துவர் அறிக்கையிலும், சிறையின் மருத்துவ அலுவலரின் அறிக்கையிலும், சாரதாவின் மனநிலையில் எந்தவிதமான பாதிப்பும் இருப்பதாக எந்தக் குறிப்பும் காணப்படாத நிலையில், எதிர் மனுதாரரின் (சிறைக் கண்காணிப்பாளர்) வாதத்தை, இந்நீதிமன்றம், உறுதியாக தள்ளுபடி செய்கிறது.
இந்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்கையில், சாரதா மிகவும் கொடுமையான முறையில், கன்விக்ட் வார்டர்களால் கடுந்தாக்குதலுக்கு உள்ளாகியிள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், இச்சம்பவத்தை மூடி மறைக்க சிறைக் கண்காணிப்பாளர் முயற்சி எடுத்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.
சிறை விதிகளின் படி, கன்விக்ட் வார்டர்கள் என்பவர்கள் பொது ஊழியர்கள் ஆவர் என்பதால், அவர்களால் நடந்த இத்தாக்குதலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப் பட்ட நபர் அடைந்த கடுந்துன்பங்களுக்கும், உளைச்சல்களுக்கம் நட்ட ஈடாக, ரூ.50,000/- இழப்பீடாக வழங்க இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
படிப்பறிவில்லாத ஏழை கைதிகளுக்கும், ஏழைகளுக்கும் பாடுபடும் மனுதாரர் (வழக்கறிஞர் புகழேந்தி) இக்கொடுமையை இந்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக பாராட்டுகிறோம்.
நடந்த சம்பவங்களைப் பார்க்கையில், ஒரு அபலைப் பெண் கைதி, சிறைக்குள்ளேயே கடுந்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் சூழ்நிலைகளைப் பார்க்கையில், வேலூர் சிறையில் பணியாற்றும் அதிகாரிகள், கடமை தவறியவர்கள் என்று இந்நீதிமன்றம் கருதுகிறது. இந்தக் கொடுமை நிகழ்ந்த அன்று, அச்சிறையின் தலைமை பொறுப்பில் எந்தெந்த அதிகாரிகள் இருந்தார்களோ அவர்களுக்கெதிராக உள்துறை செயலாளரும், சிறைத்துறை டிஜிபியும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEuYxQulSKY9k3TvoAakLCZ7I5inEfWtJJPWJTZuZyun9LZ4ASZQloJDyrqnfGWEKC_bhhGRonupJ-2BsxbPjuQENP9H_x3tH67UiqRvu7n1JlfugC8Wbi5DtkCcgy20XUeALcpbQN0Koi/s400/Nalini.jpg)
நளினி
அடக்குமுறைக்கு அஞ்சாமல், அநீதியை எதிர்த்து துணிச்சலாக குரல் எழுப்பிய போராளி நளினியை மனதாரப் பாராட்டுகிறோம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIu8K7Bn00T_HCWv0iq0kdvE9i9vabPfkaISf3QRA01DJrYCTrDk7KZrQxP0bexulsG434lZqtgmGpV392elosenFL2wCS1kM0gVfw-gApcR0mPuWNMc0R7ypBu0NhrxDgMwFoIDN-0Wlr/s400/IMG_4421.jpg)
வழக்கறிஞர் புகழேந்தி
சிறப்பாக செயல்பட்டு, தொடர்ந்து மக்களுக்காகப் போராடிவரும் வழக்கறிஞர் புகழேந்தியை மனதார பாராட்டுகிறோம்.
வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்
இவ்வழக்கில், மிகச் சிறப்பாக வாதாடி, ஒரு நல்ல தீர்ப்பு வர பெரும் காரணமாக இருந்த, மூத்த வழக்கறிஞர் மு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துரைகள்.
/ஒப்பாரி/
2 comments:
உயர் நீதிமன்றத் தீர்ப்பு உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய விஷயம். நீதி என்பது மாயை போன்ற தோற்றம் பெரும்பான்மையான நேரத்தில் இருந்தாலும் நீதி என்பது உண்மையிலேயே இருக்கிறது சில நேரங்களிலாவது. இதில் சம்பந்தப் பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நளினி அவர்கள் உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டியவர்கள்தான்.
even though it is late, nevertheless it is a bold step by the concerned advocates and the judgement of the Madras High Court.
Post a Comment