Flash News

Saturday, June 27, 2009

புதிய வடிவில் நெருக்கடி நிலை

. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம்

சமீபத்தில், மனித உரிமைக் குழு ஒன்று ஈமெயில் ஒன்றை சுற்றுக்கு அனுப்பியிருந்தது. தேர்தல் முடிந்த பின்னால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் நோக்கம் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் எல்லா குழுக்களும் அழிக்கப் படுவதே நோக்கம் என்று அறிவிக்கப் பட்டு விட்டது. உள்துறை அமைச்சர் முதல் 100 நாட்களுக்குள்ளே இந்த தீவிரவாத குழுக்களை ஒழிப்பதற்கான ஒரு திட்டம் தயாராகி விடும் என்று அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே, சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு காவல் துறை கண்காணிப்பாளர் இலங்கை மாடலை கடைபிடித்து மாவோயிஸ்ட் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்களை அழிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தாக்குதலுக்கு உள்ளான வனவாசி சேத்னா ஆசிரமத்தை பார்வையிட வந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியல்கள் அடங்கிய உண்மை அறியும் குழுவிடம்தான் வெளியிடப்பட்டது.
இலங்கை மாடல் என்றவுடனே 1975ம் ஆண்டு ஜுன் 25-26 நள்ளிரவு அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது பிறப்பித்த “இந்திய அரசியலமைப்பு பிரிவு 352 (1)ல் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்தியாவின் பாதுகாப்பு உள்நாட்டு குழப்பங்களால் கடும் நெருக்கடிக்கு உள்ளான சூழலில், நெருக்கடி நிலையை அறிவிக்கிறேன்” என்று வெளியிட்ட அந்த அறிவிப்புதான் நிலைவுக்கு வருகிறது.
20 மாதகாலம் அமலில் இருந்த நெருக்கடி நிலை, போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்தது. அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்டன. பத்திரிக்கை சுதந்திரம் நெறிக்கப் பட்டது. பயங்கரமான நிகழ்வுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அடங்கிப் போனார்கள்.
அரசு நிர்வாகம், வளையச் சொன்னால், தவழ்ந்து போனது. நீதித்துறையும் அடங்கிப் போய், நெருக்கடி நிலையில், குடிமக்களுக்கு “வாழும் உரிமை“ கூட இல்லை என்று தீர்ப்பளித்தது. ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, பெரும்பான்மையான அரசியல் கட்சிகள், அதிகாரத்தின் அடிவருடிகளாய் மாறிப்போனது.
குடியரசுத் தலைவர், பாராளுமன்றம், நீதித்துறை மற்றும், அரசு நிர்வாகம் மற்றும் அதன் உறுப்புகள் எவ்வாறு கடுந்தாக்குதலுக்கு உள்ளாகின என்பது, நெருக்கடி நிலையின் நிகழ்வுகளை தொகுக்குத்துப் பார்க்கும் போது தெரிகிறது.
சில ஆயிரம் நபர்களுக்கு கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு, கைது, சித்திரவதை என்பதையும் தாண்டி நெருக்கடி நிலை, மிகவும் மோசமானது. அது சுதந்திரம் மற்றும் ஜனநாயக மாண்புகளை மறுத்து. உரிமைகள் வழங்க ஒரு புதிய நியதியையும், ஒரு புதிய அதிகார மையத்தையும் உருவாக்கியது. அதிகாரத்தை செலுத்துவதற்கான தடையை நீக்கி, எல்லையில்லா அதிகாரத்தை வழங்கி, அதிகார துஷ்பிரயோகத்துக்கும், மக்களை மாக்களாக நடத்துவதற்கும் நெருக்கடி நிலை பயன்பட்டது.
மொத்தத்தில், நேர்த்தியாக வடித்தெடுக்கப் பட்டு கவனமாக வளர்த்தெடுக்கப் பட்ட, இந்திய ஜனநாயகத்தின் மாண்புகளை நெருக்கடி நிலை, அழித்து விட்டது. ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும், அதன் பாதுகாப்புக்காகவும் குடியாட்சி சமூகத்தின் மீது ஒருங்கிணைந்த அதிகாரத்தை செலுத்தியதன் மூலமாக, நிர்வாகமே சீர்குலைந்தது.
கொடுமை என்னவென்றால், ஏறக்குறைய முப்பதாண்டுகள் கழிந்த பின்னும், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட, அழிவுகள் சரி செய்யப்படவில்லை. மாறாக, ஒருங்கிணைந்த எதெச்சதிகாரம் இன்னும் தொடர்கிறது. இன்னும் கொடுமை என்னவென்றால், நெருக்கடி நிலையின்போது நிகழ்ந்த கொடுமைகள் இன்றும் தொடரும் சுதந்திரம் மற்றும் மனித உரிமை மீறலுக்கான அளவுகோலாக மாறி விட்டது.
இதைவிட கொடுமையான விஷயங்களும் நடக்கின்றன. அரசியல் தலைவர்களின் கொடும்பாவியை எரித்ததற்காக இளைஞர்கள் மீதும், உடல் ஊனமுற்ற ஆதரவற்றவர்கள் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஒரு வருடம் தொடர்ச்சியாக, விசாரணையின்றி சிறையில் வைக்க வழிவகை செய்வதுதான் “தேசிய பாதுகாப்புச் சட்டம்“‘. சிறிது காலம் முன்பு வரை பிரதமர் கனவில் இருந்த மாயாவதி, தனது மாநிலத்தில், ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட இருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளார். இதே மாநிலத்தில், ஒரு எட்டு வயது சிறுவன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளான்.
துணை ராணுவமும், கமாண்டோ வீரர்களும் எப்படி லால்கரை கைப்பற்றப் போகிறார்கள் என்ற கதையில் இன்று தேசம் ஆழ்ந்திருக்கிறது. ஆனால், சிபிஎம் ஆளும் இம்மாநிலத்தில், இந்தக் கதையின் பின்னால் உள்ள உண்மைக் கதை சொல்லப் படுவதில்லை. தான்தான் சிறந்த கட்சி என்று எப்போதும் மார்தட்டிக் கொள்வதற்கு 32 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் உள்ளதை சிபிஎம் பயன் படுத்திக் கொண்டு வருகிறது. இம்மாநிலத்தில், கடந்த இருபது ஆண்டுகளாக, ஒரு எதெச்செதிகார மையம் உருவாகி விட்டது. பஞ்சாயத்து, எம்.எல்.ஏ, மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும், சிபிஎம் கட்சியினர் அனைத்தும், ஒன்றுபட்டு செயல்படுகின்றன. ஊழலை எதிர்த்தோ, நிர்வாகக் குறைகளைப் பற்றியோ மேல் முறையீடு செய்வதள்கு எந்த வழியும் இல்லை. அடிப்படை நிர்வாகமே முடங்கிப் போய், அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு மோசமான சூழ்நிலை இது.
தேசிய அளவிலும், நிர்வாகம் பாரபட்சமாகவும், தான்தோன்றித் தனமாகவும்தான் இருக்கிறது. நெருக்கடி நிலையின் போது இருந்த அதே துதிபாடல்களும், வழிபடல்களும் இன்னும் காங்கிரசில் தொடர்கிறது. ஆனால் ஒரே வித்தியாசம், அன்று இந்திரா காந்தி, இன்று சோனியா காந்தி. தேசத்தின் பொருளாதாரக் கொள்கைகள், செல்வந்தர்கள் மற்றும் அதிகார மையத்தில் உள்ளவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப் பட்டு, ஏழைகளுக்கு வறுமையை ஒழிப்போம் போன்ற வெற்று கோஷங்கள் மட்டும் வழங்கப் படுகிறது. ஏழைகள், ஓரங்கட்டப்பட்டு, பணக்காரர்கள் விருந்து வைத்து கொண்டாடுகையில், அதில் விழும் எச்சில் இலைகளை வைத்து உயிர் வாழ நிர்பந்திக்கப் பட்டுள்ளார்கள். இதுதான், நெருக்கடி நிலையின் தாக்கம். இதுதான், இந்திய அரசு நிர்வாகத்தின் இன்றைய சோக நிலை.
மோசமான நிர்வாகத்திற்கும், அநீதிகளுக்கும், தியான்மென் சதுக்கம் மற்றும் இலங்கையில் நடந்தது போன்ற கடும் ஒடுக்குமுறைகள் பதிலாக அளிக்கப் படுகின்றன.
“வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள தவறுபவர்கள், மீண்டும் அத்தவறைச் செய்வார்கள்” என்று வின்ஸ்ட்டன் சர்ச்சில் கூறினார். நெருக்கடி நிலையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், இந்திய பாடப்புத்தகங்களிலும், பத்திரிக்கைகளிலும், அரசு ஆவணங்களிலும், ஆய்வறிக்கைகளிலும், வசதியாக மறைக்கப் பட்டுவிட்டதால், மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை நோக்கி இந்திய ஆட்சியாளர்கள் வெகு வேகமாக சென்று வருகிறார்கள். இந்த நெருக்கடி நிலையிலிருந்து கடுமையாக தாக்குதலுக்குள்ளான இந்தியாவின் நிர்வாகத்தையும், அதன் உறுப்புகளையும் பலப்படுத்த தவறி தவறான பாடங்களையே கற்றுக் கொண்டுள்ளோம். இதன் தொடர்ச்சி தேசத்தின் ஆபத்திலேயே…

எம்.ஜி.தேவசகாயம்.

நன்றி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

Monday, June 22, 2009

இந்திய அரசியலில் வெற்றிடம்…. ??


நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பல அரசியல் கட்சிகளை நிலைகுலையச் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி எதிர்பாராமல் கிடைத்த வெற்றியில், இறுமாப்புடன் இருக்கிறது. பிரதான எதிர்க் கட்சிகள், இந்த தோல்வியை எப்படி எதிர்கொள்வது, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில், திசை தெரியாமல் நிற்கின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்று களத்தில் இறங்கிய பிஜேபி, பெருங்குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் அறிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஒரு நாள் யஷ்வந்த் சின்கா ஒரு அறிக்கை வெளியிட்டு கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறார். மறுநாள், ஜஸ்வந்த் சிங் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். கட்சியில் குழப்பமே இல்லை என்று ஒரு தலைவர் அறிக்கை வெளியிடுகிறார். அதிகாரம் இல்லையென்றால், கட்சி நடத்த முடியாது என்பதையே இந்தக் குழப்பங்கள் காட்டுகின்றன.


பிலிபித் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பிஜேபி வேட்பாளர் வருண் காந்தியின் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்த பேச்சு நாடெங்கிலும் கடுமையாக கண்டிக்கப் பட்ட போதிலும், பிஜேபியால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. “இந்துக்கள் பலவீனமானவர்கள் என்றோ, அவர்கள் பின்னால் யாரும் இல்லை என்றோ அவர்களுக்கு எதிராக யாராவது கரம் உயர்த்துவார்களேயானால், கீதையின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், அந்தக் கரத்தை வெட்டி எறிவேன்“ என்று மேடையில் பேசினார் வருண் காந்தி. தேர்தல் ஆணையம், வருண் காந்தியை வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று பிஜேபிக்கு ஆலோசனை வழங்கியது. ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, வருண் காந்தி பேசியது கொஞ்சம்தான் வெளிவந்திருக்கிறது, முழுமையான பேச்சு இன்னும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று பேட்டியில் கூறினார். இதையெல்லாம் மீறி வருண் காந்தியின் பேச்சுக்கு வக்காலத்து வாங்கியது பிஜேபி, வருண் காந்தி, அந்தப் பேச்சுக்களை தான் பேசவில்லை, அந்த டேப்புகள் பொய் என்று மழுப்பினார். இன்று வருண் காந்தியின் பேச்சுக்கள் உண்மை, என்று ஐதராபாத்தில் உள்ள தடய அறிவியல் நிறுவனம் சான்றளித்துள்ளது. இன்றாவது, வருண் காந்தி பேசியது தவறு என்று வெளிப்படையாக பேச முடியாமல் மழுப்பி வருகிறது பிஜேபி.


தீவிர இந்துத்வாவா அல்லது மிதமான இந்துத்துவாவா என்று ஏக குழப்பத்தில் இருந்தது பிஜேபி. இன்னும் இந்தக் குழப்பம் தீரவில்லை. அத்வானி தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்றதும், அடுத்தக் கட்ட தலைவர்களுக்குள் தலைவர் பதவிக்கான குடுமிப் பிடி சண்டையை தவிர்க்க அத்வானியையே தலைவர் பதவியில் நீடிக்கச் செய்தது பிஜேபி.


ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து, காங்கிரஸ் அரசுக்கு எவ்வளவோ தலைவைலி தர முடியும் என்பதை பிஜேபி உணர மறுக்கிறது. காங்கிரஸ் கடைபிடித்து வரும் இந்தப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்க முடியாமல், உள்ளது பிஜேபி. ஏனெனில், இந்தக் கொள்கைகளை 2004 வரை பின்பற்றிய கட்சிதானே இது. தேசிய செயற்குழுக் கூட்டத்தில், தோல்விக்கான காரணங்கள் ஆராயப் படும் என்று அறிவிக்கப் பட்ட பின்னர், முன்னணித் தலைவர்கள் குறைவான நேரமே பேச அனுமதிக்கப் பட்டார்கள் என்பது, இன்னும் தன்னுடைய தவறுகளை உணர பிஜேபி தயாராக இல்லை என்பதையே உணர்த்துகிறது.


அடுத்து, மூன்றாவது அணி அமைக்கப் போகிறோம் என்று கிளம்பிய மார்க்சிஸ்ட் கட்சி, இன்று தன்னுடைய வேர்களை இழந்து தடுமாறிக்கொண்டு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளியிலிருந்து ஆதரவு என்பதில் தொடங்கி, ஏறக்குறைய ஆளுங்கட்சியாகவே மாறிப்போனார்கள் தோழர்கள். தினமும், மன்மோகன் சிங்கிற்கு மிரட்டல் விடுவது நாங்கள் இல்லாமல் இந்த அரசு இல்லை என்று மார்தட்டிக் கொள்வது என்று தொடங்கி, இறுதியில், மக்களிடமிருந்து அந்நியப் பட்டுப் போனார்கள். இவர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கங்களும், போராட்ட குணத்தை இழந்து மழுங்கிப் போனதுதான் இந்த ஐந்தாண்டுகளில் இடதுசாரிகள் கண்ட பலன்.


அணு ஒப்பந்தத்தை எதிர்த்து ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கியது தவறு என்று இன்று பேசி வருகிறார்கள். அணு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை வாபஸ் வாங்காமல், வேறு எதை எதிர்த்து வாபஸ் வாங்க வேண்டும் ? காங்கிரசோடு சேர்ந்து அமெரிக்காவிற்கு துதி பாட வேண்டும் என்கிறார்களா ? ஆதரவை வாபஸ் வாங்கியவுடன், எதற்காக வாபஸ் பெற்றோம் என்பதையும், அணு ஒப்பந்தத்தால் இந்தியா சந்திக்கவிருக்கும் ஆபத்துகளையும் மக்கள் மத்தியில் விளக்கத் தவறி விட்டார்கள் இடது சாரிகள். 1991ல் புதிய பொருளாதார கொள்கை செயல்படுத்தப் பட்டபோது, அதன் ஆபத்தை விளக்கி இந்தியா முழுவதும், இடதுசாரிகள் மேற்கொண்ட பிரச்சாரங்களும், போராட்டங்களும் தான், அவர்களை வளர்த்து 2004 தேர்தலில், பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. அதை மறந்ததால், இன்று வேர்களை இழந்து குழப்பத்தில் இருக்கிறார்கள் இடது சாரிகள்.
ஐந்தாண்டுகள் ஆட்சிக்கு அருகில் இருந்ததன் பலன், ஊழல் குற்றச் சாட்டில் சிக்கியுள்ள தங்களது கட்சியின் பொலிட்ப்யூரோ உறுப்பினரை பாதுகாப்பதில் முடிந்துள்ளது. இடது சாரிகளின் கோட்டையான மேற்கு வங்கம், நக்சல்பாரிகள் வலுவான தளத்தை அமைக்கும் அளவுக்கு அதன் கூடாரமே கலகலத்துப் போய் உள்ளது.



நாட்டில் உள்ள பிற கட்சிகள், தங்களிடம் இருக்கும் ஒன்று இரண்டு எம்பி சீட்டுகளை வைத்து எப்படி காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுப்பது என்ற போட்டியில், 10, ஜன்பத் சாலையில், வரிசையில் நிற்கின்றன. ஒரே மாநிலத்தில் நேரெதிர் துருவங்களாக இருக்கும் கட்சிகள் கூட, காங்கிரஸ் ஆதரவு என்பதில் போட்டி போடுகின்றன.



இந்தச் சூழ்நிலையில், எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அரசியல் வானில், ஒரு பெரும் வெறுமை ஏற்பட்டுள்ளது. இந்த வெறுமை, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஏகபோகத் தன்மையை (monopoly) ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த ஏகபோகம், இந்திய பொருளாதாரத்தை, மொத்தமாக பந்நாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கும் நிலைக்கும், இந்தியப் பொருளாதாரத்தின் சுயசார்புத் தன்மையை அழிக்கும் நிலைக்கும் இட்டுச் செல்லும்.
இடது சாரிகள் தங்கள் உறக்கத்திலிருந்து மீண்டு எழ வேண்டும். இடது சாரிகளுக்கு முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் பொறுப்பு இப்போதுதான் உள்ளது.
பிஜேபி, தனது இந்துத்வா கொள்கையை உதறி எரிந்து பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.

இல்லையெனில், வரும் ஐந்தாண்டுகளில், காங்கிரசின் துரோகங்களுக்கு மவுன சாட்சியாய் இருந்த குற்றவாளிகள் என வரலாறு இவர்களை பதிவு செய்யும்.

/ஒப்பாரி/


Saturday, June 13, 2009

ஊருக்கு உபதேசம் செய்யும் சிபிஎம் ..






இந்தியாவில், பெரிய அளவில் ஊழல் புகார்கள் ஏதும் இல்லாமல், தொடர்ந்து இந்தியாவின் படித்த நடுத்தர வர்க்கத்தின் மன சாட்சியாக செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கட்சி, அதன் வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து இன்று சுயபரிசீலனை செய்து வருகிறது.

இந்தியாவில் எந்த மிகப் பெரிய அலை அடித்தாலும், அந்த அலையால் பாதிக்கப் படாமல், தன் வாக்கு வங்கியை மிகப் பத்திரமாக பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த சிபிஎம் கட்சி இன்று மக்கள் தந்துள்ள இந்த படு தோல்வியை ஜீரணிக்க முடியாமல் நிலை குலைந்து உள்ளது.

மேற்கு வங்கத்தில் சிபிஎம் ன் மிகப் பெரிய வாக்கு வங்கியாக விவசாயத் தொழிலாளர்கள் தொடர்ந்து இருந்து வந்துள்ளார்கள். இத்தொழிலாளர்கள் இவர்களுக்கு தந்த ஆதரவுக்கு காரணம், சிபிஎம், தங்கள் கட்சி என ஒவ்வொரு தொழிலாளியும் நினைத்ததுதான் காரணம். மேற்கு வங்கத்தில் முதன் முதலில் சிபிஎம் ஆட்சிக்கு வருகையில், நிலச்சுவான்தார்களின் பிடியில் பெரும்பாலான விவசாய நிலங்கள் இருந்தன. பெரும்பான்மை மக்கள் விவசாயக் கூலிகளாக நிலச்சுவான்தார்களின் ஏவலுக்கு கட்டுப் பட்டு இருந்தனர்.




ஆட்சியைப் பிடித்தவுடன், நிலச்சுவான்தார்களின் பிடியிலிருந்து நிலங்களை விடுவித்து, நிலமில்லாத விவசாயிகளுக்கு நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம், அனைவரையும் நில முதலாளிகளாக உருவாக்கியது சிபிஎம் ன் மிகப் பெரிய சாதனை. இச்சாதனைக்காகத்தான், தொடர்ந்து இந்த உழைப்பாளி மக்கள் ஆதரவு நல்கி வந்தார்கள்.





ஆனால் இன்றைய சிபிஎம் என்ன செய்கிறது ? ரத்தன் டாடாவுக்கு விசுவாசமாக விவசாய நிலங்களை மக்களிடமிருந்து பிடுங்கி முதலாளிக்கு அளிக்கிறது. இதை எதிர்த்து போராடிய மக்களை காவல் துறையை விட்டும், சிபிஎம் ரவுடிகளை விட்டும் கடுமையாக தாக்கியது. எந்த உழைப்பாளி மக்களின் உரிமைகளை பாதுகாக்க சிபிஎம் பாடுபட்டு வந்ததோ, அந்த உழைப்பாளி மக்கள், சந்தர்ப்பவாத அரசியல்வாதியான மம்தாவின் பின் அணி திரள வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது. நந்திகிராமிலும், சிங்கூரிலும் நேர்ந்த மிகப் பெரிய வன்முறையை, நக்சலைட்டுகளால் நேர்ந்த வன்முறை என்று சமாளிக்கப் பார்த்தது. அவ்வளவு வன்முறைகளுக்குப் பிறகும் கூட, சுயபரிசீலனை செய்ய மறுத்தது. அதன் விளைவுகளை இன்று தேர்தலில் சந்தித்துள்ளது.


ஊழல் இத்தேசத்தின் மிகப் பெரிய சாபக்கேடாக இருந்து வருகிறது. ஆனால் சிபிஎம் கட்சிக்கு மட்டும், இந்த ஊழல் மற்ற கட்சிகளைப் போலவே, வசதியாக தேர்தலுக்குத் தேர்தல் பயன்படும் ஒரு ஆயுதமாகவே இருந்து வருகிறது. ஐக்கிய முன்னணி வெற்றி பெற்று விபிசிங் பிரதமாரான தேர்தலில், ராஜீவ் காந்தி போபர்சில் ஊழல் செய்தார் என்று கூப்பாடு போட்ட சிபிஎம், லாலு பிரசாத் யாதவ் தீவன ஊழலில் பல கோடிகளை சுருட்டியதாக குற்றச் சாட்டு எழுந்தபோது மவுனம் காத்தது. இதற்கெல்லாம், சிபிஎம் சொல்லும், வசதியான காரணம், மதவாதத்தை எதிர்க்க வேண்டியுள்ளதால் என்று. மற்ற கட்சிகளைப் போலவே மூன்றாந்தர அரசியல் கட்சியாக சிபிஎம் மும் மாறி வருவதையே இது காட்டுகிறது.

2007ம் ஆண்டிலேயே, லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் இருந்து 2 கோடி ரூபாயை மார்க்சிஸ்ட் நாளிதழ் தேசாபிமானி நன்கொடையாக பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


தற்போது, கேரளாவில் மின் துறை அமைச்சராக இருந்த பினரயி விஜயன் மீது எழுந்த புகார். மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் அளித்த அறிக்கையில் மாநில அரசுக்கு மிகப் பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, சட்டசபையில் எழுந்த பெரிய அமளியை பொருட்படுத்தாமல், சிபிஎம், இந்த குற்றச்சாட்டை உதாசீனப்படுத்தியது. 16.01.2007 அன்று கேரள உயர்நீதிமன்றம், இந்த ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஜனவரி 2009ல், கேரள உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அளித்த அறிக்கையில் பினரயி விஜயனை 9வது குற்றவாளியாக சேர்த்தது.





சிபிஎம் ன் அமைச்சரவை கூடி, பினரயி விஜயன் மேல் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்க மறுத்தது.
கடந்த வாரம், கேரள ஆளுனர் பினரயி விஜயன் மேல் வழக்கு தொடர பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகக் கூறி வழக்கு தொடர அனுமதி அளித்தார்.
இந்த உத்தரவை வழங்கிய ஆளுனரை எதிர்த்து போராட்டத்தை நடத்துவதுதான் சிபிஎம் ன் உச்சக் கட்ட அயோக்கியத்தனம். இன்று தமிழகம் முழுவதும், ஆளுனர் அனுமதி அளித்ததற்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது சிபிஎம்.

இதில் வினோதம் என்னவென்றால் கேரள மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஆளுநர் அனுமதி கொடுக்கும் முன் பரிசீலித்துதான் கொடுத்திருப்பார் என்று சொல்கிறார்.

சிபிஐ ஒன்றும், வானத்திலிருந்து குதித்து வந்த நேர்மையானவர்ளை மட்டுமே கொண்டதல்ல. மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று ஊழியர்கள் எரித்துக் கொல்லப்பட்டவுடன் கருணாநிதி உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதிலிருந்தே தெரிகிறது, சிபிஐ ன் யோக்கியதை. இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஊழல் புகார் வருகையில், அதை நேர்மையாக எதிர்கொள்வது தானே சரியாக இருக்கும்.

ஊழல் புகாரில் சிக்கிய தன் கட்சிக்காரர்களை காப்பாற்றுவதற்காக தன் கட்சி ஊழியர்களை அழைத்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் சிபிஎம் இன்னும் தேர்தல் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

/ஒப்பாரி/




Wednesday, June 10, 2009

உல்லாச கருணாநிதியும் உறங்கும் உள்துறையும்... ...





தமிழகத்தில் முதலமைச்சராக உள் துறையையும் தன் வசத்தில் வைத்துக் கொண்டுள்ள கருணாநிதியின் ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் ஏற்றப் பட்டுள்ளது.

புழல் சிறைக்குள்ளேயே வெல்டிங் குமார் என்ற ஆயுள் தண்டனைக் கைதி சக கைதிகளால் குத்திக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

என்னால் நடக்க முடியவில்லை, உயிருக்கே ஆபத்து, மறு பிறவி எடுத்து வந்துள்ளேன், உடல் ஒத்துழைக்கவில்லை என்று கழிவிறக்கம் கொண்டு, சுய பச்சாதாபத்தில், புலம்பும் கருணாநிதி, சட்டம் ஒழுங்கு மற்றும் உள்துறை போன்ற முக்கியமான துறைகளை தன் தவப்புதல்வனிடமோ, அல்லது சுயநினைவோடு பணியாற்றக் கூடிய வேறு ஒரு அமைச்சரிடமோ கொடுத்தால் தான் என்ன ?

நடக்க முடியாமல், அடுத்தவர் உதவியோடு தள்ளு வண்டியில் பயணித்து ஆட்சி பரிபாலனம் செய்யும் லட்சணம் மிக நன்றாக விளங்குகிறது. இவருடைய நிலை கண்டு, எள்ளளவும் பயமோ மரியாதையோ இல்லாத அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக பொறுப்பற்று வேலை செய்து கொண்டு இருப்பதை தமிழகம் தொடர்ந்து கண்டு வருகிறது.

முதலில், சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இருந்ததை, முன் கூட்டியே தகவல் தெரிந்தும், கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, கைகட்டி வேடிக்கை பார்த்தது. கலவரம் ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப் பட்டதை பார்த்து பொது மக்கள் கொதித்து எழுந்தவுடன் விழித்துக் கொண்ட கருணாநிதி, உடனடியாக காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து விட்டு, விசாரணை கமிஷனை அமைத்து பிரச்சினையை ஆறப் போட்டார்.

அடுத்து, மார்ச் 2009ல், நீதிமன்ற வளாகத்தில், 300க்கும் ஏற்பட்ட வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அடித்து நொறுக்கப் பட்டு, வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டு, பெரும் தாக்குதலை நிகழ்த்தினர்.

இந்த தாக்குதலை கண்டித்து வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி, என் உடல் நிலையை கருத்தில் கொண்டு, வழக்கறிஞர்கள் போராட்டத்தை வைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அந்த நேரத்தில் மருத்துவமனையிலிருந்தே, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல், தமிழக நடிகர் நடிகைகளுக்கு கலைமாமணி விருதுகள் அறிவித்தார்.




ஈழப்பிரச்சினைக்காக ஒத்துழைக்காத உடல்நிலை, குடும்பத்துக்கு மந்திரி பதவி வேண்டும் என்றதும், ஒத்துழைக்க ஆரம்பித்து, டெல்லி சென்று பேரம் நடத்தினார். மூத்த மகனுக்கு மகுடம் சூட்டியவுடன், இளைய மகன் கோபிப்பானே என்று அவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி அழகு பார்த்தார்.

துணை முதல்வர் பதவி வழங்கினாலும், சட்டம் ஒழுங்கு, உள் துறை, அதிகாரிகள் நியமனம், ஆகிய முக்கிய துறைகளை, தன்னுடன் சக்கர வண்டியிலேயே பயணிக்க வைத்திருக்கிறார்.

தேர்தல் நாளன்று, மனிதநேய மக்கள் கட்சியினர் தாக்கப் பட்டனர். மத்திய சென்னை வேட்பாளரின் வண்டி அடித்து நொறுக்கப் பட்டது.

தேர்தல் முடிந்தவுடன் இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் அடித்து நொறுக்கப் பட்டு, ஏறத்தாழ ஒரு கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டன.

இவற்றையெல்லாம் மவுனமாக சக்கர நாற்காலியில் ஊர்ந்தபடி, வேடிக்கை பார்க்கிறார், உள்துறையை கையில் வைத்திருக்கும் கருணாநிதி.

சக்கர வண்டியிலே பயனிக்கும் உள்துறையின் செயல்பாடு இன்று சிறைக்குள்ளேயே ஒரு கொலை நடப்பதில் சென்று முடிந்திருக்கிறது.

1985ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் என்பவரை திருவெற்றியூரில் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை பெற்று வரும் வெல்டிங் குமார் என்ற ஆயுள் தண்டனைக் கைதி, இன்று புழல் சிறைக்குள்ளேயே கொலை செய்யப் பட்டுள்ளார். இந்த வெல்டிங் குமார் தி.மு.க வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தாக்கப்பட்ட வழக்கிலும் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வெல்டிங் குமார் கைது செய்யப் பட்டபோது

சிறைக்குள்ளேயே ஒரு ஆயுள் தண்டனைக் கைதி கொலை செய்யப் பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை.

வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பில்லை.

நீதிபதிகளுக்கு பாதுகாப்பில்லை.

இன்று சிறைக்குள்ளே உள்ள கைதிகளுக்கும் பாதுகாப்பில்லை.


அப்பொழுது, கருணாநிதியும், அவர் குடும்பத்தாரும் மட்டும் தான் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்க முடியுமா ?

இந்த அரசு கருணாநிதிக்கும் அவர் குடும்பத்துக்கும் மட்டும் தானா ?

சிறைக்குள்ளேயே கைதி கொல்லப் படுகிறார் என்றால், அதற்கு பொறுப்பான உள் துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும் அல்லவா ?

பதவி விலகுவதெல்லாம், சுயமரியாதை உள்ளவர்களுக்குத் தான்.

"ஒரு அடிமை என்ன செய்ய முடியும்" என்று ஒப்பாரி வைப்பவருக்கு எப்படி இந்த விதி பொருந்தும் ?

ஒப்பாரி

Saturday, June 6, 2009

இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது … ?

"There is enough in this world for everybodys need, but not enough for peoples' greed"
மகாத்மா காந்தி



நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் நாட்டில் ஏறத்தாழ எல்லா தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் பட்டது என்ற செய்தி வெளிவந்தது. பல இடங்களில், எதிர்க்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கையிலேயே கையும் களவுமாக பிடித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த தகவல்களும் காட்சி ஊடகங்கள் அச்சு ஊடகங்கள் வாயிலாகப் பார்த்தோம்.

ஜனவரி மாதம் நடந்த திருமங்கலம் தேர்தலில் இதேபோன்று வாக்காளர்களுக்கு வெகு தாராளமாக பணம் பட்டுவாடா செய்யப் பட்டு எதிர்க் கட்சியான அ.தி.மு.க அந்த பண வெள்ளத்தின் முன் நீச்சலடிக்க முடியாமல் திணறியதையும் பார்த்தோம். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பு, பொது மக்களிடம் பரவலாக உள்ள தி.மு.க ஆட்சிக்கு எதிரான அதிருப்தி உணர்வின் உரைகல்லாக திருமங்கலம் தேர்தல் முடிவுகள் அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் லதா அதியமான் வெற்றி பெற்றது மாற்றத்தை விரும்பிய பலருக்கு ஏமாற்றத்தை தந்தது.

திருமங்கலம் என்பது ஒரு சட்டமன்றத் தொகுதி, அதில் வாக்காளர்களுக்கு பணம் அளித்தது போல் பாராளுமன்றத் தேர்தலில் பணத்தை அள்ளி இறைக்க முடியாது ; பாராளுமன்றத் தேர்தலில் எவ்வளவு பணம் செலவு செய்தாலும், ஓரளவுக்கு மக்கள் நியாயமாக வாக்களிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது.

ஆனால் தேர்தல் முடிவுகளைப் பார்க்கையில் எல்லா எதிர்ப்பார்ப்புகளையும் பொய்யாக்கி பணம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதைக் காண முடிகிறது. இந்த தேர்தலில், பணம் படுத்திய பாடு, வாக்கு சதவிகிதங்களை வைத்து, பல தேர்தல்களில் வெற்றிக் கூட்டணியாக கணிக்கப் பட்ட கூட்டணிகளை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது.

தனிப்பட்ட முறையில் வாக்காளர்கள் பணம் பெற்றுள்ளார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டாலும் கூட, நேரடியாக மக்களிடம் நேர்மை உணர்ச்சி குறைந்து விட்டது, லஞ்சம் பெற்றுக் கொண்டு மக்கள் வாக்களிக்கிறார்கள் என்ற விமரிசனத்தை வைக்க எந்த எதிர்க்கட்சியும் தயாராக இல்லை. ஏனெனில், அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபொழுது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் வாக்காளருக்கு பணம் கொடுக்கப் பட்டதாக எழுந்த குற்றச் சாட்டுகளை மறக்க இயலாது.

தமிழக மக்களிடம் இயல்பாக எப்பொழுதும் இருக்கக் கூடிய இரக்க உணர்சியைக் கூட, பணம் துடைத்து எறிந்து விட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோதும், கார்கில் போரின் போதும், இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட அதிகமாக தமிழ்நாட்டில் நிதி வசூல் செய்யப் பட்டு வழங்கப் பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட இரக்க குணம் படைத்த தமிழர்களா ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப் பட்டுக் கொண்டிருக்கையில் பாராமுகம் காட்டியது … …. ? நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் உண்மை இது தானே ?

1991ம் ஆண்டு இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்து அறிமுகப் படுத்திய தாராளமயமாக்கல் கொள்கை கடந்த 18 ஆண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் மனநிலையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாதது.

வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் பொருட்களை விற்க இந்தியாவை ஒரு பெரிய சந்தையாக கருதி, பல்வேறு நுகர்வுப் பொருட்களை இந்தியாவில் வந்து குவித்ததன் பலன் மக்களின் மனதில், எப்பாடு பட்டாவது, எந்த வழியிலாவது, இப்பொருட்களை வாங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

90களின் தொடக்கத்தில், இந்தியாவுக்குள் புகுந்த கம்பிவடத் தொலைக்காட்சி (கேபிள் டிவி), ஒவ்வோரு வீட்டு வரவேற்பறையிலும் சென்று, இதை வாங்கு, அதை வாங்கு என்று ஆசையையும், பேராசையையும் வளர்த்து நடுத்தர மக்களை பேராசைப் பிடித்து அலையும் கூட்டமாக மாற்றி வைத்துள்ளது. தானும் ஊழலில் ஈடுப்பட்டாவது, திருடியாவது, பணக்காரனாக வேண்டும் என்று சாமானியனையும் நினைக்கத் தூண்டுவதால் தன்னை ஆளும் அரசியல்வாதி ஊழலில் ஈடுபடுவதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.


1989ம் ஆண்டு நடந்த தேர்தலை திரும்பிப் பாருங்கள். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தான் பலம் வாய்ந்த கட்சி. பி.ஜே.பி இன்றைக்கு உள்ள அளவுக்கு பெரிய கட்சி அல்ல. அன்றைய தேர்தலில் ஒரே விவாதப் பொருள் போபர்ஸ் பீரங்கிப் பேர ஊழல் மட்டும் தான்.

தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் பீரங்கி கட்அவுட்களும், பேனர்களும் வைக்கப் பட்டிருந்தன. அந்த தேர்தலில் ராஜீவ் காந்தி தோற்றதற்கான ஒரே காரணம் போபர்ஸ் ஊழல்தான் என்று உறுதியாகச் சொல்ல இயலும். அந்த போபர்ஸ் ஊழலின் மொத்த தொகை எவ்வளவு தெரியுமா ?

வெறும் 66 கோடி ரூபாய்தான்.

ஆனால், இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலை நினைத்துப் பாருங்கள். ஊழலின் மொத்த தொகை அறுபதாயிரம் கோடி ரூபாயிலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. பத்திரிக்கைகளும் காட்சி ஊடகங்களும் இதைப் பற்றி ஏராளமாக எழுதின. ஆனால் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணகர்த்தாவான ஆ.ராசா தேர்தலில் எவ்வித அச்சமும் இன்றி போட்டியிட்டு 76,010 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும், அதே தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆகியுள்ளார் என்பது எதைக் காட்டுகிறது ? லஞ்சமும் ஊழலும், நம் வாழ்வின் இயல்பான ஒரு பகுதியாக ஆகிவிட்டதையும், ஊழல் ஒரு பொருட்டே அல்ல என்பதையும், மிக மோசமான சமரசவாதிகளாக நாம் ஆகிவிட்டதையும், யார் ஊழலில் ஈடுபட்டாலும் அதில் நமக்கு பங்கு கிடைக்குமா என்ற மனப்பான்மையையுமே இது காட்டுகிறது.

2005ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். அந்த ஆண்டு சென்னை நகரம் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப் பட்டது. இன்னும் ஆறு மாதத்தில் வரப்போகும் தேர்தலுக்கு இது பயன்படட்டும் என்று, அன்றைய முதல்வர் ஜெயலலிதா பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.2000 நிவாரணத் தொகை என்று அறிவித்தார். இரண்டொரு நாளில் இந்த அறிவிப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் நிவாரணம் என்று பரவியது. இதைப் பயன்படுத்தி, பாதிக்கப் பட்டவர்கள், படாதவர்கள், வசதி உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நிவாரணத் தொகையைப் பெற போட்டா போட்டி போட்டனர்.

06.11.2005 அன்று நள்ளிரவில் சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் அரசுக் கல்லூரியில் வெள்ள நிவாரணம் பெற ஏற்பட்ட கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உயிரிழந்தனர். 18.12.2005 அன்று சென்னை கே.கே.நகரில் நள்ளிரவில் வெள்ள நிவாரணம் பெறுவதற்காக கூடியிருந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 22 பெண்கள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவருக்கும் 1 லட்சம் நிவாரணம் வழங்கி அரசு ஆணையிட்டது. இது தொடர்பாக விசாரிக்க ராமன் கமிஷனை அமைத்தது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவரும், அன்றாடம் உணவுக்கு வழியில்லாத விளிம்பு நிலை மக்கள் அல்ல. அனைவரும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள். ஓரளவு வருமானம் உள்ள கீழ் நடுத்தர வகுப்பு மக்களே. இறந்தவர்களில் ஒருவர் தலைமைச் செயலக ஊழியர் ! நள்ளிரவில் இனாமாகத் தரப்படும் பணத்தைப் பெற வேண்டும் என்று உயிரை விட்டவர்களின் குடும்பத்தினர், அரசு தந்த ஒரு லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, ராமன் கமிஷன் முன்னால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். மக்களின் சிந்தனை எந்த அளவுக்கு மாறி இருக்கிறது பார்த்தீர்களா ?

இந்த மக்களும், இவர்கள் நம்பி உள்ள இந்த ஜனநாயகமும் எங்கே போகிறது என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை… …

ஒப்பாரி


Friday, June 5, 2009

மாயாண்டி குடும்பத்தார் திரைப்பட விமர்சனம்





திமுக பட நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்திருக்கிறது "மாயாண்டிக் குடும்பத்தார்" திரைப்படம். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக வந்திருக்கிறது. கதாநாயகனாக நடிக்கும் கருணாநிதியே எழுதி இயக்கியுள்ள படம் இது.

திருக்குவளையிலிருந்து ஒரு தகரப் பெட்டியோடு சென்னைக்கு வந்து சென்னை மாநகரத்தையே விலைக்கு வாங்கும் அளவுக்கு வளர்ந்த ஒரு மனிதனின் கதைதான் இந்தப் படம். அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் உழைப்பால் திடீர் பணக்காரர் ஆவது போலல்லாமல் ஊரை அடித்து உலையில் போட்டு எப்படி மாயாண்டி தன்னையும் தன்
குடும்பத்தாரையும் பெரும் செல்வந்தர் ஆக்குகிறார் என்பதை, ஆடல் பாடல் காட்சிகளோடு சுவையோடு விளக்கப் பட்டிருக்கிறது.



கதாநாயகன் தன்னுடைய தமிழை மட்டுமே மூலதனமாக வைத்து சென்னைக்கு வருகிறார். சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார். நாடகங்கள் எழுதுகிறார். இந்த தொழிலில் எதிர்ப்பார்த்த அளவுக்கு வருமானம் வராததால் அரசியலில் சேரலாம் என்று முடிவெடுத்து அரசியலில் நுழைகிறார். அப்போதைய கட்சித் தலைவர் கழகம் என்பது குடும்பம் போல என்று சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு குடும்பத்தையே கழகமாக கதாநாயகன் எப்படி மாற்றியமைக்கிறார் என்பது துல்லியமான காட்சிகளால் விளக்கப் பட்டுள்ளது.

திரைப்படத்தில் மொத்தம் மூன்று கதாநாயகிகள். முதல் கதாநாயகி பத்மாவதி அதிக முக்கியத்துவம் இல்லாமல், ஒரு சில காட்சிகளிளேயே காணாமல் போய் விடுகிறார். அவர் மகனாக நடிக்கும் முத்துவுக்கும் கனமான பாத்திரம் கொடுக்கப் படவில்லை. குடிப்பழக்கம் ஏற்பட்டு, பத்மாவதி மறைவுக்குப் பின் முக்கியத்துவம் இல்லாமல் விடப்பட்டுள்ளார்.

சில காட்சிகளுக்குப் பிறகு இரண்டாவது கதாநாயகி தயாளு வருகிறார். படம் முழுக்க கதாநாயகன் மீது ஆக்ரமிப்பு செலுத்துவதாக திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. இவருக்கு பிறக்கும் பிள்ளைகள் எப்படி தமிழகத்தையும், படத்தின் இறுதியில் டெல்லியையும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள் என்பதை இயக்குநர் அழகுணர்ச்சியோடு விளக்கியுள்ளார்.




மூன்றாவது கதாநாயகியான ராசாத்தியை காதலித்து, சுயமரியாதை முறைப்படி திருமணம் செய்யும் காட்சிகள் காண்பவர் மனதை கொள்ளை கொள்கின்றன. திருமணம் விமரிசையாக நடந்தாலும், மூன்றாவது கதாநாயகிக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப் படவில்லை. இயக்குநர் ஏன் ராசாத்தியையும் அவர் மகள் கனிமொழியையும் முக்கியத்துவம் குறைந்த பாத்திரங்களாக படைத்திருக்கிறார் என்ற கேள்வி பார்வையாளர் மனதில் எழுகிறது.




அரசியலில் கதாநாயகன் இருக்கையில், கதாநாயனாகன் போல் தோற்றமளித்தாலும், வில்லனாக மாயாண்டிக்கு கடும் நெருக்கடி கொடுப்பவராகவும், பலம் வாய்ந்த வில்லனாகவும் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்தப் படுகிறார். மாயாண்டியாலேயே அரசியலில் அறிமுகப் படுத்தப் பட்டு, கடைசியில் மாயாண்டிக்கே ஆப்பு வைக்கிறார் எம்ஜிஆர். கதாநாயகனை எதிர்த்து கட்சி தொடங்கும் எம்ஜிஆர், ஆட்சியை பிடித்து மாயாண்டியை ஓட ஓட விரட்டுகிறார். இந்த இடத்தில் இடைவேளை வருகிறது.




வில்லனாக வரும் எம்ஜிஆருக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போகவே,சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அந்த கேப்பில் ஆப்படிக்கலாம் என நினைத்த மாயாண்டி, அமெரிக்காவிலிருந்து எம்ஜிஆர் திரும்பி வரும் வரை என்னிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் என்று கோமாளித்தனம் செய்தது எடுபடவில்லை.

13 ஆண்டுகளாக தலைகீழாக நின்று டக்கரடித்துப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல், மாயாண்டி ஓய்ந்து போன நேரத்தில், திடீரென்று வில்லன் எம்ஜிஆர் இயற்கை மரணம் அடைகிறார். இந்த கேப்பில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார் மாயாண்டி.

ஆட்சியை பிடித்தவுடன் மாயாண்டிக்கு சுக்கிர திசைதான். குடும்பம் செழித்து வளர்வதை நன்றாக பார்க்கமுடிகிறது. தமிழகமெங்கும் ஆக்டோபஸ் போல தன் குடும்பத்தினரின் வலையில் வளைத்துப் போடுகிறார் மாயாண்டி.

சன் டிவி என்ற நிறுவனத்தை தன் மருமகன் மற்றும் பேரன் தொடங்க, அதன் காரணமாக குடும்பத்தில் சண்டை ஏற்பட, இந்தக் குடும்பச் சண்டையில் அப்பாவிகள் மூன்று பேரை கொலை செய்யும் காட்சி மிகுந்த திகைப்பை ஏற்படுத்துகிறது. ஆனாலும், இந்தச் சண்டையை சாதுர்யமாக சமாளித்து, குடும்பத்தில் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்துகிறார் மாயாண்டி.

மாயாண்டி நள்ளிரவில் கைது செய்யப் படும் காட்சி படத்தில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.


எம்ஜிஆர் மறைவுக்குப் பின் வில்லியாக அறிமுகமாகும் ஜெயலலிதா, எம்ஜிஆர் அளவுக்கு சோபிக்கவில்லை. மாயாண்டி அவரை எளிதாக வெற்றி கொள்கிறார்.

திரைப்படத்தில் இசைக்கு சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சி அறிமுகப் படுத்தப் பட்டு, படத்துக்கு களை கூட்டுகிறது.

படத்தில் தனியாக காமெடி நடிகர்கள் யாரும் இல்லாமல், மாயாண்டியே காமெடியையும் கையாளுகிறார். மனிதச் சங்கிலி, டெல்லிக்கு தந்தியடிப்பது, 4 மணி நேர உண்ணாவிரதக் காட்சிகளிலெல்லாம் கண்டு தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.

படத்தின் இறுதியில், மாயாண்டிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப் படுவதும் உடல் சுத்தமாக ஒத்துழைக்காவிடினும், தொடர்ந்து ஆட்சியில் ஒட்டிக் கொண்டு இருப்பதாக படம் நிறைவடைகிறது.

மாயண்டியாக நடிக்கும் கருணாநிதியின் நடிப்பு காண்பவர் மனதை கொள்ளை கொள்கிறது. மொத்தத்தில், நவரசங்களும் நிறைந்த ஒரு சிறந்த திரைப்படமாக மாயாண்டி குடும்பத்தார் உருவாகியுள்ளது.

ஒப்பாரி

Thursday, June 4, 2009

கருணாநிதி பிறந்த நாளில் கண்ணுக்கினிய காட்சிகள்.


படத்தை பெரிதாக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.













Wednesday, June 3, 2009

தள்ளாத வயதிலும் தணியாத அதிகார போதை





இன்று கருணாநிதிக்கு 86வது பிறந்த நாள்.

சிறந்த தமிழறிஞர், சிறந்த நிர்வாகி, சிறந்த ராஜதந்திரி, சிறந்த அரசியல்வாதி, சிறந்த எழுத்தாளர், என்றெல்லாம் கருணாநிதியை புகழ வேண்டும் என்று ஆசையாகத் தான் இருக்கிறது. இந்தப் புகழ்ச்சிக்கெல்லாம் தகுதி இல்லாதவர் அல்ல கருணாநிதி.

ஆனால், இந்த அனைத்துத் தகுதிகளையும் விட, இன்று குடும்பத் தலைவர் என்று மட்டுமே கருணாநிதி வரலாற்றில் குறிப்பிடப் படுவார்.

ஈழத் தமிழர்களின் மிக நெருக்கடியான காலக் கட்டத்தில் அவர்கள் முதுகில் குத்தி குடும்ப நலனுக்காக அவர்களை கைகழுவி விட்ட முழுத்துரோகி என்றுதான் இவரை வரலாறு பதிவு செய்யும்.

கடந்த வாரம் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின், பல ஆண்டுகள் முன்பே இந்த பொறுப்புக்கு வரும் அளவுக்கு தகுதி உள்ளவர் தான். எமெர்ஜென்சியில் சிறையிலிருந்தவர். கருணாநிதி நடத்திய அனைத்து இயக்கங்களிலும் பங்கு பெற்றவர். இவ்வளவு ஏன், 57 வயது ஆன பின்பும் கூட, இன்றும் இளைஞர் அணித் தலைவராக இருந்து தன் பொறுப்புகளை செவ்வனே நடத்தி வருபவர். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுதும் சரி, சென்னை மாநகர மேயராக இருந்த பொழுதும் சரி, சென்னை நகரம் வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட பொழுதும், உள்ளாட்சி நிர்வாகம் செய்வதிலும், கருணாநிதியை விட அதிகம் நிதானத்தோடு பல சமயங்களில் நடந்து கொண்டுள்ளார்.

இவ்வாறெல்லாம் பல நியாயங்கள் இருந்தாலும், இத்தனை ஆண்டுகள் கழித்து, அதுவும் கடும் நெருக்கடிக்குப் பிறகு கருணாநிதி இந்த முடிவை எடுத்திருப்பது ஏன் என்பது அவருக்கே வெளிச்சம். அதுவும், காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கு கேட்கும் நிலையில், துணை முதல்வர் பதவியை அவர்கள் கோரக்கூடும் என்றும், ஸ்டாலின் கடும் அதிருப்தியில், கருணாநிதியிடம் கோபப்பட்டதாகவும், மூத்த மகன் அழகிரி கேபினெட் அமைச்சராக ஆன பின்னர், ஸ்டாலினுக்கு அதிகாரம் உயர்த்தி அளிக்கப் படாவிட்டால், குடும்பத்தினுள்ளே அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது என்பதால், அதற்குப் பிறகே கருணாநிதி அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் முடிவுக்கு வந்ததாகவும் பத்திரிக்கையில் வரும் செய்திகள், கருணாநிதி மனமார இந்த முடிவுகளை எடுக்கவில்லை, ஏதோ நெருக்கடியிலேயே இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சென்று வந்த பொழுது கருணாநிதி விட்ட அறிக்கைகளையும், திருச்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதையும் நினைவுபடுத்திப் பாருங்கள்.
"நான் பிழைப்பேனா என்பதே எனக்குத் தெரியாது,

மறு பிறவி எடுத்து வந்திருக்கிறேன் ;

நான் திருச்சிக்கு வருவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை

தயவு செய்து வாக்களியுங்கள்,

உயிருக்கே ஆபத்து என்ற இரு கண்டங்களில் இருந்து
எழுந்து வந்திருக்கிறேன்.

இப்படிக் கழிவிரக்கம் கொண்டு, தள்ளாத வயதில், மூட்டை போல சுமந்து செல்லப் படுகிறார் என்ற எதிர்க்கட்சியினரின் வசைகளையும் பொறுத்துக் கொண்டு, கருணாநிதியை பிடிவாதமாக அதிகாரத்தை கையில் வைத்துக் கொள்ளச் சொல்லி யாராவது வற்புறுத்துகிறார்களா என்ன ?

ஸ்டாலின் துணை முதல்வராக ஆன பின்னும், கருணாநிதி தன் கையில் வைத்திருக்கும் இலாக்காக்களைப் பாருங்கள்

1) ஐஏஎஸ்
2) ஐபிஎஸ்
3) ஐஎப்எஸ்
4) லஞ்ச ஒழிப்பு
5) உள் துறை
6) காவல் துறை
7) மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை
8) மொலாசஸ்
9) தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், லஞ்ச ஒழிப்பு, உள் துறை, காவல் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை மற்றும் மொலாசஸ் ஆகிய துறைகள், மிகுந்த வேலைப் பளு மற்றும் அதிகாரம் நிறைந்த துறைகள். என்னால் முடியவில்லை, உடல் ஒத்துழைக்கவில்லை, என்றெல்லாம் புலம்பும் கருணாநிதி மேற்கூறிய துறைகளை ஏன் மகன் உட்பட வேறு யாருக்கும் அளிக்க மறுக்கிறார் தெரியுமா ?

அதிகாரம் கையை விட்டுப் போய்விட்டால், அதிகாரிகள் அனைவரும் ஸ்டாலினைப் பார்த்து வேலையை முடித்துவிட்டுப் போய் விடுவார்கள், நம் பிறந்த நாளுக்கு நீண்டு நெடிந்து வீட்டு வாசலில் நிற்கும் அதிகாரிகள் கூட்டம், ஸ்டாலின் வீட்டுக்குப் போய் விடும் என்ற எண்ணமே காரணம்.

அனைத்து அதிகாரங்களையும் மகன் ஸ்டாலினுக்கும், மகள் கனிமொழிக்கும், தன் அமைச்சரவை சகாக்களுக்கும் பகிர்ந்தளித்து விட்டு, தான் மிகவும் நேசிப்பதாக தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அடிக்கடி பிரலாபிக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் அல்லவா ?

செய்ய மாட்டார் கருணாநிதி. தன் இறு்தி மூச்சு வரைக்கும் அதிகாரத்தை கைவிட மாட்டார்.

இருப்பினும், தமிழாய்ந்த அறிஞரான கருணாநிதி, அவர் படித்த தமிழ் நூல்களில் உள்ள நல்ல கருத்துளை இனியாவது கருத்தில் கொண்டு, அதிகார போதையை விட்டு ஒழிப்பார் என்ற நப்பாசையுடன், அவர் பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்.

ஒப்பாரி

Tuesday, June 2, 2009

அரசு ஊழியர்களும், கொடை வள்ளல் கருணாநிதியும்.,,,


படத்தை பெரிதாக்க படத்தின் மீது அழுத்தவும்


சமுதாயத்தில் நடக்கும் எதுவுமே தங்களை பாதிக்காது எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், பாசாங்கு செய்து கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் அது அரசு ஊழியர் கூட்டமே.....

உலகம் எப்படிப் போனால் எனக்கென்ன..... என்னுடைய சம்பளம், எல்.டி.சி, ஜிபிஎஃப், சரியாக வருகிறதா என்பதை மட்டுமே சிந்தித்து, சுவாசித்து, உயிர் வாழும் சுயநலக் கூட்டமாய் இந்த அரசு ஊழியர்கள் மாறிக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இந்த நிலையை மாற்றி ஓரளவுக்கு அரசு ஊழியர்கள் மத்தியில், ஒரு சமூக உணர்வை தோற்றுவிக்க தொடர்ந்து முயன்று கொண்டிருந்தாலும், குறைந்த அளவு வெற்றியைக் கூட அம்முயற்சி தரவில்லை என்பது தான் யதார்த்தம்.

அரசு ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறார்கள் என்ற உணர்வு துளியும் இன்றி அரசு அலுவலகத்தை அணுகும் பொது மக்களை இவர்கள் நடத்தும் விதம் என்ன என்பதை சாதி சான்றிதழுக்காகவும், மின் இணைப்புக்காகவும், பத்திரம் பதிவதற்காகவும், பொது மக்கள் நன்கு அறிவார்கள்.

லஞ்சம் கொடுக்காமல், அரசு அலுவலகத்தில் எந்த வேலையும் நடக்காது என்பதும், பெரும்பாலான அலுவலகங்களில், ப்ரோக்கர்களின் தயவு இல்லாமல், காரியம் நடக்காது என்பதும், அனைத்து பொதுமக்களுக்கும் தெரிந்த விஷயம்.

லஞ்ச ஒழிப்புத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதி, லஞ்ச ஊழலை ஒழிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளால், எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும், மாறாக, திமுக ஆட்சி நடத்தி வரும் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதும், நாடறிந்த உண்மை.

அரசு ஊழியர்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக போராடும் அதே வேளையில், சாமான்ய மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள் என்பதையும், மக்களுக்காகத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதையும், மனதில் கொண்டால்,
அவர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் இந்த ஊதிய உயர்வு பொறுத்தமானதே..... இல்லையெனில்... ....

கருணாநிதி அடிக்கும் கொள்ளையில், அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதே ஆகும்.

/ஒப்பாரி/

கருணாநிதிக்கு ராசாத்தி அம்மாள் மனந்திறந்த மடல் !




அன்பரே !


உங்களைப் போல் கொஞ்சும் தமிழில் எனக்கு எழுதத் தெரியாது. மந்திரத் தமிழில் மயக்கத் தெரியாது. என் மனதை எழுதத் தெரியும்.

உங்களுக்கு அப்போது பிடித்த 'காகிதப் பூ' கதாநாயகி இப்போது உங்கள் மனம் கவராமல் போனது காலத்தின் கோலமே ! காகிதப்பூ நாடகத்தில் நான் கதாநாயகியாக இருந்தாலும், உங்கள் நடிப்பில் நான் மனதைப் பறிகொடுத்ததுதான் உண்மை.

அனைத்து சாதிக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் நீங்கள் என்னை மணம் புரிந்தீர்களா என்பதை நான் அறியேன்; ஆனால் திருமணமான நாள் முதலாகவே, என்னை நீங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் தடத்தி வந்திருக்கிறீர்கள்.

என்னதான் ஆயினும் அக்காள் தயாளுதான் மூத்தவர் என்பதால் அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் தாங்கள் முன்னுரிமை அளித்ததை இத்தனை காலம் பொறுத்தே வந்திருக்கிறேன். ஆனாலும், இனி பொறுப்பது பயன் தராது என்று தோன்றுகிறது.

எங்களோடு நெருக்கமாக இருக்கும், எங்கள் உறவினர், ஆலடி அருணாவின் மகள் பூங்கோதையை என்ன பாடு படுத்தினீர்கள் ?
அந்த வீணாய்ப் போன உபாத்யாவோடு அப்படி என்ன தவறாக பேசி விட்டார் ?
லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட அவர் அத்தை மகனை நடவடிக்கை எடுக்காமல் விடச் சொன்னார் !

இது என்ன அப்படி ஒரு குற்றமா ?

அந்த வீணாய்ப் போன உபாத்யாய் இதையெல்லாம் டேப் பண்ணி வைத்திருப்பார் என்று யாருக்கு தெரியும் ?

அப்படி எல்லோரும் டேப் பண்ணி வைத்திருந்தால் நீங்கள் எத்தனை முறை பதவி விலக நேர்ந்திருக்கும் ?

சர்க்காரியா கமிஷன் உங்களை விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று சொல்லவில்லையா ?

அதற்குப் பிறகு நீங்கள் முதல்வராக வில்லையா ?

உங்களோடு அமைச்சர்களாக இருக்கும் எத்தனை பேர் ஊழல் குற்றச் சாட்டுக்கு
ஆளானார்கள் ?

அனைவரும் பதவி விலகி விட்டார்களா என்ன ?

ஏதோ போன் பேசி விட்டார் என்று பூங்கோதையை ராஜினாமா செய்யச் சொல்லி எவ்வளவு நெருக்கடி தந்து ராஜினாமா செய்ய வைத்தீர்கள் ? உங்கள் நெருக்கடி இல்லையென்றால் பூங்கோதை தானாகவே முன்வந்து ராஜினாமா செய்யும் அளவுக்கு சுயமரியாதை உள்ளவரா என்ன ?

தேர்தல் நெருங்கவும் நாடார்களின் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காகத் தான் பூங்கோதையை மீண்டும் அமைச்சர் ஆக்கினீர்கள் என்பது நாங்கள் அறியாததா ?

பிறகு நான் உங்களிடம் வேறு என்ன கேட்டேன் ? நீண்ட நாட்களாக என்னிடம் கேட்டு வந்தார்கள் என்பதற்காக, கள் இறக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டதற்கு மக்கள் என் "மந்திரத் தமிழில் மயங்கிக் கிடக்கிறார்கள்; அவர்களுக்கு வேறு போதை வேண்டியதில்லை" என்று "இருட்டுக் கடை அல்வா" கொடுத்தீர்கள்.

ஆனால் மூத்தவர் கேட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைத்திருக்கிறீர்கள்.

கடந்த மன்மோகன் அரசாங்கதில் என் மகளை நான் பெற்ற செல்வத்தை, கனிமொழியை மந்திரியாக்குங்கள் என்று மன்றாடிக் கேட்டும் மறுத்து விட்டீர்கள். மூத்தவர் பிள்ளைகளுக்கும் உங்கள் அக்காள் பேரன்களுக்கும் மட்டும் கட்சிப் பதவிகளையும் அரசுப் பதவிகளையும் வாரி வழங்குகின்றீர்கள். இந்த மந்திரி சபையிலாவது கேபினெட் அமைச்சர் பதவி வாங்கித் தருவீர்கள் என் எதிர்ப்பார்த்தால் முதல் முறை எம்பி ஆன மூத்தவர் மகனுக்கு முன்னுரிமை அளிக்கிறீர்கள்.

தற்போது, ஸ்டாலினையும், துணை முதல்வர் ஆக்கி விட்டீர்கள்.

இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இடம் அளித்தது போல் எனக்கும் என் மகளுக்கும் இதயத்தில் இடம் அளிக்கிறேன் என்ற வழக்கமான அல்வாவைத்தான் கிண்டிக் கொடுப்பீர்கள் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. மூத்தவர் மகன் அழகிரிக்கு முன் என் மகள் எம்.பி ஆகவில்லையா ? ஆனால் அவர் அமைச்சராகி விட்டார், என் மகள் இன்னும் எம்.பியாகவே உள்ளார். இதுதான் உங்கள் நெஞ்சுக்கு நீதியா ?

ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் உங்கள் கபட நாடகத்தை நான் கண்டு கொண்டேன். மந்திரி பதவி தருகிறேன், தருகிறேன் என்று கடைசியில் என் மகள் கனிமொழியை "சென்னை சங்கமத்தில்" கரகாட்டம் ஆட விட்டு விடுவீர்கள் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது.

ஏற்கனவே மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில், டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதுரில் "தலப்பாக்கட்டு பிரியாணி" கடை வைத்து விட்டார். என் மகளும் கரகாட்டப் பயிற்சிப் பள்ளி தொடங்கப் போகிறேன் என்று சொல்கிறாள்.

இதற்கு மேலும், உங்களுடன் இருந்து, நீங்கள் கொடுக்கும் அல்வாவை சாப்பிட நானும் என் மகளும் தயாராக இல்லை.

அதனால், உங்களிடமிருந்து விவாகரத்து பெற முடிவு செய்து விட்டேன். விவாகரத்து பெறலாம் என்றால், ஏற்கனவே நீங்கள் போலீசை வைத்து வக்கீல்களை அடித்து நொறுக்கியதால், என் வழக்கை எந்த வக்கீலும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். வேறு வழியில்லாமல், என் வழக்கை நானே வாதாடி நடத்துவது என்று முடிவெடுத்து விட்டேன்.

ஜீவனாம்சம் வழங்குவதிலாவது, குறை வைக்காமல், நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் ஒரு லட்சம் கோடியை, சரியாக பங்கீடு செய்து, எனக்கும் என் மகளுக்கும் பிரித்துத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்

கனத்த இதயத்தோடு உங்களை விட்டுப் பிரியும்


காகிதப்பூ கதாநாயகி
கனிமொழியின் தாய்.