Flash News

Thursday, July 31, 2014

தகத்தகாய தலித்

சமீபத்தில் தமிழக அரசு ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.   அந்த உத்தரவின்படி, தலைமை நீதிபதிக்கு உள்ள மரபின் அடிப்படையிலான மரியாதைகள் அனைத்தும், இரண்டாவது மூத்த நீதிபதிக்கும் வழங்கப்பட வேண்டும்ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்பவர் மட்டுமே, அரசின் தலையாய மரியாதைகளுக்கு தகுதியானவர் என்று இது நாள் வரை இருந்து வந்ததுஅந்த வழமையை மாற்றி, இரண்டாவது மூத்த நீதிபதிக்கும் அந்த சலுகைகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.

இந்த உத்தரவை அறிந்த நீதிபதி கர்ணன் கடும் கோபமடைந்தார்இந்தியாவிலேயே தலைச்சிறந்த நீதிபதியாக இருக்கும் தனக்கு வழங்காத உரிமைகளும், சலுகைகளும் இரண்டாவது நீதிபதிக்கு மட்டும் வழங்குவது ஒரு தலித் விரோத நடவடிக்கை என்றே பார்க்கிறார்இதனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரடியாக கடிதம் எழுதுகிறார் நீதிபதி கர்ணன்.

அன்புள்ள புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு,

நீதிபதி கர்ணன் எழுதிக் கொள்வதுநான் ஏன் உங்களை மாண்புமிகு என்று அழைக்கவில்லை தெரியுமாஏனென்றால் நானே ஒரு மாண்புமிகுஒரு மாண்புமிகு, இன்னொரு மாண்புமிகுவை அப்படி விளிப்பது, நீதித்துறையின் மாண்பை சீர்குலைக்கும் செயலாகவே இருக்கும்.

சமீபத்தில், புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டு விட்டார், அவர் பொறுப்பேற்க உள்ளார் என்ற செய்தி வெளியானதும், அவசர அவசரமாக, இரண்டாவது மூத்த நீதிபதிக்கு தலைமை நீதிபதிக்கு உண்டான சலுகைகளை அளித்து உத்தரவிட்டுள்ளீர்கள்.   இது வரவேற்கத்தகுந்த நடவடிக்கை என்றாலும், நீதிபதிகளின் பட்டியலில் 23வது இடத்தில் இருக்கும் எனக்கும் அந்த சலுகைகளை வழங்க வேண்டும் என்பதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்கும்.

எனது பெருமைகளை நானே சொல்லிக் கொள்ளக் கூடாதுதான்இருந்தாலும் ஒரு பயலும் சொல்ல மாட்டேன்கிறான் என்பதால், வேறு வழியின்றி நானே சொல்கிறேன்.

எந்த ஒரு நீதிபதியும் தன் சக நீதிபதியைப் பற்றிக் குறை சொல்வது கிடையாது.   என்ன நடந்தாலும், சக நீதிபதியாயிற்றே என்று அமைதியாக இருந்து விடுவார்கள்ஆனால், நான் வெளிப்படையாக குற்றம் சொன்னேன். சில தலித் விரோதிகள், அப்போது தலைமை நீதிபதியாக இருந்த இக்பாலிடம் எனது ஊழல் குறித்து ஆதாரங்கள் கிடைத்ததாகவும், அவர் என்னை விடுமுறையில் செல்ல உத்தரவிட்டதாகவும், அதிலிருந்து தப்பிக்கத்தான் நான் புகார் அளித்தேன் என்றும் கூறுவார்கள்அதை நம்பாதீர்கள்.

ஒரு தலித் என்ற காரணத்துக்காக, என்னை அவமானப்படுத்தும் விதமாக, ஒரு விழாவில் என் அருகே அமர்ந்திருந்த ஒரு நீதிபதி காலை மடக்கி உட்காருகையில் லேசாக, தெரியாமல் இடிப்பது போல என்னை காலால் இடித்தார்.   அப்படி லேசாக இடித்தது, தெரியாமல் இயல்பாக நடந்ததோ என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோதே, அந்த நாற்காலியில் என் பெயர் எழுதியிருந்த ஸ்டிக்கரை லேசாக தெரியாதது போல கிழித்தார்.   இது நிச்சயமாக தலித்தை வன்கொடுமைக்கு ஆளாக்குவது என்பதை நான் உணர்ந்தேன்.   இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்து பொறுத்துக் கொண்டிருக்க நான் என்ன சாதாரண தலித்தாஉயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள தலித் அல்லவா ?  

உடனடியாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினேன்உடனடியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தேன்.  பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள்யார் உங்களை காலால் உதைத்த நீதிபதி என்று.   பெருந்தன்மையாக சொல்ல மறுத்து விட்டேன்.   அதற்கு பிறகு தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு நான் அனுப்பிய புகாரின் மீது என்ன நடவடிக்கை என்று நீங்கள் கேட்கலாம். ஒரு ஐம்பது தலித் வழக்கறிஞர்களை தூண்டி விட்டேன்.   அவர்கள் நேரடியாக தலைமை நீதிபதி இக்பால் அறைக்கு சென்று கலாட்டா செய்தனர்பயந்து போன இக்பால், மீண்டும் எனக்கு பணி வழங்கினார்.    அப்படி பணி வழங்கப்பட்ட உடனேயே என் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டேன் என்றால், நான் எந்த அளவுக்கு பெருந்தன்மையானவன் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

என்னுடைய தீர்ப்பு நியு யார்க் டைம்ஸ் பத்திரிக்கை வரையில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கும்.   ஒரே ஒரு முறை உடலுறவு கொண்டாலே அவர்கள் கணவன் மனைவி என்று ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அற்புதமான தீர்ப்பை நான் வழங்கியதற்காக நியு யார்க் டைம்ஸ் பத்திரிக்கை என்னை பாராட்டியதுநியு யார்க் டைம்ஸ்   ஹஃப்பிங்டன் போஸ்ட்.   தற்போது தலைமை நீதிபதிக்கான சலுகைகளை வழங்கியுள்ளீர்களே.... நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரிஅவரைப் பற்றி நியு யார்க் டைம்ஸ் பத்திரிக்கையிலோ, வாஷிங்டன் போஸ்டிலோ எழுதியிருக்கிறார்களா ?   

இரவு 9 மணி ஆனதும், ஃபுல்லாக சரக்கை போட்டு விட்டு, உயர்நீதிமன்றப் பணியாளர்கள் யாரையாவது அழைத்து, அவர்களை கேவலமாக போனிலேயே திட்டி, போனிலேயே டிஸ்மிஸ் செய்த ஒரே ஒரு நீதிபதியை உங்களால் காட்ட முடியுமாமறுநாள் என்னால் போனிலேயே டிஸ்மிஸ் செய்யப்பட்ட அந்த ஊழியர் என்னை பார்க்க முயற்சிப்பார்பார்ப்பேனா நான்பார்க்காமல் டபாய்த்து விடுவேன்.   இப்படி என்னால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.  அவர்களையெல்லாம் கேட்டீர்களேயென்றால், என் சிறப்புகளை, சிறப்பாக எடுத்துரைப்பார்கள்.

சுரானா என்று ஒரு மார்வாடியிடமிருந்து 400 கிலோ தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.   ஒரு வட இந்தியன் வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் வந்து நிம்மதியாக தொழில் செய்ய விடாமல், மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ அந்த 400 கிலோவையும் பறிமுதல் செய்தது.   நம் நாட்டை நம்பி வந்தவர்களை இப்படி தொழில் செய்ய விடாமல் தடுத்தால் தமிழகத்தின் மானம் என்ன ஆவது ?  அதனால் அந்த 400 கிலோ தங்கத்தையும் அந்த சுரானாவிடமே மீண்டும் அளிப்பது என்று நான் முயற்சி எடுத்தபோதுதான் சவுக்கு என்ற ஒரு தமிழின தலித் விரோதி, நான் என்னமோ லஞ்சம் வாங்கிக் கொண்டு, அந்த 400 கிலோவை விடுவிப்பது போல எழுதினான்.    என் மீது ஒரு குற்றம் சொன்னால், அதை தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை.  மயிர் நீக்கின் உயிர்வாழா கவரிமான் போன்ற மனம் படைத்தவனான எனக்கு, அதை தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தாலேயே நான் அந்த மனுவை தள்ளுபடி செய்ய நேர்ந்தது. அந்த வழக்கை நான் எப்படியாவது விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ஆவலாக காத்திருந்த அன்று அந்த வழக்கை பட்டியலில் போடாமல் விட்டு விட்டார் லட்சுமணன் என்ற நீதிமன்ற அலுவலர்.  வந்ததே கோபம் எனக்கு.

அழைத்தேன் அவரை நீதிமன்றத்துக்கு.  காலை பத்தரை மணி.  அனைவரும் குழுமியிருந்தார்கள்.   கேட்டேன் பாருங்கள் ஒரு கேள்வி.   "என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்.... என்னைப் பற்றி அவதூறாகப் பேசினாயாமே... -?" என்று கேட்டேன்.  அந்த ஆளு நடுநடுங்கி கிடையவே கிடையாது லார்ட்ஷிப் என்று நடுங்கிய குரலில் பதில் சொன்னான்.  என்னை ஜாதிப் பெயரை சொல்லி திட்டினாய் என்று எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவா ?  என்று கேட்டதும் கண்ணீர் விட்டு அழுதார் அந்த நபர்.   400 கிலோ தங்கத்தின் மதிப்பு அந்த ஆளுக்கு எப்படி தெரியும். 

அது மட்டுமா......   மு.க.அழகிரி என்ற திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர். அவரது மகன் துரை தயாநிதியின் மீது க்ரானைட் கடத்தல் என்று வழக்கு போட்டு, தமிழக காவல்துறை அவரை ஓட ஓட விரட்டியது.   ஓடினார் ஓடினார் 120 நாட்கள் ஓடினார்.  அவர் ஓடுவதை சகிக்க முடியாத திமுக உடன்பிறப்பு சி.டி.செல்வம், அவருக்கு முன் ஜாமீன் வழங்கினார்.   வெறும் ஜாமீன் வழங்கியிருந்தால் பரவாயில்லை.  தினந்தோறும் காவல்நிலையத்திலே கையொப்பம் போட வேண்டும் என்று உத்தரவிட்டார்.  அதன் பிறகு கோடை விடுமுறை கால நீதிபதியாக நான் அமர நேர்ந்தது.  

தமிழகத்தின் மூத்த திராவிட இயக்கத் தலைவரின் வாரிசு தினந்தோறும் காவல்நிலையத்தில் கையொப்பம் இடுவதா..... ?  வரலாறு தாங்குமா ?    கோடை விடுமுறையில் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிப்பது என்ற வழமையை மாற்றி, அவர் இனி கையெழுத்து போடவேண்டியதில்லை என்று உத்தரவிட்டேன்.   இப்படி பரோபகாரமா அனைவருக்கும் நீதி பரிபாலனம் வழங்குவதில் எனக்கு நிகர் யாருமே கிடையாது.

கோடை விடுமுறையில் மட்டுமே எனக்கு ஜாமீன் வழங்கும் பொறுப்புகளை வழங்கினார்கள்.   குறிப்பாக முன்னாள் தலைமை நீதிபதி அகர்வால் இருக்கையில், எனக்கு கோடை விடுமுறை நீதிமன்ற பணி கூட வழங்கப்படவில்லை.  நேரடியா அவர் அறைக்குச் சென்றேன்.   நான் தலித் என்பதால் எனக்கு நல்ல பொறுப்பு வழங்காமல் தடுக்கிறீர்களா ? நீங்கள் ஒரு தலித் விரோதி என்று நேரடியாக குற்றம் சாட்டினேன். வழக்கமாக எல்லா தலைமை நீதிபதிகளும் இப்படி குற்றம் சாட்டினால் உடனடியாக பயந்து கொள்வார்கள், ஆனால் அகர்வாலோ கடைசி வரை அசைந்து கொடுக்கவில்லை.  

நேரடியாக அனைத்து நீதிபதிகளுக்கும் கடிதமே எழுதினேன்.  நான் ஒரு தலித் என்பதால் எனக்கு நல்ல பொறுப்புகள் ஒதுக்கப்படுவதில்லை.  குறிப்பாக வருமானம் வரும் பொறுப்புகள்.   தலித் அல்லாத நீதிபதிகள் சம்பாதிக்கையில் நான் மட்டும் இளிச்சவாயனா ?  பத்திரிக்கையாளர்களை அழைத்தேன்.  அவர்களிடம் என் புகார் மனுவின் நகலை அளித்தேன்.  ஆனால் அகர்வால் அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. அவர் கிளம்பும் வரை பொறுமையாக காத்திருந்தேன்.

தனது பிரிவு உபச்சார விழாவில், எனது இத்தனை ஆண்டுகால பணியில், என்னை நீதிபதி கர்ணன் போல அவமானப்படுத்தியது ஒருவர் கூட கிடையாது என்று மனம் நொந்து பேசினார் அகர்வால் என்றால் என் பெருமை என்னவென்பதை புரிந்து கொள்ளுங்கள்.  அகர்வாலின் பிரிவுரை

அதற்குப் பிறகுதான் சதீஷ் அக்னிஹோத்ரி, பொறுப்பு தலைமை நீதிபதியாக வந்தார். நேரடியாக அவரை சென்று சந்தித்தேன்.   எனது தலித் பின்புலத்தையும், நான் தனி ஆள் அல்ல.... என் பின்னாடி ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது என்பதையும் சொன்னேன்.   பயந்து போனார் அக்னிஹோத்ரி.  கோடை விடுமுறை நீதிபதியாக என்னையே நியமித்தார்.   ஜாமீன்களை வாரி வாரி வழங்கினேன்.    கார் இறக்குமதி செய்த வழக்கில், ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வெங்கடாச்சலத்தை கைது செய்தார்கள்.   பதறினேன்.... துடித்தேன்....  சிபிஐ வழக்கறிஞரைப் பார்த்து நான் கேட்ட கேள்வியில் அவர் ஆடிப்போய் விட்டார்.   "ஒரு கப்பலில் கார் இறக்குமதி செய்யப்பட்டால், அதற்காக கப்பல் கேப்டனையா கைது செய்வீர்கள் ?" என்று கேட்டேன்.   அவரால் பதிலே சொல்ல முடியவில்லை. திணறிப் போனார்.   நான் பதில் மனு தாக்கல் செய்கிறேன் என்று சொன்னார்.   நீ என்ன பதில் மனு தாக்கல் செய்வது.  நான் இப்போதே ஜாமீனில் விடுகிறேன் என்று, விடுதலை செய்தேன்.  

பல வருடங்களாக தேடப்பட்டுக் கொண்டிருந்த கார் கடத்தல் மன்னன் அலெக்ஸ் ஜோஸப்பை சிபிஐ மிகுந்த சிரமப்பட்டு கண்டுபிடித்தது.  வெளிநாட்டுக் கார் வாங்குவதில் உள்ள சிரமங்களை புரிந்த அலெக்ஸ், சுலபமாக வெளிநாட்டுக் கார்களை கள்ளத்தனமாக இறக்குமதி செய்து, நம் நாட்டில் உள்ள செல்வந்தர்களுக்கு பெரும் சேவையாற்றிக் கொண்டிருந்தார்.  அவரைப் போய் சிபிஐ கைது செய்து வைத்திருந்தது எத்தனை வேதனைக்குரிய விஷயம்.   உடனடியாக அலெக்ஸ் ஜோசப்பை விடுதலை செய்தேன். 

அதற்குப் பிறகு, பொறுப்பு நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரியை மிரட்டி, இருப்பதிலேயே வளமான துறையான கனிம வளம் தொடர்பான வழக்குகளை பார்ககும் பொறுப்பு வழங்குமாறு செய்தேன்.  மூன்று மாதங்கள் அம்மா.   வளமையாக இருந்தது.   இத்தனை நாள் கிடைக்காத அத்தனை வளங்களும், வளங்கள் என்றால் புதிய வழக்குகள்  கிடைத்தன.  அனைத்தையும் விசாரித்து நல்ல முறையில் நீதி பரிபாலனம் செய்தேன்.  எனது பொறுப்பு முடியும் நேரத்தில்தான், வைகுண்டராஜன் வழக்கு வந்தது.   இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் கோடி கோடியாக அந்நியச் செலாவனியை பெற்றுத் தரும் ஒரு நபரை கார்னெட் அள்ள விடாமல் தடை செய்வது எப்படி நியாயமாகும் ?    அந்த வழக்கில் நியாயம் வழங்கலாம் என்று பார்த்தால் அந்த நேரம் பார்த்து, எனது பொறுப்பு முடிந்து, மற்றொரு நீதிபதியிடம் வழக்கு செல்ல நேர்ந்தது.   விடுவேனா நான் ?  பொறுப்பு மாறினாலும், இந்த வழக்கை நான்தான் விசாரிப்பேன் என்று நானே எடுத்துக் கொண்டேன்.   சவுக்கு தளத்தில், என்னைப் பற்றி மிக மிக கேவலமாக எழுதியிருந்தான் ஒரு அயோக்கியன்.  இதற்கெல்லாம் கவலைப்படுபவனா நான் ?

நானே விசாரித்தேன்.   வழக்கில் இடை மனுதாரராக சேர வேண்டும் என்று ஒரு மனித உரிமை க்ரூப் நுழைந்தது.  மானாங்கானியாக திட்டினேன் அவர்களை.     வைகுண்டராஜன் போன்ற மேட்டுக்குடி மக்களுக்கு எதிராக, மண்டை காய்ந்த பராரிகள் வழக்கு தொடுப்பதா ?   அடுக்குமா ?  

வைகுண்டராஜனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினேன்.  ஆனால் தீர்ப்பு நகல் இன்னும் தயாராகவில்லை.  எனக்கு வழக்கமாக தீர்ப்பு எழுதித்தரும் அந்த ஓய்வு  பெற்ற மாவட்ட நீதிபதிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தீர்ப்பு தாமதமாகிறது.

சில மாதங்களுக்கு முன்னால், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது.    என்னைப் போல ஒரு புரட்சியாளன் அதில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியுமா ?  வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே நேரடியாக அந்த நீதிமன்றத்தினுள் சென்றேன்.  என்னை இந்த வழக்கில் இணைத்துக கொள்கிறேன்.  நான் ஒரு வாக்குமூலம் தாக்கல் செய்யப்போகிறேன் என்று சொன்னேன். நீதிமன்றமே அதிர்ந்து போனது.   நீதித்துறை வரலாற்றில் இப்படி ஒரு நீதிபதி வழக்கு நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று உள்ளே நுழைந்து, என்னையும் வழக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று   கேட்டதுண்டா ? அதுதான் நான்.  அதுதான் இந்த கர்ணன்.  கர்ணணின் மறுபெயர் வரலாறு.   
கடந்த வாரம் கூட, புதிய தலைமை நீதிபதி வருவதற்கு முன்னால், தலைமை நீதிபதியின் செயலாளர் ஹரியை அழைத்தேன்.  மரியாதையாக எனக்கு வேண்டிய துறையை ஒதுக்க வேண்டும் என்று உங்கள் தலைமை நீதிபதியிடம் சொல் என்று திறந்த வெளி நீதிமன்றத்திலேயே சொன்னேன்.   இப்படி உலகத்தில் எந்த ஒரு நீதிபதியாவது பேசிக் கேட்டிருக்கிறீர்களா... அதுதான் கர்ணன்.  அதே நாளன்று, நிர்வாகப் பதிவாளரை அழைத்தேன்.   அவர் நீதிபதியிடம் கிட்டே சென்று பேசலாம் என்று மேடையில் ஏறினார்.  வந்ததே கோபம் எனக்கு.!!!! "எறங்குடா கீழ" என்றேன்.  ஆடிப்போய் விட்டார்.  கீழ எறங்குடா.   நான் உன்னை மேல ஏறச் சொன்னேனா ? நீ பாட்டுக்கு ஏர்ற ?  அறிவு இல்ல உனக்கு.  நீதிபதி மேல மரியாதை இல்ல" என்று அனைவர் முன்னிலையிலும் மிரட்டினேன்.    இவையெல்லாம் என் திறமைக்கு ஒரு சாம்பிள். 

வைகுண்டராஜனுக்கு ஆதரவாக நான் தீர்ப்பளித்ததை எதிர்த்து, மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்தவர்கள், என்னைப் பற்றி இப்படி கேவலமாக சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள்.


இது நீதிமன்றமா?

நீதிபதி கர்ணனின் காட்டுத் தர்பாரா?

பொதுமக்களே, வழக்குரைஞர்களே!

தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு
நீதியை வளைக்கிறார் கர்ணன்.

இதை எதிர்த்து வழக்காடினால் எகிறி குதிக்கிறார்.

எகிறுவதும் குதிப்பதும் எதற்கு தெரியுமா?
வைகுண்டராஜன் முக்கி முக்கி எடுத்த தாதுமணலை
சிந்தாமல் சிதறாமல் நாடு கடத்துவதற்கு
அனுமதி வழங்கவே!

இப்பொழுது புரிகிறதா?

எலி ஏன் அம்மணமாய் ஓடுகிறதென்று?
கடலோர மக்களின் உயிரை மயிராய் மதிக்கும்
தேசத்தின் வளத்தை சூறையாடும்
மக்கள் விரோத, தேசத்துரோக வைகுண்டராஜனுக்கு
துணை போகும் நீதிபதி கர்ணனின் நாட்டாமைத்தனத்தை முறியடிப்போம்!


இதற்கெல்லாம் அஞ்சுபவனா நான் ?   இந்த வழக்கில் ஆஜரான சங்கரசுப்பு அன்று என் நீதிமன்றத்துக்கு வந்தார்.  கேட்டேனே அவரைப் பார்த்து ஒரு கேள்வி.   "என்ன நினைச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல.  எலி அம்மணமா ஓடுதா.  உன்னை ஜெயிலுக்கு அனுப்பி களி திங்க வைக்கிறேன்" பாரு என்று வெளிப்படையாக மிரட்டினேன்.

இது போல என்னுடைய புகழை நாள் முழுக்க சொல்லிக் கொண்டே போகலாம்.   சவுக்கு போன்ற சில தலித் விரோதிகள் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக எழுதுவார்கள், பேசுவார்கள்.   ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு, 23வது இடத்தில் இருக்கும் எனக்கும், தலைமை நீதிபதிக்கு உண்டான சலுகைகளை வழங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு
நீதிநாயகன்
சி.எஸ்.கர்ணன்.



சவுக்கு