Flash News

Saturday, February 27, 2010

பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா



ஏறக்குறைய அனைத்து தலைப்புகளிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தி முடித்து விட்டதால் இப்பொழுது கருணாநிதியை எதற்காக பாராட்டுவது என்று “கருணாநிதியை பாராட்டும் துறையின்“ அமைச்சர் ஜெகதரட்சகனும், துணை அமைச்சர் துரை முருகனும் உட்கார்ந்து யோசிக்கின்றனர்.




திடீரென்று அவர்களுக்கு தோன்றிய யோசனை, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த டெண்டுல்கரை பாராட்டிய கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன என்று யோசனை செய்ததும், அருமையான ஒரு யோசனையாக தோன்ற, உடனடியாக விழா ஏற்பாட்டில் இறங்கினர்.

விழாவுக்கு டெண்டுல்கரை அழைப்பது என்று முடிவெடுக்கப் பட்டது. டெண்டுல்கரை அழைக்கும் பொறுப்பு வி.சி.குகநாதனிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரில் இருந்த டெண்டுல்கர் வர இயலாது என்று தெரிவித்ததும், சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேயைத் தொடர்பு கொண்டு, டெண்டுல்கரை விழாவுக்கு அழைத்ததும், டெண்டுல்கர் உடனடியாக ஒப்புக் கொண்டார். இனி விழா காட்சிகள்.

விழாவுக்கு, வழக்கமான ஜால்ரா கம்பேனிகளான ரஜினிகாந்த், கமலஹாசன், ஜெகதரட்சகன், துரைமுருகன், வாலி, வைரமுத்து, ஆகியோர் வருகை தந்திருந்தனர். டெண்டுல்கர் ஒன்றுமே புரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.




முதலில் விழாவுக்கு தலைமையேற்று, ஜெகதரட்சகன் பேசினார்.



“திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும் என்பார்கள். அது பொய் வாக்கு. என் தலைவனை பாடப் பாட வாய் மட்டுமல்ல, என் உடலே மணக்கிறது.

எங்கோ தெருவில் ஏழையாய் ஒரு இன்ஜினியரிங் காலேஜும், மெடிக்கல் காலேஜும் நடத்திக் கொண்டிருந்த என்னை இன்று மந்திரியாக்கி அழகு பார்தது என் தலைவன் தான்.
இந்தியாவிலே எங்கேயாவது ஒரு இடத்திலாவது முதலமைச்சரின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறதா ?

ஆனால் என் தலைவனின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறது. இருபதுக்கு இருபது கிரிக்கேட் போட்டி நடைபெறும் நாட்களில் என் தலைவன், சட்டமன்றத்துக்கு செல்வதைக் கூட தவிர்த்து விட்டு டிவி முன்னால் உட்கார்ந்திருப்பார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ?


செம்மொழி மாநாடு நடைபெறும் கொடீசியா அரங்கிலே மாநாட்டு தொடங்கும் முன், அங்கே ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்தி விட்டுத்தான் மாநாட்டை தொடங்க வேண்டும் என்பதை இன்றைய தினத்திலே என் தலைவனிடம் கோரிக்கையாக வைக்கிறேன். அந்த விழாவிலே மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடும் நாட்டிய நங்கைகளை அரங்கத்திலே கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளையில் ஆட அனுமதிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன். “


அடுத்து துரை முருகன். “ அப்போல்லாம், இந்தி எதிர்ப்பு போராட்ட காலம். நானு, தலைவரு எல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துலே கலந்து கிட்டு சிறையிலே இருந்தப்போவே, சிறைக்குள்ளேயே கிரிக்கெட் விளையாடியிருக்கோம் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.



கழகத்தில், இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி போல, கிரிக்கெட் அணியும் ஒன்று உருவாக்க வேண்டும் என்பதை இந்த நேரத்திலே வேண்டுகோளாய் வைக்கிறேன். அந்த கிரிக்கெட் அணிக்கு துணை முதல்வரே தலைமை தாங்க வேண்டும் என்பதையும் வேண்டுகோளாய் வைக்கிறேன்.

தலைவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் இருந்த ஆர்வத்தின் காரணமாகவே, சட்டசபை கலவரத்தில், பட்ஜெட் புத்தகங்கள் அவர் மீது தூக்கி வீசப்பட்ட போதெல்லாம் அருமையாக கேட்ச் பிடித்து தன் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்தாலும் தலைவர் கிரிக்கெட் விளையாட்டில் சூரர்.

ஆனால் கான்வென்ட்டில் படித்த சில திமிர் பிடித்தவர்களுக்கு, கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியுமா ? டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தாலும் என் தலைவரைப் போல இரண்டு மனைவிகள் உண்டா அவருக்கு. என் தலைவரின் சாதனைகளுக்கு முன்னால் டெண்டுல்கரின் இரட்டைச் சதம் ஜுஜுபி என்று சொல்லிக் கொள்கிறேன்.“ (இதைக் கேட்டதும் கருணாநிதி விழுந்து விழுந்து சிரிக்கிறார்.)

அடுத்து வாலிபக் கவிஞர் வாலி.




“ கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு !

நீ நடந்தாலே ஜல்லிக்கட்டு
தேர்தல்ல நீ நடத்துவ மல்லுக்கட்டு

உன் விழாவுக்கு நான் வந்திருக்கேன் மெனக்கெட்டு..
உன்னைப் பார்த்ததும் என் மனசு ஓடுது தறிக்கெட்டு

அரசியல் உனக்கு ஒரு விளையாட்டு
உனக்காக நான் பாடுறேன் தமிழ்ப்பாட்டு

புடவைக்கு மேச்சிங் ஜாக்கெட்டு
உன்னால நிரம்புது என் பாக்கெட்டு

தேர்தல்ல நீ எடுத்த பல விக்கெட்டு
உன்னை எதுத்தவங்க உடைஞ்ச பக்கெட்டு

கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு ! “


அடுத்து வைரக் கவிஞர் வைரமுத்து.




“ டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்த சிவப்புச் சூரியனே
உன்னைக் கண்டு ஓடுவான் கைபர் கணவாய் ஆரியனே

நீ டெண்டுல்கருக்கு தெரிவித்தது வாழ்த்து அல்ல… …
நீ தெரிவிக்காதது எதுவுமே வாழ்த்தும் அல்ல

உன் பெயரைச் சொன்னாலே பிட்ச் அதிரும்
ஸ்டெம்பு எகிரும் மைதானம் நடுநடுங்கும்

எல்லோரும் மேட்ச் ஃபிக்சிங்தான் செய்வார்கள்
நீ மைதானத்தில் உள்ளவர்களுக்கு கவர் கொடுத்து
மைதானத்தையே ஃபிக்ஸ் செய்தாய்.

மொத்தத்தில் நீ ஒரு புலிக்குட்டி
உனக்கு முன்னால் டெண்டுல்கள் ஒரு எலிக்குட்டி

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.




கலைஞர்ஜி இன்னக்கி நீங்க டெண்டுல்கருக்கு வாழ்த்து சொல்லிருக்கீங்க. அதை நான் வரவேற்கிறேன். ஏன்னா நான் உங்களுக்கு வாழ்த்து சொல்றேன். நான் எப்போ வாழ்த்து சொல்வேன், எதுக்கு வாழ்த்து சொல்வேன்னு எனக்கே தெரியாது. ஆனா உங்களுக்கு டெய்லி நூறு வாழ்த்தாவது வரும்.

பாபாஜி கூட இமயமலேல்ல கிரிக்கெட் விளையாடுவார். நான் அடிக்கடி இமயமலேக்கு ஏன் போறேன்னு நெறய பேருக்கு தெரியாது. அங்கே கிரிக்கெட் விளையாடத்தான் நான் போறேன். நான் இமயமலைலே கிரிக்கெட் விளையாடும்போது கூட கலைஞர்ஜி எனக்கு போன் போட்டு கேம் எப்படிப் போகுதுன்னு கேட்பார்.

கலைஞர்ஜிக்கு கிரிக்கெட் மேலே இருக்க ஆர்வத்த பாத்து நான் கூட எந்திரன் படத்துல ரோபோ கிரிக்கெட் விளையாடுற மாதிரி ஒரு சீன் வெக்கலாம்னு யோசிச்சுருக்கேன். கிரிக்கெட் கேமே இந்தியாலேர்ந்து போனதுதான். நம்ம வேதத்துலேயும், உபநிஷத்துக்கள்ளேயும், கிரிக்கெட் பத்தி நெறய செய்தி இருக்கு.

கலைஞர்ஜிக்கு ஆண்டவனோட அருள் இருக்கறதாலத்தான் இன்னைக்கு டெண்டுல்கர பாராட்டிருக்கார்.

அடுத்து கமலஹாசன்.




மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள், டெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவித்ததை பாராட்டுவதற்காக இன்று ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழா ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விழா. இந்த விழாவை நாங்கள் எங்கள் பேரப்பிள்ளைகளிடம் ஒரு தமிழன் எப்படி இன்னொரு கிரிக்கெட் வீரனை பாராட்டினான் என்று கூறி பெருமை படத் தக்கதொரு நிகழ்வு.


மராட்டிய மண்ணில் பிறந்த ஒரு வீரனை பாராட்டும் பண்பு கலைஞருக்கு இருக்கிறது. அதற்காக நானும் தமிழன் என்ற முறையில் கர்வம் கொள்கிறேன்.

நான் பராசக்தி படம் பார்த்து தமிழ் கற்றுக் கொண்டேன். அந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். நான் தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டியிருக்கிறேன் என்று. தாண்டியிருக்கிறேன் என்ற சொல்லாடலை கலைஞர் பயன்படுத்தியதே விரைவாக ரன் எடுக்கையில் க்ரீசை தாண்டுவதைத்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?


இந்தத் தமிழனின் பண்பை கண்டு நான் வணங்குகிறேன். கலைஞர் மட்டும் அரசியலுக்கு வராமல் கிரிக்கெட் விளையாடப் போயிருந்தால், 50 ஓவர்கள் மட்டுமல்லாமல், 100 ஓவர்களையும் இவரே விளையாடி 4 சதங்கள் அடித்திருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

கருணாநிதி ஏற்புரை

என் அருமைத் தம்பி துரை முருகன் அவர்களே, அன்பு இளவல் ஜெகதரட்சகன் அவர்களே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே, கலைஞானி கமலஹாசன் அவர்களே, “கிரிக்கெட்டின் கில்லி” டெண்டுல்கர் அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே.

இந்த விழா, இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என்று நான் எதிர்ப்பார்க்கவேயில்லை. நேற்று கூட, அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு, தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை பார்த்து விட்டு இந்த விழா நடக்கும் அரங்கை பார்வையிட வந்தேன். அப்பொழுது, நாளை மாலைக்குள் இந்த வேலைகள் முடிவு பெறுமா என்ற அய்யம் எனக்கு இருந்தது.


ஆனால் தம்பி உடையான், படைக்கு அஞ்சான் என்ற வாக்கிற்கேற்ப என் தம்பிகள் இவ்விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். எனக்கு பாராட்டு விழா என்பதே பிடிக்காது. அந்த நேரத்திலே, வீட்டில் உட்கார்ந்து ”ராணி 6, ராஜா யாரு ? ” அல்லது எனக்கு மிகவும் பிடித்த ”மானாட மயிலாட” பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் இருக்கும் அனைத்து நடனங்களும் இந்த நிகழ்ச்சியிலும் நடைபெறும் என்று என் அன்புத் தம்பிகள் அளித்த வாக்கிற்கிணங்கவே இவ்விழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன்.


எனக்கா இப்படி பாராட்டு ? ஒரு கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக ஒரு பாராட்டு விழாவா என்று சில அறிக்கை வீராங்கனைகள் அறிக்கை வெளியிடக் கூடும். அவ்வாறு அவர்கள் அறிக்கை வெளியிடுவார்களேயானால் அது, நான் தமிழனாக, பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்தேன் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவன்றி வேறு எதற்காக ? ஆனால் அதையெல்லாம் கண்டு துவள மாட்டான் இந்தக் கருணாநிதி.

அறிஞர் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் (மானங்கெட்டவன், சூடு சுரணை இல்லாதவன் என்பதற்கு வேறு வார்த்தைகள்) என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தவுடன் அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அதைக் கண்ட என் அன்புத் தம்பிகள் துரை முருகனும் ஜெகதரட்சகனும் இதற்கு ஒரு விழா எடுக்க வேண்டும் என்றார்கள். நான் வேண்டாம், மக்கள் பணி இருக்கிறது என்று சொன்ன போதும் மிகவும் வற்புறுத்தினார்கள்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கை ஏற்று இவ்விழாவிலே கலந்து கொள்ள சம்மதித்தேன்.

என் தம்பிகள், இவ்விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள அனைத்து வீரர்களையும், அம்பயர்களையும் அழைக்க வேண்டும் என்ற அவாவினை தெரிவித்தனர். அனைவரும் பொறாமைத் தீயில் கனன்று போவார்கள். இந்தத் தமிழனுக்கா இவ்வளவு அங்கீகாரம் என்று சினந்து போவார்கள் என்பதாலேயே தம்பி டெண்டுல்கரை மட்டும் அழைத்தால் போதும் என்று தன்னடக்கத்துடன் தெரிவித்தேன்.

தம்பி விஜய் கில்லி படத்தில் எதிரிகளை துவம்சம் செய்தது போல, தம்பி டெண்டுல்கர், எதிராளிகளின் பந்து வீச்சை துவம்சம் செய்ததாலேயே, அவரை ”கிரிக்கெட் கில்லி” என்று அழைத்தேன்.

அடுத்து, ஹாக்கி விளையாட்டு வீரர்களை பாராட்டலாம் என்று உத்தேசிக்கும் போதே, என் தம்பிகள் அடுத்த விழாவுக்கு தயாராவது எனக்குப் புரிகிறது. என் தம்பிகளின் அன்புக்கு தடை விதிக்க நான் யார் ?

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழா ஹைலைட்.

விழா நாயகன் கருணாநிதிக்கு தங்கத்தாலான பேட்டும், தங்கத்தாலான மூன்று ஸ்டெம்ப்புகளும் வழங்கப் பட்டன.

டெண்டுல்கருக்கு,


சமத்துவபுரத்தில் ஒரு வீட்டு மனையும்,

25 கிலோ 'ஒரு' ரூபாய் அரிசியும்,

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும்,

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர் அட்டையும்

வழங்கப் பட்டது.




பின் குறிப்பு.

கலைஞர் நூறு கோப்புகளில் கையொப்பம் இட்டதை பாராட்டும் விதமாகவும், 100 நாட்கள் தலைமைச் செயலகம் சென்றதை பாராட்டும் விதமாகவும், அடுத்தடுத்து விழாக்கள் நடைபெற உள்ளதால், விழா மேடையை பிரிக்க வேண்டாம் என்று உத்தரவிடப் பட்டது.

சவுக்கு

Wednesday, February 24, 2010

W.R.வரதராஜனை கொலை செய்த சிபிஎம்.



இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.



அது 1991ம் ஆண்டு. மே மாத இறுதி. பதின் பருவ வயதில் இருந்த எங்களுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு காலைக் காட்சி, பகல் காட்சி, இரவுக் காட்சி என்று ஒரு தியேட்டர் விடாமல் சென்று சினிமா பார்ப்பதே வாழ்வின் லட்சியம் என்று சுற்றிக் கொண்டிருந்த காலம்.

எங்களோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்த நண்பர், “ரெண்டு வாரத்துக்கு சினிமாவுக்கு வரமாட்டேன்“ என்று சொன்னார். எங்களக்கெல்லாம் ஆச்சர்யம். “அப்புடி என்னடா பண்ணப் போற ? “ என்று கேட்டதற்கு “W.R க்கு எலெக்ஷன் வொர்க் பண்ணப் போறேன்“ என்றார். அப்போதெல்லாம் மார்க்சியம், கம்யூனிசம் என்பதெல்லாம் பரிச்சயம் இல்லாத காலம். “எவ்ளோடா துட்டு குடுப்பாங்க“ என்று கேட்டதற்கு நண்பர் அளித்த பதில் இன்னும் ஆச்சர்யம். “துட்டு எல்லாம் கொடுக்க மாட்டாங்க. நம்மதான் செலவு பண்ணணும்“ என்றார்.


W.R என்ற அந்தப் பெயரே பிடிக்கவில்லை எனக்கு. உச்சரிக்க கஷ்டமாக இருப்பது போலத் தோன்றியது. தமிழில் இன்னும் மோசம். உ.ரா.வரதராஜன். என்னடா பேரு இது என்று நாங்கள் அந்த நண்பரை கிண்டல் செய்வோம்.

சில வருடங்களில் மார்க்சியம் எல்லாம் பரிச்சயமாகி W.R கூட்டங்களுக்கெல்லாம் சென்ற பிறகு, W.R என்ற அந்த இரண்டு எழுத்துக்களை உச்சரிக்கையில் தேனாக இனித்தது.

1994ம் ஆண்டு என்று ஞாபகம். தி.நகர் பனகல் பூங்காவில் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சை W.R வரதராஜன் மொழிபெயர்த்தார். அப்படி ஒரு மொழி பெயர்ப்பை நான் இன்று வரை கண்டதில்லை.

சுர்ஜித், எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கிறாரோ தமிழ் மொழி பெயர்ப்பிலும் அதே இடத்தில் அழுத்தம் கொடுப்பார் வரதராஜன். நானும், ஏதாவது ஒரு வார்த்தையையாவது இந்த ஆள் மொழி பெயர்ப்பில் கோட்டை விடுகிறாரா பார்ப்போம் என்று உன்னிப்பாக கவனித்தேன்.

ஆனால், 1 சதவிகிதம் கூட தவறு நேராமல், மொழி பெயர்ப்பில் சிறிது கூட பிசிறு இல்லாமல், ஏற்ற இறக்கங்களோடு செய்யப் பட்ட வரதராஜனின் மொழி பெயர்ப்பு, சுர்ஜித் உரையை விட கூட்டத்தை எழுச்சி கொள்ளச் செய்தது.

சமீபத்தில் இந்திய அமேரிக்காவோடு செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக, ஒரு பத்திரிக்கையாளர் “இது என்ன சார், எனக்கு புரியலை“ என்று கேட்டார். 20 நிமிடம், குழந்தைக்கு விளக்குவது போல விளக்கி எளிமையாக புரிய வைத்தார் என்று அந்தப் பத்திரிக்கையாளர் சிலாகிக்கிறார்.

W.R வரதராஜன் வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். முற்போக்கான மனம் படைத்த வரதராஜன், சொல் வேறு செயல் வேறாக இல்லாமல், விவாகரத்து பெற்ற தலித் பெண்மணியை மணந்தார்.

ரிசர்வ் வங்கியில் அதிகாரியாக இருந்த வரதராஜன் 1984ம் ஆண்டு வங்கிப் பணியை துறந்து சிபிஎம்மின் முழு நேர ஊழியரானார்.


W.R வரதராஜனின் ஆற்றல் பன்முகத் தன்மை வாய்ந்தது. கணிதத்தில் நிபுணர். அவர் தொழிலே சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். சிறந்த பொருளாதார நிபுணர். பட்ஜெட்டை அலசுவதில் அசாத்திய திறமை படைத்தவர். எழுத்தாளர். பேச்சாளர். சுருக்கமாக சொல்லப் போனால், சிபிஎம் கட்சியின் மிக முக்கிய தூணாக விளங்கியவர்.

ஆனால் அதுவே வரதராஜனுக்கு வினையாக முடிந்ததுதான் காலத்தின் கோலம். பொய்யும், புரட்டும், சூதும், சுயநலமும் பல்கிப் பெருகி, பணம் கொடுத்தால்தான் வாக்களிப்பேன் என்ற நிலைக்கு மக்களே மாறிப்போன இச்சூழலில் சிபிஎம் கட்சி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ?

வரதராஜன் மத்தியக் குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டதிலிருந்தே சிபிஎம்மின் தமிழ்நாட்டு தலைவர்களுக்கு பொறாமை கனன்றது. நம்பள்ளாம் இருக்கும் போது இவன் எப்படி மத்தியக் குழு உறுப்பினராகலாம் என்ற பொறாமை பெரும்பாலான தலைவர்களை பிடித்து ஆட்டியது. சிஐடியு பொதுச் செயலாளராக வேண்டும் என்று விருப்பப் பட்ட வரதராஜனின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டது, சிபிஎம்மின் கொல்கத்தா லாபி.

சிஐடியு எங்களுக்குத் தான் சொந்தம், தென்னிந்தியர் சிஐடியு பொதுச் செயலாளர் ஆவதை விடமாட்டோம் என்று கங்கணம் கட்டினர். பிறகு சிஐடியு பொதுச் செயலாளர் எம்.கே.பாந்தேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பினார்.


தமிழக சிபிஎம்மில், பி.ராமமூர்த்தி, சங்கரைய்யா, நல்லசிவன், வி.பி.சிந்தன் போன்ற, மக்களிடமும், தொண்டர்களிடமும் அசாத்திய செல்வாக்கு படைத்த தலைவர் இன்று ஒருவர் கூட இல்லை. இப்போதைய தமிழ் மாநிலக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவர் என்.வரதராஜன் உட்பட தமிழ் மாநில நிர்வாகிகள் அனைவருமே தொண்டர்கள் செல்வாக்கை பெற்றதேயில்லை.

இன்றைய சிபிஎம்மின் தமிழ் மாநிலக் குழு நிர்வாகிகள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் போல செயல்படுபவர்கள்.

தமிழகம் திரும்பிய வரதராஜன் மீண்டும் தனது வழக்கமான பணிகளைத் தொடர்ந்தார். எழுதத் தொடங்கினார். கூட்டங்களில் பேசத் தொடங்கினார். தொண்டர்களை சந்திக்கத் தொடங்கினார். வரதராஜனின் இந்த நடவடிக்கைகள் தமிழ் மாநிலக்குழு நிர்வாகிகளை மிகுந்த எரிச்சல் அடையச் செய்தது.

இன்று சிபிஎம் தமிழ் மாநிலக் குழுவில் இருக்கும் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் கோஷ்டிகள் இரண்டுக்குமே வரதராஜன் என்றால் வேப்பங்காய். தங்களின் பதவிக்கு வரதராஜனை அச்சுறுத்தலாகவே இந்த இரண்டு கோஷ்டிகளும் பார்த்தது. வரதராஜன் மீது ஒரு புகார் என்றதும் தங்கள் வேறுபாடுகளை மறந்து இந்த இரண்டு கோஷ்டிகளும் வரதராஜனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று புறப்பட்டன.

ஜனநாயக மாதர் சங்கம் என்ற போர்வையில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி பல குடும்பங்களை சீரழித்த உ.வாசுகி தலைமையில் வரதராஜனுக்கு எதிரான சதி தொடங்கியது. வரதராஜனின் மனைவி சரஸ்வதியை வைத்து வரதராஜன் மீது ஒரு பொய்யான பாலியல் குற்றச் சாட்டை கட்சியிடம் புகாராக கொடுக்க வைத்தனர்.

புகார் வந்ததும் உடனடியாக ஒரு ஒழுங்கு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி, “தேர்ந்தெடுக்கப் பட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் வரதராஜன் நீக்கப் பட்டார்“ என்று முடிவெடுத்து, அனைத்து கட்சிக் குழுக்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. கட்சித் தொண்டர்களிடையே எதற்காக நீக்கப் பட்டார், என்ன காரணம் என்று எந்த விளக்கமும் அளிக்கப் படவில்லை. இந்த நீக்கம் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


முதலாளிகளோடு பேரம் பேசி, தொழிலாளியின் வயிற்றில் அடித்தவர்களெல்லாம் இன்று சிபிஎம்மில் நல்ல பதவிகளில் இருக்கையில், பொய்யான ஒரு பாலியல் குற்றச் சாட்டின் அடிப்படையில் வரதராஜனை நீக்கியதற்கு சிபிஎம்மின் தமிழ் மாநிலக்குழு நிர்வாகிகளில் அகங்காரமும் பொறாமையையும் தவிர்த்து வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?

ஏறக்குறைய 10 ஆண்டுகளாகவே, மனைவியோடு பிணக்கில் இருந்து வந்ததால், வரதராஜனுக்கு மனைவி சரஸ்வதியின் நடவடிக்கைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், தான் பெரிதும் நேசித்த கட்சி தன்னை இப்படி அவமானப் படுத்தியதைத் தான் அவரால் தாங்க முடியவில்லை.

தோழர் வரதராஜனின் முடிவில் எமக்கு உடன்பாடு இல்லை யெனினும்

மயிர் நீப்பின் வாழக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்

என்ற குறள் போலவே இம்முடிவை எடுத்துள்ளார்.

தோழர் வரதராஜனை கொலை செய்து விட்டு, அவரது இறுதி ஊர்வலத்திலும் வெட்கமில்லாமல் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்களால் தூக்கி எறியப் படும் நாள் வெகு தொலைவில் இல்லை. தோழரின் மரணத்துக்கு காரணமான துரோகிகள் இக்கொலைக்கான தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்கள். இதுவும் காலத்தின் கட்டாயமே.



சவுக்கு

Sunday, February 7, 2010

செங்கல்பட்டு முகாமில் நடந்தது என்ன ? கண்ணீர் வாக்குமூலம்

கடிதத்தை பெரிதாக்க க்ளிக் செய்யவும்


முதல் பக்கம்



இரண்டாம் பக்கம்



மூன்றாம் பக்கம்



நான்காம் பக்கம்



ஐந்தாம் பக்கம்



ஆறாம் பக்கம்




ஏழாம் பக்கம்


படித்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கு அருள் கூர்ந்து அனுப்புங்கள். கருணாநிதியின் முகத்திரையை கிழியுங்கள்

சவுக்கு

Friday, February 5, 2010

சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்




டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 18 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி 7 வருடம் முடித்தவர்களை விடுதலை செய்துள்ளதால், தன்னையும் முன் விடுதலைக்கு பரிசீலிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.




இம்மனுவை எதிர்த்து டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவிற்கெதிராக தானே நேரில் ஆஜராகி வாதாட வேண்டும் என்று நளினி தாக்கல் செய்திருந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில், அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி நளினி முன் விடுதலை தொடர்பாக அமைக்கப் பட்ட ஆலோசனைக் குழுவின் அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை. அது வந்தாலும், தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க இயலாது, மத்திய அரசோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

(2ம் தேதியே, வேலூரில் உள்ள ஆலோசனைக் குழு தன் முடிவை அரசிடம் அளித்து விட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.)




இதையடுத்து டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி, நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று தெரிவித்தார்.

திடீரென்று கோபமடைந்த நீதிபதி எலிப்பி தர்மா ராவ், டாக்டர்.சுவாமி வழக்கறிஞரைப் பார்த்து "நீங்கள் சுப்ரமணிய சுவாமிக்காக ஆஜராகி வாதாடுகிறீர்கள், ஆனால், சுப்ரமணியன் சுவாமி, ஊடகங்களில் வாதாடிக் கொண்டிருக்கிறாரே.. ! நீதிமன்ற விசாரணையில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கையில் இவ்வாறு ஊடகங்களில் விவாதிக்கக் கூடாது என்பது உங்கள் கட்சிக் காரருக்குத் தெரியாதா ?

நளினி நேரில் ஆஜராகக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார். இதைச் சொல்ல இவர் யார் ? இதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியும் தெரியுமா ?

நாங்கள் இந்த விஷயத்தை சீரியசாக எடுத்துக் கொள்கிறோம். சுப்ரமணியன் சுவாமி, சட்டம் படித்தவர், ஒரு முனைவர் பட்டம் பெற்றவர், ஒரு அரசியல் கட்சித் தலைவர். இதுதான் அவர் நீதிமன்றத்துக்கு காட்டும் மரியாதையா ?

இந்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை அவர் ஏற்கனவே, ஊடகங்களில் முடிவு செய்து விட்டது போலப் பேசியிருக்கிறாரே ?

இன்று செய்தித் தாள் பார்த்தீர்களா " என்று கேட்டனர். அதற்கு சுவாமி வழக்கறிஞர், பார்க்கவில்லை என்று கூறினார். " என்ன கவுன்செல், செய்தித்தாள் படிக்காமல் எப்படி தேநீர் அருந்துகிறீர்கள்" என்று கூறிய நீதிபதி, இது போன்ற நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து டாக்டர்.சுவாமியின் வழக்கறிஞர், சுவாமி சார்பில், தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், இது போன்ற தவறுகள் இனி நடக்காது என்றும் கூறினர்.

இதையடுத்து நீதிபதிகள், நளினி நேரில் ஆஜராகலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வழக்கை வரும் புதன் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.


சவுக்கு

Thursday, February 4, 2010

செங்கல்பட்டில் தமிழீழ அகதிகளை தாக்கிய காட்டுமிராண்டி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்



செங்கல்பட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாமில், கருணாநிதியின் கைக்கூலி காவல்துறையால் நடத்தப் பட்ட கொடிய தாக்குதலைக் கண்டித்து இன்று (04.02.2010) மாலை சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று இதழாளர் அய்யநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், வழக்கறிஞர் பா.புகழேந்தி, தமிழ் நியூஸ் ஆசிரியர் TSS மணி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

எழுச்சியோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வெகு விரைவாக, துரித காலத்திற்குள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்து சிறப்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய இதழாளர் அய்யநாதன் அவர்களுக்கு என்றென்றும் எங்கள் நன்றி உரியது.

ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப் பட்ட ஒளிப்படங்கள்




































சவுக்கு



செங்கல்பட்டு அகதிகள் முகாம் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்



03.02.2009 அன்று இரவு செங்கல்பட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாமில் நடந்த காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 04.02.2010 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை மெமோரியல் ஹால் அருகே நடைபெற இருக்கிறது.

கண்டன உரை ஆற்ற இருப்பவர்கள்


விடுதலை ராசேந்திரன்
இதழாளர் அய்யநாதன்
மல்லை சத்யா
வேளச்சேரி மணிமாறன்
வழக்கறிஞர் பா.புகழேந்தி
TSS மணி



கருணாநிதியின் காட்டுமிராண்டி ஆட்சியை கண்டிக்க அனைவரும் பெருந்திரளாக வருகை தர வேண்டுகிறோம்.



சவுக்கு

Wednesday, February 3, 2010

ஈழத் தமிழர்களே செத்து ஒழியுங்கள்

ஈழத்திலே சிங்களக் காடையர்கள் தந்த நெருக்கடிக்கும், குண்டு வீச்சுக்கும் அஞ்சி, தாய்த் தமிழகம் நம்மை வாரி அணைத்துக் கொள்ளும், வாஞ்சையோடு ஏந்திக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் எம் மண்ணில் கால் வைத்த ஈழத் தமிழர்களே ! இங்கேயும் ராஜபக்ஷே ஆட்சிதான் நடக்கிறதோ என்ற எண்ணத்தை உங்களுக்கு ஏற்படுத்தியதற்காக வெட்கித் தலை குனிகிறோம்.

தமிழுக்கு விழா எடுத்து, தமிழனை காவல்துறையை விட்டு அடித்து நொறுக்கும் கயவனின் ஆட்சியல்லவா நடக்கிறது இங்கே ? எத்தனை அராஜகங்கள் ? எத்தனை அட்டூழியங்கள் ? எத்தனை பேருக்கு மண்டை உடைப்பு ?

காவல்துறை இருக்கும் தைரியத்தில் தன் குடும்பம் மட்டும் வாழ்ந்தால் போதும், ஊரான் வீட்டில் இழவு விழுந்தால் எனக்கென்ன என்ற இறுமாப்போடு இருக்கும் நபர்கள் இருக்கும் வரையில் உங்களை வாருங்கள் என்று வரவேற்க வழியில்லாமல் இருக்கிறோம்.

செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற ஒன்றை கட்டி, அதற்குள் கைதிகளை அடைப்பது போல அடைத்து வைத்து, 24 மணி நேரமும் காவல்துறையின் கடும் கண்காணிப்பில் இலங்கைத் தமிழரை அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தால் அவ்வளவு பெரிய தவறா ?

பெரிய தவறென்றே கருணாநிதி கருதுகிறார். அதனால்தான் காவல்துறையினரை விட்டு செங்கல்பட்டு முகாமுக்குள் இருந்த 38 அகதிகளின் மீது கண்மூடித்தனமான, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார்.

இரவு 9 மணிக்குத் தொடங்கிய தாக்குதல் விடியற்காலை 2 மணி வரை தொடர்ந்துள்ளது. மனிதர்களின் மீதான தாக்குதலைத் தவிர்த்து முகாம்வாசிகள் வைத்திருந்த அரிசி பருப்பு, மளிகைப் பொருட்களையும் நாசம் செய்திருக்கின்றனர் காவல்துறையினர்.

கருணாநிதியின் காவல் துறையினர் ஆயிற்றே ?

அதை நிரூபிக்க வேண்டாம் ?

ஈழத் தமிழருக்காக போராடிய வழக்கறிஞர்களை தாக்கியதோடல்லாமல், அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய காவல்துறை அல்லவா இது ? இத்தாக்குதலை காஞ்சிபுரம் எஸ்பி ப்ரேம் ஆனந்த் சின்கா முன்னின்று நடத்தியுள்ளார்.


தாக்குதல் முடிந்ததும், அவர்கள் அனைவரையும் வேனில் ஏற்றி செங்கல்பட்டிலிருந்து வேலூரில் உள்ள சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு ஊழியரை தாக்கியது, அரசு ஊழியரை தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்தியது போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளனர். முகாம் வாசிகள் வைத்திருந்த செல்போன்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.


முகாம் வாசிகள் அனைவரும் உடல் முழுவதும் தடியடிக் காயங்களோடு இருக்கின்றனர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகமாம் இது. வெட்கம்.

தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதி தமிழர்களை எப்படி நடத்துகிறார் பார்த்தீர்களா ?


புலம் பெயர்ந்த தமிழர்களே !

ஈழத் தமிழர்கள் அனைவரும் செத்து ஒழிய வேண்டும், தன் குடும்பம் மட்டுமே தழைத்தோங்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார்.

கருணாநிதியின் துரோகத்தை அடையாளம் காட்டுங்கள். செம்மொழி மாநாட்டை புறக்கணியுங்கள். உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு அறைகூவல் விடுங்கள். கருணாநிதியின் காலை நக்கிப் பிழைக்கும் பிச்சைக் காரர்கள் மட்டும் மாநாட்டுக்கு வருகை தரட்டும். சுயமரியாதை உணர்வுள்ள அனைவரும் மாநாட்டை புறக்கணியுங்கள்.


நாளை (04.02.2010) மாலை 4 மணிக்கு, சென்னை மெமோரியல் ஹால் அருகே, செங்கல்பட்டு முகாம் அகதிகள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து பத்திரிக்கையாளர் அய்யநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இச்செய்தியை சென்னையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள்.

அனைவரையும் வரச் சொல்லுங்கள். நமது கண்டனத்தை ஒன்றுபட்டு தெரிவிப்போம்.

சவுக்கு