என்னடா இது ? நம்மதானே காசு குடுத்து சினிமா பாக்கணும். திருட்டு டிவிடியிலே பாக்கறதுன்னா கூட, நம்மதானே காசு செலவு பண்ணணும்.
சினிமா பாக்க 1200 ரூபாய் எவன் தருவான் ? ஒரு வேளை “சவுக்கு“ தளத்தில் இருக்கும் ஆட்கள் லூசாயிட்டாங்களா ? என்று ஆச்சர்யமாக இருக்குமே ?
பொய் அல்ல நண்பர்களே. உண்மை. தமிழ் சினிமா பார்த்தால் 1200 ரூபாய் கண்டிப்பாக வழங்கப் படும். “சவுக்கு“ தளத்தால் அல்ல.
தமிழ்நாடு அரசால். “மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்கப் படும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும் ?
பெரிய கஷ்டம் இல்லை. தமிழக அரசு அமைக்கும் திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக்குழுவில் உறுப்பினராக வேண்டும். அவ்வளவுதான். அதிக கஷ்டம் இல்லை. உறுப்பினர் ஆகி விட்டால், ஒரு திரைப்படம் பார்க்க ரூ.1000/- மற்றும் போக்குவரத்துப் படியாக ரூ.200/-ம் வழங்கப் படும்.
2007 மற்றும் 2008 ஆண்டுகளுக்கான விருதுகள் தேர்ந்தெடுக்கப் பட்டு வழங்கப் பட்டும் விட்டன. அதனால் 2009 ஆண்டுக்கான திரைப்படங்களை தேர்ந்தெடுக்க விருதுக் குழு அமைக்கப் படும் முன் முந்துங்கள் வாசகர்களே. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இடம் கிடைக்கும்.
இல்லையென்றால் பழைய தேர்வுக் குழுவையே 2009 ஆண்டுக்கான திரைப்படங்களையும் தேர்வு செய்ய அரசு பணிக்கலாம். ஏனெனில், 2007 மற்றும் 2008 ஆண்டுகளுக்கான தமிழக அரசு விருதுகளை தேர்ந்தெடுத்தது ஒரே குழுதான்.
சரி. இந்த இரண்டு ஆண்டு திரைப்படங்களை பார்த்து ஒரு படத்துக்கு 1200 ரூபாய் சம்பாதித்தவர்கள் யார் என்று பார்க்கலாமா ?
முதலில் வருபவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி.அழகுமலை கருப்பன் செட்டியார் ராஜன் என்ற ஏ.கே.ராஜன். 1976 முதல் 1987 வரை கட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். ஏ.கே.ராஜன் செப்டம்பர் 2000த்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்டார். அதற்கு முன், தமிழக அரசின் சட்டத்துறை செயலாளராகவும், மாவட்ட நீதிபதியாகவும் செயல்பட்டுள்ளார். ஜனவரி 2005ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெற்ற உடனேயே மத்திய அரசின் கடல்சார் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் (Coastal Acquaculture Authority) தலைவராக பொறுப்பேற்றார். சட்டப் பேராசிரிராகவும், நீதிபதியாகவும் இருந்தவருக்கு, விலங்கியல் தொடர்பான ஆணையத்தின் தலைவராக இருக்க என்ன தகுதி இருக்கிறது என்றெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமான கேள்விகளை கேட்கக் கூடாது.
ஏ.கே.ராஜனுக்கு அடுத்த பதவி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்திற்கு ஏற்ற பாடத்திட்டங்களை உருவாக்கும் குழுவின் தலைவர், சட்டம் பயின்றவர் கோவில் பூசாரிக்கான பாடத்திட்டங்களை உருவாக்கும் குழுவின் தலைவர். எப்படி இருக்கிறது ?
ஏ.கே.ராஜன் அலங்கரித்த அடுத்த பதவி, தமிழக அரசு அமைத்த நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் தலைவர். இதற்கு அடுத்தபடியாகத்தான் ஏ.கே.ராஜன் திரைப்பட விருதுக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டார்.
அடுத்த உறுப்பினர் எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் தங்கர் பச்சான்.
திரைப்பட நடிகர் மற்றும் திமுக பிரமுகர் வாகை சந்திரசேகர்.
திரைப்பட நடிகர் மற்றும் நடிகர் கமலகாசனின் அண்ணன் சாருஹாசன்.
திரைப்பட இயக்குநர் மற்றும் கருணாநிதியின் நெருங்கிய உறவினர் இயக்குநர் அமிர்தம்.
திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் மற்றும் கருணாநிதியின் விசிறி அறிவுமதி.
சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் மற்றும் கருணாநிதியின் தீவிர ரசிகர் நடராஜன்
திரைப்பட முன்னாள் இசையமைப்பாளர் “தேனிசைத் தென்றல்“ தேவா.
மற்ற சாதியினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கி விட்டு, என்னதான் பெரியாரியம் பேசினாலும், பார்ப்பரோடு சமரசம் செய்து கொள்ள வேண்டுமல்லவா ? மேலும் ரஜினியோடு உறவு ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும் என்பதால் ஒய்.ஜி.மகேந்திரன்.
“மானாட மயிலாட“ நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து நிகழ்ச்சியின் .ட்டி.ஆர்.பியை கூட்ட உதவி செய்ததற்காக குஷ்பூ.
உலக சினிமா அனைத்தையும் கற்று அறிந்து, தமிழ்த் திரைப்படங்களில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கிய “குமரிமுத்து“.
அடுத்து, சம்பிரதாயமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மற்றும் எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முதல்வர்கள்.
இந்த 13 உறுப்பினர்களுக்கு தலைவர்தான் நீதியரசர் (?????) ஏ.கே.ராஜன். இந்த உறுப்பினர்கள்தான் 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் வெளியான தமிழ்ப் படங்களை தேர்ந்தெடுத்தார்கள்.
2007ல் வெளியான மொத்த தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை 111, 2008ல் வெளியான மொத்த தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை 118. சராசரியாக ஓரு ஆண்டுக்கு 110 படங்கள் என்று வைத்துக் கொண்டாலும் இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து 220 படங்கள். 220
படங்களை பார்க்க 13 உறுப்பினர்களுக்கும் வழங்கப் பட்டிருக்கக் கூடிய தொகை 34,32,000 ரூபாய்கள்.
இவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள இந்தத் தொகை போக இந்தத் தேர்வுக் குழுவின் நிர்வாகச் செலவுகள் என்று சில லட்சங்களை எட்டும்.
விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ள படங்களுக்கும் இயக்குநர்களுக்கும் முதல் பரிசு ரூபாய் 2 லட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 லட்சம், மூன்றாம் பரிசு 75,000 மற்றும் சிறப்பு பரிசு 75,000.
இந்த விருது பெறக் கூடிய படங்கள் இவ்விருதுகளுக்குத் தகுதியானவைதானா என்பதை விருது பெற்ற பட்டியிலில் இருந்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்-2007
சிறந்த படம் - முதல் பரிசு சிவாஜி
சிறந்த படம் - இரண்டாம் பரிசு மொழி
சிறந்த படம் - மூன்றாம் பரிசு பள்ளிக்கூடம்
சிறந்த படம் - சிறப்பு பரிசு பெரியார்
பெண்களைப் பற்றி உயர்வாக
சித்தரிக்கும் படம் - சிறப்புப் பரிசு
மிருகம்
அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப்
பிரதிபலிக்கின்ற படம்- முதல் பரிசு
தூவானம்
சிறந்த நடிகர் ரஜினிகாந்த் (சிவாஜி)
சிறந்த நடிகை ஜோதிகா (மொழி)
சிறந்த நடிகர் - (சிறப்புப் பரிசு) சத்யராஜ் (பெரியார்)
சிறந்த நடிகை - (சிறப்புப் பரிசு) பத்மப்பிரியா (மிருகம்)
சிறந்த வில்லன் நடிகர் சுமன் (சிவாஜி)
சிறந்த நகைச்சுவை நடிகர் விவேக் (சிவாஜி)
சிறந்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)
சிறந்த குணச்சித்திர நடிகை அர்ச்சனா (ஒன்பது ரூபாடீநு நோட்டு)
சிறந்த இயக்குநர் தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்)
சிறந்த கதையாசிரியர் எஸ்.எம்.வசந்த் (சத்தம் போடாதே)
சிறந்த உரையாடல் ஆசிரியர் பாலாஜி சக்திவேல் (கல்லூரி)
சிறந்த இசையமைப்பாளர் வித்யாசாகர் (மொழி)
சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து (பெரியார் மற்றும் பல
படங்கள்)
சிறந்த பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)
சிறந்த பின்னணிப் பாடகி சின்மயி (சிவாஜி)
சிறந்த ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா (பில்லா)
சிறந்த ஒலிப்பதிவாளர் யு.கே.அய்யப்பன் (பில்லா)
சிறந்த திரைப்பட தொகுப்பாளர் சதீஷ் குரோசோவா
(சத்தம் போடாதே)
சிறந்த கலை இயக்குநர் தோட்டா தரணி (சிவாஜி)
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு
(கருப்பசாமி குத்தகைதாரர்)
சிறந்த நடன ஆசிரியர் பிருந்தா (தீபாவளி)
சிறந்த ஒப்பனைக் கலைஞர் ராஜேந்திரன் (பெரியார்)
சிறந்த தையற் கலைஞர் அனுவர்தன் (பில்லா)
சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)
கே.பி.சேகர் (மலரினும் மெல்லிய)
சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்
(பெண்)
மகாலட்சுமி கண்ணன் (மிருகம்)
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்-2008
சிறந்த படம் - முதல் பரிசு தசாவதாரம்
சிறந்த படம் - இரண்டாம் பரிசு அபியும் நானும்
சிறந்த படம் - மூன்றாம் பரிசு சந்தோஷ் சுப்பிரமணியம்
சிறந்த படம் - சிறப்பு பரிசு மெய்ப்பொருள்
பெண்களைப் பற்றி உயர்வாக
சித்தரிக்கும் படம் - சிறப்புப் பரிசு பூ
அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப்
பிரதிபலிக்கின்ற படம்- முதல் பரிசு
வல்லமை தாராயோ
அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப்
பிரதிபலிக்கின்ற படம்- இரண்டாம் பரிசு
வண்ணத்துப் பூச்சி
சிறந்த நடிகர் கமல்ஹாசன் (தசாவதாரம்)
சிறந்த நடிகை சிநேகா (பிரிவோம் சந்திப்போம்)
சிறந்த நடிகர் - (சிறப்புப் பரிசு) சூர்யா (வாரணம் ஆயிரம்)
சிறந்த நடிகை - (சிறப்புப் பரிசு) த்ரிஷா (அபியும் நானும்)
சிறந்த வில்லன் நடிகர் ராஜேந்திரன் (நான் கடவுள்)
சிறந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு (காத்தவராயன்)
சிறந்த நகைச்சுவை நடிகை கோவை சரளா (உளியின் ஓசை)
சிறந்த குணச்சித்திர நடிகர் பிரகாஷ் ராஜ் (பல படங்கள்)
சிறந்த குணச்சித்திர நடிகை பூஜா (நான் கடவுள்)
சிறந்த இயக்குநர் ராதா மோகன் (நான் கடவுள்)
சிறந்த கதையாசிரியர் தமிழ்ச்செல்வன் (பூ)
சிறந்த உரையாடல் ஆசிரியர்
கலைஞர் மு.கருணாநிதி (உளியின் ஓசை)
சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா (அஜந்தா)
சிறந்த பாடலாசிரியர் வாலி (தசாவதாரம்)
சிறந்த பின்னணிப் பாடகர் பெள்ளிராஜ் (சுப்பிரமணியபுரம்)
சிறந்த பின்னணிப் பாடகி மஹதி (நெஞ்சத்தை கிள்ளாதே)
சிறந்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)
சிறந்த ஒலிப்பதிவாளர் ரவி (வாரணம் ஆயிரம்)
சிறந்த திரைப்பட தொகுப்பாளர் ப்ரவீன்-ஸ்ரீகாந்த் (சரோஜா)
சிறந்த கலை இயக்குநர் ராஜீவன் (வாரணம் ஆயிரம்)
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)
சிறந்த நடன ஆசிரியர் சிவசங்கர் (உளியின் ஓசை)
சிறந்த ஒப்பனைக் கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோர்-
கோதண்டபாணி (தசாவதாரம்)
சிறந்த தையற் கலைஞர் ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப் பூச்சி )
சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)
எம்.ஏ.பிரகாஷ் (கி.மு)
சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)
சவிதா (பல படங்கள்)
மேற்கூறிய விருதுப் பட்டியலை உற்று நோக்கினால் விருது பெற்ற பெரும்பான்மை யானவர்கள், கருணாநிதியின் அடிவருடிகளாகவும், கைத்தடிகளாகவும் இருப்பவர்கள் என்பது தெரியும்.
தமிழ்த் திரைப்பட உலகை விட்டு ஏறக்குறைய ஓரம் கட்டப் பட்டு, விட்ட வைரமுத்துவும் வாலியும் சிறந்த பாடலாசிரியர்களாம். இவர்கள் ஏன் சிறந்த பாடலாசிரியர்கள் என்றால் கருணாநிதியைப் துதிபாடி எப்போது கவியரங்கம் நடத்தினாலும் முதலில் பாடுவது நான்தான் என்று போட்டி போடும் வாலிக்கும் வைரமுத்துவுக்கும் அதற்காகத் தான் விருது.
அடுத்த கூத்தை பார்த்தீர்களென்றால் குழு உறுப்பினராக இருக்கும் தங்கர் பச்சான் சிறந்த இயக்குநராம்.
அடுத்த தமாஷ் கருணாநிதி “சிறந்த உரையாடல் ஆசிரியராம்“. அந்த ஆண்டு வெளியான நான் கடவுள் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்கள் படத்தின் மிகப் பெரிய பலம் என்பதை திரைப்படம் பார்த்த அனைவரும் அறிவார்கள்.
ஆனால் யாருமே பார்க்காத, “உளியின் ஓசை“ படத்துக்கு சிறந்த உரையாடல் விருது.
இப்படி தகுதியே இல்லாமல் மனம் போன போக்கில் இந்த விருதுகள் அள்ளி வீசப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆனால் தகுதி இல்லாத ஒரு நபருக்கு விருது வழங்கப் பட்டுள்ளது என்று கருணாநிதி நேற்று புத்தகக் கண்காட்சியில் புலம்பிய புலம்பல் என்னவென்று பாருங்கள்.
குன்றக்குடி அடிகளார் என்னை பார்க்கும்போதெல்லாம் ஒரு புத்தகம் தருவார். ஒரு தடவை, ‘சென்னை வரலாறு’ என்ற ஒரு புத்தகத்தை கொடுத்தார். அதற்கு கடந்த ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ இங்கு விருது வழங்கப்பட்டுள்ளது. புத்தகத்துக்கு உரியவர் பெற்றுள்ளார். 600 பக்கம் கொண்ட அந்த புத்தகத்தை முழுவதும் படித்தேன்.
அதில், சென்னை கால வரிசை என்ற ஒரு தொகுப்பு உள்ளது. அதில், போர்த்துக்கீசியர், ஆங்கிலேயர் ஆண்ட கால வரிசை கொடுக்கப்பட்டுள்ளது. 1967 ல் திமுக ஆட்சியில் அமர்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது முதல்வரான அண்ணா பெயர் குறிப்பிடவில்லை. 1969ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான் முதல்வரானேன். அது பற்றியும் குறிப்பு இல்லை. 1977ல் என் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வரானார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
1991ல் ஒரு மாதமே முதல்வராக இருந்த ஜானகி அம்மையார் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 1996ல் நான்காவது முறையாக நான் முதல்வர் ஆனேன். அது பற்றி குறிப்பு இல்லை. மாறாக கோயம்பேடு காய்கறி அங்காடி திறக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டு இருந்தது.
1998ல் இந்தியாவிலேயே முதன் முதலாக டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தொடங்கியது யார் என்ற விவரமும் அதில் இல்லை.
எனது பெயர் விடுபடுவதற்கு அப்படி என்ன தவறை கருணாநிதி செய்து விட்டான். தமிழனாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து விட்டான் என்பதை விட, வேறு என்ன தாழ்வு இருக்கிறது. எனவே, விருது வழங்கும்போது 2 அல்லது 3 பேர் உட்கார்ந்து விருதுக்குரிய புத்தகம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். எழுதியவர் யார்? அவர் விருது பெற தகுதியானவர்தானா? என்று எண்ணி பார்க்க வேண்டாமா? அடுத்து வரும் ஆண்டுகளில் இன்னும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை சொல்கிறேன். தமிழகத்தின் நன்மைக்காக இதை கூறுகிறேன். “
என்று புலம்பித் தள்ளியுள்ளார் கருணாநிதி.
தமிழகத்தின் நன்மைக்காக கூறுகிறாராம். தமிழகத்தின் நன்மையா ? கருணாநிதியின் ஈகோவின் நன்மையா ?
கருணாநிதியின் புலம்பலுக்கு காரணம் முத்தையாவின் Madras Rediscovered புத்தகத்தின் பின்னிணைப்பாக ஒரு கால வரிசை இடம்பெற்றிருக்கிறது. அதில் தி.மு.க ஆட்சிக்கு வந்த வருடம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால் கலைஞர் பதவியேற்ற விவரம் இருக்காது. அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்த விவரம் வரும்போது எம்.ஜி.ஆர். முதல்வரான தகவல் இருக்கும். எம்.ஜி.ஆருக்குப் பின்னால் ஜானகி முதல்வரான விவரம் இருக்கும். திரும்பவும் கலைஞர் முதல்வரான தகவல் இருக்காது.
அம்பேத்கர் பெயரால் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்ட விவரம் இருக்கும். தொடங்கி வைத்தவர் கலைஞர் என்று இருக்காது. முத்தையாவின் புத்தகத்தில் கலைஞர் குறிப்பிட்ட விடுபடல்கள் இருப்பது உண்மையே.
பபாசி விருது வழங்கியது Madras Rediscovered என்ற ஆங்கில நூலுக்குத் தான் என்றாலும், கருணாநிதி, அந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை படித்து விட்டு இப்படி அங்கலாய்த்துள்ளார்.
ஆனால் அந்நூல், தமிழகத்தின் அரசியல் வரலாற்று நூல் அல்ல. சென்னை நகரின் வரலாறைச் சொல்லும் புத்தகம் அது.
கலைஞர் பெயர் மட்டுமல்ல. காமராஜ், ராஜாஜி, பக்தவத்சலம் போன்றவர்களின் பெயர்களும் அந்த நூலில் உள்ள கால வரிசையில் இருக்காது.
தவறான ஒரு நபருக்கு விருது வழங்கப் பட்டு விட்டது என்று இப்படி குதிக்கிறாரே கருணாநிதி. உளியின் ஓசை படத்துக்கு சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்கு அவர் தகுதியானவர்தானா ? மேலும், கருணாநிதியின் புலம்பலில் இருக்கும் விஷமத்தனத்தை கவனிக்க வேண்டும். பலரின் பெயர் விடுபட்டுள்ளது ஒரு இயல்பான விஷயமாக இருந்தாலும் கருணாநிதி என்ன கூறுகிறார் ?
“எனது பெயர் விடுபடுவதற்கு அப்படி என்ன தவறை கருணாநிதி செய்து விட்டான். தமிழனாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து விட்டான் என்பதை விட, வேறு என்ன தாழ்வு இருக்கிறது. “
இதில் சாதி எங்கே இருக்கிறது ? கருணாநிதி பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்ததனாலா பெயர் விடுபட்டது ? கருணாநிதி தமிழன் என்பதாலா பெயர் விடுபட்டுப் போனது ? சென்னை நகரின் வரலாறை எழுதுகையில் கருணாநிதி கோயம்பேடு மார்க்கெட்டை திறந்து வைத்தார் என்ற செய்தியை எழுதவில்லை என்பதற்கு அவர் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால்தான் என்று புலம்பும் நபரின் விஷமத்தனம் தான், இன்று தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டு இருக்கிறது.
நூலை எழுதிய முத்தையா என்ன மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரா ? கருணாநிதியைப் போலவே நூலின் ஆசிரியர் முத்தையாவும் ஒரு தமிழர்தானே ? அப்புறம் இதில் தமிழன் என்பதற்காக என் பெயர் விடுபட்டு விட்டது என்பதற்கு என்ன அடிப்படை இருக்கிறது ? இந்தப் புலம்பல் எல்லாம் கருணாநிதியின் விஷமத்தனம் மட்டுமே.
ஒன்றும் இல்லாத ஒரு விஷயத்தில் சாதியையையும் இனத்தையும் புகுத்தும் கருணாநிதியின் அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வது ?
இப்படி ஒரு ஈகோவோடு இருக்கும் ஒரு நபரின் கையில் மாட்டிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் சாபக்கேட்டை என்னவென்று சொல்வது ?
தனக்கு விருது வழங்க வேண்டும் என்பதற்காகவே ஒரு விருதுக் குழுவை ஏற்படுத்தி அதற்கு மக்கள் வரிப்பணம் ஏறக்குறைய ஒன்றரை கோடியை அள்ளி வீசியுள்ளார் கருணாநிதி.
இவர்களின் ஆடம்பரத்திற்கும், புகழ் வெறிக்கும் நமது வரிப்பணம்தான் செலவாகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.
நெஞ்சு பொறுக்குதில்லையே…
இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைத்து விட்டால்.
இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைத்து விட்டால்.
சவுக்கு