தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில், சிறைக் கைதிகளுக்கான ஒரு கோரிக்கைப் பேரணி, 10.08.2009 அன்று நடைபெற்றது.
1) 7 ஆண்டுகள் தண்டனைக் கழித்த வாழ்நாள் சிறையாளிகளை விடுதலை செய்ய வேண்டும்
2) 10 ஆண்டுகள் தண்டனைக் கழித்த அனைத்து வாழ்நாள் சிறையாளிகளையும் எந்தவித பாரபட்சமோ பாகுபாடோ இல்லாமல் (குற்றப் பிரிவுகளைப் பார்க்காமல்) விடுதலை செய்ய வேண்டும்.
3) ஆண்டு தண்டனைப் பெற்ற சிறையாளிகளுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க வேண்டும்.
4) ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ள விசாரணை சிறையாளிகளை பிணையில் விடுதலை செய்ய உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்.
இக்கோரிக்கைகளை தமிழக அரசிடம் வைப்பதற்கான காரணங்கள்.
1) கடந்த அண்ணா பிறந்தநாள் நு£ற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, தமிழக அரசு ஏழு ஆண்டுகள் தண்டனை கழித்த சிறையாளிகளை விடுதலை செய்தது. அதே போல், இந்த ஆண்டும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.
2) கடந்த செப்டம்பர் 15 அன்று 1405 வாழ்நாள் சிறையாளிகள் விடுதலை செய்யப் படுகையில் சில சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டனைப் பெற்ற வாழ்நாள் சிறையாளிகள் விடுதலை செய்யப் படவில்லை. அவ்வாறு விடுதலை செய்யப் படாதவர்கள் 400க்கும் மேற்பட்டோர் தமிழக சிறைகளில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். அவர்களில் பலர் 15 ஆண்டுகளைக் கடந்தவர்களாகவும், ஒரு சிலர் 20 ஆண்டுகளை கடந்தவர்களாகவும் உள்ளனர்.
(i) குறிப்பாக சொல்ல வேண்டுமானால் வேலு£ர் பெண்கள் சிறையில் உள்ள பக்கா என்ற விஜயாவும், அவருடைய கணவரான வேலு£ர் ஆண்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ள தாடிக்காரன் என்ற சுப்ரமணியன் ஆகிய இருவரும் 18 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்கள் விடுதலை செய்யப் படாததற்கு அரசு சொல்லும் காரணம், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் ஆதாயத்துடன் கூடிய கொலையாகும். கொலை செய்கையில் அவர்கள் பெற்ற ஆதாயம் வெறும் ரூபாய் 500 மட்டுமே.
(ii) சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள டேவிட் ராஜன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக இதே போன்று ஆதாயக் கொலையில் தண்டனை பெற்று 24.02.1989 முதல் இருந்து வருகிறார்.
(iii) வாழ்நாள் சிறையாளிகளுக்கு ஆண்டுதோறும் 15 நாள் அவசர கால விடுப்பு (Emergency parole) வழங்கப் படுவதுண்டு. அவ்வாறு விடுப்பில் செல்பவர்கள் சில நேரங்களில் குடும்ப சூழ்நிலை காரணமாக விடுப்பு முடிந்து காலதாமதமாக சிறைக்கு வந்தால் அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 224ன் படி வழக்கு தொடுக்கப் படுகிறது. அவ்வாறான வழக்கில் தண்டனையாக 1 மாதம் முதல் 6 மாதம் வரை சிறைத்தண்டனையோ, ரூ.500/- அபராதமாக விதிக்கப் படுகிறது. அவ்வாறு தண்டனைப் பெற்றவர்கள் முன்விடுதலைக்கு தகுதியில்லாதவர்கள் என்று அவர்கள் விடுதலை செய்யப் படுவதில்லை. குறிப்பாக புழல் மத்திய சிறையில் உள்ள ஆறுமுகம், விடுப்பில் சென்றுவிட்டு 8 மணிநேரம் தாமதமாக வந்தார் என்பதற்காக 11 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். புழல் மத்திய சிறையில் இருக்கும் ஷா இன் ஷா ராஜா என்பவர் அண்ணாமலைப் பல்கலைப்பழகத்தில் தேர்வு எழுத விடுப்பில் சென்றவர் குறிப்பிட்ட காலத்துக்குள் சிறை திரும்பாததால் 21 வருடங்களாக சிறையில் உள்ளார்.
(iv) வேலு£ர் சிறையில் உள்ள மணி என்ற மாணிக்கம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதே காரணத்திற்காக சிறையில் உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக அவர் பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டு, ஒரு பக்க கை கால் செயலிழந்த நிலையில் பேச்சற்றவராக, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப் பட்டு, ஒரு நடைபிணமாக சிறையில் இருந்து வருகிறார்.
(v) ஆயுதச் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் மூன்று மாதம் அல்லது ஆறு மாதங்கள் தண்டனை பெற்று, அல்லது குறைவான ஆண்டுகள் தண்டனை பெற்றவர்களை அந்த தண்டனைக் காலம் முடிந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, பலர் விடுவிக்கப் படாமல் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். கோவை மத்திய சிறையில் உள்ள கந்தசாமி என்பவர், திருச்சி மத்திய சிறையில் உள்ள தென்தமிழன் என்பவரும் 16 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள்.
(vi) இவற்றையெல்லாம் விட, மிகவும் அதிர்ச்சி தரத்தக்கதான ஒரு வழக்கு, வேலு£ர் மத்திய சிறையில் உள்ள அந்தோணி குரூஸ் என்பவருடையது. அவர் கீழ் நீதிமன்றத்தில் மரண தண்டனைப் பெற்று, பின் அவரது தண்டனை உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை ரத்து செய்யப் பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப் பெற்றது. அவ்வாறு மரண தண்டனை விதிக்கப் பட்டு, ஆயுள் தண்டனையாக நீதிமன்றமே குறைத்தால் கூட, அவர்களை முன்விடுதலை செய்ய முடியாது என்று அதிகாரிகளின் தவறான போக்கால் அவர் 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார்.
அதே போல புஷ்பராஜ், முத்துராமன் ஆகியோர் 17 ஆண்டுகளாக இதே காரணத்திற்காக சிறையில் இருந்து வருகிறார்கள்.
(vii) இதேபோல், மத்திய அரசு நிறுவனம் புலனாய்வு செய்த வழக்கில் தண்டிக்கப் பட்டார் என்ற ஒரே காரணத்துக்காக முன் விடுதலைக்கு பரிசீலிக்கப் படாமல், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் 18 ஆண்டுளாக தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.
(viii) கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற சிறையாளிகள் 76 பேர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார்கள். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே மதக்கலவரத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க முடியாது என்று அரசு ஒரு உத்தரவை பிறப்பித்து அவர்களை தொடர்ந்து சிறையில் வைத்து வருகிறது.
மேலே கூறப்பட்ட உதாரணங்களைப் பார்க்கும்பொழுது, சிறு சிறு காரணங்களுக்காக ஒரு நபரின் உரிமையை பறித்து, அவரை தொடர்ந்து சாகும் வரை சிறையில் அடைப்பது என்பது மனித உரிமைக்கு எதிரானது.
1997ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பொன்விழா ஆண்டை ஒட்டி, எவ்வித பாகுபாடும் பார்க்காமல், 10 ஆண்டுகள் தண்டனை கழித்த வாழ்நாள்¢ சிறையாளிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. அதே போல இந்த ஆண்டும், தமிழக அரசு எந்த வித பாகுபாடும் இல்லாமல் 10 ஆண்டுகள் கழித்த அனைத்து சிறையாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே இப்பேரணியின் நோக்கம்.
3) கடந்த 2000 ஆண்டு முதல் ஆண்டு தண்டனைப் பெற்ற சிறையாளிகளுக்கு தண்டனைக் குறைப்பு ஏதும் வழங்கப் படுவதில்லை. ஒரு வாழ்நாள் சிறையாளி விடுவிக்கப் படுகையில் 8 அல்லது 10 அல்லது 12 ஆண்டுகளோ, தண்டனைப் பெற்ற ஒரு சிறையாளி தண்டனைக் குறைப்பு வழங்கப் படாமல் தொடர்ந்து சிறையில் வாடுவது அரசு சிறைக் கைதிகளின் உரிமைகளை சரியாக கவனத்தில் கொள்ளாததே காரணம். எனவே ஆண்டு தண்டனைப் பெற்ற கைதிகளுக்கு இந்த ஆண்டு தண்டனைக் குறைப்பு வழங்க வேண்டும்.
4) தமிழக சிறைகளில் விசாரணை கைதிகளாக தொடர்ந்து பல ஆண்டுகளாக பிணையின்றி சிறையில் இருந்து வருகிறார்கள். குணங்குடி அனீபா, அப்துல் ரகீம், முபாரக் போன்றவர்கள் 11 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணை சிறைவாசியாகவே இருந்து வருகிறார்கள். நீதியரசர் கிருஷ்ணய்யர், பிணை ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்றும் சிறை என்பது விதிவிலக்கு என்றும் தீர்ப்பளித்துள்ளார். ஆனால், அதை அரசோ நீதிமன்றங்களோ கவனத்தில் கொள்ளாதது வேதனையளிக்கக் கூடியது. இதே போல, கோவை சிறையில், 7 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை சிறையாளிகளாகவே, பிணையின்றி பலர் இருக்கின்றனர்.
ஒரு வழக்கில் 60 நாட்களிலோ அல்லது 90 நாட்களிலோ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் படவில்லையென்றால், அவர் பிணையில் விடுவிக்கப் படவேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் உள்ளது போல ஒருவர் விசாரணையின்றி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்தால், அவரை நீதிமன்றம் பிணையில் விடுவிக்க வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்.
சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப்பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டமும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
/ஒப்பாரி/