Flash News

Thursday, April 30, 2009

பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி - கருணாநிதியின் புதிய நாடக விமரிசனம்

“பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி “
கருணாநிதியின் புதிய நாடக விமரிசனம்

தலைச்சிறந்த எழுத்தாளரான கலைஞர் மு.கருணாநிதி தான் எழுதி இயக்கி வரும் நாடகங்களின் தொடர்ச்சியாக “பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி” என்ற புதிய நாடகத்தை எழுதி கடந்த திங்கள் அன்று சென்னை மெரினா கடற்கரையில் காலை அரங்கேற்றினார். ஏற்கனவே

“அபாயவேளையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்“
“மரண ஓலத்தின் நடுவே மனிதச் சங்கிலி“
“சொக்கத் தங்கம் சோனியா“
“மருத்துவமனையிலிருந்து மரண ஓலம்“
“இலங்கையில் பிரணாப்பு, ஈழத்தமிழருக்கு ஆப்பு“
“பசில் அடிக்கும் விசில்“
“மந்தி அடிக்கும் தந்தி“
“நேற்று தீவிரவாதி இன்று நண்பன்“
”முதலைக் கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர்”

ஆகிய பல நாடகங்களை நடத்தி தோல்வியை தழுவிய பின்னும் மனம் தளராமல் “பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி” என்ற இப்புதிய நாடகத்தை தயாரித்து எழுதி இயக்கி நடித்து அண்ணா நினைவிடத்தில் திங்களன்று அரங்கேற்றியுள்ளார். இந்நாடகத்தில் கவிஞர் கனிமொழி முக்கிய வேடம் ஏற்று நடித்தார். மன்மோகன் சிங் மற்றும் சோனியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பொய்யாகி ஒரு தொலைபேசி அழைப்போடு அவர்கள் பாத்திரங்கள் முடிந்து விட்டது. ஆனால் எதிர்பாரா விதமாக “செருப்படி வாங்கிய செட்டி நாட்டுச் சீமான்” சிதம்பரம் முக்கிய வேடமேற்று நடித்து க்ளைமாக்ஸ் காட்சியை முடித்து வைத்தார்.
கருணாநிதியின் பல நாடகங்களில் நடித்து கண்ணீர் சிந்தி உருக்கமான பல வேடங்களில் நடித்துள்ள கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கனமான பாத்திரம் வழங்கப் படும் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் வரவில்லை. கருணாநிதியின் “நள்ளிரவு கைதும் நயவஞ்சக நாடகமும்“ என்ற பழைய நாடகத்தில் கருணாநிதி கைது செய்யப் பட்டவுடன் “தமிழை கைது செய்து விட்டார்கள்“ என்ற வைரமுத்துவின் வசனம் இன்றும் நாடக ரசிகர்களால் பெரிதும் பாராட்டப் படுகிறது.

நாடகத்தின் இரு கதாநாயகிகளும் நாடகத்தில் பெரும்பாலான நேரம் கதாநாயகன் அருகிலேயே போட்டிப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தது காண்போர் உள்ளங்களை உருக்கியது. அதிலும் ஒரு கதாநாயகி கதாநாயகன் தலை வேர்த்து வழிகையில் தன் முந்தானையால் துடைத்து விட்டதையும் அதைக் கண்ட இரண்டாவது கதாநாயகி பொறாமையால் கண் சிவந்ததும் நல்ல காட்சியமைப்புகள்.
கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் அருகிலேயே இருந்தாலும் அது நாடகத்தின் சஸ்பென்சை துளியும் கூட்டவில்லை. உடன்பிறப்புகளும் கருணாநிதியின் மனைவியும் துணைவியும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாநிலத்தின் குறுநில மன்னர்கள் அனைவரும் கதறி அழும் உருக்கமான காட்சிகளும் காண்போர் நெஞ்சத்தை கசக்கிப் பிழிவதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால் இவ்வாறு இல்லாமல் பார்வையாளர்கள் மிகவும் மனச்சோர்வு அளிக்கும் வகையில் நாடகம் இருந்தது. நாடகத்தில் திடீர் திருப்பமாக “பெரியார் நாடக கம்பேனி“ நடத்தி வரும் கி.வீரமணியின் வருகை அமைந்தது. இருவரும் பெரியார் பாசறையிலிருந்து வந்த நடிகர்களாதாலால் நடிப்பின் இமயங்கள் சந்தித்தது போல் இருந்தது. மேலும் கருணாநிதியின் நாடகங்களில் நகைச்சுவை நடிகர்களாக நடித்து பெயர் பெற்ற “சோனியாவின் செருப்பு“ கே.வி.தங்கபாலு மற்றும் “மங்குணி பாண்டியர் “ சுதர்சனம் ஆகியோர் முக்கிய நகைச்சுவை வேடத்தில் நடித்ததை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.

கருணாநிதியின் ரசிகர்கள், மூன்று மாதத்திற்கு முன்பே இந்நாடகத்தை கருணாநிதி நடத்தியிருந்தால் இலங்கையில் 10,000க்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும் கையிழந்து காலிழந்து இன்று மருந்தில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பலர் காப்பாற்றப் பட்டிருப்பார்கள் என்று கருத்து தெரிவித்தனர்.
இருந்தாலும் இன்னும் 10 மணி நேரம் நடந்திருக்க வேண்டிய நாடகம் மிக குறைவான நேரத்தில் திடீரென்று முடிந்ததால் எரிச்சலடைந்த ரசிகர்கள் கதாநாயகனை காரி உமிழ்ந்து, அழுகிய முட்டைகளை வீசும் அளவுக்கு கோபமடைந்ததைக் கண்ட நாடக அமைப்பாளர்கள் விரைவாக நாடகக் குழுவினரை அப்புறப் படுத்தினர்.
இவ்வளவு சிறப்பாக பல நாடகங்களில் நடித்திருந்தாலும் இன்னும் கருணாநிதிக்கு இந்திய அரசு வழங்கும் தேசிய விருதோ, தாதா சாகேப் பால்கே விருதோ, ஆஸ்கர் விருதோ வழங்கப் படாதது வருத்தம் அளிக்கும் விஷயம் என்று பழம்பெரும் நடிகர்கள் தெரிவிக்கின்றனர்.
மே 13க்குள் மீண்டும் ஒரு அதிரடி நாடகத்தை கருணாநிதி வெளியிடுவார் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்க்கிறார்கள்.

-ஒப்பாரி-

Wednesday, April 29, 2009

பழநி பாரதியின் திராவகக் கவிதை


ஜுனியர் விகடனில் வெளிவந்த பழனி பாரதியின் கவிதை

என் சோற்றுத்தட்டில்
மலத்தை அள்ளி வைக்கிறான் அவன்
உண்ண விருப்பமில்லையென்றால்
தட்டைக் கழுவி வைக்கச் சொல்கிறான்
நான் ஒன்றும் பேசவே இல்லை

என் சகோதரியை அழுந்தப் பிடித்து
அவள் கருக் குழியை
சாம்பல் கிண்ணமாக்குகிறான்
இன்னும் இரண்டு சிகரெட் வாங்கிவர
சொல்கிறான் என்னை
நான் ஒன்றும் பேசவே இல்லை

வெடிகுண்டு வைத்திருக்கிறாயா என்று
ஒரு பெண்ணின் தனங்களை இறுக்குகிறான்
அதில் பாலருந்திய மழலையைக் கொன்று
என்னை எரிக்கச் சொல்கிறான்
நான் ஒன்றும் பேசவே இல்லை

கால்களற்ற என் உடல்
அவன் காலடியில் கிடக்கிறது
என் மார்பில் காலூன்றிக் கொண்டு
சக ராணுவக்காரனிடம்
என்னைக் குறித்து சொல்லிச் சிரிக்கிறான்
நான் ஒன்றும் பேசவே இல்லை

ஆம், இறையாண்மைக்கு எதிராக
எப்போதும் நான்
பேசுவதே இல்லை

Tuesday, April 28, 2009

உண்ணா விரதமும் கண்ணீர்க் காட்சிகளும்

படத்தை பெரிதாக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்

















Monday, April 27, 2009

தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற குறுந்தகடு வெளியீடு



/>
இனி என்ன செய்யப் போகிறோம் என்ற தலைப்பில் ஈழத்தில் நடைபெறும் படுகொலைகளை விவரித்தும் இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் பங்கு என்ன என்று விளக்கும் சில குறுந்தகடுகள் பரவலாக விநியோகிக்கப் பட்டு வந்தன. இக்குறுந்தகடுகளை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு விடுத்த வேண்டுகோளை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதன்பின் தங்கபாலு தமிழக அரசிடம் புகார் அளித்ததை அடுத்து தமிழக காவல்துறை தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தது. இதன் தொடர்ச்சியாக காவல் துறை கபிலன், கண்ணதாசன், திவாகரன் சுரேஷ்பாபு, குமார், பாலசுந்தரம் ஆகிய நான்கு பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்.
இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் கலைஞர் தமிழின கொலைஞர், இனி என்ன செய்யப் போகிறோம், 19/2 உயர்நீதிமன்ற தாக்குதல், புதிய பராசக்தி ஆகிய தொகுப்புகள் அடங்கிய குறுந்தகடுகள் வெளியிடப் பட்டன. முதல் குறுந்தகடை மூத்த வழக்கறிஞர் கருப்பன் வெளியிட வழக்கறிஞர் ரஜினிகாந்த் மற்றும் கோ.வி.ராமலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் விடுதலை ராசேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Wednesday, April 22, 2009

23ந்தேதி வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தருவாய் உடன்பிறப்பே






23ந் தேதி பந்த் க்கு ராஜபக்ஷே ஆதரவு - கருணாநிதி தகவல்

ஈழத்தில் போரை நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த பின்னாலும் (பதவியை மட்டும் விடாமல்) ஈழத்தில் போர் நிறுத்தப் படாமல் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப் படுவது இன்னும் நின்றபாடில்லை என்பது நீ அறிந்ததுதான் உடன்பிறப்பே. ஈழத் தமிழருக்காக என்னை விட அதிகமாக யாரும் பாடுபட்டிருக்க முடியாது என்பதும் நீயும் தமிழ் கூறும் நல்லுலகமும் அறிந்ததே. இதற்குப் பிறகும் தமிழ் மக்கள் கொல்லப் படுவதை தடுக்க இறுதி எச்சரிக்கை விடும் வகையில் 23ந் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளேன். சில விஷமிகளும் அந்த அம்மையாரும் அவருடன் இருக்கும் சாமரம் வீசுபவர்களும் இந்த பந்த் தேவையற்றது என்று கூக்குரலிடக் கூடும்.
ஆனால் நான் விடுத்த அழைப்பை ஏற்றுதான் ஏற்கனவே போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்டார் அருமை நண்பர் ராஜபக்ஷே என்பது உலகம் அறிந்தது தான். நான் பந்த் அறிவிப்பு வெளியிட்ட உடனே என்னை தொலைபேசியில் அழைத்து அவரும் இலங்கை அரசும் நாளை அறிவிக்கப் பட்டுள்ள பந்த்தில் அவரும் பங்கு பெறப் போவதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் பந்த் நடந்தால் பந்த் முடியும் வரை தமிழர்கள் கொல்லப் படமாட்டார்கள் என்பதை விட இனிய செய்தி ஏதும் உண்டோ ?
ஆனால் சில நேரங்களில் தீவிரவாதியாகவும் சில நேரங்களில் என் நண்பராகவும் இருக்கும் பிரபாகரனுக்கும் நான் இந்த பந்த்துக்கு அழைப்பு விடுத்தாலும் அவர் கலந்து கொள்வார் என்பது சந்தேகமே
இந்த வேலைநிறுத்தத்தில் குடும்பத்தோடு கலந்து கொண்டு (என் குடும்பத்தை காப்பாற்ற) வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள் நிறைவேற்றுவாயா உடன் பிறப்பே

Tuesday, April 21, 2009

தொலைபேசி ஒட்டுக்கேட்பும் கருணாநிதியின் கபடநாடகமும்


14.04.2009.. .. .. சரியாக ஒரு வருடம் முடிந்து விட்டது.
எதற்கு ஒரு வருடம் முடிந்து விட்டது என்கிறீர்களா ? 14.04.2008 அன்று டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதி அவர்களுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை முன்னாள் இயக்குநர் உபாத்யாய் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் உரையை வெளியிட்டது. அந்த உரையாடலில் திரிபாதி உபாத்யாவிடம் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கணக்கு விபரங்களை வருமானவரித் துறையிடமிருந்து வாங்குமாறும், அவ்வாறு வாங்கி பரிசீலித்தால் ஜெயலலிதா எப்படியும் வழக்கில் சிக்குவார் என்றும் கூறுகிறார். அவ்வாறு ஆதாரம் கிடைக்க வாய்ப்பில்லை என்று பதிலளித்த உபாத்யாவை அதிகார தோரணையுடன் தான் சொல்வது போல் செய்யுமாறும் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் வலியுறுத்தினார் திரிபாதி.
உரையாடல் வெளியானதும் பதறியது அரசாங்கம்... அன்று மதியமே அப்படி ஒரு உரையாடல் நடைபெறவில்லை, அந்நாளிதழின் மீது வழக்கு தொடுக்கப் போகிறோம் என மறுப்பு வெளியிடப்பட்டது. அன்று இரவு மக்கள் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் அந்த உரையாடல் ஒலிபரப்பப் பட்டது. மறுநாள் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் சட்டவிரோத ஒட்டுக்கேட்பு என்று புகார் கூறி அமளியை கிளப்பின. முதலமைச்சர் சட்டவிரோத ஒட்டுக்கேட்பு எதுவும் நடைபெறவில்லை, இதுபற்றி ஓய்‎வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரிக்கப்படும் என அறிவித்தார். அன்று இரவே ‎விஜிலென்ஸ் ஆணையர் ஸ்ரீபதி ஊழல் வழக்கில் சிக்கிய தற்போதைய சென்னை கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திரபால் சிங் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான விசாரணையை நடத்தக் கூடாது என உபாத்யாய்க்கு உத்தரவிட்ட உரையாடல் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பானது. விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்த பின் 16.04.2008 அன்று இரவு டிஐஜி சங்கர் ஜிவால் தலைமையிலான உளவுத்துறையினர் உபாத்யாய் அலுவலகத்தை சோதனை செய்தனர். வீட்டுக்குச் சென்ற உபாத்யாய் மீண்டும் அலுவலகத்துக்கு வரவழைக்கப் பட்டு அவர் லேப்டாப் பறிமுதல் செய்யப் பட்டது. அவர் அலுவலகத்திலிருந்து பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. Êவிசாரணை ஆணையம் அமைக்கப் பட்டபின் வேறு ஒரு விசாரணை நடைபெறக் கூடாது என்ற விதியை மீறி இச்சோதனைகள் நடத்தப் பட்டன. 20 நாட்கள் கழித்து டி3டி டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட் உத்தரவின்படி சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக் கேட்பை செய்து வருவதாகவும் இதற்கு பிரதிபலனாக ஜாபர்சேட்டுக்கு சட்டவிரோதமாக திருவான்மியூரில் வீட்டு மனை ஒதுக்கப் பட்டுள்ளதாகவும், டி3டி நிறுவனத்தில் டிஐஜி சங்கர் ஜிவால் மனைவி மம்தா சர்மா இயக்குநர் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
சண்முகம் கமிஷன் தனது விசாரணையைத் துவக்கியது. உபாத்யாய் கமிஷன் முன்பு ஆஜராகி உரையாடல்களை பதிவு செய்து வைத்தது தாம்தான் என்று ஒப்புக் கொண்டார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே டாக்டர் சுப்ரமணியன் சுவாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் உபாத்யாய் மற்றும அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை இடையே நடைபெற்ற உரையாடலை வெளியிட்டார். அந்த உரையாடலில் அமைச்சர் பூங்கோதை ரூ.30,000/- லஞ்சம் வாங்குகையில் கையும் களவுமாக பிடிபட்ட தனது உறவினர் ஜவகர் என்பவர் மிகவும் பாவம் (!) என்றும், அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்காமல் துறை நடவடிக்கை எடுக்குமாறும் ஜவகர் குடும்பமே அவர் சம்பாதிப்பதை (?) வைத்துதான் வாழ்கிறது என்றும் பேசினார்.


மறுநாள் சட்டசபையில் இப்பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி அமைச்சர் பூங்கோதை இவ்வாறு பேசியது குறித்து தாம் மிக‎வும் வேதனைப் படுவதாகவும் (இப்படி மாட்டிக் கொண்டாரே என்றா ?) சண்முகம் கமிஷனிடம் இந்த பூங்கோதை உரையாடலையும் விசாரணைக்கு கொடுக்கலாமா என்று அரசு பரிசீலிக்கும் என்று கூறினார். ஆனால் விசாரணை கமிஷன் முடியும் வரை முதல்வரின் நீண்ட பரிசீலனை முடியவேயில்லை.
நாடகத்தின் அடுத்த கட்டம் துவங்கியது. பூங்கோதை உரையாடலை சண்முகம் கமிஷனிடம் விசாரணைக்கு அளிக்க அரசு ஆணை எதையும் வெளியிடாத நிலையிலேயே சண்முகம் கமிஷனால் நியமிக்கப் பட்ட போல¦ஸ் பூங்கோதை உரையாடலை வெளியிட்ட பத்திரிக்கையாளர்களை அழைத்து விசாரித்தது. டி3டி நிறுவனத்தின் உரிமையாளர் நாராயண யாதவ் மற்றும் டிஐஜி சங்கர் ஜிவால் ஆகியோரும் விசாரிக்கப் பட்டனர். பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வந்த சங்கர் என்பவர் உபயோகப்படுத்தியதாக கூறப்பட்ட ஒரு மொபைல் போனில் பேசிய பத்திரிக்கையாளர்களை ஒவ்வொருவராக கமிஷன் போலீஸ் விசாரித்தது. அந்த விசாரணை சர்வதேச தீவிரவாத செயலில் ஈடுபட்ட நபர்களை விசாரிப்பது போல் மிக மிக ரகசியமாகவும் மிரட்டும் தொணியிலும் இருந்தது. அந்த விசாரணையை நடத்திய கபில்குமார் என்ற இளம் ஐபிஎஸ் அதிகாரி உண்மையை வெளிக்கொண்டு வருவதைவிட அதை மூடி மறைப்பதில் மிகவும் மும்முரமாக இருந்தார் என அவ்விசாரணையில் பங்கேற்றவர்கள் கூறுகின்றனர். மேலும் விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்களை மணிக்கொரு முறை உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட்டிடம் போன் மூலமாகவும் நேரில் சந்தித்தும் தகவல் அளித்து வந்தார் என செய்திகள் வெளியாயின. சங்கர் வைத்திருந்தாக கூறப்பட்ட அந்த மொபைல் போனில் பேசியிருந்த ஒரு சில பத்திரிக்கையாளர்களையும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களையும் விசாரணைக்கு கடைசி வரை அழைக்கவேயில்லை என்று கமிஷனில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் கூறுகிறார். இந்த டேப் விவகாரம் குறித்து எந்த செய்தியையுமே வெளியிடாத டெகல்கா இதழின் நிருபரும் விட்டுவைக்கப் படவில்லை. நீதிவிசாரணை நடைபெறுகையில் இப்பிரச்சினையின் சூத்திரதாரியான திரிபாதியை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டபோது, அந்த வழக்கறிஞரை தன் சேம்பருக்கு அழைத்து திரிபாதியை மட்டும் அழைக்காதீர்கள் என்று சண்முகம் சொன்னதாகவும் கூறப்படுகிறது. திரிபாதியை அழைத்தால் அவர் எதற்காக கொடநாடு வழக்கு பற்றி பேசினார், யார் சொல்லி அவ்வாறு பேசினார் என்ற உண்மை வெளி வந்துவிடுமோ என்பதாலா, அவ்வாறு வந்தால் செல்வி.ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்தாலா என்பது நீதிபதி சண்முகத்துக்கே வெளிச்சம்.
பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டு ஒரு பத்திரிக்கையாளரை தவிர அனைவரும் சாட்சியம் அளித்தனர், குறுக்கு விசாரணையின் போது உபாத்யாவிடம் நீங்கள் உங்கள் தொலைபேசி உரையாடலை பதிவு செய்து வைக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது என்ற கேள்விக்கு நீதிபதி அனுமதி மறுத்தார். விசாரணை அவசர அவசரமாக நடத்தி முடிக்கப் பட்டு 13.07.2008 அன்று சண்முகம் தனது அறிக்கையை அரசிடம் அளித்தார்.


நாடகத்தின் மூன்றாவது கட்டம் தொடங்கியது. லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய ஊழியர் சங்கர் சிபி.சிஐடி போல¦சால் கைது செய்யப் பட்டார். கைது செய்யப் பட்டபின் ஒரு அரசியல் தலைவருக்கெதிராகவும் சில நேர்மையான உயர் போல¦ஸ் அதிகாரிகளுக்கெதிராகவும் வாக்குமூலம் அளிக்கச் சொல்லி கடுமையாக சித்திரவதை செய்யப் பட்டதாகவும் கூறப் படுகிறது. உபாத்யாய் சஸ்பென்ட் செய்யப் பட்டார். செப்டம்பர் மாதத்தில் சண்முகம் கமிஷன் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப் பட்டது. அறிக்கையில் சங்கர் மீது கிரிமினல் வழக்கும், உபாத்யாய் மற்றும் சிலர் மீது துறை நடவடிக்கையும், பத்திரிக்கையாளர்கள் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்ய கமிஷன் பரிந்துரை செய்தது. கமிஷன் சம்மன் அனுப்பி சாட்சியம் அளிக்க ஆஜராகாத பத்திரிக்கையாளர்கள் மீது எவ்வித பரிந்துரையும் செய்யாத நீதிபதி சண்முகம் விசாரணைக்கு ஒத்துழைத்து சாட்சியம் அளித்த பத்திரிக்கையாளர்கள் மீதும், சம்பந்தமே இல்லாத டெகல்கா இதழின் நிருபர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்தார். என்ன ஒரு நீதி பரிபாலனம் .. .. .. ?
ஆனால் கமிஷனின் பரிந்துரையை ஒரு பாதி ஏற்ற அரசு பத்திரிக்கையாளர்கள் மீதான கமிஷனின் பரிந்துரையை பெருந்தன்மையாக (?) ஏற்கவில்லை.

சட்டமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்ட சில நிமிடங்களிலேயே விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் விசாரணை கமிஷனின் வரம்புக்குள் வரவில்லை என்று தெரிந்தும் பூங்கோதை பற்றி கமிஷன் அறிக்கையில் எதுவும் சொல்லப் படவில்லை, அவர் மிகவும் திறமையானவர் (!) அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்றும் பேசினார். பூங்கோதை ரொம்பபப நல்லவர் என்று தெரிந்த இரவிக்குமாருக்கு பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யச் சொல்லி அளித்த பரிந்துரையை கண்டிக்க தெரியவில்லை.


நீதிபதி சண்முகம் சிறப்பான முறையில் நீதி பரிபாலனம் (! ?) செய்ததால் நீதி வழங்க அவரே பொருத்தமான நபர் என்று சட்டக் கல்லு‎£ரி மாணவர்கள் மோதல் தொடர்பான விசாரணைக்கும் அவரே நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார். இவ்விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இவ்விசாரணை முடிந்திருந்தால் 19/2 வழக்கறிஞர் தாக்குதல் பற்றி விசாரித்து உண்மைகளை (?) கண்டறிந்து சொல்ல தமிழக அரசு நீதிபதி சண்முகத்தைத்தான் நியமித்திருக்கும். மும்பையிலிருந்து ஒருவர் வர நேர்ந்திருக்காது.

ஒரு வருடம் முடிவடைந்து விட்டது. நாடகத்தின் க்ளைமாக்ஸ் என்ன என்கிறீர்களா ?

பூங்கோதை மீண்டும் தகவல் தொழில் நுட்ப அமைச்சரானார்
(ஒட்டுக் கேட்பில் சிக்காமல் இருப்பது எப்படி என்பதை அறிய)




உபாத்யாய் மாநகர போக்குவரத்து கழகத்தின் விஜிலென்ஸ் அதிகாரி ஆனார்
(மாநகர பேருந்துகள் ஓடும் சத்தங்களை பதிவு செய்ய)

திரிபாதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார் !
(ஓய்வு பெற்று வந்த பணத்தில் கொடநாட்டுக்கு அருகில் எஸ்டேட் வாங்க)

ஸ்ரீபதி தலைமைச் செயலாளர் ஆனார் !
(ஊழல் வழக்கில் சிக்கியுள்ள இதர உயர் அதிகாரிகளை காப்பாற்ற)

ஜாபர் சேட் உளவுத்துறை ஐஜியாகவே உள்ளார் !
(சட்ட விரோத ஒட்டுக்கேட்பை தொடர)

சங்கர் ஜிவால் பதவி உயர்வு பெற்று உளவுத்துறையிலேயே உள்ளார் !
(தன் மனைவி பெயரில் இன்னும் சில ஒட்டுக் கேட்பு நிறுவனங்களை தொடங்க)

லஞ்ச ஒழிப்புத் துறையின் மூன்று ஊழியர்கள் இன்னும் சஸ்பென்டிலேயே உள்ளனர். இவர்களுக்கு ஏன் பதவி வழங்கப் படவில்லை ? அட.. இவர்கள் நாடகத்தின் துணைக் கதாபாத்திரங்கள் தானே !

நாடகத்தின் தலைப்பு என்ன என்று கேட்கவேயில்லையே நீங்கள் ?

நெஞ்சுக்கு நீதி ( ????? !!!!!!)